உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 9

சசிகலா, ஜெயலலிதாவின் மாய உலகம்

“இழப்பதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், ‘பகுத்தறிவுவாதம்’ வீரியமாய் வேலை செய்யும். “பெறுவதற்கு ஒன்றும் இல்லை” என்ற நிலையில் இருப்பவர்களிடம், சோதிடம், ஜாதகம், மாயம், மாந்தீரிகம் உள்ளிட்ட இத்யாதிகள், தந்திரமாக வேலை செய்யும். பணம், பதவி, அதிகாரத்தோடு வலம் வருபவர்கள், அவர்களின் சுகபோகங்களுக்கு காரணமானவற்றில், எது ஒன்றையும் இழந்துவிடக்கூடாது என்று துடிப்பார்கள். அந்தத் துடிப்பின் பதட்டத்தில் ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றை நாடுவார்கள்; இருப்பதைவிட அதிகமாகப் பெற ஜாதகத்தை அலசுவார்கள்; தகுதிக்கு மீறியதை அடைய மாயம், மாந்தீரிகங்களில் வழி தேடுவார்கள்.

346_10400.jpg

இவை எல்லாம், பலிக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. அவர்களுக்குச் சாதகமாக சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகளே அவர்களுக்குத் தேவை. அதுவே, அவர்களை ஒருவித மயக்கத்திலேயே வைத்திருக்கும். இப்படிப்பட்ட மாய மயக்கத்தையும் ஜெயலலிதாவுக்கு சசிகலா ஊட்டிவிட்டார். ஜெயலலிதா-சசிகலா நட்பின் வரலாற்றைப் புரட்டினால், அதில் ஜோதிடம், ஜாதகம், மாயம்,  மாந்தீரிகம், யாகம், பூஜை-புனஸ்காரங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் கொட்டிக் கிடக்கும்.

கைரேகை ஜோதிடம் எம்.ஜி.ஆர்!

ஜெயலலிதா, திரைவானில் நட்சத்திரமாக மின்னிய 60-களில், அவரிடம் இதுபோன்ற விஷயங்கள் குறித்து ஆர்வம் எதுவும் ஏற்பட்டு இருக்கவில்லை. 70-களுக்குப் பிறகு, திரைவானில் மங்கி, நாடக மேடைகளில் அவர் நடித்துக் கொண்டிருந்த போதும்,  இதுபோன்ற விஷயங்களில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை எதுவும் துளிர்விட்டு இருக்கவில்லை. ஆனால், 1982-க்குப் பிறகு ஜெயலலிதாவின் கவனம் ஜாதகம், ஜோதிடம், மாயம், மாந்தீரிகம் பக்கம் திரும்பியது. அவர் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தது, சசிகலா அவருடன் நெருங்கியது, ஜோதிடம், ஜாதகத்தில் அவருக்கு நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது என்ற மூன்றும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தன. ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட இந்தப் புதிய மாற்றத்துக்கு காரணகர்த்தாக்கள்,  எம்.ஜி.ஆர், சசிகலா என்ற இருவரே.

mgr_27_15428.jpg

எம்.ஜி.ஆர்  ஜோதிடத்தில் அபார நம்பிக்கை உள்ளவர். இதை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கமாட்டார்கள். அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, அவர் ஜோதிடத்தையும் துணைக்கு வைத்துக் கொள்வார். மேலும், அவரே கைரேகை பார்ப்பார். விளையாட்டாக ஆரம்பித்து, ஒரு காலகட்டத்தில் மற்றவர்களுக்கு பலன் சொல்லும் அளவுக்கு அதில் எம்.ஜி.ஆர் தேர்ச்சி பெற்றிருந்தார். எம்.ஜி.ஆரின் இந்த நடவடிக்கை அவருக்கு நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் ஆச்சர்யத்தையும், இலேசான ஆர்வத்தையும் துளிர்விட வைத்தது. அதை, சசிகலா பெரும் விருட்சமாக ஜெயலலிதாவிடம் வளர்தெடுத்தார்.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு இதில் என்ன பங்கு இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சசிகலாவுக்கு இதுபோன்ற விஷயங்களில் இருந்த நம்பிக்கையில் அவர் பெரிதாக தலையிடவில்லை. சசிகலா ஒவ்வொரு அசைவையும் குறிபார்த்து, ஏடு படித்து, ஜோதிடம் கேட்டு,  மாயம் வைத்து,   மாந்தீரிகம் செய்தே சாதிக்க முடியும் என்ற ஆணித்தரமான நம்பிக்கை உள்ளவர். அவருடைய கணவர் நடராஜனின் பகுத்தறிவு வாதங்கள் எதுவும் சசிகலாவிடம் எடுபடவில்லை என்பதே உண்மை.

