உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 7

நடராஜன், சசிகலா நடத்திய டெல்லி தர்பார்!

நடராஜன், சசிகலா நடத்திய டெல்லி தர்பார்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை. அத்தியாயம்-7

1980-களுக்குப் பிறகு, ஜெயலலிதா எதைக்கேட்டாலும், அதைச் செய்து  கொடுக்கும் மனநிலைக்கு வந்திருந்தார் எம்.ஜி.ஆர். சில நேரங்களில், ஜெயலலிதாவின் சில கோரிக்கைகளை மட்டும் எம்.ஜி.ஆர் நிராகரிப்பார்.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் என்ன மாயம் நிகழ்ந்தது என யாருக்கும் புரியாது… “எம்.ஜி.ஆர் நிராகரித்த கோரிக்கைகளை, எம்.ஜி.ஆர் நிறைவேற்றச் சொல்லிவிட்டார்” என்று எம்.ஜி.ஆரிடம் இருந்தே உத்தரவு வரும்.

அடம்பிடித்தோ, ஆர்ப்பாட்டம் செய்தோ அல்லது  வேறு ஏதோ  ஒரு வழியில் எம்.ஜி.ஆரிடம் தனது காரியத்தைச் சாதிக்காமல் ஓயமாட்டார் ஜெயலலிதா. ‘எம்.ஜி.ஆரிடம் எப்படிக் கேட்டால் கிடைக்கும்’ என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது.

ஆனால், எதைக் கேட்கவேண்டும், எப்போது கேட்க வேண்டும் என்பதில் மட்டும் அவருக்குக் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. அந்த தடுமாற்றத்தில்  இருந்து  ஜெயலலிதாவை தெளிய வைத்தவர்கள் சசிகலா, நடராஜன் தம்பதிதான்.

சசிகலா-நடராஜன்-ஜெயலலிதா பரஸ்பர லாபங்கள்!

கட்சியில் எந்தப் பொறுப்பை வாங்க வேண்டும்; வாங்கிய பொறுப்பை வைத்து என்ன செய்ய வேண்டும். செய்ததை எப்படிச் செய்தியாக்க வேண்டும்.

செய்தியை எப்படிப் பரபரப்பாக்க வேண்டும்; அந்தப் பரபரப்பால், உடனே நிகழப்போவது என்ன? எதிர்காலத்தில்  பலனாக விளையப்போவது என்ன… என்றெல்லாம், நடராஜன் சசிகலாவுக்குச் வகுப்பெடுத்தார்.

சசிகலா, அதை ஜெயலலிதாவுக்கு சொல்லிக் கொடுத்தார். அப்படி மூன்றுபேரும் சேர்ந்து குறிவைத்ததுதான் ஜெயலலிதாவுக்கான டெல்லி நாற்காலி.

நடராஜன்-சசிகலா சொன்னவற்றை எல்லாம், ஜெயலலிதா பரிட்சித்துப் பார்த்தார்; பரிட்சார்த்த முயற்சிகள் அத்தனையும் பலன் கொடுத்தன. ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வில் செல்வாக்கும் பதவியும் கூடிக் கொண்டே போனது.

சசிகலா-நடராஜன் மீதான நம்பிக்கையும் அதிகரித்தது; பரஸ்பரம் பலன்களை அறுவடை செய்து கொண்டனர்.  1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

rmv_final_17178  நடராஜன், சசிகலா நடத்திய டெல்லி தர்பார்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை. அத்தியாயம்-7 rmv final 17178

சிகிச்சைக்காக அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குப் பறந்தார் எம்.ஜி.ஆர். அந்த இக்கட்டான நேரத்தில், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வந்தது.

முதலமைச்சர் பதவியை எம்.ஜி.ஆரிடம் பறிகொடுத்துவிட்டு,  7 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த கருணாநிதி களத்தில் இறங்கினார்.

