உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 21

கிச்சன் கேபினட் vs போயஸ் கேபினட்!

ராமவரம் தோட்டத்தில் அமர்ந்து, ‘கிச்சன் கேபினட்’ அரசியல் நடத்திக் கொண்டிருந்த ஜானகியும், போயஸ் தோட்டத்தில் இருந்து ‘குழப்ப அரசியல்’ நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதாவும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தார்கள்.

எம்.ஜி.ஆர் இறந்த அன்று, ராமவரம் தோட்டத்தில் வைத்து அவருடைய உடலுக்கு ‘டிரெஸ்ஸிங்’ நடந்தபோது, ஜெயலலிதா அங்கு நுழைய முயன்று பிரச்னை செய்தார். அந்த நேரத்தில் ஆத்திரத்தில் கொந்தளித்த ஜானகி, “இன்னும் 10 நாட்களில் ஜெயலலிதாவை தமிழகத்தைவிட்டே துரத்துவேன்” என்று சூளுரைத்தார்.

ஜானகி, ஜெயலலிதா

ஜானகி நேரடி அரசியலில் குதித்ததற்கு அந்தச் சூளுரையும் முக்கியமானதொரு காரணம். ‘ஜானகி தனது அந்தரங்க எதிரி மட்டுமே’ என்று அதுவரை நினைத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு, அவருடைய நேரடிய அரசியல் பிரவேசம் பேரதிர்ச்சியாக அமைந்தது. ஜானகியை தன் அரசியல் எதிரியாக ஜெயலலிதா கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை.

ஆனால், நிஜத்தில் நடந்தபோது, தன்னால் வீழ்த்தப்பட வேண்டியவர்களின் பட்டியலில், ஜானகியை முதல் இடத்துக்கு கொண்டு வந்தார் ஜெயலலிதா.

அது, எம்.ஜி.ஆர் என்ற புனித பிம்பத்தின் மனைவியான ஜானகிக்கும், திரைவாழ்வில் அவருக்கு விருப்பமான கதாநாயகியாகத் திகழ்ந்த ஜெயலலிதாவுக்கும் இடையிலான அரசியல் போரை உக்கிரப்படுத்தியது.

ஜானகி ராமச்சந்திரன் என்னும் நான்…

ஜானகி, கவர்னர் குரானா

டெல்லியில் ஜானகியை முதலமைச்சராக்க ஆதரவு திரட்டும் வேலையில் அ.தி.மு.க-வினரைவிட, அன்றைய தமிழக கவர்னர் குரானா விறுவிறுப்பாக செயல்பட்டார்.

அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனை சம்மதிக்க வைத்தார். ஜனாதிபதியின் சம்மதத்தை வைத்து பிரதமர் ராஜீவ் காந்தியை சரிக்கட்டினார். அவர்கள் மனம் மாறுவதற்குள், அவரச அவரசமாக ஜானகியை அழைத்துப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

1987 ஜனவரி 7-ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், “ஜானகி ராமச்சந்திரனாகிய நான்…” என்று உறுதிமொழி ஏற்று தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ஆனார் ஜானகி அம்மாள்.

முதலமைச்சர் ஆகிவிட்ட ஜானகியின் முன், இரண்டு  சவால்கள் இமயம் போல் வளர்ந்து நின்றன. ஒன்று, சட்டமன்றத்தில் தன் தலைமையில் அமைந்த அரசாங்கத்துக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.

இரண்டாவது, தமிழகத்தின் ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டு சவால்களிலும் ஜானகியை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பது ஜெயலலிதாவுக்கான சவால்.

அதில் ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்ய, நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் பாடுபட்டனர்.

அவர்களுக்குத் தளபதியாக இருந்து வழிநடத்திக் கொண்டிருந்தார் சசிகலாவின் கணவர் நடராஜன். அப்போது நடராஜன் ஆற்றிய பங்களிப்பு ஜெயலலிதாவை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் ஏணியில் ஏற்றிக் கொண்டே போனது.

ஜா.- ஜெ. முதல் நேரடி மோதல்!

ஜெயலலிதா

அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகம், ஜானகி-ஜெயலலிதாவின் முதல் நேரடி மோதலுக்கான களமாக அமைந்தது.

1987 ஜனவரி 13-ம் தேதி ஜானகி – ஜெயலலிதா இரு கோஷ்டியினரும் தங்களது செயற்குழு கூட்டத்தைத் தலைமைக்கழகத்தில் நடத்துவதாக அறிவித்தனர். தமிழக அரசியல்களம் கொதிக்கத் தொடங்கியது.

இந்த ரணகளத்தில் களமிறங்க போலீஸ் தடுமாறியது. ஏதேனும் விபரீதம் நடந்தால் அது தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்கிற பயம் அவர்களுக்கு! தமிழக ஆளும் கட்சியில் நடக்கும் இந்தக் கோஷ்டிப் பூசல் போலீஸுக்கே புது அனுபவமாக இருந்தது.

இரண்டு கோஷ்டிகளிடமும் வேறு வேறு நாளில் கூட்டத்தை  நடத்திக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தது போலீஸ். ஜானகி அணியில் வீரப்பனும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் செயற்குழு கூட்டத்தை ரத்து செய்ய விடாப்பிடியாக மறுத்தனர்!

ஜெயலலிதா அணி என்ன சொல்லி இருக்கும் என்பதை நாம் இங்கே சொல்லவே தேவையில்லை.  ஆனால், இடையில்  நடந்த ஒரு திருப்பத்தால், போலீஸ் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டது.

