உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 10

‘எங்கே என் கடிதம்?’

ஜெயலலிதாவின் ருத்ரதாண்டவம்!

ஜெயலலிதாவுடன் சசிகலாவுக்கு நட்பு, உலகின் பார்வைக்கு பட்டவர்த்தனமாகத் தெரிவது. ஆனால், அதற்குள் தெரியாமல், மறைந்து, கரைந்து இருப்பது, சசிகலாவின் கணவர் நடராஜனின் ‘ரோல்’. ‘சசிகலா தான் இனிமேல், தனக்கு எல்லாம்’ என்ற  எண்ணத்தை நோக்கி, ஜெயலலிதாவைத் தள்ளியதற்கு காரணங்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நடராஜன் இருந்தார். தூக்கத்திலும் விழித்திருந்து, விதியை மாற்றும் நடராஜன், ஜெயலலிதா எழுதிய ஒரே ஒரு கடிதத்தை வைத்து 4 காரியங்களைச் சாதித்துக் கொண்டார். சசிகலா-ஜெயலலிதா நட்பை மேலும் நம்பிக்கைக்கு உரியதாக்கியது, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது, தி.மு.க-வை கூடாரத்தையும், அதன் தலைவர் கருணாநிதியையும், உச்சக்கட்ட எரிச்சலாக்கியது, தமிழகம் முழுவதும் தன்னை ஹீரோவாக்கிக் கொண்டது என்று நான்கு காரியங்களைச் சாதித்துக்காட்டினார்.

அந்த நாள்: 1989 மார்ச் 15

‘‘என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்; அரசியலைவிட்டு முழுமையாக ஒதுங்குகிறேன்’’ என்ற அர்த்தத்தில் ஜெயலலிதா ஏழு கடிதங்களை எழுதினார். அந்த நாள், மார்ச் 15, 1989.

சசிகலா

அன்று, சசிகலா, சென்னையில் இருந்து, திருத்துறைப்பூண்டிக்குக்  கிளம்பினார். தன் தயார் வீட்டுக்குக் கிளம்பிய சசிகலாவை, நடராஜன், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்று  வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது, சசிகலா-நடராஜனின் வீடு, ஆழ்வார்பேட்டை, பீமண்ணா கார்டன் தெருவில் இருந்தது. போயஸ் கார்டன் வீட்டு மாடியிலும், நடராஜனுக்கு நிரந்தரமாக ஒரு அறை இருந்தாலும், சசிகலா இருக்கும்போது மட்டும்தான், நடராஜன் அங்கு இருப்பார். சசிகலா போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என்றால், நடராஜன் அங்கு தங்கமாட்டார். சம்பவத்தன்றும், சசிகலா, ஊருக்குக் கிளம்பிவிட்டதால், இரவு நேராக ஆழ்வார்பேட்டை வீட்டுக்குச் சென்ற நடராஜனுக்கு, தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், போயஸ் கார்டனில், ஜெயலலிதாவுக்கு ப்யூனாக நடராஜன் நியமித்த ஆள். “மேடம், திடீரென டிரைவரை அழைத்து, 7 கடிதங்களைக் கொடுத்துள்ளார். அதில் ஒன்றில் சபாநாயகர் முகவரி இருந்தது; மற்ற 6 கடிதங்களில் பத்திரிகை அலுவலகங்களின் முகவரி இருக்கிறது; கடிதத்தில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை” என்று நடராஜனுக்கு வேண்டிய தகவலைச் சொன்னார் பியூன்.