இந்தத் தேர்தலில் எப்படியும் எம்.ஜி.ஆரிடம் இருந்து முதல் அமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற உறுமல் அவர் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருந்து போராடுபவனுக்குத்தானே வேகம் அதிகம். அந்த வேகத்தில் அன்று இருந்தார் கருணாநிதி. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் இங்கில்லாமல், அமெரிக்காவில் இருந்ததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த, கருணாநிதி தந்திரமாகப் பிரசாரம் செய்தார்.

ஒருபக்கம், “ஏழு ஆண்டுகள் என்னைத் தண்டித்தது போதாதா? இப்போதாவது வாய்ப்புக் கொடுங்கள்” என்று உருகினார் கருணாநிதி.

மற்றொரு பக்கம், “என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்; எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அவரிடம் ஆட்சியைப் பத்திரமாக ஒப்படைக்கிறேன்” என்று இறங்கினார் கருணாநிதி.

வேறோரு பக்கம், “எம்.ஜி.ஆர் இனி வரவேமாட்டார். அதனால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போடுவது செல்லாத ஓட்டுக்குச் சமம்” என்று தி.மு.ககாரர்கள் பிரசாரம் செய்தனர்.

“கருணாநிதியின் இந்தத் தந்திரப் பிரசாரத்துக்கு, நம் தலைவன் இல்லாத நேரத்தில், தமிழகம் பலியாகிவிடக்கூடாது” என்று ஒட்டுமொத்த அ.தி.மு.க-வினரும் உயிரைக்கொடுத்து வேலை பார்த்தனர்.

கடைசியாக, “எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இறந்துவிட்டார்” என்று திட்டமிட்ட வதந்தியைப் பரப்பினார்கள் சிலர்.

எம்.ஜி.ஆர்-ஜானகி வீடியோவில் ஜெயலலிதா!

mgr_rmv_fina_17052  நடராஜன், சசிகலா நடத்திய டெல்லி தர்பார்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை. அத்தியாயம்-7 mgr rmv fina 17052

எதிரிகளின் இந்தத் தந்திரத்தில், தமிழகம் குழம்பிப் போனது.  அ.தி.மு.க கூடாரம் தோல்வி பயத்தில் கலங்கிப் போனது.

கருணாநிதியின் தந்திரங்களை முறியடிக்க வேண்டுமானால், எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கிறார் என்பதை தமிழக மக்களுக்கு நிருபிக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க-வுக்கு உருவானது.

எம்.ஜி.ஆருக்கு எப்போதும், வலதுகரமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அதற்காக ஒரு முறியடிப்புத் தந்திரத்தைச் செய்தார்.

ஏ.வி.எம். சரவணன் உதவியிடன், “எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி, எப்போதும்போல் அவர் இயல்பாக பேசிக்கொண்டிருக்கும் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்தார்.

அதில் எடிட்டிங், டப்பிங் எல்லாம் செய்து, தமிழகம் முழுவதும் போட்டுக்காட்டினார். மக்களுக்கு இருந்த குழப்பம் தீர்ந்தது.

தேர்தலில் அ.தி.மு.கவையே மீண்டும் வெற்றி பெற வைத்தனர். அமெரிக்காவில் இருந்துகொண்டே எம்.ஜி.ஆர் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

ஆர்.எம்.வீரப்பனின் இந்த வீடியோ வியூகம்தான், அந்தத் தேர்தலில் அ.தி.முக கரை ஏறியதற்கு முக்கியக் காரணம். அந்த வீடியோவில், ஜானகி அம்மாளோடு எம்.ஜி.ஆர் பேசுவது, சாப்பிடுவது போன்ற காட்சிகளும் இருந்தன.

இதில் எப்படியாவது ஜெயலலிதா இடம் பிடித்துவிட வேண்டும் என்று நடராஜன் சசிகலாவிடம் சொன்னார். சசிகலா, அதை ஜெயலலிதாவிடம் அழுத்திச் சொன்னார்.

