உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 16

2 பெண்கள்… 2 ஜோடிக் கண்கள்…

வெறித்த பார்வைகள்!

எம்.ஜி.ஆரின் வெற்றி! ஜெயலலிதாவின் தோல்வி!

சென்னை கத்திப்பாராவில் அமைக்கப்பட்ட நேரு சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் களை கட்டின. ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் பிடிவாதமாக இருந்தார்;

அதனால், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படும் டெல்லி லாபியால், இந்தமுறை ஒன்றும் செய்யமுடியாமல் போனது. ராஜீவ் காந்தியும் இதில், எம்.ஜி.ஆரைக் கட்டாயப்படுத்தவில்லை.

காரணம், அந்த விழாவுக்கு ராஜீவ் காந்தியோடு சேர்ந்து சோனியா காந்தியும் வருவதாகத் திட்டம் இருந்தது. ஜெயலலிதா-சோனியா ஒரே மேடையில் அமர்வது, ராஜீவ் காந்திக்கு எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கும் என்பது ராஜீவ் காந்திக்குத்தான் தெரியும்.

அதனால், அவரும் இந்த விவகாரத்தில் பதுங்கிக் கொண்டார். எம்.ஜி.ஆரின் உத்தரவை மீறி, இரண்டு அழைப்பிதழ்களை நடராஜன் அச்சடித்த விவகாரமும் வேறு பற்றி எரிந்து கொண்டிருந்தது.

அதனால், ஜெயலலிதாவால் வழக்கமான தனது பாணியில் எம்.ஜி.ஆரைச் சமாதானம் செய்ய முடியவில்லை. ‘என்ன செய்வீர்களோ தெரியாது… ஜெயலலிதா கூட்டத்துக்கே வரக்கூடாது…’ என்று எம்.ஜி.ஆர் நேரடியாக உத்தரவு பிறப்பித்து இருந்ததால், ஆர்.எம்.வீரப்பன், அமைச்சர்கள், போலீஸ், கட்சிக்காரர்கள், எம்.ஜி.ஆர் விசுவாசிகள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து, ஜெயலலிதாவுக்கு எதிராக நெருப்பு வளையம் போட்டு வைத்தனர். அதை உடைத்துவிட்டு உள்ளே நுழைய ஜெயலலிதாவால் அப்போது முடியவில்லை.

ஜெயலலிதாவின் பிடிவாதத்துக்கு முன் பலமுறை தோற்றுப்போன எம்.ஜி.ஆர், இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் பிடிவாதம், அரசியல், ஆள்பிடிப்பு எல்லாம் இந்தமுறை எம்.ஜி.ஆரிடம் தோற்றுப் போனது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் அடைந்த இறுதி வெற்றி இதுவே; ஜெயலலிதா, எம்.ஜி.ஆரிடம் அடைந்த இறுதி தோல்வி இதுவே; நேரு சிலை திறப்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. 1987 டிசம்பர் 22-ம் தேதி அந்தச் சிலைத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது;

ராஜீவ் காந்தி-சோனியா காந்தியோடு வந்து கலந்து கொண்டார்; எம்.ஜி.ஆருக்கு அந்த விழாவில் இளமை திரும்பி இருந்தது; 42 வயது எம்.ஜி.ஆரைப் போல் இருந்தார்; அணையப்போகிற விளக்கு பிரகாசமாக ஒளி வீசியது!

ராஜிவ்காந்தி எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் மறைந்தார்! தமிழகம் அழுதது!

ராஜீவ் காந்தியை வழியனுப்பி வைத்த எம்.ஜி.ஆர் நிம்மதியாக ராமவாரம் திரும்பினார். இனி ஜெயலலிதாவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருந்த அவர், அதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கி வைத்து இருந்தார்;

அவற்றை முழுவதுமாக முடித்து, ஜெயலலிதாவின் அரசியல் அத்தியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நேரத்தில், தமிழகத்தின் தலைவிதி வேறு மாதிரி எழுதப்பட்டுக் கொண்டிருந்தது.

