உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 1

மன்னார்குடி மணமகள்-விளார் மணமகன் – கருணாநிதி நடத்திவைத்த திருமணம்!

சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! – (பாகம்-1)

ராமநாதபுரம் டூ மன்னார்குடி

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு சரியான பிழைப்பு இல்லை.

அதனால், வறட்சி மிகுந்த ராமநாதபுரத்தைவிட்டு, சந்திரசேகரன் பிள்ளை வளமான தஞ்சை நோக்கி இடம்பெயர்ந்தார்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ‘ஜாகை’ ஏற்படுத்திக் கொண்டு, அங்கும் தனக்குத் தெரிந்த நாட்டு வைத்தியத்தையே தொழிலாகச் செய்தார்.

சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன், ஒரு படி மேலே போய், ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ வைத்தார்.

அப்போது எல்லாம், இங்கிலீஷ் மருந்துகள் விற்கும் ‘மெடிக்கல் ஷாப்’கள் அரிதிலும் அரிது.

அதனால், விவேகானந்தன் வைத்து நடத்திய, ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ திருந்துறைப்பூண்டியில் பிரபலமானது.

அந்தப் பிரபலம், விவேகானந்தனின் வீட்டோடும் ஒட்டிக்கொண்டது. ‘இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ என்று அவருடைய வீடும் அந்த ஊரில் பிரபலமானது.

மிராசுதாரர் விவேகானந்தன், கிருஷ்ணவேணி என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு, சுந்தரவதனம், வனிதாமணி, விநோதகன், ஜெயராமன், சசிகலா, திவாகரன் என்று ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.

5-வது பிள்ளை சசிகலாதான், பின்னாளில் ஜெயலலிதாவின் உடன்பிறவாத் தோழியானவர்; தமிழக ஆட்சியதிகாரத்திலும், அ.தி.மு.க என்ற அரசியல் இயக்கத்திலும், நம்பர் 2-ஆக வலம்வந்தவர்.

திருத்துறைப்பூண்டியில் இருந்த விவேகானந்தன், பிள்ளைகளின் படிப்புக்காக மன்னார்குடிக்கு இடம்பெயர்ந்தார்.

காரணம், மன்னார்குடியில்தான் அப்போது, ஆங்கிலேயேர்களால் நிறுவப்பட்ட ‘பின்லே’ போர்டு ஹை ஸ்கூல் இருந்தது.

சசிகலா அந்தப் பள்ளியில்தான் படித்தார். பள்ளி நாட்களில் ஓட்டப்பந்தயங்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டு இருக்கிறார்.

சில பரிசுகளையும் வாங்கி உள்ளார். மாணவர் மன்றத்தில் பங்களித்துள்ளார். ஆனாலும் பத்தாம் வகுப்போடு சசிகலாவின் படிப்பை வீட்டில் நிறுத்திவிட்டனர்.

11_14556  சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! - (பாகம்-1) 11 14556

‘விளார்’ ஏற்படுத்திய திருப்புமுனை

மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கையாக, சாதரண கனவுகளுடன் இளம் பெண்ணாக திருத்துறைப்பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்து கொண்டிருந்தார் சசிகலா.

அவரது வாழ்வை அதிகாரமையங்களுக்கு அருகில் கொண்டுவரக் காரணமாக அமைந்தது ‘விளார்’ என்ற ஊர்.

தஞ்சையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் இருந்த சிறு விவசாயி மருதப்பன்.

அவருடைய மகன் நடராஜன். 60-களின் காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டெரிந்து, தீயாப் பரவிக் கொண்டிருந்த திராவிட இயக்கங்கள், நடராஜனிடம் தமிழ் ஆர்வத்தையும், அரசியல் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தது.

தி.மு.க மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடராஜன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவராக இருந்த நடராஜன், 1965-ம் ஆண்டு நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.

மொழிப்போராட்டத்தில் நடராஜனின் சமகாலத்தவர்கள்தான், தி.மு.க முதன்மைச் செயலர் துரைமுருகன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள்.

அப்போது, இந்தப் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற எல்.கணேசனின் ஆஸ்தான சீடராக நடராஜன் வலம்வந்தார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, தி.மு.க ஆட்சியில் ஏ.பி.ஆர்.ஓ வேலைகளில் கருணாநிதி முன்னுரிமை கொடுத்தார்.

அந்தவகையில், ‘விளார்’ நடராஜனுக்கும், மக்கள் தொடர்புத் துறையில் உதவியாளர் வேலை கிடைத்தது.

வேலை கிடைத்ததும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. விளார் விவசாயி மருதப்பனின் மகன் நடராஜன், திருத்துறைப்பூண்டி, இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் விவேகானந்தனின் மகள் சசிகலாவைத் திருமணம் செய்துகொண்டார்.

1970-ம் ஆண்டு நடராஜன்-சசிகலா திருமணம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தராக விளங்கிய, மன்னை நாராயணசாமி தலைமையில், தி.மு.க தலைவர் கருணாநிதி நடராஜன்-சசிகலா திருமணத்தை நடத்திவைத்தார். வரலாற்று விநோதம் இது!

இந்தக் காலகட்டம்வரை சசிகலாவுக்கு, ஜெயலலிதா என்றால் அவர் எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரிய ஹீரோவோடு சேர்ந்து நடிக்கும் கதாநாயகி.

திரைப்படங்களிலும் போஸ்டர்களில் மட்டும்தான் ஜெயலலிதாவைப் பார்க்க முடியும் என்ற மனநிலைதான் இருந்திருக்க முடியும்.

ஆனால், காலம் அந்த மனநிலையை வேறுவகையில் மாற்ற, எம்.ஜி.ஆர் மூலம் ஒரு கணக்கைப் போட்டு வைத்திருந்தது.

அது என்ன….

தொடரும்…

நன்றி : ஜோ ஸ்டாலின் – இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s