ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 69

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-6

சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு அடுத்து கவனம் செலுத்திய விஷயம், ராஜிவ் கொலை திட்டமிடலின் பிரதான நபரான சிவராசனுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் உள்ள தொடர்பை எஸ்டாபிளிஷ் செய்வதும், சிவராசனுக்கும், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பை எஸ்டாபிளிஸ் செய்வதும்தான். கோனானகுண்டேவில் சிவராசன் தற்கொலை செய்துகொண்ட பின், அவரது ஏ.கே. 47 ரைபிள், பிஸ்டல் மற்றும் தோட்டாக்களை சி.பி.ஐ. கைப்பற்றியிருந்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த சிவராசனின் உதவியாளரான சுதந்திரராஜா, சென்னை சூளைமேடு பகுதியில் இருந்த வீடு ஒன்றில், மற்றொரு ஈழ விடுதலை இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர் பத்மநாபாவை சுட்டுக் கொண்டது, சிவராசன்தான் என விசாரணையில் கூறியிருந்தார்.

சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு அடுத்து கவனம் செலுத்திய விஷயம், ராஜிவ் கொலை திட்டமிடலின் பிரதான நபரான சிவராசனுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் உள்ள தொடர்பை எஸ்டாபிளிஷ் செய்வதும், சிவராசனுக்கும், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பை எஸ்டாபிளிஸ் செய்வதும்தான்.

கோனானகுண்டேவில் சிவராசன் தற்கொலை செய்துகொண்ட பின், அவரது ஏ.கே. 47 ரைபிள், பிஸ்டல் மற்றும் தோட்டாக்களை சி.பி.ஐ. கைப்பற்றியிருந்தது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த சிவராசனின் உதவியாளரான சுதந்திரராஜா, சென்னை சூளைமேடு பகுதியில் இருந்த வீடு ஒன்றில், மற்றொரு ஈழ விடுதலை இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர் பத்மநாபாவை சுட்டுக் கொண்டது, சிவராசன்தான் என விசாரணையில் கூறியிருந்தார்.

சிவராசன், விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தளபதி டேவிட் மற்றும் மூவர் சேர்ந்து, 1990 ஜூன் மாதம் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவை எவ்வாறு படுகொலை செய்தனர் என்பதை சிவராசனின் உதவியாளரான சுதந்திரராஜா விரிவாக கூறியிருந்தார்.

1990-ல் நடந்த பத்மநாபா கொலை வழக்குப் புலன் விசாரணையின்போது, சம்பவ இடத்திலிருந்து ஏ.கே. 47 ரைபிளிலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள் (காலியானவை) கைப்பற்றப்பட்டன.

அவற்றில் உள்ள குறியீடுகளையும், சிவராசன் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட காலி தோட்டாக்களின் குறியீடுகளையும் ஒப்பீடு செய்யுமாறு, தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வகத்தைச் சிறப்புப் புலனாய்வுக் குழு கேட்டுக்கொண்டது.

அந்த ஆய்வில் இருந்து, பத்மநாபா கொலையுண்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட பல காலி தோட்டாக்கள், சிவராசனின் ஏ.கே. 47 ரைபிளிலிருந்து சுடப்பட்டவை எனத் தெரியவந்தது.

இந்த தடயவியல் ரிப்போர்ட், சிவராசனுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பை காட்டும் ஒரு தடயமாக சி.பி.ஐ.-யினால் பயன்படுத்தப்பட்டது.

ஜெயக்குமாரின் வீட்டிலிருந்தும், கொட்டிவாக்கம் வீட்டிலிருந்தும் சிவராசனின் டைரிகளும், நோட்டுப் புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த டைரிகளில் பெரும்பாலும் முகவரிகள், வரவு, செலவு கணக்குகள், சிவராசன் சென்று வந்த இடங்கள் பற்றிய விவரங்கள் இருந்தன.