இதுபோன்ற விஷயங்களில் சசிகலாவின் ‘மாயம்மா’, அவருடைய  அண்ணி சந்தான லெட்சுமிதான். இவர் சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி. சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டேன் என்ற நிலையில் ஜெயலலிதா இருந்தபோது, சந்தான லெட்சுமியின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டேன் என்ற நிலையில் சசிகலா இருந்தார். சந்தானலெட்சுமி சொன்ன விஷயங்களை சசிகலா, ஜெயலலிதாவுக்குச் சொன்னார்.  ஜாதகம், ஜோதிடம், மாயம், மாந்தீரிகம், யாகம் போன்ற விஷயங்களினால் ஜெயலலிதா மனதில் மாயக் கனவுகளை சசிகலா விதைத்தார்; அவற்றில் சில நனவானபோது, ஜெயலலிதா அதில் மயங்கினார்.  அவருக்கு அது பிடித்தமானதாக இருந்தது. இப்படி ஏற்பட்ட மயக்கம், ஜெயலலிதாவின் மனதை ஜோதிடம், ஜாதகம், மாயம், மாந்தீரிகத்துக்குள் கட்டிப்போட்டது; இதன் மூலம் சசிகலாவிடம் ஜெயலலிதா இறுக்கமாக பிணைக்கப்பட்டார். “சாதரணப் பணிப்பெண்ணாக வந்த சசிகலாவை, ஜெயலலிதா இவ்வளவு நம்புவதற்கு, ஜாதகமும், மாயமந்திரங்களும்தான் காரணம்” என்று சொல்கிறவர்கள், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கட்சிக்குள்ளும் இன்னும் இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!

jaya_sasi_27_15123.jpg

சசிகலா, ஜெயலலிதாவின் ஜாதகத்தையும் தனது ஜாதகத்தையும் ஏற்கெனவே கணித்து வைத்திருந்தார். அதில், ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் யோகம் இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். அதைச் சொல்லிச் சொல்லியே ஜெயலலிதாவுக்கு ருசி ஏற்றி வைத்திருந்தார். அதன்பிறகுதான், ஜெயலலிதா தன்னுடைய ஜாதகங்களை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராகப்போய் பலன் கேட்டார். கேட்ட இடங்களில் எல்லாம், ஜெயலலிதாவின் ஜாதகத்துக்கு சாதகமான வார்த்தைகளே வந்து விழுந்தன. அதில் அவர் மனம் குளிர்ந்து போனார். அந்த நேரத்தில், டெல்லியில் ஜாதகம் பார்ப்பதில் வல்லவராக இருந்தவர், ‘பாபாஜி’ பத்திரிகை ஆசிரியர் லெட்சுமண் தாஸ். அவர் இல்லஸ்ட்ரேட் வீக்லி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிகைகளில் பத்தி எழுதக்கூடியவர்; டெல்லி பிரபலங்களுக்கு மிக நெருக்கமானவர்;  முன்னாள் பிரதமர்கள் ராஜிவ் காந்தி, சந்திரசேகர், அர்ஜூன் சிங் போன்றவர்களுக்கு ஜாதகம் பார்த்துப் பலன் சொல்பவர்; தமிழ்நாடு காங்கிரஸில் வாழப்பாடி ராமமூர்த்தியோடு தொடர்பில் இருந்தவர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 30 நாட்களில் மரணம் அடைவார் என்று எழுதிக் கொடுத்தவர் என லெட்சுமண்தாஸ் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். அவரிடம் ஜெயலலிதா ஜோதிடம் கேட்க ஆர்வமாக இருந்தார். ஆனால், தான் ஜாதகம் கேட்கும் தகவல் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தார். அதனால், தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர் மூலம், தனது ஜாதகத்தைக் கொடுத்து அனுப்பினார். லெட்சுமணன்தாஸ், “ஜெயலலிதா எம்.பி. பதவியைவிட மிகப்பெரிய பதவியை அடைவார்; ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து உண்டு; ஜெயலலிதா எந்த அளவுக்கு புகழோடு இருந்தாரோ, அதே அளவுக்கு மக்களால்  தூற்றவும் படுவார்; ஜெயலலிதாவுக்குப் பில்லி சூனியங்களால் ஆபத்து உண்டு” என்று கணித்துக் கொடுத்தார்.