அதற்கான வேலைகளில் ஜெயலலிதாவை இறக்கிவிட்டனர். அவரும் யார் யாரிடமோ பேசி, “அந்த வீடியோ படத்தில், எப்படியாவது தன்னையும் இணைக்க வேண்டும்” என்றார். அது நடக்கவில்லை.

அப்படியானால், “ஜானகியோடு எம்.ஜி.ஆர் இருக்கும் காட்சிகளையாவது வெட்டுங்கள்” என்றார். அதுவும் முடியவில்லை.

அப்போது, ஜெயலலிதாவை ஒரு விரோதியாகவே பார்த்த ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவின் எல்லா கோரிக்கைகளையும் நொறுக்கித் தள்ளினார்.

கடைசியில், நடராஜன் வேறோரு வேலையில் இறங்கினார். “ஜெயலலிதா எம்.ஜி.ஆர் சேர்ந்து நடித்த படக் காட்சிகளை இணைத்து, அவற்றை தமிழகம் முழுவதும் ஒளிபரப்பலாம்” என்று அவர் திட்டம் வைத்திருந்தார்.

ஜெயலலிதாவும் அதற்குச் சம்மதித்தார். ஆனால், அதன்பிறகு, என்ன நினைத்தாரோ அந்த யோசனையை ஜெயலலிதா கைவிட்டுவிட்டார்.

தேர்தல் வெற்றிக்கு காரணம் ஜெயலலிதா!

ஜெயலலிதா ஓய்ந்தாலும், நடராஜன் விடுவதாக இல்லை. “ஜெயலலிதாவின் பிரசாரம் சிறப்பாக இருந்தது.

ஜெயலலிதா கூட்டங்களுக்கு, மக்கள் அலை அலையாய்த் திரண்டனர்; தேர்தல் வெற்றியில் ஜெயலலிதாவின் பங்கு பிரதானம்” என்பதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவரச் செய்திருந்தார் நடராஜன்.

இவை எதிர்வரும் நாட்களில், பிரமாதமாகப் பயன்படும் என்றும் ஜெயலலிதாவுக்குச் சொல்லி இருந்தார். அதேபோல, எம்.ஜி.ஆர் சிகிச்சை முடித்துவிட்டு, அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், “அ.தி.மு.க பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு, ஜெயலலிதாவே காரணம்” என்பதுபோல, அவரிடம் சிலர் சொன்னார்கள்.

அவர்களை நடராஜனும் ஜெயலலிதாவும் அப்படிச் சொல்ல வைத்திருந்தனர். அந்த சமயங்களில் ஆதாரங்களாக, நடராஜன் முன்பே வெளிவர வைத்திருந்த செய்திகள் சமர்பிக்கப்பட்டன. அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் நடராஜன் மிகத் திறமையாக செய்து வைத்திருந்தார்.

டெல்லி தர்பாரில் ஜெயலலிதா!

nadaran_final2_17375  நடராஜன், சசிகலா நடத்திய டெல்லி தர்பார்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை. அத்தியாயம்-7 nadaran final2 17375

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கி, டெல்லிக்கு அனுப்பினார். தமிழகத்துக்கு அது பரபரப்புச் செய்திதான்.

ஆனால், “ஜெயலலிதா என்று ஒரு நட்சத்திரம் டெல்லி வானில் தோன்றி உள்ளது” என்பதை டெல்லிவாலாக்களுக்கு சுட்டிக்காட்ட ஒரு விளம்பரம் தேவை என்று உணர்த்தினார் நடராஜன்.

ஜெயலலிதாவுக்கும் அது சரியென்றுபட்டது. ஆனால், விளம்பரம் கொடுப்பதற்கும்கூட, காரண காரியங்கள் வேண்டும் அல்லவா? அதற்காக நடராஜன் அன் கோ ஒரு யோசனையை முன்வைத்தது.

அறிஞர் அண்ணா, டெல்லி மேல்சபை உறுப்பினராக இருந்தபோது, அவர் அமர்ந்த இருக்கையை,  ஜெயலலிதாவை அமரவைப்பது என்பதுதான் அந்த யோசனை.

