ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 72

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-9

ராஜிவ் கொலை திட்டமிடல் ரகசியம் முழுமையாக தெரிந்த சிவராசனை யாழ்ப்பாணத்துக்கு மீட்டுச் செல்ல, புலிகள் முயற்சிக்கவே இல்லையா? முயற்சித்தார்கள், ஆனால், முயற்சி பலிக்கவில்லை. சிவராசனை மீட்பதற்காக கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த டேவிட்டை ஜூன் 9-ம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் இருந்து படகுடன் அனுப்பியது. எனினும், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் டேவிட்டின் படகு கடலில் மூழ்கியது. இதில் டேவிட்டும் மற்ற 6 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் பத்மநாபாவை படுகொலை செய்த அணியில் சிவராசனும் இருந்தார். அந்த அணியின் தலைவர் இந்த டேவிட்தான். இந்த விபத்து பற்றிய விவரங்களை சிவராசனிடம் பொட்டு அம்மான் ஒயர்லெஸ் மூலம் தெரியப்படுத்தினார். கொடுங்கையூரில் விஜயனின் வீட்டில் மறைந்திருந்த சிவராசன் தப்பிச் செல்வதற்காக ஆவலுடன் காத்திருந்த சமயத்தில், இந்தப் படகு விபத்து பலத்த அடியாக அமைந்தது.


ராஜிவ் கொலை திட்டமிடல் ரகசியம் முழுமையாக தெரிந்த சிவராசனை யாழ்ப்பாணத்துக்கு மீட்டுச் செல்ல, புலிகள் முயற்சிக்கவே இல்லையா?

முயற்சித்தார்கள், ஆனால், முயற்சி பலிக்கவில்லை.

சிவராசனை மீட்பதற்காக கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த டேவிட்டை ஜூன் 9-ம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் இருந்து படகுடன் அனுப்பியது. எனினும், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் டேவிட்டின் படகு கடலில் மூழ்கியது. இதில் டேவிட்டும் மற்ற 6 பேரும் உயிரிழந்தனர்.

சென்னையில் பத்மநாபாவை படுகொலை செய்த அணியில் சிவராசனும் இருந்தார். அந்த அணியின் தலைவர் இந்த டேவிட்தான்.

இந்த விபத்து பற்றிய விவரங்களை சிவராசனிடம் பொட்டு அம்மான் ஒயர்லெஸ் மூலம் தெரியப்படுத்தினார். கொடுங்கையூரில் விஜயனின் வீட்டில் மறைந்திருந்த சிவராசன் தப்பிச் செல்வதற்காக ஆவலுடன் காத்திருந்த சமயத்தில், இந்தப் படகு விபத்து பலத்த அடியாக அமைந்தது.

அதன்பின், சிவராசனை காப்பாற்ற எந்த முயற்சியும் இலங்கையில் இருந்த விடுதலைப் புலிகளால் எடுக்கப்படவில்லை.

சிவராசன் தற்கொலை இறந்த பின்னரே, அவர் யார் என்பது பற்றிய முழு விபரங்களையும், சி.பி.ஐ.-யால் சேகரிக்க முடிந்தது. யாழ்ப்பாணம், உடுப்பிட்டி என்ற இடத்தை சேர்ந்த பாக்கியச்சந்திரன் (இயக்கப்பெயர் ரகுவரன்) என்பவர்தான் சிவராசன் என்பது நிரூபிக்கப்பட்டது.

கர்நாடகத்தின் கோனானகுன்டேயில் (சிவராசன் தற்கொலை செய்துகொண்ட இடம்) சிவராசன் மறைவிட வீட்டிலிருந்து 1991 ஆகஸ்டில் கைப்பற்றப்பட்ட ஏ.கே. 47 ரைபிள்தான், 1990-ல் சென்னையில் பத்மநாபாவையும் மற்ற 13 பேரையும் படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்டது என்பதை அறிவியல் பூர்வமாக சி.பி.ஐ. நிரூபித்தது.

இதன் அர்த்தம், 1990 ஜூனிலேயே சிவராசன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்துள்ளார் என்பதுதான்.

சிவராசன் சிக்கிக் கொள்வது உறுதி என தெரிந்தவுடன், அவரைப் பற்றிய மற்றொரு தகவல், சில விடுதலைப் புலி ஆதரவு மீடியாக்களில் கசியவிடப்பட்டது. 1989 பிற்பகுதியில் அல்லது 1990 தொடக்கத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு அவர் விலகிச் சென்றதாகக் கூறியது அந்த தகவலி.

