ராஜிவ் கொலை : புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 67

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-4

ராஜிவ் காந்தி படுகொலையின்போது, மனித வெடிகுண்டாக வெடித்த ‘தனு’ என்ற பெண் யார் என்பதையும், அந்தப் பெண்ணுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் என்ன தொடர்பு என்பதையும் இந்த வழக்குக்குள் கொண்டு வருவதற்கு சி.பி.ஐ. திணற வேண்டியிருந்தது. காரணம், குண்டு வெடித்து ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதுடன், குண்டை உடலில் கட்டியிருந்த தனுவும் கொல்லப்பட்டு விட்டார். தனு என்பதே, அந்தப் பெண்ணின் நிஜமான பெயராக இருக்காது என்பது சி.பி.ஐ.-க்கு தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணையும்போதே, நிஜப் பெயர் மறைக்கப்பட்டு, ‘இயக்கப்பெயர்’ கொடுக்கப்பட்டு விடும். தனு என்பது அந்தப் பெண்ணின் இயக்கப்பெயர்.


ராஜிவ் காந்தி படுகொலையின்போது, மனித வெடிகுண்டாக வெடித்த ‘தனு’ என்ற பெண் யார் என்பதையும், அந்தப் பெண்ணுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் என்ன தொடர்பு என்பதையும் இந்த வழக்குக்குள் கொண்டு வருவதற்கு சி.பி.ஐ. திணற வேண்டியிருந்தது.

காரணம், குண்டு வெடித்து ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதுடன், குண்டை உடலில் கட்டியிருந்த தனுவும் கொல்லப்பட்டு விட்டார்.

தனு என்பதே, அந்தப் பெண்ணின் நிஜமான பெயராக இருக்காது என்பது சி.பி.ஐ.-க்கு தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணையும்போதே, நிஜப் பெயர் மறைக்கப்பட்டு, ‘இயக்கப்பெயர்’ கொடுக்கப்பட்டு விடும். தனு என்பது அந்தப் பெண்ணின் இயக்கப்பெயர்.

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வின்போது, கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் ஏராளமான வீடியோ கேசட்டுகள், போட்டோக்களில் அந்த பெண் தோன்றும் காட்களக் உள்ளனவா என்ற ஆய்வு தொடங்கியது.

சென்னையில் கைப்பற்றப்பட்ட வீடியோ கேசட்டுகள் சிலவற்றில் ஆண், பெண் விடுதலைப்புலிகளுக்கு அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகள் விரிவாகக் காட்டப்பட்டிருந்தன. ஒரு வீடியோ படத்தில் பெண் விடுதலைப்புலிகள் அணிவகுத்துச் செல்வதையும், அவர்களுக்கு முன்னால் கொடியேந்தி சென்றவர் தனுவைப் போல இருந்ததையும் பார்த்தார்கள், சி.பி.ஐ. அதிகாரிகள்.

அந்தப் பெண் யார் என்பதை அறிவதில் அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. காரணம், ராஜிவ் காந்தி கொலை புலனாய்வுக்காக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர், சி.பி.ஐ.-யின் காவலில் உள்ளார்கள். அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அந்த வீடியோ காட்சியை போட்டுக் காட்டி விசாரித்தார்கள்.

விசாரணையில், கொடியேந்திச் சென்ற பெண், இலங்கை தமிழ் தேசியவாதிகளில் ஒருவர் என கருதப்பட்ட ராஜரத்தினத்தின் மகள் என்பது தெரியவந்தது.

ஈழ விடுதலை இயக்கங்கள் பல தொடங்கப்படுவதற்கு முன், ஏராளமான இளைஞர்களுக்கு அரசியல் ஆசான்போல விளங்கிய ராஜரத்தினம், 1975-ல் சென்னையில் காலமானார்.

ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின் சில நாட்கள் கழித்து, ஈழப் போராட்டத்துக்காகப் பாடுபட்ட 8 தமிழ்ப் பிரமுகர்களை விடுதலைப்புலிகள் அமைப்பு கௌரவித்தது. இறந்து 16 ஆண்டுகளான ராஜரத்தினமும், அவ்வாறு கௌரவிக்கப்பட்ட 8 பேரில் ஒருவர். மற்றொருவர் காசி ஆனந்தன். 1991 மார்ச்சில் டில்லியில் ராஜிவ்காந்தியைச் சந்தித்தவர்.

ராஜிவ் காந்தி கொலையில் தமக்கு தொடர்பு கிடையாது என விடுதலைப் புலிகள் சொல்லி வந்த காலம் அது. இதனால், ராஜிவ் கொலையில் மனித வெடிகுண்டாக வெடித்த தனுவை கௌரவிக்க முடியாது. அதனால், 16 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன அவரது தந்தை ராஜரத்தினம் கௌரவிக்கப்பட்டார்

அபூர்வமாகப் பொதுமக்கள் மத்தியில் தோன்றும் பிரபாகரன், ஜூன் 10-ம் திகதி விழா மேடையில் 8 பிரமுகர்களுக்கும் தலா 25,000 ரூபா ரொக்கப்பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கினார்.

அந்தச் சமயத்தில்தான் தனுவின் உடல் இல்லாமலேயே இறுதிச் சடங்குகள் அவரது குடும்பத்தினரால் செய்யப்பட்டன. உள்ளூர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களில் சிலர் அதில் கலந்து கொண்டனர்.

இந்த வகையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே தனு யார் என்பது தெரிந்த விஷயமாக இருந்தது. எல்லாமே மிகவும் லோ-ப்ரொஃபைலில் வைக்கப்பட்டிருந்தன.

விவகாரம் இப்படியிருக்க, மீடியா இதற்குள் ஊடுருவியதும் நடந்தது.

1991-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியிட்ட ஃப்ரண்ட்லைன் சஞ்சிகையில், ராஜரத்தினத்துக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் பிறந்த மகள் தனு என்ற தகவல் வெளியானது.

இது முக்கியமான திருப்பமாக அமைந்தது.

ஃப்ரண்ட்லைன் சஞ்சிகையில் இந்தக் கட்டுரை வெளியான பின், யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராய் என்ற இடத்தில் வசித்த ஒருவர், ஃப்ரண்ட்லைனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “நீங்கள் எழுதியது தவறான தகவல். தனு, ராஜரத்தினத்தின் மகள் அல்ல. ராஜரத்தினத்தைத் எனக்கு நன்கு தெரியும்” என்றும் அவர் எழுதியிருந்தார்.

ஃப்ரண்லைனின் செய்திக் கட்டுரையைப் படித்த பின்னர், 13 கிலோ மீற்றர் சைக்கிளில் சென்று ராஜரத்தினம் வீட்டை அடைந்ததாகவும், அங்கு ராஜரத்தினத்தின் விதவை மனைவியும், இரண்டாவது மகள் அனுஜாவும், ராஜரத்தினத்தின் இளைய மகள் கலைவாணியின் மரணத்துக்கு துக்கம் அனுஷ்டித்து கொண்டிருந்ததாகவும் அந்த கடிதத்தில், அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

ராஜரத்தினத்தின் இளைய மகள் கலைவாணி மரணமடைந்தது எப்படி என விசாரித்தபோது, கலைவாணி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, யுத்தத்தின்போது கொல்லப்பட்டார் என்ற தகவல் கிடைத்தது.

கலைவாணி ராஜரத்தினத்துக்கு இயக்கப்பெயர், கேப்டன் அகினோ. 1991 செப்டெம்பரில் இலங்கை ராணுவத்துடன் மணலாறு என்ற இடத்தில் நடந்த சண்டையில் கலைவாணி அல்லது கேப்டன் அகினோ கொல்லப்பட்டார் என, விடுதலைப் புலிகள் வெளியிட்ட மாவீரர் பட்டியலில் பதிவு உள்ளது.

கலைவாணியின் மரணத்துக்கு, தாயாருடன் சேர்ந்து துக்கம் அனுஷ்டித்து கொண்டிருந்த அவரது அக்கா (ராஜரத்தினத்தின் இரண்டாவது மகள்) அனுஜாவுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அவரும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்தார். மணலாறு யுத்தத்தில்தான் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்றார்கள்.

