உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 15

ஒரு விழா… இரண்டு அழைப்பிதழ்கள்!

எம்.ஜி.ஆரின் இறுதி நாட்கள்!

எம்.ஜி.ஆர், தன் வாழ்வின் இறுதி நாட்களை இனம் கண்டு எண்ணத் தொடங்கி இருந்தார்; டாக்டர்களின் அறிவுரைகள், நம்பிக்கை வார்த்தைகளில் அவர் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தார்;

அவருக்குள் உருவாகி இருந்த அவநம்பிக்கையை, அவ்வப்போது தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்த ஆரம்பித்தார்;

‘என்னை எங்கு புதைப்பீர்கள்’ என்று கேட்டு மரணத்துக்கு, தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்; உயில் எழுதினார்; அதில், தான் செய்த காரியங்களுக்கான காரணங்களை விளக்கினார்; தன் வளர்ப்புப் பிள்ளைகள் யார் என்பதை அதில் பட்டியல் இட்டார்;

எம்.ஜி.ஆரின் உயிலில் எந்தப் பக்கத்திலும், ஜெயலலிதா என்ற பெயர் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் இறுதிக்காலத்தில் ஜெயலலிதா கொடுத்த துயரங்கள், அவரை அந்த முடிவை நோக்கித் தள்ளி இருந்தன;

டெல்லியில் ஜெயலலிதாவால் எம்.ஜி.ஆர் மனதில் ஏற்பட்ட காயம், ரணமாகிப்  போய் இருந்தது; அது, அவருடைய வாழ்நாளில், அதற்கு முன்பு அவர் அனுபவித்த ரணங்களைவிட, பல மடங்கு வேதனையைக் கொடுத்தது.

அதை ஆறவிடாமல், மேலும் மேலும் புண்ணாக்கும் வேலைகளைச் செய்து கொண்டே இருந்தார் ஜெயலலிதா. சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தங்களை முழுவதுமாக இணைத்துக் கொண்டனர்.

1987-ன் இறுதியில், எம்.ஜி.ஆருக்கு எதிரான ஜெயலலிதாவின் தீவிர செயல்பாடுகளில், துணிந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடராஜன். நடராஜனின் அந்தத் துணிச்சல், சசிகலாவை மேலும் மேலும் ஜெயலலிதாவோடு இறுக்கிப் பிணைத்தது.

இரண்டு துருவங்கள்… இரண்டு திட்டங்கள்…

எம்.ஜி.ஆர்

சென்னை, கத்திப்பாரா சந்திப்பில் அப்போது நேரு சிலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தன. ராஜீவ் காந்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டதும் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் ஆளுக்கொரு திட்டத்தோடு செயல்பட்டனர்.

ராஜீவ்காந்தி கலந்து கொள்ளும் அந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என்று எம்.ஜி.ஆர் திட்டமிட்டார்; அதில், கண்டிப்பாக கலந்துகொண்டேயாக வேண்டும் என்று ஜெயலலிதா முடிவெடுத்தார்.

ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது, அதற்கான வேலைகளைத் திட்டமிடுங்கள் என்று ஆர்.எம்.வீரப்பனிடம் எம்.ஜி.ஆர் பொறுப்பை ஒப்படைத்தார். ‘ராஜீவ் நிகழ்ச்சியில், நான் கலந்து கொண்டேயாக வேண்டும்.’

அதற்கான வேலைகளைப் பாருங்கள் என்று நடராஜனிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்தார் ஜெயலலிதா. இப்படி, ‘நேரு சிலை திறப்புவிழா’ என்ற ஒற்றை நிகழ்ச்சியை முன்வைத்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரண்டு துருவங்கள், இரண்டு திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட்டனர்.

எதிர்காலம் என் கையில்!

ராஜீவ் காந்தி கலந்து கொள்ளும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆங்கிலத்தில் உரையாற்றுவதன் மூலம், தன் செல்வாக்கை தொண்டர்களிடமும், தொண்டர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை ராஜீவ் காந்தியிடமும் நிரூபிக்க நினைத்தார் ஜெயலலிதா.

அதன்மூலம், ‘அ.தி.மு.க-வின் எதிர்காலம் தான்தான்’ என்பதை தமிழகத்துக்குச் சொல்ல வேண்டும் என்பது ஜெயலலிதாவின் திட்டம். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை, ‘ஜெயலலிதாவுக்கு கட்சியில் எந்தச் செல்வாக்கும் இல்லை’ என்பதை ராஜீவ் காந்திக்கும், தொண்டர்களுக்கும் நிருபிக்க நினைத்தார்.

அதனால், ஜெயலலிதா மேடையேறக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அதன்மூலம், அ.தி.மு.க-வின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலமும் நான் மட்டுமே என்று உணர்த்த விரும்பினார் எம்.ஜி.ஆர். நேரு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தனக்குத் தெரிந்த டெல்லி தொடர்புகள் அனைத்தையும் ஜெயலலிதா பயன்படுத்தினார்.

