உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 17

“யார் முதல்வர்?”

மோதிய மூன்று முகங்கள்

அரசியல் என்றால் அப்படித்தான்…

1987 டிசம்பர் 23-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். 24, 25-ம் தேதிகள் என இரண்டு நாட்கள், அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது.

எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட இரண்டே மணிநேரத்தில், நாவலர் நெடுஞ்செழியன், பொறுப்பு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகுதான், எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நாவலர் நெடுஞ்செழியன்,  தற்காலிகமாக, பொறுப்பு முதல்வர்தான்; முழுமையான முதல்வராக அவர் ஆகவில்லை; ஆக்கப்படவில்லை;

“இன்னும் எம்.ஜி.ஆர் அமர்ந்து ஆட்சி நடத்திய முதல்வர் நாற்காலி காலியாகத்தான் இருக்கிறது. அதைக் கைப்பற்றியே தீரவேண்டும்” என்று வெறிபிடித்து அலைந்தவர்கள், ராஜாஜி ஹாலில் சோக முகமூடியோடு வலம் வந்தனர்;

அவர்களின் உடல் தான் ராஜாஜி ஹாலில் சுற்றிக் கொண்டிருந்தது; மனம், முதல்வர் நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தது; அவர்களின் உள்ளம் முழுவதும், அதற்கான உள்ளடி வேலைகளால் நிரம்பித் தளும்பின; அந்தத் தளும்பல் துளிகள், எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி ஹால் முழுவதும் சிதறித் தெறித்தன.

ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்ட டிரக்கில் ஏற முயலும் ஜெயலலிதா

2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்துபோனதும், அன்று இரவே பன்னீர் செல்வம் முதலமைச்சராக்கப்பட்டதை விமர்சிப்பவர்கள் அரசியலின் பாலபடம் தெரியாதவர்கள்;

எம்.ஜி.ஆர் இறந்தபோது நடந்ததை அறியாதவர்கள்; அவர்கள்தான் இன்று நடப்பதை அசிங்கமாகவும் ஆச்சரியமாகவும பார்க்கிறார்கள்; ஆனால், அன்று நடந்ததை அறிந்தவர்களுக்குத் தெரியும்… ‘இன்று நடந்ததும் நடப்பதும் புதிததல்ல’ என்று; அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று…

முதல்வர் நாற்காலியை குறிவைத்த மூன்று முகங்கள்…

எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி ஹாலில், முதல்வர் நாற்காலிக்காக மூன்று முகங்கள் காய் நகர்த்திக் கொண்டிருந்தன. அதில் முதல் முகம் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் உடலுக்கு அருகில் பிடிவாதமாக 36 மணி நேரம் நின்று கொண்டிருந்த ஜெயலலிதாவின் கண்கள் ரத்தச் சிவப்பேறி இருந்தன;

அவர் கைகளில் ரத்தக் கோடுகள் பதிந்திருந்தன; அவை, ஜெயலலிதாவை  எம்.ஜி.ஆர் தலைமாட்டில் இருந்து அப்புறப்படுத்த நினைத்தவர்களால் ஏற்பட்ட நகக் கீறல்கள். உடல்சோர்வு, நகக் கீறல்கள், மனக் காயங்கள், தொடர் அவமானங்கள்…

என அத்தனையையும் தாங்கிக் கொண்டு, கால்கடுக்க நின்று கொண்டிருந்த ஜெயலலிதாவின் ஒரே நோக்கம் ‘முதல்வர் நாற்காலி’; அவருடைய வெறித்த பார்வைகளில், அதற்கான திட்டங்கள்தான் ஓடிக் கொண்டிருந்தன; அந்தத் திட்டம் தோற்றால், தனக்கு நேரிடும் சூன்யமான வீழ்ச்சியும் ஜெயலலிதாவின் வெறித்த பார்வைக்குள் வந்து போய் இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் ஜானகி

எம்.ஜி.ஆர் இருக்கும் மேடையில் இடது ஓரத்தில் ஒதுங்கி நிற்கும் நாவலர் நெடுஞ்செழியன்

முதல்வர் நாற்காலியை குறிவைத்த ‘மிஸ்டர் 2’ நாவலர் நெடுஞ்செழியன்; அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆரோடு அரசியலைப் பரிட்சித்துப் பார்த்த, திராவிட இயக்க முன்னோடி அவர்; எல்லா இடத்திலும் ‘நம்பர் 2’ ஆகவே, இருந்து விரக்தி அடைந்து போய் இருந்தவர்;

எம்.ஜி.ஆர் இறந்த அடுத்த சில மணி நேரத்தில் பொறுப்பு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார்; இப்போதும் அவருக்கு வாய்த்தது இரண்டாம் இடம்தான். ஆனால், இதற்கு முன்பு அவருக்கு வாய்க்காத வகையில், முதல் இடம்… முதல்வர் இடம்… தொட்டுவிடும் தூரத்திலேயே இருந்தது. அதைத் தொட்டே தீரவேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டிருந்தார்.

முதல்வர் நாற்காலியைக் குறிவைத்த மூன்றாவது முகம், ஆர்.எம்.வீரப்பன்; எம்.ஜி.ஆரின் சினிமாப் பயணத்தில் இருந்து, எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து வருபவர்; எம்.ஜி.ஆரின் வலதுகரம்; சமயங்களில் எம்.ஜி.ஆரின் இதயம், மூளை எல்லாம் ஆர்.எம்.வீதான்.

