ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 75

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-12

அடுத்து ராஜிவ் கொலைத் திட்டத்துடன் ரவியை தொடர்பு படுத்திய தடயங்கள்.

1986லிருந்து ரவி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வந்தார். ரவியும், விடுதலைப்புலி இயக்க தளபதியாக இருந்த கிட்டுவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் 1988ல் சென்னை மத்திய சிறையில் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தை சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு பெற்றது.

1988 அக்டோபரில் கிட்டு மற்றும் சிலருடன் ரவியும் இந்திய அமைதிப்படை மூலம் பலாலிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். யாழ்ப்பாண வனப்பகுதியில் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து ரவி எடுத்துக்கொண்ட புகைப்படம், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைப்பற்றிய ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் ஒன்று.

தமிழகப் போலீஸ் திண்டுக்கல்லில் ரவியைக் கைது செய்தது. அங்கு டி.என்.ஆர்.டி.யைச் சேர்ந்த பலர் ஆயுதங்கள் ஒயர்லெஸ் சாதனங்களுடன் பிடிபட்டனர்.

ராஜிவ்காந்தி படுகொலைக்குப்பிறகு ரவியின் கட்டளையின் பேரில், சுபாவை பொள்ளாச்சியில் உள்ள வீட்டில் மறைந்திருக்கச் செய்தார் சுசீந்திரன். இந்த சுசீந்திரன் கொடுத்த தகவலின்பேரில் பொள்ளாச்சியிலிருந்து 9 மில்லி மீற்றர் பிஸ்டல், கையெறி குண்டுகள், வாக்கி-டாக்கிகள், சயனைட் குப்பிகள், தங்கக் கட்டிகளையும், கோடியக்கரையிலிருந்து ஒரு வாக்கி-டாக்கியையும், கையெறி குண்டுகளையும் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியது.

தமிழகத்தின் பிரபல போட்டோ செய்தியாளராக இருந்த சுபா சுந்தரம் இதில் சிக்கியது தொடர்பான தடயங்கள் வெளிப்படையானவை.

ஹரிபாபுவின் கேமராவைக் கைப்பற்ற சுபா சுந்தரம் முயற்சித்ததையும், விடுதலைப்புலிகளுடன் ஹரிபாபுவுக்கு இருந்த தொடர்புக்கான சான்றுகளை அழிக்க முயன்றதில் அவரது பங்கையும் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு நிரூபித்தது.

குண்டுவெடித்த இடத்தில் கிடந்த ஹரிபாபுவின் கேமராவைக் கைப்பற்றுவதில் சுபா சுந்தரம் வெற்றியடைந்திருந்தால், ராஜிவ் கொலையுடன் விடுதலைப் புலிகளுக்கு இருந்த தொடர்பு பற்றி தெரியவந்திருக்காது. தொடக்க நிலையிலேயே, புலனாய்வு தடம்புரண்டிருக்கும்.

முத்துராஜா, அறிவு, பாக்கியநாதன், ஹரிபாபு ஆகியோர் சென்னையில் உள்ள சுபா சுந்தரத்தின் சுபா ஸ்டூடியோவில் பேபி சுப்பிரமணியத்தைச் சந்திப்பது வழக்கமாக இருந்தது. ராஜிவ்காந்தி படுகொலை தினத்தன்று சுபா சுந்தரத்தை ஹரிபாபு சந்தித்துள்ளார். கொலை நடக்கும்போது போட்டோ எடுத்த கேமராவை ஹரிபாபுவிடம் சுபா சுந்தரமே கொடுத்தும் அனுப்பியுள்ளார்.

தனசேகரன், 1984-ல் இருந்து விடுதலைப்புலிகளின் நெருக்கமான ஆதரவாளர். சிவராசன், சுபா, நேரு ஆகியோரைச் சென்னையிலிருந்து பெங்களூருக்குத் தனது டாங்கர் லாரியில் ஏற்றிச் சென்றவர் தனசேகரன். ஒரு மாதம் கழித்து மீண்டும் பெங்களூர் சென்ற அவர், சிவராசனைச் சந்தித்துள்ளார்.

விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, அவரது தந்தை பாஸ்கரன் ஆகியோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்தியத் தொடர்புள்ளவர்கள் என்பதால், விடுதலைப்புலிகளின் மறைவிடங்களைக் கவனித்துக்கொள்வதற்காக இவர்களை விடுதலைப்புலிகள் தேர்வு செய்திருக்க வேண்டும் என சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு வாதாடியது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காரணம், இவர்களுக்கு எதிராக மற்ற தடயங்கள்.

இவர்களுடன்தான் ஆரம்பத்தில் சிவராசன், சுபா, தனு, நேரு ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த வீட்டிலிருந்துதான், சிவராசனுக்கும் பொட்டு அம்மானுக்கும் இடையே ரகசிய ஒயர்லெஸ் தகவல் தொடர்பு நடந்துள்ளது.

விஜயன் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது வீட்டின் சமையலறையிலிருந்து ஆன்டெனாவின் பாகங்களும், ஒயர்லெஸ் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பேட்டரியையும் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியது.

சென்னையைச் சேர்ந்த இந்தியரான சாந்தி, இலங்கைத் தமிழரான ஜெயக்குமாரைத் திருமணம் செய்திருந்தார். ஜெயக்குமாரையும், அவரது மைத்துனர் ராபர்ட் பயஸையும் சென்னையில் உள்ள விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு மறைவிடங்களுக்குப் பொறுப்பாக பொட்டு அம்மான் தேர்வு செய்திருந்தார்.

சிவராசனும் மற்ற விடுதலைப்புலிகளும் கொடுங்கையூரில் சாந்தியின் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த வீட்டின் சமயலறையில் தோண்டப்பட்டிருந்த குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிவராசனின் டயரிகள், பிஸ்டல் தோட்டாக்கள், சிவராசனின் போலி இடது கண், பிஸ்டலை மறைத்து வைக்கப் பயன்பட்ட டிக்ஷனரி உட்பட ஏராளமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

சிவராசனின் பிஸ்டலை மறைத்து வைப்பதற்காக ஒரு துணிப்பையை சாந்தியே தைத்துக்கொடுத்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட இந்தியர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுடனும் அதன் லட்சியங்களுக்காக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தனர். ராஜிவ்காந்தி படுகொலையிலும், சிவராசன் தப்பிச்செல்ல மேற்கொண்ட முயற்சியிலும் இவர்களது குறிப்பிடத்தக்க பங்கை சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு கோர்ட்டில் நிரூபித்தது.

ராஜிவ்காந்தி படுகொலைக்கு முன், இந்தியரான ரங்கநாத்துக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருந்ததற்கான எந்த ஆதாரமும் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவுயிடம் இல்லாதபோதிலும், சிவராசன், சுபாவைப் பிடிப்பதற்காக இந்திய அளவில் தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் ரங்கநாத் என்பதற்கு உறுதியான சாட்சியம் இருந்தது.

நீதிமன்றத்தில் விசாரணையைச் சந்தித்த 12 இலங்கைத் தமிழர்களும், மரணமடைந்த 10 விடுதலைப்புலிகள் அல்லது அவர்களது தீவிர ஆதரவாளர்கள் என்பதற்கான ஆதாரங்களும் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவுயிடம் இருந்தது.

இவ்வாறு மரணமடைந்தவர்களில், வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சிவராசன், சுபா, தனு, திருச்சி சாந்தன் ஆகியோரும் அடங்குவர்.

நேருவும், டிக்சனும் முக்கிய தகவல்களை அனுப்பிய ஒயர்லெஸ் ஆபரேட்டர்கள்.

அம்மான், டிரைவர் அண்ணா, ஜமுனா, சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் மற்றவர்கள். இந்த 6 பேரும் சிவராசன் தலைமையிலான உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லது திருச்சி சாந்தன் தலைமையிலான அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கும், ராஜிவ் கொலை திட்டமிடலுக்கும் எந்த தொடர்பும் இருந்ததாக சாட்சியங்களோ, தடயங்களோ இல்லை.

