உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 18

முதல்வரே … பொதுச் செயளாலரே !!!

எம்.ஜி.ஆர் உடல் கிடத்தப்பட்டு இருந்த ராணுவ டிரக்கில் ஜெயலலிதாவுக்கு இடம் மறுக்கப்பட்டது. அவர் கட்டாயமாகக் கீழே தள்ளிவிடப்பட்டார்.

அப்போது, ஜெயலலிதாவிடம், தண்டாரம்பட்டு வேலுவும், கே.பி.ராமலிங்கமும் நடந்த கொண்ட விதம் அருவருப்பானது. ஜெயலலிதாவுக்கு மறக்கமுடியாத மனக்காயத்தை உண்டாக்கியது.

ஜெயலலிதா அவரது வாழ்வில் சந்தித்த, மோசமான… மிக மோசமான தருணங்களில் ஒன்றாக அதுவும் அமைந்தது. ஆனால், ஜெயலலிதா அசரவில்லை.

ஆற்றாமை, கோபம், வெறியோடு தன் வீட்டுக்குப் போனவர்,  தனது அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டார்.

பல மணி நேரங்கள் அந்த அறைக்குள்ளேயே தனித்து இருந்தவர் இருந்தவர், இரவு 8 மணிக்குப் பிறகு பால்கனிக்கு வந்து, வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்களைச் சந்தித்தார்.

அவர்களின் முன் உரையாற்றிய ஜெயலலிதா, “உங்க எல்லோருக்கும் நன்றி! வருங்கால முதல்வர், பொதுச் செயலாளர் அப்டின்னு என்னைச் சொன்னீங்க…. ஆனால், நான் எந்தப் பதவிக்கும் சொத்து சுகத்துக்கும் ஆசைப்படவில்லை. தலைவர் எனக்கு நிறைய கட்டளைகள் இட்டிருக்கிறார்; அதை இப்போது சொல்ல மாட்டேன்; சமயம் வரும்; அப்போது சொல்வேன்; அதுவரை பொறுமையாக இருங்கள்… சந்தப்பவாத அரசியலுக்கு மட்டும் இடம் தராதீங்க…” என்று சொல்லி வணக்கம் வைத்துவிட்டு, மின்னலைப்போல் மறைந்தார்.

ஜெயலலிதா

வெளியில் வந்த உள்பகை!

மறுநாள் மீண்டும் (1987 டிசம்பர் 26) ஜெயலலிதா, தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கையில் அறிக்கை ஒன்று இருந்தது. அதில், தீபன் தன்னைத் தாக்கியதையும், எம்.எல்.ஏ-க்கள் திட்டியதையும், ‘நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் விளக்கமாகக் குறிப்பிட்டு இருந்தார்.

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்கள், அ.தி.மு.க-ன் உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த நேரத்தில், ஜெயலலிதாவுக்கு இதுபோன்ற அசாம்பாவிதங்கள் நடைபெற்று இருந்தால் அது வேறு; எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லாத போது, ஜெயலலிதாவுக்கு அப்படி நடந்தது வேறு.

அதனால், இந்த விவகாரம், தமிழக மக்கள் மனதில், ஜெயலலிதா மேல் ஒரு பரிதாபத்தை உண்டாக்கியது; அ.தி.மு.க தொண்டர்களில் பலரை ஜெயலலிதா பக்கம் திருப்பியது; அ.தி.மு.க என்ற கட்சிக்குள் இருக்கும் உள்பகையை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஆர்.எம்.வீரப்பன்

சசிகலா குடும்பமும்… போயஸ் தோட்டமும்!

எம்.ஜி.ஆர் இறந்ததையடுத்து ஜெயலலிதாவுக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்கள், சசிகலா தவிர்த்து அவருடைய குடும்பத்தையும் போயஸ் தோட்டத்துக்குள் கொண்டு வந்தது. அதற்கு முன்புவரை, சசிகலா மட்டும் அங்கு இருந்தார்;

நடராஜன் அவ்வப்போது வந்து போகிறவராகவும், ஆலோசனைகள் சொல்கிறவராகவும் மட்டுமே இருந்தார். எம்.ஜி.ஆர் இறப்புக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு வலுவான பாதுகாப்பு நிரந்தரமாகத்  தேவைப்பட்டது.

சசிகலாவின் தம்பி திவாகரன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இந்த அடிப்படையில் சசிகலாவின் குடும்பம் மெல்ல மெல்ல போயஸ் தோட்டத்துக்குள் வந்து சேரத் தொடங்கியது.

ஆர்.எம்.வீ, நாவலர் ஆடிய எம்.எல்.ஏ-க்கள் வேட்டை!

இதே நேரத்தில், அ.தி.மு.க-வில் பதவிக்காக கடும் போர் நடந்தது. நாவலர் நெடுஞ்செழியனும் ஆர்.எம்.வீரப்பனும் எதிர் எதிர் அணியாக மாறி, அந்தப் போரை நடத்திக் கொண்டிருந்தனர்.

அ.தி.மு.க என்ற கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தேடித் தேடி வேட்டையாடிக் கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர் இறந்த அன்று இரவே ஆர்.வீரப்பனின் ஆட்கள், கையெழுத்து வேட்டையைத் தொடங்கி இருந்தனர்.