டைரிகளில் 46 பேரின் பெயர்களும், முகவரிகளும் இடம்பெற்றிருந்தன. இவற்றில் பெரும்பாலானோரை, சுதந்திர ராஜாவுக்கும் தெரிந்திருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவைத் தீர்த்துக்கட்ட விடுதலைப்புலிகள் திட்டமிட்ட சமயத்தில் 1990 பெப்ரவரியில் சென்னை எம்.ஐ.இ.டி. தொழில்நுட்ப கல்லூரியில் சுதந்திர ராஜாவைச் சேர்த்தார் சிவராசன். (பத்மநாபாவின் நடமாட்டங்களை உளவு பார்க்க).

அதற்காக பணம் செலுத்தப்பட்ட கணக்கு விபரங்கள் டைரியில் இருந்தன.

சிவராசனுக்கும் அவரது குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற பல லட்சம் ரூபா நிதிப் பரிமாற்றங்கள், டைரியில் தெளிவாக இருந்தன. அதன்படி, பொட்டு அம்மானின் உத்தரவுப்படி, சிவராசன்தான் தமிழகத்தில் இருந்த உளவுப்பிரிவைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களுக்குப் பணம் விநியோகித்திருந்தது தெரிந்தது.

ஜெயக்குமார், விஜயன் ராபர்ட் பயஸ் ஆகியோரின் குடும்பச் செலவுகள் முழுவதையும் சிவராசனே ஏற்று வந்துள்ளார். ஜெயக்குமாரின் மனைவி பெயரில் தொலைபேசி இணைப்பு பெறுவதற்கான முன்பணம், காபி அரைவை இயந்திரம் வாங்குவதற்காக் கொடுக்கப்பட்ட பணம், ஜெயக்குமாருக்கு ஒரு கடை அமைத்துத் தந்தது, விஜயனின் வீட்டுக்கான முன்பணம், வாடகை மற்றும் உள்ள செலவுகளும் சிவராசனின் டைரியில் குறிக்கப்பட்டிருந்தன.

இதைப்போலவே, ஆதிரை, கனசபாபதி, ரங்கன், விஜயானந்தன், முருகன், சுதந்திர ராஜா, சிவரூபன், ரூசோ மற்றும் பல்வேறு உதவி புரிந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட பண விவரங்களும் விரிவாக எழுதப்பட்டிருந்தன.

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் வரதராஜப் பெருமாள் (முன்னாள் இலங்கை வடக்கு-கிழக்கு மாகாண முதல்வர்) இந்திய அரசால் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த ரகசிய இடம் பற்றியும் சிவராசனின் டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வரதராஜப் பெருமாளும், விடுதலைப் புலிகளின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தவர்.

ஆனால், கடைசிவரை விடுதலைப் புலிகளால் அவரை போட்டுத்தள்ள முடியவில்லை. தற்போது வரதராஜப் பெருமாள் இலங்கையில் எவ்வித பாதுகாப்பு தேவையுமின்றி,  யாழ்ப்பாணத்திலேயே அவ்வப்போது நடமாடுகிறார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தமிழகம் வரும்போது, செலவுகளுக்கு தேவையான இந்திய பணத்துக்காக தங்க பிஸ்கட்டுகளுடன் வந்து அவற்றைப் பணத்துக்கு விற்றது இந்த டைரிகளில் உள்ள விபரங்களில் இருந்து தெரியவந்தது.

சிவராசன் டைரிகளை ஆராய்ந்ததில், அவர் சுமார் 5 கிலோவுக்கு அதிகமான தங்க பிஸ்கட்டுகளை விற்று, (1990-களில்) சுமார் 17.25 லட்சம் ரூபா பெற்றிருந்ததாக கணக்கு இருந்தது. இதிலிருந்து, ராஜிவ் கொலை ஆபரேஷன் திட்டத்துடன் அவர் தமிழகம் வந்ததில் இருந்து அவரால் செலவிடப்பட்ட தொகை சுமார் 17.25 லட்சம் ரூபா என சிறப்புப் புலனாய்வுப்படை கருதியது.

ராஜிவ்காந்தி படுகொலைக்கு உண்மையில் அவ்வளவு பணம் செலவிடப்படவில்லை என்பதை புலனாய்வுப்படை அறிந்தது. செலவிடப்பட்டதில் பெரும்பகுதி, விடுதலைப்புலிகள் உளவுப்பிரிவுக்கான தளங்களை ஏற்படுத்தவும், உளவுப் பிரிவினருக்கான அன்றாட செலவுகளுக்குமே பயன்படுத்தப்பட்டது.