1991 ஜூலையில் ‘பிரன்ட்லைன்’ சஞ்சிகைக்கு கிட்டு அளித்த பேட்டியில், “விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒவ்வொரு முடிவும், ஆழமாக ஆராய்ந்த பின்னர், பிரபாகரனால் மட்டுமே எடுக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார். 1991 மார்ச்சில் ராஜிவ்காந்தியுடன் காசி ஆனந்தன், அர்ஜுனா சிற்றம்பலம் ஆகியோரின் சந்திப்புகள்கூட பிரபாகரன் ஒப்புதலுக்குப் பின் கிட்டு அனுமதியளித்து நடந்தன.

பிரபாகரனுக்கு திருச்சி சாந்தன் எழுதிய கடிதத்தில், பிரபாகரன் முன் அனுமதி பெறாமல், தனது போராளிகள் பிடிபட்டால் தற்கொலை செய்துகொள்ளுமாறு கூறியது குறித்து மன்னிப்பு கோரியிருந்தார்.

இவையெல்லாம் ராஜிவ்காந்தி படுகொலைக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்தான் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதாக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு கோர்ட்டில் வாதாடியது.

இப்படியான கொலை வழக்கில் முக்கிய திட்டமிடலாளர்களில் ஒருவர் அப்ரூவராக மாறினாலே தவிர, கொலைக்கான நேரடிச் சாட்சியத்தைப் பெறுவது இயலாத ஒன்று. இதனால், ராஜிவ் காந்தியை கொலை செய்யும்படி பிரபாகரன் உத்தரவிட்டதை நேரில் பார்த்த சாட்சிகள் யாருமில்லை.

பிரபாகரனின் உத்தரவு, அவரது உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டு அம்மானிடம் மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை சி.பி.ஐ. ஒப்புக்கொண்டது.

கடிதங்கள், ஒயர்லெஸ் தகவல்கள், சாட்சியங்கள், பேட்டிகள், கைப்பற்றப்பட்ட பொருட்கள் சயனைட் தற்கொலைகள், புகைப்படங்கள், விடியோ கேசட்டுகள் அடிப்படையில் ராஜிவ்காந்தி படுகொலை எவ்வாறு நடந்திருக்கும் என்பது சூழ்நிலைச் சாட்சியங்களால் மட்டுமே இந்த வழக்கில் சி.பி.ஐ.-யால் ஆவணப்படுத்தப்பட்டன.

இந்த வழக்கின் புலனாய்வுக்காக சுற்றிவளைக்கப்பட்ட போது, சயனைட் அருந்தி மரணமடைந்தவர்களும், உயிருடன் பிடிபட்டு காவலில் இருந்தவர்களும் விடுதலைப்புலிகள் அல்லது அவர்களது தீவிர ஆதரவாளர்கள்.

எனவே, ராஜிவ்காந்தியைத் தீர்த்துக்கட்டுவதற்கான சதித் திட்டத்தைத் தீட்டியவர்கள் பிரபாகரனும், பொட்டு அம்மானும்தான் என்பது நிச்சயமாகத் தெளிவாகிறது என சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு வாதாடியது.

பிரபாகரனின் உத்தரவின் பேரில், பொட்டு அம்மானும், அகிலாவும் இந்த திட்டத்துக்கான குழுவை தேர்வு செய்தனர். மனித வெடிகுண்டாக தனுவையும் அவருக்கு மாற்றீடு மனித வெடிகுண்டாக சுபாவையும், திட்டத்தைச் செயல்படுத்தும் குழுவின் தலைவராக சிவராசனைத் தேர்வு செய்தனர் என சி.பி.ஐ. கோர்ட்டில் கூறியது.

ஆனால், இந்தக் கூற்றுக்கு எந்த வித நேரடி ஆதாரமும் கிடையாது.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s