ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 74

 விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-11

சிவராசன் மற்றும் திருச்சி சாந்தனின் மரணத்துக்குப் பின்புதான், கைது செய்யப்பட்ட மற்றவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களைத்தவிர, பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு எதிரான நேரடிச் சாட்சியங்கள் ஏதும் தம்மிடம் இல்லை என்று புரிந்து கொண்டது சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு.

ஆனால், இந்தியாவில் நடந்த தேடுதல்களின்போது சிக்கிக்கொண்ட பலர் சயனைட் குப்பியை மென்று தற்கொலை செய்துகொண்டது, அவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சாட்சியச் சான்று என வழக்கில் வாதாடியது சி.பி.ஐ.

பெரும்பாலான சயனைட் தற்கொலைகள், திருச்சி சாந்தனின் கட்டளையால் நிகழ்ந்தவை என்பதை கோர்ட் ஏற்றுக்கொண்டது. பிரபாகரனுக்கு திருச்சி சாந்தன் எழுதிய கடிதத்தை வைத்துதான், இதை கோர்ட்டில் எஸ்டாபிளிஷ் பண்ணியது சி.பி.ஐ. (நேரடியாக நிரூபிக்க திருச்சி சாந்தனோ, தற்கொலை செய்தவர்களோ, உயிருடன் இல்லை)

இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை தவிர இந்த வழக்கில் கோர்ட் வரை கொண்டு செல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை மொத்தம் 14 (விசாரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட சுமார் இரண்டு டஜன் அதிகம்).

இந்த 14 பேரில், நளினி, பாக்கியநாதன், பத்மா, அறிவு, இரும்பொறை, ரவி, சுசீந்திரன், சுபா சுந்தரம், சாந்தி, தனசேகரன், ரங்கநாத் ஆகிய 11 பேரும் இந்தியர்கள்.

விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, பாஸ்கரன் ஆகிய மூவரும் இந்தியப் பின்னணி கொண்ட இலங்கையர்கள் (இவர்களில் இருவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தனர்).

இந்த 14 பேரும், சிறப்பு நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டனர். இவர்கள் அனைவரையும் தண்டனைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்தது.

இவர்களில் ரங்கநாத் நீங்கலாக, மற்ற அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருந்துள்ளது.

குண்டு வெடித்த இடத்தில் இருந்தவர் நளினி.

பாக்கியநாதன் மற்றும் பத்மாவின் வீடுகளும், பாக்கியநாதனின் அச்சகமும் சிவராசன், முருகனுக்கு ரகசிய மறைவிடங்களாக இருந்துள்ளன.

பாக்கியநாதனின் அச்சகத்திலிருந்து சிவராசனின் மோட்டார் பைக் கைப்பற்றப்பட்டது. இந்த அச்சகம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமானது.

விடுதலைப்புலிகளுக்கு விசுவாசமாக இருப்பதாகவும், அதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாகவும் கூறி, பேபி சுப்பிரமணியத்துக்கு பாக்கியநாதன் எழுதிய கடிதம் கோடியக்கரையில் முருகனின் பைகளில் கைப்பற்றப்பட்டது.

ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பிறகு, தனுவின் போட்டோவை ‘ஹிந்து’ நாளிதழ் பிரசுரித்த மறுநாள், மே 25-ம் தேதி, முருகன், சுபா, சிவராசன், நளினி, பத்மா ஆகியோரின் திருப்பதி பயணத்துக்கு டாக்ஸி ஏற்பாடு செய்து தந்தவர் பாக்கியநாதன்தான்.

முருகனும், நளினியும் தலைமறைவாக செல்வதற்கு சற்று முன்னர், ரகசிய ஒயர்லெஸ் தொடர்புக்கான குறியீட்டுக் காகிதம் ஒன்றை பத்திரமாக வைத்திருக்குமாறு பத்மாவிடம் கொடுத்தார் முருகன். பத்மா அதை அவரது சகாவிடம் கொடுத்து வைத்திருந்தார். பத்மா கைது செய்யப்பட்ட பின், அந்த ரகசியக் குறியீட்டு காகிதம் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்தது.

இந்தக் காகிதம் சட்டவிரோதமான ஆவணம் என்பது பத்மாவுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், முருகனுக்குத் தேவைப்படும் என்பதால் அதை அழிக்காமல் விட்டுவிட்டார். அதைமறைக்க அவர் மேற்கொண்ட முயற்சியே, இந்த விவகாரத்தில் அவரை சிக்க வைத்தது.