“பத்திரிகை அலுவலகம், சபாநாயகர் விலாசத்துக்கு இந்த நேரத்தில், ஜெயலலிதா கடிதம் அனுப்ப வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் இதுபற்றி, சசியிடம் ஜெயலலிதா எதுவும் சொல்லவில்லை, ஜெயலலிதா சொல்லி இருந்தால், சசி தன்னிடம் நிச்சயம் அதைச் சொல்லி இருப்பார். நம்மிடமும் ஜெயலலிதா எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால், சசி, ஊரில் இல்லாத நேரத்தில், ஜெயலலிதா இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் என்றால், எதையோ நமக்குத் தெரியாமல் செய்யப் பார்க்கிறார். இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது” என்று மின்னலைப்போல் கணித்த நடராஜன், கச்சிதமாக காரியத்தில் இறங்கினார். போயஸ் கார்டனில் கிளம்பிய கார் போகும் ரூட்டை யூகத்தில் கணித்த நடராஜன், உடனடியாக தன்னுடைய ஆட்கள் சிலரை அனுப்பி, “ஜெயலலிதாவின் காரை வழியிலேயே மடக்கி, டிரைவரிடம் இருக்கும் கடிதங்கள் ஒன்றுவிடாமல் பறித்துக் கொண்டு வரச்சொல்லி”  உத்தரவிட்டார்.

நடராஜன் அனுப்பிய ஆட்கள், “ஜெயலலிதா வீட்டில் இருந்து கிளம்பிய காரை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகில் மடக்கி, அவரிடம் இருந்த கடிதங்களைப் பறித்தார்கள். அவற்றைக் கொண்டுவந்து நடராஜனிடம் கொடுத்துவிட்டு, தலையைச் சொரிந்து கொண்டு நின்றவர்களுக்கு, 500 ரூபாயை கொடுத்தனுப்பினார் நடராஜன். அந்தப் பணம், ஊருக்குக் கிளம்புவதற்கு முன், நடராஜனின் செலவுக்கு சசிகலா கொடுத்துவிட்டுச் சென்ற பணம். அதன்பிறகு, கடிதத்தைப் பிரித்துப் படித்துப்பார்த்த நடராஜன் அதிர்ந்துபோனார். கடிதத்தில், “நான் அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன். என்னுடைய எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்கிறேன்” என்று எழுதி கையெழுத்துப்போட்டு இருந்தார் ஜெயலலிதா. அதைப் பத்திரமாக வீட்டுப் பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு, போயஸ் கார்டனுக்குப் போன் போட்டார். அங்குள்ள வேலையாட்கள் அனைவரையும், “கிளம்பிவிடுங்கள். யாரும் அங்கு இருக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு  வழக்கம்போல், தனது வேலைகளைப் பார்க்கப்போய்விட்டார். மறுநாள் வழக்கம்போல், அமைதியாகப்போய் போயஸ் கார்டன் வீட்டிலும் தனக்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எங்கே என் கடிதம்? ருத்ரதாண்டவம் ஆடிய ஜெயலலிதா!

