உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 8

ராஜீவ் சொன்ன ரகசியம்

மெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில், எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்தார். அந்த நேரத்தில், ஜெயலலிதாவின் முதல் அமைச்சர் கனவு, நெருப்பாய் தகிக்கத் தொடங்கியது. நடராஜனும் சசிகலாவும் ஜெயலலிதாவிடம் இருந்த அந்த நெருப்பை ஊதி பெருந்தீயாய் வளர்த்துக் கொண்டிருந்தனர். அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கு ஆதரவானவர்களை சசிகலாவும் நடராஜனும் ஒன்று திரட்டி ஆதரவு கேட்டனர். அதே நேரத்தில், புதிய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் உதவி கேட்கலாம் என்ற எண்ணத்தையும் ஜெயலலிதாவின் சிந்தனையில் ஏற்றி வைத்தனர்.

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்..  தமிழகத்தில் ஜெ-சசி-நடராஜன்…

சசிகலா

“எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் எப்படி இருக்கிறார்?” என்ற விஷயம் மட்டும், ஜெயலலிதா-சசிகலா-நடராஜன் என்ற மூன்று பேரின் முயற்சிகளுக்கு, முட்டுக்கட்டையாக இருந்தது. எம்.ஜி.ஆர் குணம்பெற்றுத் திரும்பிவிடுவாரா? திரும்பமாட்டாரா? என்பது பற்றி இவர்களுக்குத் தெளிவான தகவல் கிடைக்கவில்லை. அதனால், இவர்களின் முயற்சிகளில் கொஞ்சம் தேக்கம் இருந்தது. “ஒருவேளை எம்.ஜி.ஆர் நலமுடன் திரும்பிவிட்டால்… அவருக்கு எதிராக, தாங்கள் எடுத்த முயற்சிகள் அவருக்குத் தெரிந்துவிட்டால்.. தங்களை ஒழித்துக்கட்டிவிடுவார்” என்ற அச்சம் ஜெயலலிதா, சசிகலா, நடராஜனுக்கு இருந்துகொண்டே இருந்தது. இவர்களுக்கு அச்சம் ஏற்பட்டதைப்போல, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட கட்சியின் சீனியர்களுக்கு குழப்பம் மிஞ்சியது. ஏனென்றால், அவர்களுக்கும்  எம்.ஜி.ஆர் உடல்நிலை பற்றிய உருப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஜெயலலிதா-சசிகலா-நடராஜன் கூட்டணிக்கும், கட்சியின் சீனியர்களுக்கும் இப்படிப்பட்ட இரும்புத்திரையைப் போட்டு வைத்தவர் வேறு யாரோ அல்ல… எம்.ஜி.ஆரேதான் போட்டு வைத்தார். தனது உடல்நிலை பற்றி, தமிழகம் அறிந்து கொள்ள இருந்த வழிகள் அத்தனையையும், எம்.ஜி.ஆர் இறுக்கமாக பூட்டிவைத்தார்; நேரில் சந்திக்கப்போனவர்களையும்  குழப்பிவைத்து திருப்பி அனுப்பினார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் ஏமாந்த சிவாஜி!

“தமிழகத்தில் இருந்து, தன்னைப் பார்க்க வருபவர்களிடம், தான் நலமாக இல்லை; குணமடைந்து திரும்புவது கடினம்” என்பதைப்போலவே எம்.ஜி.ஆர் காட்டிக் கொண்டார். அதை நம்பி ஏமாந்தவர்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர். எம்.ஜி.ஆரை நலம் விசாரிக்க சிவாஜி கணேசன் அமெரிக்கா சென்றபோது, “தன் உடல்நிலை மிக மிக மோசமான நிலையில் இருப்பதாகவே” எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திக் கொண்டார். எம்.ஜி.ஆரின் அந்த தேர்ந்த நடிப்பை, நடிப்பு பாடத்தின் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த சிவாஜியால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழகம் திரும்பிய சிவாஜி கணேசன், “எம்.ஜி.ஆர் மிக மோசனமான நிலையில் இருக்கிறார். அவர் மீண்டுவருவது மிகச் சிரமம்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தகவல் சொன்னார். அந்த அளவுக்கு, இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர் திறமையாகவும் கவனமாகவும் செயல்பட்டார்.