ஆனால், அதை மறுக்கும் ஆதாரமாக, 1990-ம் ஆண்டு ஜூனில் பத்மநாபா கொல்லப்பட்டார் என்பதும், அதில் சிவராசனின் பங்கு இருந்ததும் சி.பி.ஐ.-யால் காண்பிக்கப்பட்டது.

இந்த தொடரில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, 1989-ம் ஆண்டு செப்டெம்பரில் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் நடந்த விடுதலைப்புலிகள் இயக்க கூட்டத்தில் சிவராசன் பேசுவதைக் காட்டும் வீடியோ கேசட் மற்றொரு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டது.

சுதந்திரராஜா கைது செய்யப்பட்ட பின்னர், தானும் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர் என்றும், சிவராசனின் அண்டை வீட்டுக்காரர் என்றும் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவில் சிவராசனால் சேர்க்கப்பட்ட சுதந்திர ராஜாவை, 1990 பெப்ரவரியில் சென்னைக்கு அழைத்து வந்ததும் சிவராசன்தான்.

இவ்வளவு தகவல்கள் இருந்தாலும், ராஜிவ் கொலை திட்டமிடலின் பிரதான நபரான சிவராசன்தான், யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்த பாக்கியச்சந்திரன் என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியம், சி.பி.ஐ.க்கு ஏற்பட்டது.

அதற்காக இலங்கை உளவுத்துறை, மற்றும் சர்வதேச போலீஸ் பிரிவான இன்டர்போலின் உதவியை நாடியது, சி.பி.ஐ.

அந்த முயற்சி, 1992-ம் ஆண்டு மார்ச்சில் பலித்தது. யாழ்ப்பாணம், உடுப்பிட்டியை சேர்ந்த பாக்கியச்சந்திரனின் தாயார் சிவபாக்கியம் சந்திரசேகரம், மற்றும் சகோதரர் ரவிச்சந்திரன் சந்திரசேகரம் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி கொழும்புவில் வசிக்கும் விபரத்தை கண்டுபிடித்து தெரிவித்தது, இலங்கை உளவுத்துறை.

இதையடுத்து, சர்வதேச போலீஸ் இன்டர்போலின் கொழும்பு கிளை, தாமே நேரடியாக வெள்ளவத்தை என்ற இடத்தில் வசித்த சிவபாக்கியம், ரவிச்சந்திரன் ஆகியோரின் அடையாளங்களை சரிபார்த்தபின், அவர்களது ரத்த சாம்பிள்களை எடுத்து, இந்தியாவுக்கு அனுப்பினர்.

கோனானகுன்டேயில் சிவராசன் தற்கொலை செய்து இறந்தபோது, அவரது ரத்த சாம்பிள் எடுக்கப்பட்டு, பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. சிவராசனின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் திசுக்களின் டி.என்.ஏ. அமைப்புகள், அவரது தாயார், சகோதரருடையதை ஒத்திருந்தன.

இந்த விதத்தில், சிவராசன், சிவபாக்கியத்தின் மகன், ரவிச்சந்திரனின் சகோதரர் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தது, சி.பி.ஐ.

இலங்கை பதிவுத்துறை அமைச்சகத்தில் இருந்து, சிவராசனின் தேசிய அடையாள அட்டை ஆவணங்களை சி.பி.ஐ. பெற்றுக் கொண்டது. சிவராசனின் இடது கண் பறிபோனதற்கு முன் எடுக்கப்பட்ட போட்டோ, அவரது தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தில் இருந்தது.

கண் இழந்த பிறகு சிவராசன் மீண்டும் ஒரு இலங்கை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில், இடது கண் இழந்த பிறகு எடுத்த போட்டோவும் இருந்தது.

இந்தியா, தமிழகம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி படுகொலை நடந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட ஹரிபாபுவின் முதலாவது போட்டோவில் காட்சியளித்த நபரும், கர்நாடகா மாநிலம் கோனானகுன்டேயில் தற்கொலை செய்துகொண்ட நபரும், இலங்கை, உடுப்பிட்டியை சேர்ந்த சிவபாக்கியத்தின் மகன் பாக்கியச்சந்திரனும் ஒரே நபர்தான் என்பதை, தடய அறிவியல் சாட்சியச் சான்றுகள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தன.

ராஜிவ்காந்தி படுகொலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொடர்பை மேலும் இரு ஆவணங்கள் உறுதிப்படுத்தின.