ஆம், டெல்லியின் நேசக்கரம் தேடிப் போன முதல்வர் ஜானகி என்ன நினைத்தாரோ, தனது கிச்சன் காபினெட் மூலம் தங்கள் செயற்குழு கூட்டத்தை ரத்து செய்ய டெல்லியில் இருந்தே உத்தரவு போட்டார். கூடவே தலைமைக்கழகத்தைப் பூட்டி சாவியை எடுத்து வந்துவிடுங்கள் என்றும் உத்தரவிட்டார்.

ஜெயலலிதா செயற்குழுவை நடத்தியே தீருவது என்ற உறுதியில் இருந்தார். 13-ம் தேதி காலை ஒன்பது மணியிலிருந்தே அவ்வை சண்முகம் சாலையை போலீஸ் வளைத்து ஆக்கிரமித்துக் கொண்டது.

போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டது. தெருவின் இரண்டு புறங்களிலும் திரண்ட தொண்டர்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பத்து மணிக்கு ஜெயலலிதாவின் கார் முன் செல்ல, வி.ஐ.பி.-க்களின் கார் தொடர்ந்து வந்து தலைமைக்கழகத்துக்கு சுமார் ஐம்பதடிக்கு முன்னாலே நின்றது.

ஜெயலலிதா முன் செல்ல, மற்றவர்கள் அ.தி.மு.க அலலுவலகத்தை நோக்கிச் சில அடிகள் நடந்தவுடனேயே போலீஸ் அவர்களைத்  தடுத்து நிறுத்தியது.

ஜெயலலிதா மீது நடந்த லத்திசார்ஜ்!

நாவலர் நெடுஞ்செழியன், ஜெயலலிதா, திருநாவுக்கரசு

“நாங்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள். எங்கள் கட்சி அலுவலகத்துக்குப் போக எங்களை யாரும் தடுக்க முடியாது” என்று குரலை உயர்த்தினார் ஜெயலலிதா; ஆனால், போலீஸ் அதற்குப் பணியவில்லை.

“உங்கள் தடையை மீறுகிறோம்… எங்களைக் கைது செய்யுங்கள்” என்று சொல்லிப் பார்த்தார். “கைது செய்யவும் உத்தரவில்லை” என்றார் அன்றைய துணை கமிஷனர் சியாம் சுந்தர்.

ஜெயலலிதா போலீஸைத் தள்ளிக்கொண்டு முன்னேறினார். முன்னாள் அமைச்சர்களும், ஆதரவாளர்களும் ஜெயலலிதாவைப் பின் தொடர்ந்தனர். ‘யாரையும் கைது செய்யக்கூடாது… கூட்டத்தை அடித்துக் கலையுங்கள்’ என்று அங்கேயிருந்த போலீஸ் ஜீப்பில் இருந்த  மைக் அலறியது. அவ்வளவுதான்… போலீஸ் லத்திகள் காற்றில் சுழலத் தொடங்கின. ஜெயலலிதா மீது ஒரு அடி விழுந்தது!

அடுத்த அடி விழும் முன் உதவியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். மற்றொரு லத்தி பண்ருட்டி ராமச்சந்திரனின் இடது கால் தொடையைப் பதம் பார்த்தது. அது தாங்காமல் அவர் மயங்கிச் சரிந்தார்.

நெடிய உருவம் கொண்ட நாவலரின் தோள்பட்டையை ஒரு லத்தி தாக்கியது. அவருக்கு கண்கள் இருண்டன. தன் உருவத்தைப்போலவே நெடிய அரசியல் வாழ்வை உடைய நாவலர் வாங்கிய முதல் முதல் போலீஸ் அடி அதுவே!

குழந்தைவேலு எம்.பி-யின் வேட்டி பறிபோயிற்று! தோளில் இருந்த துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு ஓடினார்.

அடிவாங்கிய ஜெயலலிதாவும் முன்னாள் அமைச்சர்களும் அப்படியும் தலைமைக்கழகக் கட்டடத்தை நோக்கியே பாய்ந்தார்கள். பத்து நிமிடத்துக்குள் வி.ஐ.பி.-க்கள் ஒருபுறமும், தொண்டர்கள் மற்றொருபுறமும் சிதறிக் கிடந்தனர்.

முன்னோக்கி நடந்த ஜெயலலிதா தலைமைக்கழகத்தின் இரும்புக் கேட்டுக்கு, இரண்டு அடி முன்னால் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மறியல் ஆரம்பித்த ஜெயலலிதா, அங்கிருந்த கூட்டத்தினரிடம் பேசுவது போல் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.

நேரம் ஓடிற்று, உட்கார்ந்துவிட்ட தலைவர்களிடம் கலைந்து போகுமாறு சமாதானத் தூது அனுப்பினர் போலீஸ் அதிகாரிகள்; தலைவர்கள் மறுத்தனர்.

பிறகு, “உங்களை எல்லாம் கைது செய்கிறோம்” என்று கூறி, அங்கே காத்திருந்த பல்லவன் பஸ்ஸில் ஏறச் சொன்னார்கள். மறுத்துவிட்டார் ஜெயலலிதா. “போலீஸ் வேனில் ஏற்றுவதாக இருந்தால் வருகிறேன்… பஸ்ஸில் வர முடியாது” என்றார்.

ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கை உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. எங்கிருந்து என்ன உத்தரவு வந்ததோ… ஜெயலலிதா கேட்டபடி, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். தொண்டர்கள் மூன்று பல்லவன் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். போலீஸ் வேனும் பேருந்தும் அங்கிருந்து சீறிக் கிளம்பின.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s