இத்தனை ஆண்டுகாலம் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து வந்தவருக்கு, தற்போது முன்னோடி இல்லை. ஆனால், அவருக்குப் பின்னால், 86 எம்.எல்.ஏ-க்கள் நின்றனர்; அந்தப் பலம் தந்த திடம், ஆர்.எம்.வீ-யையும் ஆட்டிப்பார்த்தது; அவருக்கும் எம்.ஜி.ஆர் நாற்காலியில் அமர ஆசை வந்தது;

அவருக்கு குறுக்கே நிற்கும், ஜெயலலிதா ஒரு பொருட்டே அல்ல; நெடுஞ்செழியனுக்கு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இல்லை. அதனால் அவரை, இரண்டாவது இடத்திலேயே மண்ட வைத்துவிட்டு, முதல்வர் இடத்துக்கு நகர்ந்தே தீரவேண்டும்.

முதல்வர் நாற்காலியை அடைந்தால்தான், எம்.ஜி.ஆரின் நிழலாய் வலம் வந்ததற்கும், 1984-ல் நடைபெற்ற தேர்தலை – எம்.ஜி.ஆரை அமெரிக்காவில் படுக்கவைத்துக் கொண்டே – வென்று காட்டியதற்கும் வரலாற்றில் அர்த்தம் இருக்கும் என்று ஆர்.எம்.வீரப்பனின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது.

ஒதுங்கி நின்ற ஜானகி… அழைத்து வந்த ஆர்.எம்.வீ…

ஜெயலலிதா எம்.ஜி.ஆர் ஜானகி

ராஜாஜி ஹாலில் இருந்து எம்.ஜி.ஆர் உடலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஜானகி

அரசியல், முதல்வர் நாற்காலி என்ற எந்த எண்ணமும் இல்லாமல் ஜானகி அம்மாள் ராமவரம் தோட்டத்தில் முடங்கிக் கிடந்தார். முதல்வர் நாற்காலி அவருக்குத்தான் வாய்த்தது என்பது தனிக்கதை.

‘ஜெயலலிதா பிடிவாதமாக எம்.ஜி.ஆர் தலைமாட்டில் நிற்பதும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ராமவரத்தில் முடங்கிக் கிடப்பதும் எதிர்கால ஆபத்து’ என்று அப்போதே கணித்தார் ஆர்.எம்.வீரப்பன். “எல்லா டி.வியிலும் ஜெயலலிதாவின் முகமே தெரிகிறது… இது நல்லதல்ல…

உடனே, ஜானகி அம்மாளை, ராஜாஜி ஹாலுக்கு அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார். அதன்பிறகுதான் ஜானகி அம்மாள் ராஜாஜி ஹாலுக்கு வந்து எம்.ஜி.ஆர் உடல் அருகில் அமர்ந்தார்; ஜானகி அழுதார்; மயங்கினார்; ஒய்வெடுத்தார்; சமயங்களில் இயல்பாக இருந்தார்.

ஆனால், ஜெயலலிதா அசையவில்லை; உறுதியாக நின்றார்; எதற்கும் குலையாத உறுதி அது; ஜெயலலிதாவின் அந்தப் போக்கு, முதலமைச்சர் நாற்காலியை குறிவைத்தவர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியது; ஜானகியின் குடும்பத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது;

அவர்கள், ஜெயலலிதாவை எப்படியாவது அங்கிருந்து அகற்றிவிடத் துடித்தனர்; அதற்கான நேரம் வாய்த்தது. 25-ம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு, எம்.ஜி.ஆரின் உடல் இறுதி ஊர்வலம் கிளம்பியது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ராணுவ டிரக்கில் எம்.ஜி.ஆர் உடல் ஏற்றப்பட்டது.

அப்போது, அந்த டிரக்கில் ஏறுவதற்கு ஜெயலலிதா   முயன்றார். ராணுவ அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவுக்கு கை கொடுத்து உதவினார். அப்போது அங்கு வந்த ஜானகியின் தம்பி மகன் நடிகர் தீபன், ஜெயலலிதாவை முந்திக் கொண்டு டிரக்கில் ஏறினார்.

ஏறியவர், ஜெயலலிதாவின் நெற்றியில் கைவைத்து அவரைக் கீழே தள்ளினார். ஆனால், டிரக்கின் பிடியை ஜெயலலிதா விடவில்லை. உடனே, தீபனுக்கு ஆதரவாக சற்றுத் தள்ளி நின்ற எம்.எல்.ஏ கே.பி.ராமலிங்கம், தண்டாரம்பட்டு வேலு ஆகியோர் ஓடி வந்து, ஜெயலலிதாவைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள்.

ராணுவ அதிகாரி ஒருவர் ஜெயலலிதா, கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டார். நிலைமை மோசமானது. விபரீதத்தைப் புரிந்து கொண்ட போலீஸ்காரர்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகிவிடும் என்று ஜெயலலிதாவுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

புரிந்துகொண்ட ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் உடல் வைக்கப்பட்டு இருந்த டிரக்கை மூன்று முறை வலம் வந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். சசிகலாவை அழைத்துக் கொண்டு நேராக, போயஸ் தோட்டத்துக்கு வந்த ஜெயலலிதா, தன் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டார்.

பல மணிநேரம் கழித்தும் அவர் வெளியில் வரவில்லை. இரவு 8 மணிக்குமேல் போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்து வந்த ஜெயலலிதா, தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார். நடராஜன், ஜெயலலிதாவின் ஆதரவாளர்களைத் திரட்டும் வேலையில் பிஸியாகிப் போய் இருந்தார்.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s