அம்மு முதல் அம்மா வரை : பாகம் 10

அ.தி.மு.கட்சியின் பிரச்சார பீரங்கியாக உருவெடுத்த ஜெயலலிதா!

அ.தி.மு.கட்சியின் பிரச்சார பீரங்கியாக உருவெடுத்த ஜெயலலிதா!  (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-10)

‘கடமை , கண்ணியம், கட்டுப்பாடு பற்றி இந்த கருணாநிதியிடம் கேட்டால் கிலோ என்ன விலை என்று கேட்பார்.’ ‘ எம்.ஜி.ஆர். ஒரு பரம்பொருள்!

அந்தப் பரம்பொருளை நம்பியவர்கள் யாரும் கெட்டதில்லை! ’

‘சத்துணவுத் திட்டத்தால் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிடுவதால், பண்ணையில் மாடு மேய்க்க ஆளில்லை என்று நாராயணசாமி நாயுடு பேசுகிறார்… அடடா… அவருக்கு எவ்வளவு நல்ல எண்ணம்! ’

‘… சத்துணவுத் திட்டத்தைப் பித்தலாட்டம் என்று சொன்ன கம்யூனிஸ்ட்   கல்யாண சுந்தரத்துக்கு டெபாசிட் காலி.

சத்துணவுத் திட்டத்தை எதிர்த்த காங்கிரஸ்காரர்களுக்குத் தேர்தலில் டெபாசிட் போய்விட்டது.

திட்டத்தை எதிர்த்துப் பேசாத ஜனதா கட்சிக்கும் டெபாசிட் போய்விட்டதே என்று நீங்கள் கேட்கலாம்.

பரம்பரை பரம்பரையாக டெபாசிட்டை இழக்கும் கட்சி ஜனதா கட்சி. ஆகவே அதை ஒன்றும் செய்ய முடியாது!’

‘ எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டுக்கு அரிசி போதவில்லை என்று சொன்னார்,  தமிழ்நாட்டிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் எம்.பி. அன்பரசுவோ, முதல்வர் சொல்வது பொய் என்கிறார்.

அன்பரசுவுக்கு தமிழ்நாட்டு மக்களின் மேல் அக்கறையே கிடையாதா ?’ ‘பணம் கொடுத்து காவிரித் தண்ணீர் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார் கர்நாடக முதல்வர் குண்டுராவ்.

கிடைக்கும் அந்நியச்செலாவணியை வைத்து   தமிழ்நாட்டால்  வெளிநாட்டிலிருந்தே தண்ணீரை வாங்கிக் கொள்ள முடியும்!’

‘ கிருஷ்ணா நதிநீரை சென்னைக்குக்  கொண்டுவர  ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு , நம்முடைய முதல்வர் உறங்கப் போனார்.

காலையில் எழுந்து பார்த்தால், ஆந்திராவுக்குப் புதிதாக ஒரு முதல்வர்.

புதிய ஆந்திர  முதல்வரோடும் பேச்சு நடத்திவிட்டு,  அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தால் , இன்னொரு ஆந்திர முதல்வர்! ’ கிண்டல் , குத்தல் , ஆவேசம்.

14-1426334246-7thingsaboutjayalalithathatyoumighthaveneverknown அ.தி.மு.கட்சியின் பிரச்சார பீரங்கியாக உருவெடுத்த ஜெயலலிதா!  (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-10) 14 1426334246 7thingsaboutjayalalithathatyoumighthaveneverknownபுதிய ஜெயலலிதா!

கட்சிக்கு அற்புதமான பிரசார பீரங்கி கிடைத்துவிட்டதாக நினைத்து ஆனந்தப்பட்டனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

கையில் கொஞ்சம் குறிப்புகள் மற்றும் பேப்பர் சகிதம் மேடையேறிய ஜெயலலிதா, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை எதையும் விடாமல் விளாசித் தள்ளினார்.

ஜெயலலிதாவின் முதல் அரசியல் பேச்சே கட்சியின் மற்றப் பேச்சாளர்களைப் பிரமிக்க வைத்துவிட்டது.