திராவிடர் கழகப் பிரமுகரின் மகன்தான் அறிவு (தற்போது செய்திகளில் அடிபடும் பேரறிவாளன்). இவரும், இரும்பொறையும் திராவிடர் கழக உறுப்பினர்கள்தான்.

ராஜிவ் கொலைக்கு முன்பே விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்த இவர்கள் இருவரும், விடுதலைப்புலிகளுக்குப் பொதுமக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் நிதியையும் திரட்டுவதற்காக விடுதலைப்புலிகள் தொடர்பான பிரசுரங்களையும், வீடியோ கேசட்டுகளையும் கொண்டு கண்காட்சிகள் நடத்தியிருந்தனர்.

1990 மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்த இருவரும் பேபி சுப்பிரமணியத்துடன் ரகசியமாக யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இந்த இருவரும் இருந்ததைக் காண்பிக்கும் புகைப்படங்கள் பலவற்றைச் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியிருந்தது.

திருச்சி சாந்தனின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் இரும்பொறை. விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு மூலம், சிவராசனும், சுபாவும் பெங்களூருக்கு அனுப்பப்பட்டபோது அவர்களை வரவேற்பதற்காக இந்திரா நகர் வீட்டில் இருந்தவர் இவர்தான்.

பிரபாகரனைச் சந்திப்பதற்காக படகில் சென்று கொண்டிருந்தபோது இந்தியக் கடற்படையினரிடம் இரும்பொறை பிடிபட்டார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட திருச்சி சாந்தனின் இரு கடிதங்களும், ராஜிவ்காந்தி படுகொலையில் இவருக்குள்ள தொடர்பை நிரூபிக்கப் போதுமானதாக இருந்தன.

சிவராசனுக்கான மோட்டார் பைக், ஒயர்லெஸ் சாதனத்துக்கான 12 வோல்ட் பேட்டரி, ராஜிவ்காந்தியைக் கொல்ல தனு பயன்படுத்திய வெடிகுண்டை இயக்கப் பயன்பட்ட கோல்டன் பவர் பெட்டரிகள் ஆகியவற்றை விலைக்கு வாங்கி வந்தவர் அறிவு.

துரதிஷ்டவசமாகதான் இவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தது.

துரதிஷ்டம் எது? இவர் பேட்டரி வாங்கி கொடுத்தபோது, அவற்றை சிவராசன் எதற்கு உபயோகிக்க போகிறார் என்பது இவருக்கே தெரியாது. அந்த பேட்டரிகளை சிவராசன் ஒரு டார்ச் லைட்டை இயக்க பயன்படுத்தியிருந்தால், இவர் சிறிய தண்டனையுடன் தப்பித்திருப்பார். ஆனால், அந்த பேட்டரிகளை ராஜிவ் காந்தியை கொன்ற வெடிகுண்டை இயக்க பயன்படுத்தினார் சிவராசன்.

இவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தது, இந்திய குற்றவியல் சட்டத்தில் உள்ள முரண்பாடான பகுதி. ‘கொலைக்கான ஆயுதத்தை கொடுத்தவர்’ என்ற பிரிவுக்குள் இவரை தள்ளிவிட்டது சட்டம்.

ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்திய குற்றவியல் சட்டத்தின்படி, கத்தியை தயாரித்தவரோ, அதை விற்றவரோ குற்றவாளிகள் அல்ல. கத்தியை வாங்கி கொலையாளியிடம் கொடுத்தவர், குற்றவாளி.

கத்தியை வாங்கியவர், அதை ஆப்பிள் நறுக்க கொலையாளியிடம் கொடுத்திருக்கலாம். ஆனால், அதை நிரூபிக்க அவரிடம் ஆதாரம் வேண்டும். அல்லது அதை கொலையாளி ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிறது சட்டம்.

இவரது கேஸில், அதை ஒப்புக்கொள்ள சிவராசன் உயிருடன் இல்லை. இவரிடமும் ஆதாரம் இல்லை. இவரிடம் எடுக்கப்பட்ட(தாக கூறப்பட்ட) வாக்குமூலமும் சட்டத்தின் முன் இவரை குற்றவாளி ஆக்கியது.

வழக்கு கோர்ட்டுக்கு போவதற்குமுன், சி.பி.ஐ. நினைத்திருந்தால் இவரை காப்பாற்றியிருக்காலம். சிறிய தண்டனையுடன் விடப்பட்டிருப்பார். ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் ஏனோ அதை செய்யவில்லை. வழக்கு கோர்ட்டுக்கு போய் விட்டால், சான்ஸே இல்லை. சட்டம் அப்படி.

சட்டத்தின் பொறிக்குள் மாட்டிக்கொண்ட துரதிஷ்டசாலி ஆனார் இவர்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s