உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 12

துணை முதல்வர் ஜெயலலிதா!

நடராஜன் போட்ட திட்டம்

‘ஜெயலலிதாவை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதே, தன் வாழ்நாள் லட்சியம்’ என்று சத்தியம் செய்து கொண்டார் நடராஜன் அதற்கான வழிகள் அத்தனையையும் அவரே உருவாக்கினார்; வழிகளில் வந்த தடைகளை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்.

நடராஜன் ஒருபோதும் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கவில்லை; ஜெயலலிதாவையும் காத்திருக்கவிடவில்லை. ‘காரியத்தில் இறங்குவோம்… சந்தர்ப்பம் கனிந்துவரும்…’ என்று முழுமையாக நம்பினார்; தான் நம்பியதையே, ஜெயலலிதாவையும் நம்பவைத்தார். நடராஜனின் நம்பிக்கை வீண் போகவில்லை.

சசிகலா

1987-ல், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இரண்டாவது முறையும் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட அவர் தயாரானார். 1984-ல் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துத் திரும்பிய எம்.ஜி.ஆர் சிறிது நாட்கள் நலமாக வலம்வந்தார்.

ஆனால், உள்ளுக்குள் அவரது உடல், நாளுக்கு நாள் பழுதாகிக் கொண்டே வந்தது. முதுமை ஒருபுறம் அவரை உருக்கி எடுத்தது. எம்.ஜி.ஆரின் இந்தப் பிரச்னைகளை துல்லியமாக கணித்துக் கொண்டே வந்தது நடராஜன், ஜெயலலிதா, சசிகலா கூட்டணி.

1984-ல் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது, ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவை பிரசாரம் செய்யவிடாமல் தடுத்தார்; ஜெயலலிதாவுக்கான கட்சி நிகழ்ச்சிகளைக் குறைத்தார்; டெல்லியில் இருந்த  தமிழ்நாடு இல்லத்தில் இருந்து ஜெயலலிதாவைத் துரத்தினார்.

எம்.ஜி.ஆர் திரும்பும்வரை, கட்சியில் இருந்து ஜெயலலிதாவை ஓரம்கட்டி வைத்திருந்தார் ஆர்.எம்.வீரப்பன். அதைப்போன்றதொரு நிலை, இனி ஒருநாளும் ஜெயலலிதாவுக்கு கட்சிக்குள் வரக்கூடாது என்று தீர்மானித்து, அதற்கான வேலைகளில் சசிகலாவும் நடராஜனும் இறங்கினார்கள்.

ஆர்.எம்.வீரப்பனின் அந்தச் செயல்களால் ரணமாகிப் போய் இருந்த ஜெயலலிதாவும், அவரைப் பழி தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

கட்சியிலும் ஆட்சியிலும் ஆர்.எம்.வீரப்பனின் ஆதிக்கத்தைக் காலி செய்தால்தான், ஜெயலலிதாவால் அதிகாரத்தைப் பெற முடியும் என்பதை உணர்ந்த இந்தக் கூட்டணி, 1984-க்குப் பிறகு ஆர்.எம்.வீரப்பனுக்கு பொறி வைத்தது. அதில், ஆர்.எம்.வீரப்பன் மட்டுமல்ல, அவருடைய ஆதரவாளர்களும் வரிசையாக வந்து விழுந்தனர்.

10 அமைச்சர்கள் பதவி நீக்கம் – எம்.ஜி.ஆர் அதிரடி!

சசிகலா

அறந்தாங்கியைச் சேர்ந்தவர் துரையரசன்; எம்.எல்.ஏ-வாக இருந்தவர்; இடையில் அ.தி.மு.க-வுக்கு வந்தவர். அ.தி.மு.க-வில் இருக்கும்போதே,  தி.மு.க தலைவர்களையும், அ.தி.மு.க தலைவர்களையும் ஒன்றாக மேடையேற்றி பிரம்மாண்ட விழா ஒன்றினை அறந்தாங்கியில் நடத்தினார்.

அதில், ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்டார். தி.மு.க தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். என்ன நோக்கத்தில் ஆர்.எம்.வீரப்பன் அந்த விழாவில் கலந்து கொண்டார், அறந்தாங்கி துரை எதற்காக அந்த விழாவை ஏற்பாடு செய்தார் என்பது யாருக்கும் புரியாத புதிர்.

ஒருவேளை அறந்தாங்கித் தொகுதியில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த திருநாவுக்கரசை, மட்டம் தட்டுவதற்காக ஆர்.எம்.வீரப்பன் அதில் கலந்து கொண்டிருக்கலாம். அவர் கலந்துகொண்டதோடு, அமைச்சர்கள் வெள்ளூர் வீராசாமி, கோவேந்தன் உள்ளிட்டவர்களையும் கலந்து கொள்ள வைத்தார். ஆர்.எம்.வீ-யின் இந்த செயல்பாடு, திருநாவுக்கரசை அதிகமாகக் காயப்படுத்தியது.