திருச்சி சாந்தன், பிரபாகரனுக்கு எழுதிய கடிதமும், இரும்பொறைக்கும் (திருச்சி சாந்தனின் இந்திய உதவியாளர்) எழுதிய குறிப்புகளும்தான் அவை.

திருச்சி சாந்தனின் கட்டளையின்பேரில் இரும்பொறையும், விடுதலைப்புலிகள் சிலரும் 1991 அக்டோபர் 2-ம் தேதி நள்ளிரவு படகில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடலோர காவற்படை அந்தப் படகை நடுக்கடலில் மறித்தது. அப்போதுதான் இந்த கடிதமும், குறிப்புகளும் கிடைத்தன.

யாழ்ப்பாணத்தில் இரும்பொறை என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என திருச்சி சாந்தன் குறிப்புகளை ஒரு தாளில் எழுதி கொடுத்திருந்தார்.

அதில், யாழ்ப்பாணத்துக்குள் எவ்வாறு செல்வது, பிரபாகரனுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது, அவரிடம் என்ன சொல்ல வேண்டும், எவற்றைச் சொல்லக்கூடாது என்பது பற்றிய கட்டளைகள் இருந்தன.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழக நிலைமை, தமிழகத்தில் ராஜிவ் புலனாய்வு தேடல்களின்போது, விடுதலைப்புலிகள் சயனைட் குப்பி கடித்து மரணமடைந்த தேதிகள், விவரங்கள், இந்தியப் பத்திரிகைகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலை, கைதான ஆதரவாளர்களுக்கு உதவ மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை பிரபாகரனிடம் இரும்பொறை தெரிவிக்க வேண்டும் என திருச்சி சாந்தன் விரும்பினார்.

“புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்த சிவராசன், ராஜிவ் கொலை ஆபரேஷனில், தமது இந்திய நண்பர்களான அறிவு, ஹரிபாபு, சுபா சுந்தரம் போன்றோரைப் பயன்படுத்தியது தவறு. அவர்களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இருந்த தொடர்பு அனைவருக்கும் தெரிந்துள்ளது.

சிவராசன் செய்த இந்த காரியத்தால்தான், புலிகளுக்கு இதிலுள்ள தொடர்பு வெளியே தெரியும்படி போனது” என இரும்பொறை பிரபாகரனிடம் நேரில் தெரிவிக்க வேண்டும் என திருச்சி சாந்தன் விரும்பினார்.

இரும்பொறை இப்படியெல்லாம் சொல்ல வேண்டும் என்பதை, பாயின்ட், பாயின்ட்டாக ஒரு தாளில் எழுதிய திருச்சி சாந்தன், அந்தக் குறிப்புகளையே இரும்பொறையின் கையில் கொடுத்து அனுப்பியிருந்தார்!

அந்தக் குறிப்புகளில் மேலும், “பத்மநாபா படுகொலையை சென்னையில் நடத்தியது போல, விடுதலைப்புலி உறுப்பினர்களை மட்டுமே ராஜிவ் கொலையிலும் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் சிவராசன், தமது இந்திய நண்பர்களையும் இதில் ஈடுபடுத்தி, இதில் புலிகளுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தி விட்டார்.

இப்போது சி.பி.ஐ., ராஜிவ் கொலையில் விடுதலைப்புலிகள் தொடர்பு பற்றி அனைத்தையும் தெரிந்துவைத்துள்ளது. இதற்குக் காரணம், விடுதலைப்புலிகள் சிலரும், சிவராசனுக்கு உதவி செய்த இந்தியர்கள் சிலரும் உயிருடன் பிடிபட்டதே.

சுதந்திரராஜா போன்ற புலிகளின் உளவுப்பிரிவு ஆட்கள் கைது செய்யப்பட்டதால் சிவராசன் எல்லாப் பிரச்சனைகளையும் வரவழைத்து கொண்டார்.

பத்மநாபா கொலை உள்பட எல்லாவற்றையும் சி.பி.ஐ.யிடம் சுதந்திரராஜா வெளிப்படுத்தி விட்டார்” என்றும் குறிப்பிட்டிருந்த சிவராசன், இந்த பாயின்ட்டுகளை அப்படியே பிரபாகரனிடம் போய் சொல்லுமாறு இரும்பொறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இரும்பொறையோ, திருச்சி சாந்தன் எழுதிக் கொடுத்த குறிப்புகளுடன், இந்திய கடலோர காவல்படையிடம் சிக்கிக் கொண்டார்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s