காலையில் பத்திரிகைகளைப் புரட்டிய ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி. “எந்தப் பத்திரிகையிலும் தன்னுடைய ராஜினாமா செய்தி வரவில்லை” என்று கொந்தளித்தவர், முதல் நாள் கடிதம் கொடுத்து அனுப்பிய டிரைவரைப் பிடித்து விஷயத்தைக் கேட்டார்.  நடராஜனின் வேலைகள் அனைத்தையும் அவர் மூலம் தெரிந்துகொண்ட ஜெயலலிதா, போயஸ் கார்டனில் நடராஜனைத் தேடினார். ‘அவர் கிளம்பி வீட்டுக்குப் போய்விட்டார்’ என்று தகவல் அறிந்து உடனே, நடராஜனின் ஆழ்வார்ப்பேட்டை  வீட்டுக்கு ஆத்திரத்துடன் வந்து, ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். அப்போது, அங்கு வைத்து நடராஜனுடன் பேசிக் கொண்டிருந்த திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் ஜெயலலிதாவின் கோபத்தைப் பார்த்து ஓடி ஒளிந்துவிட்டனர்.  “எங்கே என் கடிதம்? அதைப் பறிக்க நீங்கள் யார்? என்னுடைய முடிவுகளில் நீங்கள் ஏன் தலையீடுகிறீர்கள்? என்று கேட்டு அவர் போட்ட சண்டையில், ஆழ்வார்பேட்டை பீமண்ணா கார்டன் தெரு அலறியது. நடராஜன் வீட்டை இரவும் பகலுமாகக் கண்காணித்துக் கொண்டிருந்த, உளவுத்துறை போலீஸுக்கு, மிகப் பெரிய இரை கிடைத்தது. ஜெயலலிதாவின் கோபத்தைப் பார்த்து நடராஜன் ஆச்சரியப்படவில்லை. அது அவர் அறிந்ததுதான். “உங்கள் கடிதம் பீரோவில் இருக்கிறது. சசிதான் பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு, ஊருக்குப் போய் இருக்கிறார். அவர் வந்ததும் பேசிக் கொள்ளலாம். நீங்கள் இப்போது கிளம்புங்கள்” என்று சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார். ஜெயலலிதாவின் ஆத்திரம் அடங்கவில்லை. சசிகலாவின் ஊருக்குப் போன் செய்து, சசிகலாவைப் பிடித்தார்.  ‘எங்கே என் கடிதம்? பீரோ சாவி யாரிடம் உள்ளது’ என்று ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்கு சசிகலாவிடம் எந்தப் பதிலும் இல்லை. உடனே, நீ கிளம்பி சென்னை வா… என்று அவருக்கு உத்தரவுபோட்டார் ஜெயலலிதா.

சசிகலா 17-ம் தேதி கிளம்பி சென்னை வந்தவர், நேராக ஜெயலலிதாவைப் போய்ச் சந்தித்தார். ஜெயலலிதா கேட்கும் எந்தக் கேள்விக்கும் சசிகலாவிடம் பதில் இல்லை. “நான்போய் அவரிடம் விசாரித்துவிட்டு வருகிறேன்” என்று சொன்ன சசிகலா ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு வந்து நடராஜனிடம் விபரங்கள் கேட்டார். “கடிதம் வீட்டில்தான் இருக்கிறது. ஜெயலலிதாவிடம் நீ பேசி அவரைச் சமாதானப்படுத்து. இப்போது ராஜினாமா செய்யக்கூடாது. அவரை அரசியலில் பெரிய ஆளாக்குவது என் பொறுப்பு என்று சொல்” எனச் சொல்லி அனுப்பிவைத்தார். நீங்களும் என்னுடன் வாங்க என்று சசிகலா அழைத்தபோது,  “ஜெயலலிதாவின் கடிதம் வீட்டில் இருக்கிறது. நாம் இரண்டு பேரும் இல்லாத நேரத்தில், யாராவது அதை எடுத்து வெளியில்விட்டுவிட்டால், நம் மீது தீராப் பழி வந்து சேரும். ஏற்கெனவே, நம் திருமணம் கலைஞர் தலைமையில் நடந்ததால், நம்மை தி.மு.க-வின் ஆட்கள் என்று சொல்கிறார்கள். அதனால், நீ மட்டும்போய் அந்த அம்மாவை சமாதானம் செய். நான் வீட்டில் இருக்கிறேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். சசிகலா ஜெயலலிதாவை சமாதானம் செய்ய போயஸ் கார்டனுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அதற்குள் பீமண்ணா கார்டன் தெருவில் உள்ள ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்குள் போலீஸ் புகுந்து நடராஜனை அள்ளிக் கொண்டு போனது. எந்தக் கடிதத்தை நடராஜன் மறைத்தாரோ, அந்தக் கடிதத்தை கருணாநிதி வெளியில்விட்டார். இப்போது, ஜெயலலிதாவுக்கு நடராஜன் மீது இருந்த கோபம் போய்விட்டது. அது கருணாநிதியின் மேல் திரும்பியது. தி.மு.க கூடாரம் எரிச்சலானது. கைது செய்யப்பட்ட நடராஜன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அது எப்படி நடந்தது…

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s