கொதித்துப்போனவர் ஜெயலலிதாவிடம் விபரத்தைச் சொன்னார்; எம்.ஜி.ஆரிடம் போய் முறையிட்டார். “ஆர்.எம்.வீரப்பன் அந்த விழாவில் கலந்துகொண்டதே தவறு. மற்ற அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது அதைவிடத் தவறு. இதை நீங்கள் கண்டிக்க வேண்டும்” என்று எம்.ஜி.ஆரிடம் எடுத்துரைத்தார்.

இந்த விவகாரத்தை ஜெயலலிதாவும் தனது வழக்கமான பாணியில் எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொன்னார். “ஆர்.எம்.வீரப்பனை தலையில் தட்டி வைக்கவில்லை என்றால் அது கட்சிக்கும் உங்களுக்கும் ஆபத்து” என்று எம்.ஜி.ஆரை அச்சுறுத்தினார்.

நடராஜன் இந்த விவகாரத்தை, ஆர்.எம்.வீரப்பனுக்கு எதிரான பிரசாரமாகவே பரப்பினார். உடல்நிலை, ஜெயலலிதாவின் நடவடிக்கைகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் போன்றவற்றால், அந்த நேரம் எம்.ஜி.ஆரும் கொஞ்சம் சஞ்சலமாகவே இருந்தார்.

எல்லோரையும் சந்தேகத்துடனே அணுகினார். தன் நிழலைக்கூட நம்புவதற்கு எம்.ஜி.ஆர் அஞ்சிய காலகட்டம் அது. அதனால், சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குக் கிளம்பும் முன் கட்சியில், ஆட்சியில்… சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அவரும் வந்திருந்தார்.

அவருடைய உதவியாளர் பரமசிவத்திடம், இரண்டு விரல்களைக் காட்டி, “இரண்டுபேரை பதவி நீக்கம் செய்யுங்கள்” என்று சொல்லி ஏற்கெனவே எம்.ஜி.ஆர் சொல்லி இருந்தார். அப்போது எம்.ஜி.ஆர் சரியாகப் பேச முடியாத நிலையில் இருந்தார்.

அதனால் அதிகபட்சம் சைகைகளில்தான் அவர் உத்தரவுகள் வரும். எம்.ஜி.ஆர் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள, பரமசிவமும் தனது இரண்டு விரல்களை உயர்த்திக்காட்டி, ‘இரண்டே பேர்தானே’ என்று அழுத்திக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஆனால் அதன்பிறகு, எம்.ஜி.ஆர் காதுகளுக்கு அன்றாடம் வந்த தகவல்கள், இரண்டுபேர் மட்டும் இருந்த அந்தப் பட்டியலின் நீளத்தை நீட்டிக் கொண்டே போனது. இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி இருந்தது.

அந்த நேரத்தில்தான் ஆர்.எம்.வீ-யின் விவகாரத்தை திருநாவுக்கரசும் ஜெயலலிதாவும் கொண்டு வந்தனர். அதனால், ஆர்.எம்.வீ-யையும் அந்தப் பட்டியலில் சேர்த்து, 10 என்று எண்ணிக்கையை ‘ரவுண்டாக்கி’,  10 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்.

கட்சிக்குள் ஜெயலலிதாவின் கனவுகளை காலி செய்வதற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பன் அதிகாரம் இழந்தார்; அவமானத்தால் கூனிக் குறுகிப்போனார்.

துணை முதலமைச்சர் ஜெயலலிதா! – நடராஜன் போட்ட திட்டம்!

“ஆர்.எம்.வீரப்பனின் அதிகாரம் பறிபோய்விட்டது; எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்; முதல்வர் நாற்காலியைக் கைப்பற்ற, இதைப்போன்றதொரு ஒரு அரிய வாய்ப்புக் கிடைக்காது” என்று கணக்குப்போட்ட நடராஜன் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினார்.

முதலமைச்சர் நாற்காலியை எம்.ஜி.ஆர் விட்டுத்தரமாட்டார் என்பது நடராஜனுக்கும் ஜெயலலிதாவுக்கும் தெரியும். அதனால், துணை முதலமைச்சர் நாற்காலியில் ஜெயலலிதாவை இப்போதைக்கு அமர்த்தலாம்; முதலமைச்சர் நாற்காலியைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று கங்கணம் கட்டி களத்தில் இறங்கினார் நடராஜன்.

சசிகலா

“ஆர்.எம்.வீரப்பனுக்கு 70 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. எம்.ஜிஆரின் உடல்நலம் மோசமாக இருக்கிறது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார். அதில் அவமானம் அடைந்த வீரப்பன் எம்.ஜி.ஆருக்கு எதிராக நிச்சயம் செயல்படுவார்.

அவர் அமெரிக்கா சென்றதும், ஆர்.எம்.வீரப்பன் கட்சியை உடைப்பார். ஆட்சியைக் கைப்பற்றுவார். அதைத் தடுத்து, கட்சியையும் ஆட்சியையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் போல் செல்வாக்கு உள்ளவர் கையில் அதிகாரம் இருக்க வேண்டும்.