இந்த விபரங்களை ஃப்ரண்ட்லைன் சஞ்சிகைக்கு எழுதிய உரும்பிராயை சேர்ந்த நபர், “ராஜரத்தினத்தின் மூத்த மகள் திருமணமாகி கனடாவில் வசிக்கிறார். ராஜரத்தினத்துக்கு 3 மகள்கள் மட்டுமே என்பதால் தனு, ராஜரத்தினத்தின் மகளாக இருக்க முடியாது என்றும் விவரமாகத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதம், சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவுக்கு மற்றொரு கோணத்தை திறந்து விட்டது.

உரும்பிராய் நபர் சொல்வதை உண்மையாக எடுத்துக்கொண்டால், ராஜரத்தினத்துக்கு 3 மகள்கள். மூத்த பெண் கனடாவில் இருந்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது மகள்களான அனுஜாவும், கலைவாணியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தனர்.

இவர்களில் கலைவாணி கேப்டன் அகினோ என்ற இயக்கப்பெயரில் யுத்தத்தில் உயிரிழந்தார் என விடுதலைப்புலிகள் இயக்கமே சொல்கிறது.

உயிரிழந்த கலைவாணி அல்லது கேப்டன் அகினோ இறந்தது மணலாறில் அல்ல, ராஜிவ் கொலை செய்யப்பட்டபோது தனு என்ற பெயரில் என்றுகூட இருந்திருக்கலாமே…!

இதுதான், சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்த புதிய கோணம்.

இதையடுத்து, விடுதலைப்புலிகள் இயக்க வீடியோ படத்தில் அணிவகுப்பில் கொடியேந்திச் சென்ற பெண்ணும், ஸ்ரீபெரும்புதூரில் பச்சை ஆரஞ்சு நிற சல்வார் கமீஸுடன், கண்ணாடி அணிந்து காணப்பட்ட பெண்ணும் ஒருவர்தானா என்பதை கண்டுபிடிக்க தடயவியல் ஆய்வுக்கு உத்தரவிட்டது சி.பி.ஐ.

வீடியோ உருவத்தையும், ஹரிபாபுவின் முதல் போட்டோவில் இருந்த தனுவின் முகத்தையும், மண்டை ஓட்டைப் பெரிதுபடுத்தி நடத்திய சோதனையில், அந்த இருவரும் ஒரே நபர்தான் என்பது நிரூபணமானது.

பின்னாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கக் கொடியுடன் அணிவகுத்துச் சென்ற பெண்ணும், சல்வார் கமீஸ் பெண்ணும் ஒருவர்தான் என்று, தடய அறிவியல் நிபுணர் சாட்சியமளித்தார்.

எதிர்த்தரப்பு வக்கீல் சற்றே தயக்கத்துடன், “வீடியோவில் கொடியேந்தி சென்ற பெண் தனு அல்ல. அவர். இலங்கை சாவகச்சேரியைச் சேர்ந்த அனுஜா” என்றார்.

இதற்கு சி.பி.ஐ. தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, “நீங்கள் குறிப்பிடும் சாவகச்சேரியைச் சேர்ந்த அனுஜா யார் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். அவர், தனுவின் சகோதரி. இன்னமும் உயிருடன் உள்ளார்” என்றார்.

தடய அறிவியல் நிபுணர், வீடியோவில் உள்ள பெண்ணும், போட்டோவில் உள்ள தனுவும் ஒரே நபர்தான் என்பதை, தடய அறிவியல் முறையில் நிரூபித்தார். தாம் நிரூபித்ததை, வேறு தடய அறிவியல் நிபுணர் ஒருவரைக் கொண்டு – இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ – தவறு என நிரூபித்து காட்ட முடியுமா என சவால் விட்டார்.

இதைக் கேட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர் புன்னகை புரிந்துவிட்டு, அத்துடன் தனு விஷயத்தை தொடரவில்லை.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s