இதிலிருந்து, ராஜிவ்காந்தி படுகொலைக்கான நடவடிக்கை, உண்மையில் சுமார் 5 லட்சம் ரூபாவுக்குள் முடிக்கப்பட்ட, செலவு குறைந்த நடவடிக்கை என சி.பி.ஐ. கணக்கிட்டது.

இவ்வளவு தடயங்களும், சிவராசனின் டைரிகளில் இருந்த பதிவுகளில் இருந்து பெறப்பட்டன.

அடுத்து, ராஜிவ்காந்தி படுகொலை திட்டமிடலுக்கான முக்கிய சாட்சிய சான்றுகளில் ஒன்று, ஒயர்லெஸ் தகவல் பரிமாற்றங்கள்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் ஒயர்லெஸ் தகவல் தொடர்பைப் பயன்படுத்தியது, 1991 ஜூன் 10-ம் தேதிதான் முதன்முதலாக சி.பி.ஐ.-யின் கவனத்துக்குச் சென்றது. அன்றுதான் சிவராசனும், சுபாவும் தப்பிச் செல்ல முயலக் கூடும் என மத்திய உளவுத்துறை ‘ரா’ மூலம் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

உளவுத்துறை ‘ரா’ விடுதலைப் புலிகளின் ஒயர்லெஸ் தகவலை ஒட்டுக்கேட்டதில்தான் அந்த விபரம் தெரிய வந்திருந்தது.

சிவராசனுக்கும், பொட்டு அம்மானுக்கும் இடையிலான ஒயர்லெஸ் தகவல் தொடர்பு விவரங்களை ஜூன் 23-ம் தேதிவரை உளவுத்துறை ‘ரா’, சி.பி.ஐ.-க்கு தெரியப்படுத்தி வந்தது. (ஒயர்லெஸ் ஒட்டுக் கேட்கும் வசதி அப்போது, சி.பி.ஐ.-யிடம் இருக்கவில்லை)

சென்னையில் விடுதலைப்புலிகள் அமைத்திருந்த ரகசிய ஒயர்லெஸ் நிலையத்துக்கும் (எண்-95), யாழ்ப்பாணத்தில் இருந்த மற்றொரு ஒயர்லெஸ் நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்புகளை, சென்னையில் இருந்த ‘ரா’ அலுவலகம் 1991-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே கண்காணித்து வந்தது.

தொடக்கத்தில் ஒயர்லெஸ் ஒட்டுக் கேட்டல்கள் ஏனோதானோ என இருந்தன. ஆனால், ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பிறகு, இந்த ஒட்டுக் கேட்டல், மிக சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கூடிய விரைவில், சிவராசனுக்கும், அவரது தலைவரான பொட்டு அம்மானுக்கும் இடையிலான ஒயர்லெஸ் தகவல் தொடர்பில் கிடைத்த ரகசிய சங்கேத வார்த்தைகளுக்கான உட்பொருளை மத்திய உளவு அமைப்பினர் கண்டுபிடித்தனர்.

பொட்டு அம்மானின் ஒயர்லெஸ் நிலையம் (எண்-91) யாழ்ப்பாணத்தில் இருந்தது. சிவராசன் தொடக்கத்தில் சென்னையிலிருந்து ரகசிய ஒயர்லெஸ் நிலையத்தை (எண்-95) இயக்கி வந்தார். இந்த நிலையம் உளவுப்பிரிவின் நடமாடும் ஒயர்லெஸ் நிலையமாக இருந்தது. காந்தனின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது.

ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பான சிவராசனின் முதலாவது ஒயர்லெஸ் தகவல், 1991 மார்ச் 22-ம் தேதி பொட்டு அம்மானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சங்கேத சொற்கள் உடைக்கப்பட்டபோது, கிடைத்த செய்தி – “ராஜிவ்காந்தி 1991 மார்ச் 30-ம் தேதி சென்னைக்கு வருகிறார்” என்பதாகும்.