டெல்லியில் இருந்து ஜெயலலிதாவுக்காக வந்த அத்தனை அழுத்தங்களையும் எம்.ஜி.ஆர் நிராகரித்தார். இந்த இரு துருவங்களின் பனிப்போரில், ஜெயலலிதாவுக்காக நடராஜன் வியூகம் வகுத்தார்; எம்.ஜிஆருக்காக ஆர்.எம்.வீரப்பன் வியூகம் வகுத்தார்.

ஒரு விழா! இரண்டு அழைப்பிதழ்கள்!

நேரு சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. அதில், ‘ஜெயலலிதாவின் பெயர் வரக்கூடாது’ என்று சொன்ன எம்.ஜி.ஆர் அந்தப் பொறுப்பை வீரப்பனிடம் ஒப்படைத்தார்.

அப்போது வீரப்பன், விழாவில், ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது; கலந்து கொண்டாலும் மேடையேறக்கூடாது; மேடைக்கு வந்துவிட்டாலும் பேசக்கூடாது; மீறிப் பேசினால், தொண்டர்களை வைத்துக் கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தி, ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தலாம் என்று ஒரு திட்டத்தை எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.

ஆனால், எம்.ஜி.ஆர் அதை ஏற்கவில்லை. இதில் ஏதாவது ஒரு விவகாரம் வெளியாகிவிட்டால், எதிர்காலத்தில் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும் என்று அவர் அஞ்சினார்.

வீரப்பன்,எம்.ஜி.ஆர்

அதனால், அழைப்பிதழிலேயே ஜெயலலிதாவின் கதையை முடித்துவிடலாம் என்று முடிவு செய்தார் வீரப்பன். ஜெயலலிதாவின் பெயர் இல்லாமல் அழைப்பிதழ்களை அச்சடிக்க உத்தரவிட்டார். பொதுத்துறையின் மேற்பார்வையில் செய்தித்துறை அந்த அழைப்பிதழ்களை அச்சடித்தது.

ஆனால், அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களில் ஜெயலலிதாவின் பெயர் இருந்தது. சிலவற்றில் இல்லாமலும் இருந்தது. இரண்டுமாதிரியாகவும் அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அதிர்ச்சி… ஆச்சரியம்… இயலாமை… கோபம் என்று கலவையான உணர்ச்சிக்குள் வீழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதாவின் சாகசங்களும் சாமர்த்தியமும் எம்.ஜி.ஆரின் தோல்விகளை, அவரது இறுதிக்காலத்தில் தெளிவாக அவருக்கு எடுத்துச் சொன்னது. வீரப்பனை அழைத்து விசாரித்தார். ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்.ஜி.ஆரைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிர்ச்சியாக இருந்தது.

அச்சகத்தில் விசாரித்தபோது, ராமவரம் தோட்டத்தில் இருந்து ஓரு அழைப்பிதழுக்கு உத்தரவு வந்ததுபோல, போயஸ் தோட்டத்தில் இருந்து மற்றொரு அழைப்பிதழுக்கான உத்தரவு வந்தது என்று அவர்கள் ஒப்பித்தனர். எம்.ஜி.ஆர் தன் விதியை மட்டும் அப்போதைக்கு நொந்து கொண்டார். வேறு வழியில்லாமல், போயஸ் தோட்டத்தில் இருந்து வந்த  உத்தரவை யார் கொடுத்தார்கள் என்று அடுத்து விசாரிக்க ஆரம்பித்தார்.

நடராஜனின் காரியங்களும்… காரணங்களும்..

நடராஜன்

இரண்டுவிதமான அழைப்பிதழ்களை அச்சடிக்கச் சொன்னது யார் என்று விசாரித்தபோது, விசாரிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருசேர கை காட்டிய நபர் நடராஜன். அவர்தான், ஜெயலலிதாவின் பெயர் போட்டும் சில அழைப்பிதழ்களை அடிக்கும் யோசனையைச் சொன்னவர்;

தனக்கு இருக்கும் தொடர்புகள் மூலம் அதை, எம்.ஜி.ஆரின் அரசாங்கத்திலேயே சாதித்துக் காட்டியவர். இந்த உண்மை வெளிவந்தபோது, அதை நம்ப எம்.ஜி.ஆரே சிரமப்பட்டார்.

ஆனால், நம்புவதற்கு கசப்பாக இருந்தாலும் உண்மை அதுதான். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த நாட்களில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நடராஜன், இத்தகைய சாகசத்துக்கு துணிந்தார் என்றால், அதற்கு காரணம் அவருடைய எதிர்காலத்திட்டம்தான்.

எம்.ஜி.ஆர் என்ற சர்வ வல்லமை படைத்த மனிதரைப் பகைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற நடராஜன் உதவினார் என்றால், அவருக்கு, அவர் மீது நம்பிக்கை இருந்தது; அவருடைய எதிர்காலத்திட்டத்தின் மீது நம்பிக்கை இருந்தது.

அது நிறைவேறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அது. ஜெயலலிதா முதலமைச்சர் ஆவார்; அவருக்குப் பக்கத்தில் இருக்கும் தன் மனைவி அதிகார மையமாக மாறுவார்; அதன்மூலம் தான் நிழல் முதலமைச்சராக வலம் வருவோம் என்பதை அவர் அப்போதே கணித்திருந்தார்போல.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s