இந்த யோசனை ஜெயலலிதாவுக்கும் பிடித்து இருந்தது. வழக்கம்போல், அதைச் செய்துதரச் சொல்லி, எம்.ஜி.ஆரை நெருக்கினார்; வேறு வழியில்லாமல், ஜெயலலிதா கேட்டதைச் செய்துகொடுக்க,  டெல்லி சீனியர்களுக்கு எம்.ஜி.ஆர் உத்தரவு அனுப்பினார்.

கடைசி நேரத்தில், நாடாளுமன்றச் செயலாளர் அலுவலகத்தில்  பேசி அவர்கள், அறிஞர் அண்ணா அமர்ந்த  இருக்கையை ஜெயலலிதாவுக்கு பெற்றுத் தந்தனர்.

அன்றே டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்பில், இந்தச் செய்திதான் பிரதானமாக கொண்டு செல்லப்பட்டது.

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் சூட்கேஸ் ஒன்றையும் ஜெயலலிதா அன்பளிப்பாக வழங்கினார். அதற்குப் பலன் இல்லாமல் இல்லை. எல்லாப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி பரவலாக வெளியானது.

எல்லாம் நடராஜன் அருள். டெல்லியில் ஜெயலலிதாவின் அரசியல் பார்வை விசாலமானது. அங்கு மத்திய அரசின் அதிகாரம் என்ன என்பதை ஜெயலலிதா புரிந்து கொண்டார்.

மத்திய அரசின் அதிகாரத்தோடு ஒப்பிட்டால், மாநில அரசுக்கு ஒரு கார்ப்பரேஷனுக்கு இருக்கும் அதிகாரம்தான் இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டார். மத்திய அரசு நினைத்தால் மாநில அரசை எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிக்கலாம் என்பதையும் கண்டுகொண்டார்.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியோடு நெருக்கம்!

jaya_indira_final_17119  நடராஜன், சசிகலா நடத்திய டெல்லி தர்பார்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை. அத்தியாயம்-7 jaya indira final 17119

டெல்லியில் இந்திரா காந்தியின் உதவியாளராக இருந்தவர் பார்த்தசாரதி அய்யங்கார். ஜெயலலிதா அவரை நெருங்கினார். அவர் மூலம், இந்திரா காந்தியை நெருங்கினார்.

அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர்கள் யாருக்கும் சொல்லாமல், இந்திராகாந்தியை தனியாக சந்திக்க முயற்சி செய்து கொண்டே இருந்தார் ஜெயலலிதா.

இந்தத் தகவல் அறிந்த எம்.ஜி.ஆர், அப்படி ஒரு சந்திப்பு நடக்காமல் தடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் முடியவில்லை.

டெல்லியில் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, ஜெயலலிதா இந்திராகாந்தியை சந்தித்துவிட்டார். இதற்குப் பின்னால் நடராஜன் இல்லை. ஆனால், இந்திராகாந்தியிடம் ஜெயலலிதா பேசிய விஷயத்துக்குப் பின்னால் நடராஜன் இருந்தார்.

ஜெயலலிதா, இந்திராகாந்தியுடன் என்ன பேசினார் என்பதை எம்.ஜி.ஆரால் கடைசிவரை தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், கடைசியில் டெல்லி பத்திரிகையாளர்கள், அங்குள்ள சில அதிகாரிகளின் தயவில், எம்.ஜி.ஆர் கவனத்துக்கு அந்த விபரங்கள் கொஞ்சம் வந்தன.

இந்திராகாந்தியிடம் பேசிய ஜெயலலிதா, “எம்.ஜி.ஆர் என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுகிறார்; காரணம், நான் ஒரு பெண் என்பதால், அவருக்கு அந்தப் பொறாமை வந்துள்ளது.

எனவே, என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு தாங்கள் உதவ வேண்டும். ஐ.நா-வுக்குச் செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில், என்னையும் அனுப்ப வேண்டும்” என்று சொன்னதாக எம்.ஜி.ஆருக்கு கொஞ்சம் தகவல்கள் கிடைத்தன.

