ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 70

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-7

பொட்டு அம்மானின் ஒயர்லெஸ் தகவல்களை இடைமறித்தபோது தெரியவந்த மற்றொரு விஷயம், மனித வெடிகுண்டாக வெடித்து சிதறிய தனுவின் போட்டோவை யாராவது அடையாளம் தெரிந்து கொண்டார்களா என்பதை அவர் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார் என்பது! அதாவது, தனு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்பதை, அவரது போட்டோவில் இருந்து யாராவது அடையாளம் கண்டுகொண்டார்களா என அறிய விரும்பினார் அவர். மே 24-ம் தேதி, ஹரிபாபுவின் முதலாவது போட்டோவின் ஒரு பகுதியை ‘ஹிந்து’ நாளிதழ் பிரசுரித்திருந்தது. அப்படத்தில் தனுவின் இருபுறமும் லதா கண்ணனும், கோகிலா வாணியும் இருந்தனர். மறுநாள் மற்ற பத்திரிகைகளும் அதே போட்டோவை பிரசுரித்தன. (அந்த போட்டோவை ஹிந்து பத்திரிகை எதற்கு எடிட் செய்து வெளியிட்டது என்பதற்கு இன்றுவரை விளக்கம் இல்லை)

பொட்டு அம்மானின் ஒயர்லெஸ் தகவல்களை இடைமறித்தபோது தெரியவந்த மற்றொரு விஷயம், மனித வெடிகுண்டாக வெடித்து சிதறிய தனுவின் போட்டோவை யாராவது அடையாளம் தெரிந்து கொண்டார்களா என்பதை அவர் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார் என்பது!

அதாவது, தனு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்பதை, அவரது போட்டோவில் இருந்து யாராவது அடையாளம் கண்டுகொண்டார்களா என அறிய விரும்பினார் அவர்.

மே 24-ம் தேதி, ஹரிபாபுவின் முதலாவது போட்டோவின் ஒரு பகுதியை ‘ஹிந்து’ நாளிதழ் பிரசுரித்திருந்தது. அப்படத்தில் தனுவின் இருபுறமும் லதா கண்ணனும், கோகிலா வாணியும் இருந்தனர். மறுநாள் மற்ற பத்திரிகைகளும் அதே போட்டோவை பிரசுரித்தன. (அந்த போட்டோவை ஹிந்து பத்திரிகை எதற்கு எடிட் செய்து வெளியிட்டது என்பதற்கு இன்றுவரை விளக்கம் இல்லை)

மே 25-ம் தேதி, பொட்டு அம்மான் அனுப்பிய ஒயர்லெஸ் செய்தியில் ‘அன்பு’வின் போட்டோ அடையாளம் காணக்கூடியதாக உள்ளதா? என கேட்டிருந்தார். (தனுவுக்கு விடுதலைப்புலிகளின் இயக்கப் பெயர் அன்பு).

அதற்கு அடுத்த நாள் பொட்டு அம்மானால் அனுப்பப்பட்ட ஒயர்லெஸ் தகவல்களில், புலனாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் வன் செயல்கள் பற்றிக் கேட்கப்பட்டிருந்தது.

இந்த ஒயர்லெஸ் தகவல்கள், ராஜிவ் கொலையில் விடுதலைப் புலிகளின் தொடர்பை காட்ட, சி.பி.ஐ.-யால் கோர்ட்டில் பயன்படுத்தப்பட்டன.

மே 1-ம் தேதி சிவராசனுடன் தமிழகம் வந்த 9 பேரில் ஒருவரான ரூசோ, தஞ்சாவூர் அருகே தமிழகப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இச்செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது. ஜூன் 9-ம் தேதி பொட்டு அம்மானுக்கு சிவராசன் அனுப்பிய ஒயர்லெஸ் தகவல், இக்கைது பற்றியதுதான்.

