உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 11

சசிகலா, ஜெயலலிதா விதியை மாற்றிய நடராஜன்

ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரம், நடராஜனோடு முடிந்திருக்கும். ஆனால், அதை தமிழக அரசியல் முக்கியவத்துவம் வாய்ந்த பிரச்னையாக கருணாநிதி மாற்றினார். நடராஜனிடம் கடிதம் இருக்கிறது என்ற விபரத்தை தெரிந்துகொண்டு அவரைப் போலீஸ் கைது செய்ததா? அல்லது உண்மையிலேயே நடராஜன் மீது வந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் கைது செய்ததா? என்பதில் இரண்டுவிதமான கருத்துகள் இன்றும் இருக்கின்றன. எது… எப்படியோ…கைதுக்கான காரணம் சில நாள்களில் காணமல் போனது. ஆனால், கைது செய்தபோது, நடராஜன் வீட்டில் சிக்கிய கடிதமும், அதை முரசொலியில் கருணாநிதி வெளியிட்டதும், 30 ஆண்டுகால தமிழக அரசியலைத் திசைமாற்றிவிட்டது. நடராஜன் என்ற நபரை தமிழகம் அறிந்த பிரபலமாக்கியது.

நடராஜன் வீட்டில் நடந்த காட்சிகள்!

நடராஜன் திடீரென அபிராமபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சிறிதுநேரம் அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்துவிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டுபோனார்கள். அப்போது, போலீஸ் கமிஷனராக இருந்த துரை, நடராஜனை விசாரித்தார். விசாரணை முடிந்ததும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கொண்டுபோய் நடராஜனை நிறுத்தினார்கள். சைதாப்பேட்டை நீதிபதி நடராஜனை சிறைக்கு அனுப்பாமல், நிபந்தனை ஜாமீன் வழங்கி விடுவித்தார். இந்தக் காட்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, மற்றொரு புறம் வேறு சில காட்சிகளும் நடந்தன. நடராஜன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, வேறோரு போலீஸ் ‘டீம்’ நடராஜனின் வீட்டுக்குள் நுழைந்தது. பீரோவை உடைத்து, அதில் இருந்த சில வெள்ளிப்பொருட்கள், பேப்பர் ஆவணங்களை அள்ளிச் சென்றது. அந்தப் பேப்பர் ஆவணங்களில் தான், ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் இருந்தது. அதுதான், ஜெயலலிதாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராஜினாமா கடிதம். அதன்பிறகு தன் கடைசி மூச்சுவரை, பொது வாழ்வில் இருந்து விடைபெறுவதாக ஒருநாளும் ஜெயலலிதா சொல்லவில்லை.

http___photolibrary.vikatan.com_images_g

தி.மு.க-வில் நடந்த காட்சிகள்!

ஜெயலலிதாவின் ராஜினாமா கடித விவகாரம், கருணாநிதியின் கவனத்துக்குப் போனதும், “அந்த அம்மாவப் பத்தி எனக்குத் தெரியும். ரொம்ப எமோஷனல் டைப். கோபத்துல என்ன செய்றோம்னு தெரியாம, எதையும் செய்யும். இந்தக் கடிதம் எந்தச் சூழ்நிலையில எழுதுனதுன்னு விசாரிக்கனும். அப்புறம் இதுபத்தி முடிவு பண்ணலாம்” என்றுதான் சொல்லி இருக்கிறார். அப்போது அங்கு இருந்த முரசொலிமாறன், “அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் செய்ததுபோல், முரட்டுத்தனமாக நாம் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்று வலியுறுத்தி உள்ளார். அதையும் கேட்டுக்கொண்ட கருணாநிதி, “நாம் அப்படிச் செய்தால், அதற்காகவே அந்த அம்மா மீண்டும் போடித் தொகுதியில் போட்டியிடும்… அதில் நிச்சயம் வெற்றி பெறும். அதனால், இந்த விவகாரத்தில் நிதானமாகவே இருப்போம்” என்றுதான் சொல்லி உள்ளார். ஆனால், பிறகு கருணாநிதியின் மனது எப்படி மாறியது? அந்த நேரத்தில், “ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் அரசியலில் இருந்து ஒய்வுபெறப்போகிறார் ”என்று பல அ.தி.மு.க சீனியர்களே சொல்லிக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இந்த தகவலை அடிக்கடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது கருணாநிதியின் கவனத்துக்கு ஏற்கெனவே வந்திருந்தது. அதையும் பரிசீலித்துப் பார்த்த கருணாநிதி, “ஜெயலலிதாவின் ராஜினாமாவை ஏற்க வேண்டாம்; ஆனால், அவர் விருப்பப்படி, இந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிடலாம்” என்ற முடிவுக்கு வந்தார். கருணாநிதியின் அந்த முடிவு தவறானது என்பதை காலம் அவருக்குப் பிறகு பல சமயங்களில் உணர்த்தியது.