தொடர்ச்சியாகப் பல கூட்டங்களில் பேசினார்.

போகும் இடங்களில் எல்லாம் கூட்டம். பேசும் இடங்களில் எல்லாம் ஆர்ப்பரிப்பு.

கட்சியி ல் சேர்ந்த ஆறு மாதத்திற்குள்ளாகவே  ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் யாருக்கும் ஆச்சர்யமில்லை.

mgr111_2803103g அ.தி.மு.கட்சியின் பிரச்சார பீரங்கியாக உருவெடுத்த ஜெயலலிதா!  (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-10) mgr111 2803103gஎம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த நேரத்தில், கிராமம் கிராமமாகப் போய் கொடியேற்றிய நாஞ்சில் மனோகரன், அப்போது தி.மு.க.வில். கட்சியில்  இரண்டாம்  கட்டத் தலைவர்கள்  யாரும்  பிரபலமாக இல்லை.

கருணாநிதி எதிர்ப்பு என்கிற எம்.ஜி.ஆரின் மந்திரத்தை விடாமல் உச்சரிக்கக் கட்சியில் பிரபலமான ஆளில்லை.

‘நம் தலைவருக்கு இவ்வளவு சிறப்பா என்று கருணாநிதிக்கு பொறாமை. கருணாநிதியின் கண்கள் குளமாகிறது, இதயம் எரிமலையாகிறது.

அவர் எரிச்சலை நம் மீது கொட்டித் தீர்ப்பார்.

யாரும் கண்டுகொள்ளாதீர்கள்… புரட்சித் தலைவருக்கும் மக்களுக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாத உறவு, அறுக்க முடியாத உறவு, பிணக்கு ஏற்படுத்த முடியாத உறவு. மக்கள் என்றென்றும் புரட்சித் தலைவர் பக்கம்தான்’ என்றெல்லாம் ஜெயலலிதா பேசியதில், கட்சிக்காரர்களுக்கு உற்சாகம்.

எம்.ஜி.ஆரையும் புகழ்ந்து கருணாநிதியையும் தாக்கிப் பேசுவதில் கெட்டிக்காரர் ஆனார் ஜெயலலிதா.

கருணாநிதி எதிர்ப்பு என்ற  மிகப்பெரிய வேலையை ஜெயலலிதா கையில் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

கேள்வி பதில் பாணியில்தான் ஜெயலலிதாவின் மேடைப் பேச்சு எப்போதும் இருக்கும்.

என்ன பதில் வேண்டுமோ அதையே கேள்வியாக்கிவிடுவார். மக்களும் ஆம்.. ஆம் என்று தலையாட்டுவார்கள்.

சாம்பிளுக்கு சில. ‘ நான் கேட்கிறேன்… நீங்களே சொல்லுங்கள் .. நீங்கள் யார் பக்கம் ? புரட்சித் தலைவர் பக்கம்தானே ?’ ‘ ஆம்… புரட்சித்தலைவர் பக்கம்தான் ’

‘கருணாநிதி கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார். நீங்கள் நம்புகிறீர்களா ?’ ‘ இல்லை .. இல்லை ’ கட்சி விவகாரங்களில் மட்டுமல்ல , அரசு நிர்வாகத்திலும்  ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.

அடிக்கடி தலைமைச் செயலகம் வந்தார்.

வேலைமாற்றம், பதவி உயர்வு கிடைக்க யாரை சிபாரிசுக்குப் பிடிக்கலாம் என்று அலைந்த அதிகாரிகளுக்குச் சந்தோஷம்.

கட்சி அலுவலகத்திலும் ஜெயலலிதாவுக்கு முழு சுதந்தரம் கிடைத்தது.

தொகுதிக்குப் போகாமல் ராமாவரம் தோட்டத்தைச் சுற்றிவந்த கட்சிப் பிரமுகர்களின் பதவி பறிக்கப்பட்டது.

