உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 20

ஜானகி முதல்வர் !  ஜெயலலிதா செயலாளர் !!

ராமவரத்தில் அறிவித்தார் ஜானகி!

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் அமைந்த ஆட்சிக்கு, ‘முதலமைச்சராக நானே பொறுப்பு ஏற்கிறேன்’ என்றார் ஜானகி; ஜானகி சொன்னதை முத்துச்சாமி முன்மொழிந்தார்; ஆர்.எம்.வீரப்பன் வேறு வழியே இல்லாமல் அதை வழிமொழிந்தார்.

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா வர வேண்டும் என்றார் நடராஜன்; ஜெயலலிதாவும் அதையே முன்மொழிந்தார்; நாவலர் நெடுஞ்செழியன் வேறு வழியே இல்லாமல் அதை வழிமொழிந்தார்.

அதுவரை பனிப்போர் மட்டுமே நிகழ்த்தி வந்த ஜா. அணியும், ஜெ. அணியும் நேருக்கு நேர் நின்று போர் செய்யப் புறப்பட்டன.

ஜானகி

ஜானகி முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்கு, பெரும்பகுதி எம்.எல்.ஏ-க்களை தாரை வார்த்துக் கொடுக்கப்போவது நாம்தான். அதனால், ஆட்சி அதிகாரம் நம் வகுத்துக் கொடுக்கும் கோட்டில்தான் சூழலும் என்பது ஆர்.எம்.வீ-யின் நம்பிக்கையாக இருந்தது.

அதுபோல, எம்.எல்.ஏ-க்கள் ஆதரவும் இல்லாமல், மாவட்டச் செயலாளர்களின் தயவும் இல்லாமல், தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கும் இல்லாமல், ஆர்.எம்.வீரப்பனை எதிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதாவோடு இணக்கமாகப் போனால்தான் முடியும் என்று நினைத்தார் நாவலர் நெடுஞ்செழியன்.

இதுபோன்ற காரணங்களால், ஆர்.எம்.வீரப்பனும், நாவலர் நெடுஞ்செழியனும் ஜானகி, ஜெயலலிதா தலைமைகளை ஒத்துக் கொண்டனர். இப்போது ஜெயலலிதாவின் வசம் 40 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர்; ஜானகியின் வசம் 97 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். தமிழக கவர்னர் குரானா சம்மதித்தால் இருவரில் ஒருவரை ஆட்சியமைக்க அழைக்கலாம்.

அதைக் கணக்குப்போட்டு, சென்னையில் களேபரங்கள் தொடங்கின. 1987 டிசம்பர் 31-ம் தேதி, ராமவரம் தோட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டினார் ஜானகி. சந்திப்பு நடப்பதற்கு முன்பே, ப.உ.சண்முகம், “அம்மா மனம் நொந்துபோய் இருக்கிறார்; அதனால், அவரிடம் தேவையில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்” என்று பத்திரிகையாளர்களுக்கு கட்டளை இட்டார்.

ஜானகியை நாற்காலியில் உட்கார வைத்து தூக்கிவந்தனர். பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜானகி, “முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்” என்று சொல்லி முடித்துக் கொண்டார். அதன்பிறகு, ஜானகி பெயரில் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையை அமைச்சர் ப.உ.சண்முகம் வாசித்தார். ஆர்.எம்.வீரப்பனும் அவரது ஆதரவாளர்களும் பரபரப்பாக சுற்றி வந்தனர். அதன்பிறகு, காட்சிகள் பரபரப்பாயின.

லாயிட்ஸ் சாலையில் அறிவித்தார் ஜெயலலிதா!

மற்றொரு புறம், சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம். நடராஜன், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு ஆகியோர் முயற்சியால், ஜெயலலிதா ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. அ.தி.மு.க என்ற கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்று தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்தனர்.

நாவலர், ஜெயலலிதா

லாயிட்ஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த முடிவு அறிவிக்கப்பட்டபோது, ‘ஜெயலலிதா வாழ்க’ என்ற கோஷம் லாயிட்ஸ் சாலையை அதிரவைத்தது.