KARUNANIDHI_14218.jpg

போயஸ் கார்டன் காட்சிகள்!

ராஜினாமா கடிதத்தைப் பறித்து, அதை ஒளித்துவைத்த நடராஜன் மீது தாங்கமுடியாத ஆத்திரத்தில் இருந்தார் ஜெயலலிதா. ஆனால், தன்னுடைய ராஜினாமா விவகாரத்தில் கருணாநிதி காட்டும் ஆர்வம், ஜெயலலிதாவின் அரசியல் ஆர்வத்தை அணையவிடாமல் செய்தது. அந்த நேரத்தில் போயஸ் கார்டனுக்கு வந்த எஸ்.டி.எஸ், சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசு போன்றவர்கள் ஜெயலலிதாவை சமாதானப்படுத்தினார்கள். எல்லாம் கருணாநிதியின் வேலை என்று எடுத்துச் சொன்னார்கள். “நான் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கருணாநிதி ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்? அப்படியானால், உண்மையிலேயே கருணாநிதி நம்மைப் பார்த்து பயப்படுகிறார்” என்று அந்தத் தருணத்தில் இருந்துதான் ஜெயலலிதா உறுதியாக நம்பத் தொடங்கினார். இப்போது, ஜெயலலிதாவுக்கு நடராஜன் மீது இருந்த கோபம் தணிந்தது; கருணாநிதி மீது வெறுப்பு அதிகரித்தது. அதையொட்டி. அவர் காய்களை நகர்த்தத் தொடங்கினார். கருணாநிதியை திட்டித் தீர்த்தார் ஜெயலலிதா; நடந்த விவகாரங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் கருணாநிதி. நடராஜனின் உள்கட்சி எதிரிகளான சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசரிடமே நடராஜனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் ஜெயலலிதா. தமிழக அரசியல் களம் விறுவிறுப்பான சினிமாவைப் போல் நகர்ந்தது. அதன் ஹீரோ பாத்திரத்தை அட்டகாசகமாகச் செய்து கொண்டிருந்தார் நடராஜன்.

jaya123_14085.jpg

கடிதத்தை தொடர்ந்து 1989-ல் நிகழ்ந்த சர்ச்சைகள்…

முதலமைச்சர் கருணாநிதி: எங்கேயோ, என்னமோ நடக்கிறது. பெல்ட்டால் அடித்துக் கொள்கிறார்கள். செருப்பால் அடிக்கிறார்கள். நமக்கென்ன வந்தது?’ என்று நாம் சாதாரன பொறுப்பிலே இருந்தால் சொல்லி விடலாம். ‘சிட்பண்ட்’ நடத்துகிறார்கள். பத்துப் பேரிடம் பணம் வாங்குகிறான். தர வேண்டிய பணத்தை ஒழுங்காகத் தராவிட்டால், ஏமாந்தவன் புகார் செய்கிறான். அந்தப் புகாரில் நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? கட்சி வைத்திருக்கிறோம்… கேட்கக் கூடாது என்றால் கட்சி வைத்திருப்பது ஏமாற்றுவதற்காகவா?

எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா: தமிழக அரசியலில் நடராஜன் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர். அவர் ராஜினாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டிருக்கலாம். ஆனால், கருணாநிதி இந்த அளவுக்குக் கீழே இறங்கிச் செயல்படுவார் என்று நடராஜனோ, நானோ எதிர்பார்க்கவில்லை. இந்தக் கொடுமைகளைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. சிறைக் கொடுமைகளைச் சந்தித்து எனது உயிரையே தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன்.