சிவாஜியைப்போல, தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் கம்பெனி அதிபர் சையது யூசுப்பும், எம்.ஜி.ஆரைப் பார்க்க அமெரிக்க சென்றார். அவர்போனபோது, எம்.ஜி.ஆர் கண்ணையே திறக்கவில்லை. சையது யூசுப்பும், “தனக்கு நெருங்கிய வட்டத்தில் எம்.ஜி.ஆர் குணமடைவது கடினம்” என்றே சொல்லிவைத்தார். எம்.ஜி.ஆர் குறித்து இப்படிப்பட்ட தவறான தகவல்களை எம்.ஜி.ஆரே பரப்பினார். “தான் இல்லாதபோது, தமிழகம் என்ன பேசுகிறது… தன் எதிரிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள்… தன்னைச் சுற்றி இருப்பவர்கள், என்னவிதமாக நிறம் மாறுகிறார்கள்” என்பதை அறிந்து கொள்ள எம்.ஜி.ஆர் நடத்திய நாடகம் இது. தன்னைப் பற்றி எந்தத் தகவலையும் தமிழகத்துக்கு வெளிப்படுத்தாத எம்.ஜி.ஆர், தமிழகத்தில் நடப்பதைத் தான் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் கவனமாகச் செய்து வைத்திருந்தார். காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து ஒரு ரிப்போர்ட், ஆர்.எம்.வீரப்பனிடம் இருந்து ஒரு ரிப்போர்ட் என்று இரண்டு ரிப்போர்ட்களை எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்துகொண்டே வாங்கினார். அவற்றைக் கவனமாகப் படித்து, இரண்டு ரிப்போர்ட்களும் முரண்படும் விஷயங்களில், உண்மைத் தெரிந்துகொள்ள, மூன்றாவதாக ஒரு அணியையும் ரகசியமாக ஏற்படுத்தி வைத்திருந்தார். இப்படிச் செய்ததில், எம்.ஜி.ஆருக்கு ஒரு ஆனந்தம்… அல்லது அது அவருடைய ராஜதந்திரம்.

நடராஜன் ஒரு நாகப்பாம்பு: ஆர்.எம்.வீ

எம்.ஜி.ஆரின் தந்திரங்களை அறியாத, ஆர்.எம்.வீரப்பன், “கட்சியைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள, எம்.ஜி.ஆர் நன்றாக இருக்கிறார்” என்று உதட்டளவில் சொன்னார்.  ஆனால், மனதளவில் அவரும் குழப்பத்தில்தான் இருந்தார். அதனால்தான், “எம்.ஜி.ஆர் இனி பழைய கார்களை பயன்படுத்த முடியாது” என்று நினைத்து, பிரத்யேகமாக ஒரு புதிய வாகனத்தை ஏற்பாடு செய்து தயாராக வைத்திருந்தார்(அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, ஆர்.எம்.வீரப்பன் ஏற்பாடு செய்த அந்த வாகனத்தைத் எம்.ஜி.ஆர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவர் தனது வழக்கமான காரையே பயன்படுத்தினார் என்பது தனிக்கதை). சிவாஜியின் வாக்குமூலம், சையத் யூசுப் சொன்ன தகவல்கள், ஆர்.எம்.வீரப்பன் தயார் செய்த புதிய வாகனம் போன்ற விஷயங்கள் எல்லாம், ஜெயலலிதா,சசிகலா,நடராஜனுக்கு கூடுதல் தெம்பை அளித்தன. ஜெயலலிதாவை முதலமைச்சராக்கும் முயற்சிகளில் துணிந்து இறங்கினார்கள். “எம்.ஜி.ஆர் திரும்பமாட்டார்… அடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாதான்” என்ற தங்களின் பிரச்சாரத்தை கட்சிக்குள் தீவிரப்படுத்தினார்கள்; ஜெயலலிதாவின் ஆதரவாளர்களை கட்சிக்குள் ரகசியமாக ஒன்று திரட்டினார்கள்; அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி-ஜெயலலிதா சந்திப்புக்கும் நடராஜன் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார். இவற்றை எல்லாம் அறிந்து ஆர்.எம்.வீரப்பன் கொதித்துப்போனார். தனக்கு வேண்டியவர்களிடம் நடராஜனை திட்டித் தீர்த்தார். “நடராஜனை வளர அனுமதித்தது… நாகப் பாம்புக்கு பால் வார்த்ததற்குச் சமம்” என்று தன் மனவேதனையை நெருக்கமானவர்களிடம் கொட்டித் தீர்த்தார். கட்சியில் இருந்து ஜெயலலிதாவை ஓரம்கட்டுவதற்கான சில வேலைகளைத் துணிந்து செய்தார். டெல்லியில் உள்ள  தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். அதோடு, அ. தி.மு.க-வின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சீனியர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, ராஜிவ் காந்தியை சந்திக்க ஆர்.எம்.வீரப்பனும் டெல்லி போனார்.