ஜெயலலிதாவின் கதையை எம்.ஜி.ஆர் முடிக்க நினைத்த நேரம்தான், ஜெயலலிதாவின் கதையை  தமிழக அரசியலில் தொடங்க நினைத்தது விதி. 22-ம் தேதி சிலை திறப்பு விழா முடிந்ததற்கு மறுநாள், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிக மோசமானது. காலையிலேயே அவர் அதை உணரத் தொடங்கி இருந்தார்;

ஆனால், வெளியில் சொல்லவில்லை; சமாளித்துக் கொண்டு இருந்தார்; ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை; மாலை 4 மணிக்கு அவருக்கு வாந்தி ஏற்பட்டது; டாக்டர்கள் வந்து பரிசோதித்துவிட்டு, ஒய்வெடுக்கச் சொன்னார்கள்; ஆனால், இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது,

அதில் இருந்து எம்.ஜி.ஆர் மீளவில்லை; 23-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர் உயிர் பிரிந்தது; 40 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில், 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் அரங்கில், என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் என்ற சகாப்தம் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரையும், எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை ஏதோ ஒருவிதத்தில் சலனப்படுத்தி இருந்தது. அதனால், மொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றுமொரு பெண்… 

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா நிற்கும் படம்

24-ம் தேதி அதிகாலை இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேர்ந்தது. உடனே, கறுப்புச் சேலை அணிந்துகொண்டு தனது காரில், ராமவரம் கிளம்பினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவோடு இன்னொரு பெண்ணும் அந்தக் காரில் அமர்ந்திருந்தார்.

ராமவரம் தோட்டத்தின் கேட்டில், ஜெயலலிதா சென்ற கார் மறிக்கப்பட்டது; உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கறார் காட்டப்பட்டது. அந்த வார்த்தைகளைக் கேட்ட ஜெயலலிதா, வெறிபிடித்ததுபோல் காரில் இருந்து இறங்கினார்.

“என் தலைவர் வீட்டுக்குள் போக என்னைத் தடுக்கிறீர்களா? வழியை விடுங்கள்” என்று கத்தினார் ஜெயலலிதா; அந்தச் சத்தத்தில் தோட்டத்தின் கதவுகள் திறந்தன; ராமவரம் தோட்டத்து வீட்டில், மூன்றாவது மாடியில் எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அதைத் தெரிந்து கொண்டு நேராக ஜெயலலிதா அங்கே போனார். அவருடன் காரில் வந்த அந்தப் பெண்ணும் ஜெயலலிதாவுக்குப் பின்னாலே போனார்.

ஆனால், அங்கு உள்ள பலருக்கு அந்தப் பெண்ணை யார் என்றே அடையாளம் தெரியவில்லை. மூன்றாவது மாடியிலும் ஜெயலலிதாவுக்கு அறைக் கதவுகள் திறக்கவில்லை; மறித்தவர்களிடம் ஜெயலலிதா வாக்கு வாதம் செய்தார்; ஒன்றும் நடக்கவில்லை; அறைக் கதவுகளில் தன் தலையை முட்டினார்; அதற்கும் யாரும் மசியவில்லை.

அதே நேரத்தில், எம்.ஜி.ஆரின் உடல், மற்றொரு வாசல் வழியாக, ‘லிப்ட்’ மூலம் மாடியில் இருந்து இறக்கப்பட்டு, ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது. அதைத் தெரிந்து கொண்ட ஜெயலலிதா வேகமாக கீழே இறங்கி, ஆம்புலன்சில் ஏற முயன்றார். ஆனால், அதற்குள் ஆம்புலன்ஸ் வேகமெடுத்துப் பறந்தது.

ஜெயலலிதா விடவில்லை. தனது காரில், தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு, ஆம்புலன்சைத் துரத்திக் கொண்டே போனார். ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மண்டபத்தின் பின்வாசல் வழியாக கறுப்பு நிற உடையில் ராஜாஜி ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. அவருடைய கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பேறிப் போய் இருந்தன. ஜெயலலிதாவோடு அந்தப் பெண்ணும் வந்தார்.

தன்னுடைய கண்ணசைவில், எம்.ஜி.ஆர் என்ற மாபெரும் பிம்பத்தைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஜெயலலிதாவால், இப்போது அவர் உடல் அருகில் செல்லக்கூட ஏராளமான தடைகள் இருந்தன. அவற்றை உடைத்து,  இறந்துபோன எம்.ஜி.ஆரின் உடல் அருகில் போய் நிற்க, ஜெயலலிதா ஒரு தொடர் போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது.