அதற்கு பதில் தெரிவித்து சிவராசன், பொட்டு அம்மானுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவலும், உளவுத்துறை ‘ரா’வினால், இடைமறிக்கப்பட்டிருந்தது. அந்த ஒயர்லெஸ் தகவலில், தான் (சிவராசன்) படகு ஏறுவதற்காக ஜூன் 10-ம் தேதி வேதாரண்யம் செல்லத் திட்டமிட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூன் 11-ம் தேதி பொட்டு அம்மானிடம் இருந்து வந்த பதிலில், ஒயர்லெஸ் செய்திகள் அனுப்புவதைக் குறைத்து கொள்ளுமாறு சிவராசனுக்கு பொட்டு அம்மான் அட்வைஸ் பண்ணியிருந்தார். ஒயர்லெஸ் செய்திகளால் தொலைக்காட்சி சிக்னல்களில் இடையூறு ஏற்பட்டு, அதனால் போலீஸ் உஷாராகிவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இருந்தபோதிலும், சிவராசன் தொடர்ந்தும் ஒயர்லெஸ் தகவல்களை அனுப்பிக்கொண்டு இருந்தார். பொட்டு அம்மானும் அதற்கெல்லாம் பதில் அனுப்பிக்கொண்டு இருந்தார்.

மத்திய உளவுத்துறை ரா, இந்த ஒயர்லெஸ் தகவல்களையெல்லாம் இடைமறித்து பதிவு செய்துகொண்டு இருந்தது. ஆனால், சங்கேத சொற்களில் இருந்த அந்த தகவல்களை அவர்கள் டீகோட் செய்ய சில மாதங்கள் பிடித்தன. அதனால், இந்த ஒயர்லெஸ் தகவல்களில் பெரும்பாலானவை, சிவராசன் உயிருடன் இருந்தபோது அவரை ட்ராக்-டவுன் செய்ய பயன்படவில்லை. பின்னாட்களில், வழக்கு நடந்தபோது, ஆதாரங்களாக பயன்பட்டன.

ஒரு ஒயர்லெஸ் தகவலில், “அன்பு (தனு) மரணத்துக்குப் பின், நித்யா (சுபா) சோகமாக இருக்கிறார். அவரை என்னால் தேற்ற முடியவில்லை” என்று சிவராசன் தகவல் அனுப்பினார். தங்களுக்கு உதவிகள் செய்த பலர், சி.பி.ஐ.-யால் கைது செய்யப்பட்டிருப்பது பற்றியும் அவர் அந்த ஒயர்லெஸ் தகவலில் குறிப்பிட்டார்.

இதற்கு பொட்டு அம்மான், சுபாவுக்கு ஒரு ஒயர்லெஸ் தகவல் அனுப்பியிருந்தார். அதில், “நமது துணிச்சல் வாய்ந்த போராளிகளை அங்கீகரித்து, அவர்களது வெற்றிகளை நமது இயக்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிப்பது இன்று முடியாமல் இருக்கலாம்.

அவர்கள் மரணத்துக்காக துக்கம் அனுஷ்டிக்க தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர்களைப் பற்றி பெருமைப்படுவோம். மனதைத் தளரவிட வேண்டாம். நமது வரலாற்றின் பக்கங்களை மாற்ற தயாராக இரு. உணவு சாப்பிடாமல் இருந்தால் நீ பலவீனமாகிவிடுவதுடன் மற்றவர்களுக்கும் சுமையாகி விடுவாய்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பொட்டு அம்மான் அனுப்பி, இடைமறிக்கப்பட்ட மற்றொரு ஒயர்லெஸ் தகவலில், இந்து மாஸ்டர் (முருகன்) நீலன் (காந்தன்) ஆகியோர் பற்றியும் விசாரித்திருந்தார். அத்துடன், சிவராசனுக்குத் தங்கம் அல்லது பணம் தேவைப்படுகிறதா எனவும் விசாரித்திருந்தார்.