அதனால், ஜெயலலிதாவை துணை முதலமைச்சராக்க வேண்டும்” என்ற பிரசாரத்தை நடராஜன் முன்னெடுத்தார். நடராஜனின் இந்த யோசனை ஜெயலலிதாவுக்குப் பிடித்துப்போனது. அதனால், இதன் சாரத்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டு சென்றார்.

ஜெயலலிதா அதை நேரடியாகச் செய்யாமல், திருநாவுக்கரசு மூலம் செய்ய வைத்தார். உண்மையிலேயே, அப்போது ஆர்.எம்.வீரப்பனுக்கு 70 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தது. அவர் சட்டசபைக்குள் நுழைந்தால், 70 எம்.எல்.ஏ-க்களும் எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள்.

இது எம்.ஜி.ஆருக்கும் நன்றாகத் தெரியும். அதேசமயம் ஆர்.எம்.வீ- தனக்கு எதிராகப்போவார் என்று எம்.ஜி.ஆர் நம்பவில்லை. அதனால், நடராஜன்,ஜெயலலிதா பிரசாரத்துக்கு எம்.ஜி.ஆர் மசியவில்லை.

“ஆர்.எம்.வீரப்பன் அப்படிக் கலகம் செய்தால், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திப்பேன்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். ஆர்.எம்.வீரப்பனின் அதிகாரத்தைப் பறித்த நடராஜன், ஜெயலலிதா கூட்டணியால் துணை முதலமைச்சர் என்ற  அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாமல் போனது.

தலைநகரம் எம்.ஜி.ஆருக்குத் தந்த அவமானம்!

எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றார். இந்த முறை, கட்சிக்குள் ஜெயலலிதாவை எதிர்க்க வலிமையான எதிரிகள் யாரும் இல்லை; இருந்த எதிரிகளிடம் ஜெயலலிதாவை எதிர்க்க அதிகாரம் இல்லை. ஆர்.எம்.வீரப்பன் உள்பட 10 பேரின் பல்லைப் பிடுங்கி இருந்தார் எம்.ஜி.ஆர். இது ஜெயலலிதாவுக்கு அசுர பலத்தைக் கொடுத்தது. ஜெயலலிதா, நடராஜன், சசிகலா கூட்டணி அடுத்தகட்ட வேலைகளை விறுவிறுவெனத் தொடங்கியது.

“எம்.ஜி.ஆருக்கு என்ன பிரச்னை? அவர் எவ்வளவு நாட்கள் உயிரோடு இருப்பார்” என்பதை நடராஜன் விசாரிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவில் ஜப்பான் டாக்டர் ஹான் என்பவர் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை கொடுத்து வந்தார்.

அதனால், அவரிடம் இருந்து எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களைப் பெற, தனது கிழக்காசிய நண்பர்கள் மூலம் நடராஜன் முயற்சித்தார். அவர்கள் விசாரித்துச் சொன்னதில், “எம்.ஜி.ஆருக்கு இனிமேல் சுத்தமாகப் பேச்சுவராது.

ஆனால், அவருடைய வாழ்நாள் கணக்கைப் பற்றி எதுவும் சொல்லமுடியாது” என்ற தகவல் மட்டும் நடராஜனுக்கு கிடைத்தது. கிடைத்த தகவலை ஆட்டத்தை வெற்றிகரமாக ஆடுவதற்கு போதும் என்று முடிவு செய்த நடராஜன், டெல்லியில் ‘லாபி’ செய்ய ஜெயலலிதாவைப் பணித்தார்.

நடராஜனின் யோசனைப்படி டெல்லி பறந்த ஜெயலலிதா, “தன்னைத் துணை முதலமைச்சராக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார். ஜெயலலிதாவின் கோரிக்கைகளை டெல்லி இப்போது கொஞ்சம் கனிவோடு பரிசீலித்தது.

ஜெயலலிதா-ராஜிவ் நட்பு அதற்கு காரணமாக அமைந்தது. தன்னை நோக்கி முதல்வர் நாற்காலி நகர்ந்து வருகிறது என்று ஜெயலலிதா நம்பினார். அதே நேரத்தில், எம்.ஜி.ஆர் கொஞ்சம் குணமடைந்து மீண்டும் தமிழகம் திரும்பினார்.

நடராஜனும் ஜெயலலிதாவும் டெல்லியில் செய்த லாபி எம்.ஜி.ஆர் கவனத்துக்கு வந்தது. அதை முறியடிக்க, அவரே நேரடியாகக் கிளம்பி டெல்லி சென்றார்.

தலைநகரம் கசப்பான அனுபவங்களோடு எம்.ஜி.ஆரை வரவேற்றது; அதை தன் வாழ்நாள் அவமானமாகக் கருதினார் எம்.ஜி.ஆர்; ஜெயலலிதாவை கட்சிக்குள் வளர்த்துவிட்டதற்காக வழக்கம்போல்  வருத்தப்பட்டார் எம்.ஜி.ஆர்.

டெல்லியில் நடந்தவை என்ன?

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s