நடராஜன்: தனது ராஜினாமா கடிதத்தையும் அறிக்கையையும் கிழித்துப் போட்டுவிடும்படி ஜெயலலிதா என்னிடம் டெலிபோனில் கூறினார். ஆனால், அவற்றை ஜெயலலிதா மற்றும் எனது மனைவி சசிகலா ஆகியோர் முன்னிலையில்தான் கிழித்துப் போட வேண்டும் என்று அவற்றைப் பத்திரமாக வைத்திருந்தேன். என்னைக் கைது செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஜெயலலிதா கடிதம் மற்றும் அறிக்கை விவரங்களை வெளியிட்டால் எனக்குத் தகுந்த சன்மானம் தருவதாகவும், என்னை மீண்டும் அரசு வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தை காட்டினார்கள். என்னை மிரட்டி வெள்ளைத்தாளில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டனர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்: ராஜினாமா கடிதத்தை நடராஜன் கிழித்துப் போடுவது சரியல்ல; ஜெயலலிதாதான் கிழிக்க வேண்டும். எனவே, அவரிடமே கொடுத்துவிடலாம் என்று தான் பத்திரமாக நடராஜன் வைத்திருந்தார். அதற்குள் போலீஸார் கைப்பற்றி விட்டனர்.

ஆலடி அருணா: ராஜினாமா கடிதம் எழுதியது உண்மை. ஆனால், அதை அனுப்பி வைக்கவில்லை என்று வெட்கமின்றி ஜெயலலிதா வாதிடுகிறார். ‘கடிதத்தை அனுப்பி வைக்க வில்லை’ என்று இப்போது மறுக்கிறாரே… இதுதான் கட்சிக்காரர்களின் நிர்ப்பந்தத்தால், ஒப்பாரியால் புரிந்திடும் செயல்! உண்மையில் அவராக மனம் மாறியிருந்தால் அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டிருக்க வேண்டும் அல்லது நடராஜனிடம் இருந்து திரும்பி வாங்கியிருக்க வேண்டும்.

முத்துச்சாமி: ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பதவி விலக முடிவு செய்தது உண்மை. நாங்கள் அவரை ‘குணமாகும்வரை ஓய்வில் இருங்கள்’ என்றோம். ஆனால், அவருக்குப் பணி செய்ய முடியாமல் பதவியில் இருக்க விருப்பம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் ‘நான் இல்லா விட்டால் கூட மற்றவர்களால் அ.தி.மு.க.வை வழிநடத்திச் செல்ல முடியும்’ என ஜெயலலிதா நம்பி, விலக விருப்பம் தெரிவித்திருக்கலாம்.

திருநாவுக்கரசு: போலீஸ் கமிஷனர் துரை தனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட்டு ஒரு அரசியல்வாதி போல நடப்பதை கவர்னரும், மத்திய உள்துறை மந்திரியும் தடுத்து நிறுத்த வேண்டும். காவல்துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் போக்கை அரசு உடனே கைவிட வேண்டும். தொடர்ந்து இதே வழியில் காவல்துறை செயல்படுமானால் நாங்களும் டாக்டர் ராமதாஸ் வழியைப் பின்பற்றிப் போராட நேரிடும். தேர்தலில் நிதியாகவும், நன்கொடையாகவும் வாங்கப்பட்ட மொத்த தொகை 3 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயாகும். இதில் 3 கோடியே 28 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதி இருப்பது 13 லட்சம் ரூபாய்தான். இந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும், திருப்பிக் கொடுத்து வருகிறோம்.

‘என் அரசியல் வாழ்க்கை இனிதான் ஆரம்பம்’-நடராஜன்! 

1_14129.jpg

ஜெயலலிதாவின் முதுகெலும்பாகிவிட்ட நடராஜன் கைது செய்யப்பட்டு கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபோதும் சரி, நீதிமன்றத்துக்கு வந்தபோதும் சரி… கொஞ்சமும் கவலையின்றிக் கலகலவென்று சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்தபோது நடராஜனிடம் திருநாவுக்கரசு “இப்ப நீதாம்ப்பா ஹீரோ…” என்றார். சட்டென்று நடராஜன் ”இதை முன்னாடியே ஒப்புக்கொண்டிருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்…” என்றார். என்னை மோசடி வழக்கில் மாட்டிவிட்டதன் மூலம் என் வாழ்க்கையை அழித்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம்… எனது அரசியல் வாழ்க்கையே இனிதான் ஆரம்பம்…” என்று அன்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் நடராஜன் தெரிவித்தார். “விதியை எப்படி மாத்தறே’ன்னு கேட்பீங்களே… இப்பப் பார்த்தீங்களா…? என்னைக் கன்னாபின்னாவென்று பேசிய திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் தான் இப்ப என்னைப் பாதுகாக்கிற கவசம்…” என்றார். அன்று தொடங்கிய நடராஜனின் திரைமறைவு அரசியல் பயணம், இன்று சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராக்கி, அதன் தலைமை அலுவலகத்தில் உரையாற்ற வைத்ததுவரை தொடர்கிறது.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s