ஜூன் 12-ம் தேதி பாக்கியநாதன், பத்மா ஆகியோர் கைது செய்யப்பட்டது பற்றியும், சிவராசனின் விடுதலைப்புலிகளின் ரகசியப் பெயரை (ரகுவரன்) சிறப்புப் புலனாய்வுப்படை கண்டறிந்தது பற்றியும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இந்த விபரங்களை பொட்டு அம்மானுக்கு சிவராசன் ஒயர்லெஸ் தகவலாக அனுப்பினார்.

நளினி, சுபா ஆகியோரது போட்டோக்களை வெளியிட்ட சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, (அப்போது) 19 வயதான தாஸ், நளினியின் காதலர் என்று தகவல் வெளியிட்டது. இந்த தகவல், அரசு வானொலி செய்தியறிக்கையில் கூறப்பட்டது.

வானொலியில் இச்செய்தியைக் கேட்ட பொட்டு அம்மான், அன்றே சிவராசனுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில், ‘தாஸ்’ என்பது யார் என சிவராசனிடம் கேட்டிருந்தார்.

முருகன் சென்னையில் பயன்படுத்திய பெயர்களில் ஒன்றுதான் ‘தாஸ்’. அது அவரது இயக்க பெயர் அல்ல. அவராக சென்னையில் தனக்கு வைத்துக்கொண்ட பெயர். இந்த பெயர், யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

“இந்து மாஸ்டர்தான் தாஸ்” என சிவராசன் பதில் அளித்தார். இந்து மாஸ்டர் என்பதே, முருகனின் இயக்க பெயர்.

சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு விரித்த வலை, மெதுவாக விடுதலை புலிகளை நெருங்குகிறது என்பதை பொட்டு அம்மான் நன்றாகவே புரிந்துகொண்டு விட்டார் என்பது, அவர் அதற்குப்பின் அனுப்பிய ஒயர்லெஸ் தகவல்களில் இருந்து தெரியவந்தது.

ஜூன் 13-ம் தேதி பொட்டு அம்மான் அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில், கவனமாக இருக்குமாறு சிவராசனைக் கேட்டுக்கொண்டார். “உன்னுடைய (சிவராசனின்) தொடர்பாளர்களில், இதுவரை கைது செய்யப்படாத ஆட்கள் மீது சி.பி.ஐ. கண்காணிப்பை அதிகரிக்கக் கூடும். விசாரணைக்காக இதுவரை பிடித்துச் செல்லப்படாத அவர்களை நீ (சிவராசன்) சந்திக்கக் கூடும் என்பதால்தான் சி.பி.ஐ. அவர்களை வெளியே விட்டு வைத்திருக்கிறது. யாரையும் சந்திக்க வேண்டாம்” என்று தகவல் அனுப்பினார் பொட்டு அம்மான்.

சிவராசனும், மிகவும் அலர்ட்டாகவே இருந்தார். தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்தில் மறைந்து இருப்பதே பாதுகாப்பு என அவர் கருதியிருந்தார் (இறுதியாக அவர் தற்கொலை செய்ததுகூட, கர்நாடகா மாநிலத்தில் உள்ள மறைவிடம் ஒன்றில்தான்)

ராஜிவ்காந்தி படுகொலைக்கு முன்பாகவே, டில்லியில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு மறைவிடத்தை ஏற்பாடு செய்வதற்காக, இலங்கைத் தமிழர் ஒருவருடன் கனகசபாபதியை டில்லிக்கு அனுப்பி வைத்தார் சிவராசன் என்பதை இந்த தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம்.

இந்த கனகசபாபதி சென்னையில் தமது உறவினருடன் தங்கியிருந்தபோது, சிவராசன் சில முறை அந்த உறவினர் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

மே 29, 30-ம் தேதிகளில் ராஜிவ்காந்தி படுகொலையில் சந்தேகிக்கப்படும் நபர் எனக் குறிப்பிட்டு, சிவராசனின் போட்டோக்கள் பத்திரிகைகளில் வெளியாகின. அன்றைய தினம்தான் (மே 30-ம் தேதி) கனகசபாபதி டில்லியிலிருந்து திரும்பி வந்து, தமது சென்னை உறவினர் வீட்டுக்கு தங்க சென்றார்.

