உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 19

எதிர்பார்க்காத எதிரிகள்! எதிர்பார்க்காத தாக்குதல்!

நெடுஞ்செழியன்

எம்.ஜி.ஆர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமர அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆர்.எம்.வீரப்பனும், நாவலர் நெடுஞ்செழியனும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து நின்றனர்.

அவர்களுக்குள்தான் போட்டி என்ற நிலை உருவானது; அல்லது உருவாக்கப்பட்டது. அதில் மதி மயங்கிப்போய் இருந்த நாவலரும், ஆர்.எம்.வீரப்பனும் இரண்டு விசயங்களை மறந்து போய் இருந்தனர்.

ஒன்று, ஜெயலலிதாவும் போட்டியில் இருக்கிறார் என்பது. இரண்டு, ஜானகியும் போட்டிக்கு வரலாம் என்பது. இந்த இரண்டு விஷயத்தையும் அவர்கள் கணிக்கத் தவறியதன் விளைவு, எதிர்பார்க்காத நேரத்தில், எதிர்பார்க்காத திசையில் இருந்து, எதிர்பார்க்காத எதிரியாக ஜானகி புறப்பட்டு வந்து கள நிலவரத்தை புரட்டிப் போட்டார்.

மற்றொருபுறம், ஜெயலலிதா விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி இருந்தார். இதேபோல, எம்.ஜி.ஆரின் முதல்வர் நாற்காலிக்குச் சண்டை போட்டுக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனும், நெடுஞ்செழியனும், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் நாற்காலியை பிறகு பிடித்துக் கொள்ளலாம் என்று அசட்டுத் தைரியத்தில் இருந்தனர்.

ஆனால், ஜானகியும் ஜெயலலிதாவும் இவர்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக, களத்தில் சுழன்றனர். பொதுச் செயலாளர் நாற்காலியையும் குறிவைத்துச் சண்டை போட்டனர். ஜானகிக்காக அவருடைய ‘கிச்சன் கேபினட்’ வேலை பார்த்தது. ஜெயலலிதாவுக்காக, ‘சசிகலா-நடராஜன் அன் கோ’ வேலை பார்த்தது.

நானே முதல்வர்… வீரப்பனுக்கு ஜானகி கொடுத்த ‘ஷாக்!’

“86 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. ஜானகி அம்மாள் ஆதரவும் இருந்தால், நாம் முதலமைச்சர் ஆவதை யாரும் தடுக்க முடியாது” என்று நினைத்த ஆர்.எம்.வீரப்பன் அதற்காக ராமவரம் தோட்டத்துக்கு போனார்.

வீரப்பன் அங்கு போவதற்கு முன்பே, ஜானகி அம்மாளைச் சுற்றி இருக்கும் ‘கிச்சன் கேபினட்’, “நீங்களே முதலமைச்சர் ஆக வேண்டும்” என்று அவரை வற்புறுத்தி மனதைக் கரைத்து இருந்தது. அவர்களோடு அமைச்சர் முத்துச் சாமியும் சேர்ந்து கொண்டு செயல்பட்டார்.

ஜானகி சம்மதம் தெரிவித்ததும், ஜானகியின் சம்மதத்தைச் சொல்லி கட்சிக்காரர்களின் ஆதரவைத் திரட்ட களம் இறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருந்தார் அமைச்சர் முத்துச்சாமி. இந்த விபரம் எதுவும் தெரியாமல், ஆர்.எம்.வீரப்பன் ராமவரம் தோட்டத்துக்குச் சென்று, ஜானகி அம்மாளிடமே ஆதரவு கேட்டார்.

அவரிடம், “நானே முதலமைச்சர் ஆகலாம் என்று நினைக்கிறேன்” என்று ஜானகி அம்மாள் சொன்னபோது, ஆர்.எம்.வீரப்பனுக்கு தொண்டை வறண்டது; நெஞ்சு அடைத்தது; கண்கள் இருட்டியது; தன் கனவு தன் கண் முன்னாலே உடைந்து நொறுங்கியதை அவர் உணர்ந்தார்; நிதானத்துக்கு வர நீண்ட நேரம் ஆனது.

ஆனால், ஜானகி சொன்னதைத் தவிர ஏற்பதைத் தவிர ஆர்.எம்.வீரப்பனுக்கு வேறு வழியே இல்லை!

நானே பொதுச்செயலாளர்… நாவலருக்கு ஜெயலலிதா கொடுத்த ‘ஷாக்’

ஜெயலலிதா, நாவலர் நெடுஞ்செழியன்

வீரப்பன் பின்னால் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதா பின்னால் கட்சித் தொண்டர்கள் இருக்கிறார்கள். வீரப்பனை எதிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதாவின் ஆதரவு தேவை என்ற முடிவுக்கு வந்த நாவலர், போயஸ் கார்டனுக்குப் போனார்.

“உங்களுக்கு கட்சியில் அதிக இடைஞ்சல் கொடுத்தவர் வீரப்பன். அவர் முதலமைச்சராகிவிட்டால் உங்களுக்கு மேலும் சிக்கல்தான். அதனால், என்னை ஆதரியுங்கள்” என்று நாவலர் ஜெயலலிதாவிடம் கேட்டார்.

ஜானகிக்காக அவருடைய கிச்சன் கேபினட் வேலை பார்த்ததுபோல், ஜெயலலிதாவுக்காக, திருநாவுக்கரசு, சேலம் கண்ணன், பண்ரூட்டி ராமச்சந்திரன் ஆகியோர் வேலை பார்த்தனர். ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்களை ஒன்றிணைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் எப்படித்தான் திரட்டிப் பார்த்தாலும், 33 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை.

ஆனால், மாவட்டச் செயலாளர்கள் கணிசமாக ஜெயலலிதாவை ஆதரித்தனர். இதைவைத்துக் கணக்குப்போட்ட நடராஜன், “எம்.எல்.ஏ-க்களை ஒன்றிணைப்பது முக்கியம்தான். ஆனால், எம்.எல்.ஏ-க்கள் மட்டும் எதிர்காலம் அல்ல; கட்சியைக் கைப்பற்ற வேண்டும்.

அதுதான் ஜெயலலிதாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதற்கு, இதைவிட விட சிறப்பான தருணம் ஒன்று வாய்க்காது. கட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால், ஜெயலலிதா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆக வேண்டும்” என்ற தனது திட்டத்தை ஜெயலலிதாவின் மனதில் ஆழமாகப் பதியம் போட்டிருந்தார்.

அதே திட்டத்தைத்தான் இன்று சசிகலா விஷயத்திலும் நடராஜன் நடைமுறைப்படுத்தி உள்ளார். ஜெயலலிதாவுக்கும் நடராஜனின் திட்டம் தெளிவாகப் புரிந்தே இருந்தது.

தன்னிடம் ஆதரவு கேட்டு வந்த நாவலர் நெடுஞ்செழியனிடம், “தன்னைக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்க ஒத்துக் கொண்டால், தன்னுடைய ஆதரவைத் தருகிறேன்” என்று சொன்னார்.

ராமவரம் தோட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் எப்படி உணர்ந்தாரோ… அப்படித்தான் போயஸ் தோட்டத்தில் நாவலரும் உணர்ந்தார். ஜெயலலிதா சொன்னதை ஏற்பதைத்தவிர நாவலருக்கும் வேறு வழியே இல்லை!

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s