இதுபோன்ற ஆலோசனைகளை ஜெயலலிதாவுக்கு கொடுப்பது யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையில் அடுத்து இறங்கினார் எம்.ஜி.ஆர். அப்போது, சசிகலா-நடராஜன் என்ற பெயர்கள் அவர் காதுக்குப் போகவில்லை.

ஆனால், வேறோரு பெயர் எம்.ஜி.ஆரின் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தப் பெயர் சேலம் கண்ணன். எம்.ஜி.ஆரால், டெல்லி ராஜ்ய சபா உறுப்பினராக அனுப்பி வைக்கப்பட்டவர்.

டெல்லியில் ஜெயலலிதாவுக்கு சில உதவிகளை சேலம் கண்ணன் செய்தது உண்மைதான்; அங்குள்ள மற்ற அ.தி.மு.க எம்.பிகளோடு,  ஜெயலலிதா முரண்பட்டாலும்… மற்றவர்கள் ஜெயலலிதாவோடு முரண்பட்டாலும், சேலம் கண்ணன் அவரை முழுமையாக ஆதரித்தார்.

அதனால், தனது டெல்லி வீட்டுக்கு வந்து பேசும் அளவுக்கு சேலம் கண்ணனுக்கும் ஜெயலலிதா இடம் கொடுத்திருந்தார். ஜெயலலிதாவோடு தனக்கு இருக்கும் இந்த நட்பை மிகப்பெருமையாக சேலம் கண்ணன் மற்ற அ.தி.மு.க எம்.பிகளிடம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைத்து பெருமிதத்தோடு சொல்வார்.

அதில் அவருக்கு ஒரு ஆனந்தம். ஆனால், அதுவே அவருக்கு அவஸ்தையையும் கொண்டு வந்தது. ஆம்… ஜெயலலிதாவுக்கு டெல்லியில் காய் நகர்த்த சேலம் கண்ணன்தான் ஆலோசனைகள் கொடுக்கிறார் என்று எம்.ஜி.ஆரிடம் மற்றவர்கள் போட்டுக் கொடுத்தனர்.

எம்.ஜி.ஆரும் அதை அப்படியே நம்பினார்.

ராமாவரம் தோட்டத்துக்கு சேலம் கண்ணனை வரவழைத்து,  தனது வழக்கமான சிகிச்சையை கொடுத்தார் எம்.ஜி.ஆர். அதன்பிறகு, நீண்ட நாட்களுக்கு சேலம் கண்ணன் ஒடுங்கிப் போய் இருந்தார்.

உண்மையில் சேலம் கண்ணன் இதுபோன்ற ஆலோசனைகளை ஜெயலலிதாவுக்குச் சொல்பவர் அல்ல. அந்தக் காலத்தில் அவருக்கே, அவ்வளவு அனுபவமும் உருவாகி இருக்கவில்லை.

சேலம் கண்ணனைப் பொறுத்தவரை, எல்லா விஷயத்திலும்  ஜெயலலிதாவை முரட்டுத்தனமாக ஆதரித்தவரே தவிர, ஐடியாக்கள் கொடுத்தவர் அல்ல.

அதைச் செய்தவர்கள் சசிகலாவும் நடராஜனும். இந்த நேரத்தில், டெல்லியில் இந்திராவின் காலம் முடிந்துபோனது. அவர் தன் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதன்பிறகு,  டெல்லியில் இருந்து இந்தியாவை ஆளும் பிரதமராக ராஜிவ் காந்தி வந்திருந்தார். ஜெயலலிதா இப்போது, ராஜிவ் காந்தியை நெருங்கி தன் அரசியல் முன்னேற்றத்துக்கு உதவக் கோரிக்கை வைக்கும் முயற்சிகளில் இறங்கி இருந்தார் அல்லது சசிகலா-நடராஜனால் இறக்கிவிடப்பட்டு இருந்தார்.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s