கட்சிக் கூட்டத்துக்கு வருவதாகச் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் டிமிக்கி கொடுக்கும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் பறந்தது.

எம்.ஜி.ஆரின் பரிபூரண ஆசியோடுதான் எல்லாமே நடக்கிறது என்று நினைத்து மூத்த தலைவர்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருந்துவிட்டார்கள்.

கட்சியில் எல்லாமே ஜெயலலிதாவின் அதிரடிதான்.

எம்.ஜி.ஆர்.கூட கட்சி விஷயத்தில் தடலாடியாக எந்த முடிவும் எடுத்ததில்லை.

அப்போதெல்லாம் அ.தி.மு.க.வில் பேச்சாளர்களே கிடையாது. எம்.ஜி.ஆர். ஒருவரை நம்பித்தான் கட்சியின் பிரசாரம்.

பேச்சாளர்களுக்குப் பயிற்சி முகாம்கள் நடத்த வேண்டுமென்று எம்.ஜி.ஆரிடம் பேசி அனுமதி வாங்கியது ஜெயலலிதாதான்.

பயிற்சி முகாம்களில் சத்துணவுத் திட்டம் பற்றி மக்களிடம் எப்படிப் பேசுவீர்கள் என்பதை இங்கே பேசிக் காட்டுங்கள் என்பார்.

மேடையேறி  உளறிக் கொட்டும் கட்சிப் பிரமுகர்களுக்கு அங்கேயே திட்டு கிடைக்கும்.

பத்து ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். பின்னால் நின்று கோஷம்போட்டு கட்சியில் முன்னுக்கு வந்துவிட்ட மூத்த தலைவர்களுக்கு ஜெயலலிதாவின்   ஆலோசனை கசந்தது.

சத்துணவுத் திட்டத்தை இன்னும்  மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார்.

சினிமாக்  கவர்ச்சியோடு பரபரப்பான  அரசியல்வாதியாகவும் ஆகிவிட்ட ஜெயலலிதாவே எம்.ஜி.ஆரின் தேர்வு.

ஜெயலலிதா , சத்துணவுத் திட்டக் குழு உறுப்பினரானார்.

2007122555570901 அ.தி.மு.கட்சியின் பிரச்சார பீரங்கியாக உருவெடுத்த ஜெயலலிதா!  (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-10) 2007122555570901

நூறு கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இருநூறு கோடிக்கு விரிவுப்படுத்தப்பட்டதால் , 85 லட்சம் மாணவர்களுக்கு இலவச சத்துணவு கிடைத்தது.

சினிமாக்காரர்கள் திட்டத்தைத் தூக்கி நிறுத்தினார்கள்.

சினிமாவில் பிள்ளைகளுக்குச் சத்துணவுக் கொடுக்காமல் ஏமாற்றும் வில்லனை பாக்யராஜ் உதைத்துக் கொண்டிருந்தார்.

சத்துணவு சாப்பிட்டால் கண் பார்வை கிடைக்கிறது. காது கேட்கிறது என்று மதப்பிரசாரம்போல் சத்துணவுப் பிரசாரம் செய்தார் பாரதிராஜா!

இதற்குப் பிரதிபலனாக சினிமாக்காரர்களின் கல்யாணம், காதுகுத்து, கிரஹப்பிரவேசம் எல்லாவற்றிலும் எம்.ஜி.ஆர்.

ஆஜராகத் தொடங்கினார். சத்துணவுக் கூடங்களுக்கு ஜெயலலிதா அதிரடியாக வந்து ஆய்வு நடத்துவது பரபரப்பான செய்தியானது.

வரவு செலவு கணக்கே காட்டாமல் சத்துணவுத் திட்டம் டெல்லியின் கண்டனத்தைப் பெற்ற நேரத்தில், அதைச் சாமர்த்தியமாகச் சமாளித்தார் ஜெயலலிதா.

ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வந்த திட்டத்திலிருந்த குளறுபடிகளை நீக்கி அதற்கென தனியாக ஊழியர்கள், சத்துணவுக் கூடங்கள், ஆயாக்கள், பண்டங்கள், பாத்திரங்கள் என சகல வசதிகளும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்து கொடுத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள் கட்சிக்குள் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தின.

பல மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவின் வேகத்தை நினைத்து விசனப்பட்டனர்.

வெந்த புண்ணில் வெங்காயச் சாறைப் பூசுவது போல ஏப்ரல் 20, 1984 அன்று ஜெயலலிதாவை ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்து டெல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

பதவியேற்க டெல்லிக்கு வந்த ஜெயலலிதா, முதலில் சந்தித்தது இந்திராகாந்தியைத்தான்.

இந்திராவுக்கு  ஜெயலலிதாவைப் பிடித்திருந்தது. முக்கியமாக , அவரது ஆங்கிலப்புலமை!

தமிழ்நாட்டு அரசியல் பற்றி இருபது நிமிஷம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

யூகோஸ்லோவிய நாட்டு அதிபருடனான மதிய விருந்துக்கு ஜெயலலிதாவையும் வரச் சொன்னார் இந்திரா.

ராஜிவ் மற்றும் டெல்லியின் முக்கிய வி.ஐ.பி.க்கள் கலந்துகொண்ட அந்த விருந்தில், ஜெயலலிதாவும் ஆஜர்.

யூகோஸ்லோவிய அதிபரிடம் ஜெயலலிதாவை இந்திராதான் அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஜெயலலிதா எம்.பியாக இருந்த காலத்தில், எழுத்தாளர் குஷ்வத் சிங்கும் ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்தார்.

அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள் என்பதை ஜெயலலிதாவைப் பார்த்தவுடன் மாற்றிக் கொண்டேன் ’ என்று சொன்னார்.

அமிர்தசரஸில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையால் , நாடாளுமன்றமே தகித்தது.

ராணுவ நடவடிக்கையைக் கண்டித்து குஷ்வத் சிங் ராஜ்ய சபாவில் பேச ஆரம்பித்ததும் ஏகப்பட்ட கூச்சல்.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குஷ்வத் சிங்கை பேசவிடவேயில்லை.

நமக்கேன் வம்பு என்று எல்லோரும் அமைதியாக வேடிக்கை பார்க்க , ஒரே ஒருவர் மட்டும் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து , ‘ அவர் என்னதான் பேசுகிறார் என்பதையும் தயவுசெய்து கேளுங்களேன் ’ என்று தைரியமாகப் பேசினார். அவர் , ஜெயலலிதா!

அக்டோபர் 2, 1984. காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வீடு திரும்பிய எம்.ஜி.ஆருக்கு லேசான மயக்கம்.

அன்றிரவே படுத்தப் படுக்கையாகிவிட்டார்.

நான்காம் தேதி நுங்கம்பாக்கம் டெலிபோன் எக்ஸ்சேஞ்சு திறப்பு விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவதாக இருந்தது.

விழாவுக்கு எம்.ஜி.ஆரால் வர இயலாது என்று செய்திகள் வந்தபின்னர்தான் , கட்சிக்காரர்களுக்கே விஷயம் தெரிந்தது.

அதுவரை  எம்.ஜி.ஆருக்கு உடம்பு சரியில்லை என்று எந்தச் செய்தியும் வந்ததில்லை.

எம்.ஜி.ஆருக்கு சர்க்கரை வியாதி இருப்பது நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் தெரிய வந்தது.

தஞ்சை பெரியகோயில் விழாவில் மயக்கம் வருவதாகச் சொன்னவரை டாக்டர் குழு பரிசோதித்து உறுதிப்படுத்தியது.

எழுபதை நெருங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.

தன்னுடைய உடல்நலத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதும் இல்லை; வெளியே யாரிடமும் சொன்னதுமில்லை.

இம்முறை பக்கவாதம் காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு இன்னொரு சிக்கல். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருந்தது.

தொடரும்…

நன்றி : ஜெ. ராம்கி – இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s