சிவராசன் தலைமையிலான விடுதலைப்புலிகள் சென்னை மற்றும் மதுரையிலிருந்து வெளிவந்த தமிழ் நாளிதழான தினமணியைதான் தொடர்ந்து படித்து வந்தனர் என்பது, கைது செய்யப்பட்டவர்களை விசாரித்தபோது தெரிந்தது. காமராஜர் நினைவு அரங்கத்தைத் திறந்து வைப்பதற்காக மார்ச் 30-ம் தேதி ராஜிவ்காந்தி சென்னை வருகிறார் என்ற செய்தியை 1991 மார்ச் 22-ம் தேதி தினமணி வெளியிட்டிருந்தது.

மார்ச் 22-ம் தேதி சிவராசன் அனுப்பிய மற்ற முக்கிய விடயங்கள்

(அ) டில்லியில் (படுகொலையை) நிகழ்த்த வேண்டும் என்றால், அதற்கு நிறைய அவகாசமும், பயிற்சியும் தேவை.

(ஆ) நேருவை தமிழகத்துக்கு அனுப்பினால் எனது சொந்த ஒயர்லெஸ் நிலையத்தைத் தொடங்க முடியும்.

(இ) நெரிசல் மிகுந்த மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கார் ஓட்டுவதற்கு நன்கு டிரைவிங் தெரிந்த ஒருவரை தமிழகத்துக்கு அனுப்ப முடியுமா?

சென்னையில் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு ஒயர்லெஸ் நிலையம் (எண் 95) செயல்பட்டபோதிலும், சிவராசன் தனக்கென தனி ஒயர்லெஸ் நிலையம் தேவையென கேட்டதற்குக் காரணம், ராஜிவ்காந்தி படுகொலை நடவடிக்கை மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததும், விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவினர் பலருக்கே அந்த திட்டம் தெரியாமல் இருந்ததும்தான்.

மே 7-ம் தேதி அனுப்பப்பட்ட ஒயர்லெஸ் செய்தி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்தச் சமயத்தில் சிவராசனின் 9 உறுப்பினர் குழு தமிழகத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது. சுபாவும், தனுவும், நளினியைச் சந்தித்துவிட்டனர். அதன்பின் அனுப்பப்பட்ட ஒயர்லெஸ் தகவலில், “நளினியை முழுமையாக நம்பலாம். எங்கள் இலக்கு (ராஜிவ்காந்தி) யார் என்று தெரிந்தாலும், தொடர்ந்தும் அவர் ஆதரவாக இருப்பார்” என்று இருந்தது.

மே 7-ம் தேதிக்கும் 21-ம் தேதிக்கும் இடையே, ஒயர்லெஸ் செய்திகள் ஏதும் இல்லை. அல்லது அவை கண்காணிக்கப்படவோ, கண்டறியப்பட்டவோ இல்லை. மே 21-ம் தேதி, ராஜிவ் கொல்லப்பட்டார்.
படுகொலைக்கு மறுநாள், மே 21-ம் தேதி, தங்கள் நடவடிக்கை வெற்றியடைந்ததைத் தெரிவித்து நீண்ட ஒயர்லெஸ் செய்தியை அனுப்பினார் சிவராசன். ஆனால், இந்தச் செய்தி உட்பொருள் அறிந்து கொள்ளப்படவில்லை.

எனினும், இதற்கு பொட்டு அம்மான் அனுப்பிய பதில் ‘ரா’வினால் உட்பொருள் அறியப்பட்டது. “நீண்ட செய்தியை அனுப்பினால் சந்தேகம் ஏற்படலாம் என்பதால், அவ்வாறு அனுப்ப வேண்டாம்” என்பதே, பொட்டு அம்மான் அனுப்பிய பதில்.

பொட்டு அம்மான் அனுப்பிய மற்றொரு ஒயர்லெஸ் தகவலில் இருந்து, ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இந்திய வானொலிச் செய்திகளை தாம் தொடர்ந்து கேட்டுவருவதாக குறிப்பிட்டிருந்தார்.

“ராஜிவ் கொலைக்குப் பின், தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் தாக்கப்படுகிறார்களா? என சிவராசனிடம் கேட்ட பொட்டு அம்மான், “ராஜிவ் கொலையில் விடுதலை புலிகளுக்குத் தொடர்பு இல்லை என்றுதான் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களிடம்கூட கூறப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s