இதற்கிடையே, சிவராசன் யார் என்பது, பத்திரிகையில் வெளியான போட்டோ மூலம், கனகசபாபதியின் உறவினருக்கு தெரிந்து விட்டது. “ராஜிவ் கொலையில் தொடர்புடைய சிவராசனுக்கு மிக நெருக்கமான தொடர்புடைய உங்களை (கனகசபாபதியை) எனது வீட்டில் தங்க அனுமதித்தற்காக வருத்தப்படுகிறேன். நீங்கள் இனியும் இங்கே தங்க வேண்டாம்” என அந்த உறவினர் கூறினார்.

இதையடுத்து, கனகசபாபதி மற்றொரு உறவினரின் வீட்டுக்குச் சென்றார். இதனால், சிவராசன் கனகசபாபதியைத் தொடர்புகொள்ள முடியாமல் போயிற்று.

இது குறித்து ஜூன் 14-ம் தேதி பொட்டு அம்மானுக்கு சிவராசன் ஒயர்லெஸ் மூலம் தகவல் அனுப்பினார். “ராதாவின் தந்தையுடன் தொடர்பை இழந்துவிட்டேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார். (கனகசபாபதி, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் யாழ்ப்பாண தளபதியாக இருந்த ராதா என்கிற, ஹரிச்சந்திராவின் தந்தை)

ஜூன் 16ம் தேதி பொட்டு அம்மானுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில், முருகன், நளினி கைது பற்றி குறிப்பிட்டிருந்தார், சிவராசன். அதே ஒயர்லெஸ் தகவலில், ராஜிவ் காந்தி புலன் விசாரணைக்குப் பொறுப்பான அதிகாரிகள் என, கார்த்திகேயன், விஜய்கிரண் ஆகியோரது பெயர்களையும் சிவராசன் குறிப்பிட்டிருந்தார்.

சிவராசன், சுபா இருக்கும் இடத்தைக் கண்டறிய சிறப்புப் புலனாய்வு பிரிவு மேற்கொண்டுள்ள விளம்பர நடவடிக்கைகள் பற்றியும், இருவரையும் பிடித்து கொடுத்தால், முறையே 10 லட்சம், 5 லட்சம் ரூபா வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்திருப்பது பற்றியும் பொட்டு அம்மானுக்குத் ஒயர்லெஸ் மெசேஜ் மூலம் தெரியப்படுத்தினார் சிவராசன்.

“கைது செய்யப்பட்ட நளினிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற ஒயர்லெஸ் செய்தியை ஜூன் 18-ம் தேதி சிவராசன் அனுப்பினார்.

ஆனால், பொட்டு அம்மான் அதைப் பொருட்படுத்தவில்லை. “நளினி விவகாரத்தில் தலையிட வேண்டாம்” என சிவராசனை எச்சரித்தார். “காந்தனைப் பற்றியோ சென்னையில் இன்னும் உள்ள உளவுப்பிரிவுப் போராளிகளைப் பற்றியோ கவலைப்பட வேண்டாம். மற்றவர்கள் விஷயங்களில் தலையிட போனால், நீ அகப்பட்டு கொள்வாய்” என்றார்.

“உனக்கு (சிவராசனுக்கு) முன்பாக இருக்கும் உடனடி வேலை, நீ எப்படியாவது தப்பி, யாழ்ப்பாணம் வருவதே. காந்தனும் மற்றவர்களும் குழந்தைகள் அல்ல. அவர்களிடம் பணத்தை கொடு. அவர்கள் தப்புவது பற்றி அவர்களே பார்த்து கொள்வார்கள்” என்றும் சிவராசனுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில் பொட்டு அம்மான் குறிப்பிட்டு இருந்தார்.

தொடரும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s