ராஜீவ் சொன்ன ரகசியம்!

தமிழ்நாடு இல்லத்தில் இடம் மறுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக, நடராஜன்  பத்திரிகையாளர் சோலையையும் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னார். பத்திரிகையாளர் சோலை, டெல்லி அசோக ஹோட்டலில் ஜெயலலிதாவுக்கு ஒரு அறையைத் தயார் செய்து கொடுத்ததோடு, பிரதமர் ராஜிவ் காந்தியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளிலும் உதவினார். பத்திரிகையாளர் சோலை, வினோபாவின் பூ தான இயக்கத்தில் இருந்தவர். அப்போது, அந்த இயக்கத்தில் இருந்த நிர்மலா தேஷ் பாண்டே என்பவருடன் இணக்கமான நட்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். அந்த நிர்மலா தேஷ் பாண்டே, ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். அவர் மூலம் பேசி,  ராஜீவ் காந்தி-ஜெயலலிதா சந்திப்புக்கு பத்திரிகையாளர் சோலை ஏற்பாடு செய்தார். இந்திராகாந்தியின் உதவியாளராக இருந்த பார்த்தசாரதி அய்யங்கார் மூலமும் நடராஜன் விடாமல் முயற்சி செய்தார். இரண்டில் ஒன்றின் மூலம், ஜெயலலிதாவுக்கு ராஜிவ் காந்தியின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. ராஜிவ் காந்தியைச் சந்தித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் திரும்புவாரா? என்பது சந்தேகம்தான். இந்த நேரத்தில் ஆர்.எம்.வீரப்பன் போன்ற சீனியர்கள், கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்துகிறார்கள்; என்னை ஓரம்கட்டப் பார்க்கிறார்கள்; அதனால் எனக்கு நீங்கள் உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதைக் கேட்டு சிரித்த ராஜிவ் காந்தி, “எம்.ஜி.ஆர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இப்போது இல்லை. இன்னும் 10 நாட்களில் இந்தியா திரும்பிவிடுவார். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். ராஜீவ்காந்தி சொன்னதுபோலவே, எம்.ஜி.ஆர் அடுத்த பத்து நாட்களில் திரும்பி வந்தார். ஜெயலலிதா திகைத்துப்போனார். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய எம்.ஜி.ஆர், “தான் இல்லாதபோது கட்சிக்குள் தனக்கு விரோதமாக செயல்பட்டவர்களை கண்டித்துக்கொண்டும், களையெடுத்துக் கொண்டும் இருந்தார்.” அவருடைய அக்னிப் பார்வையில் இருந்து வழக்கம்போல், தப்பித்துக்கொண்ட ஜெயலலிதா, மீண்டும் ராஜிவ் காந்தியை சந்திக்கும் முயற்சிகளில் வேகம் காட்டினார்.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s