எம்.ஜி.ஆரை அடக்கம் செய்த பிறகு, அதைத் தீவிரப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். இந்த வேகத்தை பார்த்து, ஒரு கட்டத்தில் வீரப்பனே மிரண்டுபோனார். “தலைவர் இறந்த உடனே நாம் இவ்வளவு வேகம் காட்டுவது நல்லதல்ல… சில மாதங்கள் பொறுத்திருந்துவிட்டு, பிறகு ஆட்சியைக் கைப்பற்றலாம்” என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னார்.

ஆனால், ஆர்.எம்.வீ-யின் ஆட்கள், “இந்த வாய்ப்பை நழுவவிட்டால், இதற்குப் பிறகு உங்களுக்கு எதிர்காலம் இல்லை; உங்களுக்கு இல்லையென்றால் எங்களுக்கும் எதிர்காலம் இல்லை..” என்றனர்.

ப.உ.சண்முகம், பொன்னையன், பிலிம் இன்ஸ்டியூட் கெஸ்ட் ஹவுஸ், அசோக ஹோட்டல்களில் ஆர்.எம்.வீ ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கான அறைகள் தயாரானது. வேட்டையாடப்பட்டவர்கள் அங்கு வைத்து பூட்டப்பட்டனர்.

நெடுஞ்செழியன்

இந்தத் தகவல் அறிந்த நாவலர் கொந்தளித்தார். “ஆர்.எம்.வீரப்பனின் கையெழுத்து வேட்டை உடனே நிறுத்தப்பட வேண்டும்” என்றார். ஆர்.எம்.வீரப்பனின் ஆட்கள், “130 எம்.எல்.ஏ-க்களையும் கூட்டுவோம்; யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும்; வெல்பவர்கள் தலைவராகட்டும்…” என்றனர்.

இந்த சாகசத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து, நாவலர் கும்பலுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், 1984-ல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது, ஆர்.எம்.வீரப்பன் இப்படி ஒரு பரிட்சையை நடத்தி வெற்றி பெற்றவர். அதே பரிட்சை இப்போது நடந்தாலும் அவர்தான் வெல்வார்.

அதனால், இதற்கு ஒத்துக் கொள்ளக்கூடாது என்று அவர்கள் நாவலரை வற்புறுத்தினார்கள். நாவலருக்கும் அது புரிந்தே இருந்தது. என்ன செய்யலாம்… என்ன செய்யலாம்… என்று அவர் யோசித்துக் கொண்டே இருந்தார்.

சமரசத் திட்டமும்… தலையில் இறங்கிய இடியும்…

ஆர்.எம்.வீரப்பன், நாவலர், ஜெயலலிதா கோஷ்டிகள் நடத்திக் கொண்டிருந்த பதவிச் சண்டைக்கு இடையில், பழனி பெரியசாமி, மாதவன், ராகவனந்தம் போன்றவர்கள் சமரசத் திலகங்களாக வலம் வந்தனர்.

அவர்கள் மூவரும் ஒவ்வொரு கோஷ்டித் தலைவர்களையும் சந்தித்து சமரசத் திட்டம் ஒன்றைக் கொடுத்தனர். எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவை தொடரட்டும்; நெடுஞ்செழியன் முதலமைச்சராக தொடரட்டும்; ஆர்.எம்.வீரப்பன் உதவி முதலமைச்சராக இருக்கட்டும் என்பதுதான் அவர்களின் சமரசத்திட்டம்.

இதற்கு ஆர்.எம்.வீரப்பன் சம்மதித்தார். நாவலர் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். முதல்நாள் இதற்கு வீரப்பன் ஒத்துக் கொண்டார். நாவலர் அமைதியானார். சமரசத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆர்.எம்.வீரப்பனுக்கு வாழ்த்துச் சொல்ல மறுநாள் சிலர் சென்றனர்.

அவர்களிடம் “நாவலர் முதலமைச்சரா…? நான் துணை முதலமைச்சரா…? இதற்கு நான் எப்போது சம்மதித்தேன்? என்று கேட்டு மீண்டும் குழப்பத்தைத் தொடங்கி வைத்தார். அதோடு, தான் முதலமைச்சராவதற்காக ஆதரவு கேட்டு, ஜானகி அம்மாளைச் சந்திக்க ராமவரம்  தோட்டம் நோக்கிப் புறப்பட்டார். ஆர்.எம்.வீரப்பனின் இந்த குளறுபடியால், மீண்டும் கொதிநிலைக்குப்போனார் நாவலர்.

“ஆர்.எம்.வீரப்பன் ஜானகி அம்மாளிடம் ஆதரவு கேட்கப்போகிறரா? அப்படியானால், நாம் ஜெயலலிதாவிடம் ஆதரவு கேட்போம்…” என்ற முடிவுக்கு வந்தார் நாவலர். உடனே, கிளம்பி ஜெயலலிதாவைச் சந்திக்க போயஸ் தோட்டம் போனார் நாவலர்.

எதிர் எதிர் திசையில் அமைந்த இரண்டு தோட்டங்களைத் தேடிப் போன ஆர்.எம்.வீ, நாவலர் இருவருக்கும் அங்கு பரிசாக பூங்கொத்துக்கள் கிடைக்கவில்லை; மாறாக, பேரதிர்ச்சி அவர்கள் தலையில் இடியைப் போல் இறங்கியது!

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s