ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 73

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-10

பல்வேறு உள் ஆய்வுகள், சாட்சியச் சான்றுகளின் ஆய்வுகளுக்குப் பின்னர், இந்த வழக்கில் வேறு பலருடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சோந்த பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோரையும் எதிரிகளாகச் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் என்ற அறிவிப்புக்கான ஆணைகள், தூதரக வழியில் 1992ம் ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால், இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்த சூழ்நிலை காரணமாக இந்த ஆணைகளை பிரபாகரனிடம் அளிக்க முடியாமல் போனது. பின்னர் இந்த ஆணைகள் இலங்கை அரசின் ஒப்புதலுடன் இலங்கையில் உள்ள ஆங்கில, தமிழ், சிங்களப் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடப்பட்டன. இதையடுத்து ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் பிரபாகரனும், பொட்டு அம்மானும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

இறுதியாக்கப்பட்ட குற்றப்பத்திரிகை, 55 பக்கங்களைக் கொண்டிருந்தது. ராஜிவ்காந்தி படுகொலை நடந்த ஓராண்டு நிறைவு தினத்துக்கு முந்தைய தினம், 1992 மே 20ம் தேதி 41 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்களில் தலைமறைவான 3 பேரும், தற்கொலை செய்துகொண்ட 12 பேரும் அடங்குவர். காவலில் வைக்கப்பட்டிருந்த 26 நபர்கள் மட்டுமே வழக்கை எதிர்கொண்டனர்.

அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் 10,000 பக்கங்களுக்கு மேல் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை சிறப்புப் புலனாய்வுப்படையால் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டவை. இந்த வாக்குமூலங்கள், ஆவணங்கள் அடங்கிய பட்டியலின் 26 நகல்கள் தயாரிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகையுடன் 26 எதிரிகளுக்கும் அளிக்கப்பட்டன.

இவற்றைப் பெற்றுக்கொண்ட எதிரிகளில் பெரும்பாலானோர் இவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு கோரி தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். அதற்கு சுமார் 10 வாரங்கள் அவகாசம் தேவைப்பட்டது.

சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அளித்த கோரிக்கைக் கடிதங்களின் மூலமாக இலங்கை மற்றும் சில நாடுகளிலிருந்து ஏராளமான சான்றுகளைச் சிறப்புப் புலனாய்வுப்படைச் சேகரித்தது. இலங்கையிலிருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகள் மூலம் சிவராசன், முருகன், சுதந்திரா ராஜா, கனகசபாபதி உட்பட பலரின் அடையாளங்களைச் சிறப்புப் புலனாய்வுப்படை நிரூபித்தது.

26 எதிரிகளில் 25 பேர் சார்பில் வாதாடுவதற்கு 10 சட்டத்தரணிகளைச் சிறப்பு நீதிமன்றம் நியமித்தது. முருகன் மட்டும் நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாகக் கூறிவிட்டார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஓராண்டு முடிவதற்குச் சில வாரங்களே இருந்த நிலையில், ராஜிவ்காந்தி படுகொலை நடந்து இரு ஆண்டுகள் முடிவதற்குச் சில வாரங்களே இருந்தபோது, 1993ம் ஆண்டு மே 5ம் தேதி ‘தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சித்திக் முன்னிலையில் அரசுத்தரப்புச் சட்டத்தரணிகள் குழுத் தலைவரான பி. ராஜமாணிக்கம் இந்த வழக்கில் முதல்கட்ட வாதத்தைத் தொடங்கினார்.

இந்தியாவின் பிரதமராக இருந்தவர், பொதுத் தேர்தலுக்குப் பின் மீண்டும் பிரதமராவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியத் தலைவரை (ராஜிவ்காந்தி) ஒரு போராளி அமைப்பு படுகொலை செய்தது இதுவே முதல்முறை.

1994ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி முதலாவது சாட்சியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுரத்தை விசாரிப்பதிலிருந்து சிறப்பு நீதிமன்ற விசாரணை தொடங்கியது.

ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட பகுதியான ஸ்ரீபெரும்புதூர் பொலிஸ் நிலைய அதிகாரியான இவர்தான், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்தார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவில் மிகவும் பரபரப்பான முக்கியக் குற்றப்புலனாய்வு நடவடிக்கையை அவர் தொடங்கி வைத்தார்.

இன்ஸ்பெக்டர் மதுரத்தையடுத்து, மேலும் 287 சாட்சிகளைச் சிறப்புப் புலனாய்வுப்படை ஆஜர்படுத்தியது. மாநில ஆளுநர், தூதர், ராணுவ உயரதிகாரி, அரசியல் தலைவர்கள், தடய அறிவியல் நிபுணர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், பொலிஸ் அதிகாரிகள், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்தனர்.

ஒரு சாட்சி பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு அமெரிக்காவில் போய் குடியேறிவிட்டார். வயர்லெஸ் தகவல் குறுக்கீடு தொடர்பாக இவரது சாட்சியம் முக்கியமானது என்பதால் அமெரிக்காவில் இவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து சென்னைக்கு அழைத்து வந்து சாட்சியம் அளிக்கச் செய்தது சி.பி.ஐ.

1447 சான்றாவணங்களும், 1180 சான்றுப் பொருட்களும் உரிய சாட்சிகள் மூலமாக விசாரணையின்போது அடையாளம் காட்டப்பட்டன. இந்த நடைமுறை முடிவடைய 4 ஆண்டுகளுக்கு மேலானது.

விசாரணை நடந்துகொண்டிருந்த காலத்தில் இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த சிறப்பு நீதிபதி எஸ்.எம். சித்திக், உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டார். இதையடுத்து, என்.நவநீதம் சிறப்பு நீதிபதியாகப் பொறுப்பேற்று, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு விசாரணையை நடத்தி முடித்தார்.

சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில், எதிரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பல்வகை மனுக்களையும் சி.பி.ஐ. எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றில் பெரும்பாலானவை ஜாமீன் விடுதலை கோரும் மனுக்கள்தான். மொத்தம் 432 மனுக்கள் எதிரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.

288 சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளை முடிக்க 3 ஆண்டுகளும் 4 மாதங்களும் ஆகின.

288 சாட்சிகளில் 4 சாட்சிகள் மட்டுமே சி.பி.ஐ. எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக சாட்சி சொன்னார்கள்.

இவர்களை விடுதலைப்புலிகள் அனுதாபிகள் என்றும் ஏதோ ஒரு விதத்தில் எதிரிகளோடு தொடர்பு வைத்திருந்தவர்கள் எனவும் சிறப்புப் புலனாய்வுப்படை கோர்ட்டில் கூறியது.

ஆனால், படுகொலை திட்டமிடலை நிரூபிப்பதற்கு இவர்களது சாட்சியம் தேவைப்பட்டது. எதிரிகள் தப்பிச் செல்லும் முயற்சியில் நடந்த சில சம்பவங்கள் பற்றி இந்த 4 சாட்சிகளில் மூவர் தெரிவிக்க வேண்டியிருந்தது.

நீதிமன்ற அனுமதியோடு இந்த சாட்சிகளிடம் சிறப்புப் புலனாய்வுப்படை குறுக்கு விசாரணை நடத்தியது. இந்த சாட்சிகள் எதை மறைக்க முயன்றார்களோ அவற்றை மறைக்க முடியாது போனது. காரணம், சென்னை ஐ.ஐ.டி.யின் பிரபல பேராசிரியரை நிபுணர் சாட்சியாக அழைத்து, இந்த நால்வரும் மாற்றிக் கூறியதை நிரூபித்தது சி.பி.ஐ.

தங்களுக்கு எதிரான பல்வேறு புகார்களையும் அனைத்து எதிரிகளும் மறுத்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிரிகள் தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. இறுதியில் 1998 ஜனவரி 28ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது.

இந்த வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அனைத்து எதிரிகளும் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்தது.

இதையடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை மெதுவாக நடைபெற்றன. 1998 செப்டெம்பருக்கும் 1999 ஜனவரிக்கும் இடைப்பட்ட 4 மாதங்களில் நீதிபதிகள் கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, சையத் ஷா மொகம்மத் காத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

ராஜிவ்காந்தி படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பை 1999 மே 5ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்தத் தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய நால்வரின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் நளினியின் மரண தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இறுதித் தீர்ப்பின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “ராஜிவ்காந்தியை படுகொலை செய்வதற்கான குற்றச் சதித் திட்டத்தைத் தீட்டியவர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான், சிவராசன் ஆகியோர் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை” என்று குறிப்பிட்டனர்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட இந்தக் கருத்து, பின்னாட்களில் இந்தியா, இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியது.

1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அதிலிருந்து 18 ஆண்டுகளின்பின், அதே மே மாதத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டனர்.

இந்தியா உட்பட எந்தவொரு நாட்டின் பின்னணி பலமும் இல்லாத நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கமும் அழிந்து போனது.

ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக சிலருக்கு ஏற்பட்டுள்ள முக்கிய சந்தேகம் ஒன்று உள்ளது. ராஜிவ் கொலையில் அன்னிய அமைப்பு அல்லது அமைப்புகளுடன் விடுதலைப்புலிகள் இயக்கம் கூட்டுச் சேர்ந்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?

இதை வேறு விதமாக சொன்னால், அன்னிய அமைப்பு ஒன்றுக்காக ராஜிவ் கொலை விடுதலைப் புலிகளால் செய்து முடிக்கப்பட்டதா?

இந்தக் கேள்விக்கு நேரடிப் பதில் கூற முடியாதபடி சில சிக்கல்கள் உள்ளன. ஆனால், ராஜிவ் கொலையை அந்த திசையில் கொண்டு செல்லும் விதத்தில் சில சம்பவங்கள் நடந்தன என்பது நிஜம்.

76 அத்தியாயங்கள் வரை வந்து, முடிவடையும் நிலைக்கு வந்துவிட்ட இந்த தொடர், முற்றுமுழுதாக இந்த கொலை வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு, எப்படி ராஜிவ் கொலையில் விடுதலைப் புலிகளின் தொடர்பை கண்டுபிடித்தது என்பது பற்றி விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அந்த வகையிலேயே இதுவரை எழுதப்பட்டும் வந்தது.

எனவே, ராஜிவ் காந்தி கொலை புலனாய்வில் விடுதலைப் புலிகள் எப்படி சிக்கினார்கள் என்பது குறித்து இந்த தொடரில் எழுதியுள்ளோம். ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகள் எதற்காக கொன்றார்கள், அல்லது எதற்காக கொன்றிருக்கலாம் என்பது பற்றி இதில் எழுதவில்லை.

அந்த விவகாரத்தை இதற்குள் கொண்டுவந்து, சி.பி.ஐ. புலன் விசாரணை தொடர்பான இந்த தொடரை குழப்ப வேண்டாம். இந்த தொடர் முடிந்தபின் அதை தனியாக எழுதலாம் என விட்டிருந்தோம்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, ராஜிவ் கொலையை அன்னிய சக்திகளின் திசையில் கொண்டு செல்லும் விதத்தில் சில சம்பவங்கள் நடந்தன என்பது நிஜம். அவற்றை வைத்துக்கொண்டு சில தந்திரமான ஊகங்களை செய்ய வேண்டியிருக்கும்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s