2 பெண்கள்… 2 ஜோடிக் கண்கள்… வெறித்த பார்வைகள்…

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உடலை, சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா; கண்களில் நீர் தளும்பி நின்றது; ஆனால், வாய்விட்டு அழவில்லை; முகம் இறுக்கம் அடைந்து போய் இருந்தது; எம்.ஜி.ஆரின் தலைக்கு அருகில் சென்று நின்று கொண்டார்;

ஜெயலலிதாவின் கைகள் எம்.ஜி.ஆர் வைக்கப்பட்டு இருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றிக் கொண்டன. ஜெயலலிதாவுக்கு நேர் எதிரில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார். எம்.ஜி.ஆரின் உடலை தன்னுடைய கர்சிப்பால் ஜெயலலிதா அவ்வப்போது துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார்;

அமைச்சர் பொன்னையன் எம்.ஜி.ஆரின் உடலைத் தொட முயன்றபோது, அவரது கைகளை வெடுக்கென்று தள்ளிவிட்டு அவரை முறைத்தார் ஜெயலலிதா; இப்படியே நேரம் ஓடிக் கொண்டிருந்தபோது, ஜெயலலிதாவின் கண்கள், எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன; ஜெயலலிதாவோடு சேர்ந்து எம்.ஜி.ஆரின் உடலைத் துரத்தி வந்த மற்றொரு பெண், ஜெயலலிதாவுக்குப் பின்னால் நின்றார்;

வி.ஐ.பி-கள் வரும் நேரங்களில், அந்தப் பெண் ஜெயலலிதாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்று கொண்டார். அந்தப் பெண்ணின் கண்களும் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. 36 மணிநேரம் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் உடலைவிட்டு நகரவில்லை.

ஜெயலலிதா முதல் நாள் கறுப்புச் சேலையில் / இரண்டாவது நாள் வெள்ளைச் சேலையில் 

அதே 36 மணிநேரம் ஜெயலலிதாவைத் தனியாகவிட்டுவிட்டு அந்தப் பெண்ணும் நகரவில்லை. வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு மட்டும், அங்கிருந்து கிளம்பிய ஜெயலலிதா உடைமாற்றிக் கொண்டு அடுத்த அரை மணிநேரத்தில், ராஜாஜி ஹாலுக்கு வந்துவிட்டார். முதல் நாள் கறுப்புச் சேலையில் இருந்தவர், இரண்டாவது நாள் வெள்ளைச் சேலையில் வந்திருந்தார்.

ஜெயலலிதாவுடன் வந்த பெண்ணும் ஜெயலலிதா கிளம்பியபோது கிளம்பினார். மீண்டும் ஜெயலலிதா வந்தபோது, அவர்கூடவே வந்துவிட்டார். இப்படி பிடிவாதமாக ராஜாஜி ஹாலில் நின்று கொண்டிருந்த ஜெயலலிதாவை, அங்கிருந்தவர்கள், பெரிதாக மதிக்கவில்லை;

ஜெயலலிதாவோடு வந்த அந்தப் பெண்ணை யாருக்கும் அடையாளமே தெரியவில்லை. எம்.ஜி.ஆர் உடலுக்குப் பின்னால் நின்று கொண்டு, எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த அந்த இரண்டு பெண்களின்…… 2 ஜோடிக் கண்களின்… வெறித்த பார்வைக்குள் கனன்று கொண்டிருந்தது, தமிழகத்தின் 30 ஆண்டுகால அரசியல்…

எம்.ஜி.ஆர் உடலுக்குப் பின்னால், மற்றவர்களால் பெரிதாக மதிக்கப்படாமல் நின்று எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்கு நிரந்தரப் பொதுச் செயலாளர் ஆனார்; 6 முறை முதலமைச்சரானார்;

அன்று அதே ராஜாஜி ஹாலில், ஜெயலலிதாவை பெரிதாக கருதாத, ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன், ராஜராம், பொன்னையன், தம்பிதுரை உள்ளிட்டவர்கள், அதன்பின் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டனர்.

எம்.ஜி.ஆர் மறைவில் பின்னால் இருந்த ஜெயலலிதா, அதன்பிறகு வந்த 30 ஆண்டுகளுக்கு அந்தக் கட்சியின் சர்வ சக்தியாக விளங்கினார். எம்.ஜி.ஆர் மறைவில், ஜெயலலிதாவுக்குப் பின்னால் நின்று கொண்டு, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியானர்;

அடுத்துவந்த 30 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவின் பின்னால் இருந்து, எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை அந்தப் பெண் ஆட்டிப்படைத்தார்; ஜெயலலிதாவின் ஆட்சியை அந்தப் பெண்ணே நடத்தினார்; 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முன்னால் வந்து ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s