“தனக்கு ஆபத்தை உருவாக்கப்போகும், அந்தப் பெண், ஜானகி அம்மாள்தான்” என்று ஜெயலலிதா அப்போது நம்பினார்.  இதற்குப் பிறகு, வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம், ஜெயலலிதா தன்னுடைய ஜாதகத்தைப் பரிட்சித்துப் பார்ப்பார். ஒருகட்டத்தில் அவரே, ஜோதிடம் கற்றுக் கொள்ள முயன்றார். ஆனால், அது ஈடேறவில்லை. ஆனால், நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. சிவகங்கை முத்துக்காமாட்சி, கொக்கிரகுளம் பீர் முகமது, ரவி விளங்கன் என்று குறி சொல்பவர்கள் பலரை ஜெயலலிதா அறியத் தொடங்கினார். ஜெயலலிதாவின் கவனத்துக்கு இவர்களை ஒருவர் மாற்றி ஒருவராக சசிகலா அறிமுகம் செய்து கொண்டே இருந்தார். இப்படித் தொடர்ந்த நம்பிக்கைதான், கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கு வருபவர்களிடம் கூட, ஜாதகத்தையும் கேட்டு வாங்கும் பழக்கம் இப்போதும் அ.தி.மு.க-வில் இருக்கிறது.

தமிழக முதல்வர் சசிகலா!

http---photolibrary.vikatan.com-images-g

ஜெயலலிதாவின் மனம் மந்திரவாதத்தில் கொண்ட நம்பிக்கையில் மயங்கிக்கிடந்தது. அதைத் தெளியவிடாமல் சசிகலா வைத்திருந்தார். மித்ரன் நம்பூதிரியிடம் குறி கேட்பது, வைத்தீஸ்வரன் கோயிலில் ஏடு பார்ப்பது, சேலையூர் ஜோதிடரிடம் ஜாதகம் பார்ப்பது, சோட்டானிக்கரையில் மாயம் செய்வது, கானாடுகாத்தானில் மாந்தீரிகம் செய்வது, கொல்லிமலைச் சாமியார்களிடம் வாக்கு கேட்பது என்று நீண்டு, ஜோதிடக்காரர்களையும், மந்திரவாதிகளையும் தேடி வெளிமாநிலங்களுக்குப்போகும் நிலை உருவானது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஜோதிடர், காழியூர் நாராயணன். இவர்தான், 2016-வரை ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கை அசைக்க முடியாது என்று 25 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தவர் (1994-ல் வெளிவந்த தனது புத்தகத்திலேயே இதை வலம்புரிஜான் குறிப்பிட்டுள்ளார்).

தனது ஜாதகத்தின்படி வைணவத்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால்தான், ஜெயலலிதா அடிக்கடி திருப்பதிக்குச் செல்ல ஆரம்பித்தார். கட்சிக்கு சின்னம் சேவலா? புறவா? என்று வந்தபோது, அதையும் திருப்பதி ஏழுமலையான் முன்பு சீட்டுக்குலுக்கிப்போட்டுத்தான் சசிகலா, சேவல் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார். ஜெயலலிதாவுக்காக இத்தனை ஜோதிடர்களையும், மாந்தீரிகர்களையும் ஏற்பாடு செய்யும் சசிகலா, தன்னுடைய ஜாதகத்தைக் கணிக்காமல் இருப்பாரா? சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர், வடுகப்பட்டி தர்மராஜன். அவர், “ஒரு காலத்தில் சசிகலா, தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆகிவிடுவார்” என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்திருந்தார். வடுகப்பட்டி தர்மராஜன் அன்று போட்ட புதிருக்கு பதில் கிடைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் வடுகப்பட்டி தர்மராஜன் சொன்னது பலிக்குமா? பலிக்காதா? என்பது தெரிந்துவிடும்.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s