அந்த நேரத்தில், அதே அலுவலகத்தில் பக்கத்து அறையில் அமர்ந்திருந்த எதிர்கோஷ்டியான மாதவன், ராகவானந்தம், ஹண்டே, காளிமுத்து ஆகியோர் இந்த அதிர்வின் எரிச்சல் தாங்காமல், தங்கள் இருந்த அறையின் கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டனர்.

உடனடியாகக் கட்சித் தொண்டர்கள் நிறைந்த பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவதாக ஜெயலலிதா அறிவித்தார். அந்தக் கூட்டத்தில், “தான் அரசியலைவிட்டு விலக எண்ணியபோது, அதை தடுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்…

அப்போது அவர், என் அன்னை சந்தியா படத்தின் மீது அவர் சத்தியம் வாங்கி, இனிமேல் அரசியலைவிட்டுப் போகக்கூடாது என்று எனக்குக் கட்டளையிட்டார். அதனால்தான், நான் அரசியலில் நீடிக்கிறேன்… ஜானகியை முதலமைச்சராகவிடக்கூடாது.; நாவலர் முதலமைச்சராக வேண்டும்; எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவை தொடர வேண்டும்” என்று அப்போது தன் ஆதரவாளர்களுக்கு முன்னால் பேசினார் ஜெயலலிதா.

டெல்லி தர்பாரில் ஜா. அணி-ஜெ. அணி!

ஜானகி

ஜெயலலிதாவின் விஸ்வரூபத்தைப் பார்த்த ஜானகி அணியினர், வேகவேகமாக முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றும் வேலைகளில் இறங்கினர். அதைத் தெரிந்து கொண்ட நடராஜன், ஜெயலலிதாவுக்கும் கட்சிக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டால் தனிக்கட்சி ஆரம்பித்து, அதையே உண்மையான அ.தி.மு.க என்று அறிவித்து, இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

அதோடு, “ஜானகி அ.தி.மு.க உறுப்பினரே அல்ல; அவர் முதலமைச்சர் ஆகக்கூடாது” என்று ஒரு வழக்கறிஞரை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட வைத்தார் நடராஜன்.

நடராஜனையும் ஜெயலலிதாவையும் நன்றாக அறிந்து வைத்திருந்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் பெயர் வருவதுபோல எட்டு விதமான கட்சிப் பெயர்களை உருவாக்கி, அவற்றை முன்கூட்டியே பதிவு செய்தும் வைத்தார்.

ஜானகி தரப்பு மத்திய அரசின் உதவியைப் பெற டெல்லிக்குப் பறந்தது; அதற்கு முட்டுக்கட்டைபோட ஜெயலலிதா தரப்பும் டெல்லிக்குப் பறந்தது. ஜெயலலிதா சார்பில் எம்.பி குழந்தைவேலு போனார்; ஜானகி தரப்பில், தம்பித்துரை அங்கிருந்து பல வேலைகளைப் பார்த்தார்.

இரண்டு கோஷ்டிகளும் டெல்லியின் ஆதரவு தங்களுக்குத்தான் என்று மார்தட்டிக் கொண்டன. டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி ஜெயலலிதாவை ஆதரிக்க நினைத்தார்.

ஆனால், ஜனாதிபதி வெங்கட்ராமனும், தமிழக ஆளுநர் குரானாவும் ஜானகி அம்மாள்தான் வரவேண்டும் என்று நினைத்தனர். அதிலும் கவர்னர் குரானா, ஜானகி அம்மாளின் அதிகாரப்பூர்வ ஸ்போக்ஸ்பெர்சனாகவே மாறிப் போய் இருந்தார்.

இவர்களோடு, ஆரம்பத்தில், தமிழக இ.காங்கிரஸ் தலைவரான மூப்பனாரும் ஜானகியைத்தான் ஆதரித்தார். கவர்னர் குரானா ஜானகியை முதலமைச்சராக்குவதில் மிகமிக வேகமாகச் செயல்பட்டார்.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s