உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 23

ஜானகி தூது!  கருணாநிதி மறுப்பு!!

 

திருநாவுக்கரசு, நடராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்

‘முதலமைச்சர்’ என்ற அதிகார நாற்காலியில் எதிர்பாராதவிதமாக அமர்ந்துவிட்ட ஜானகி, அதை தக்கவைத்துக் கொள்ளும் படபடப்பில் முட்டி மோதிக் கொண்டிருந்தார்.

முதலமைச்சர் என்ற அதிகார நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜெயலலிதா, அதை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆவேசத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.

ஜானகியின் போராட்டத்துக்குத் மூன்று பேர் நன்னம்பிக்கை முனைகளாக இருந்தனர். ஜெயலலிதாவின் போராட்டத்துக்கு மூன்றுபேர் மூளையாகத் திகழ்ந்தனர். இவர்கள் உருட்டிய பகடையில் தமிழக அரசியல் பரமபதம் ரணகளமாகக் காட்சியளித்தது.

ஜா. அணியின் அதிரடி ஆட்டம்! 

ஜானகி

முதலமைச்சர் ஜானகி, “தனது ஆட்சியை ஆதரிப்பவர்களுக்கு எதையும் தரத் தயார்… டெல்லியில் யார் காலிலும் விழத் தயார்…. ராமாவரம் தோட்டத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண மூட்டைகளை எவ்வளவு வேண்டுமானாலும் அவிழ்க்கத் தயார்”என்று எதற்கும் தயார் நிலையில் இருந்தார்.

ஜா. அணியின் சலுகை பேரங்களுக்கு அடிபணியாத எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல்கள் விலையாக வைக்கப்பட்டன.

அன்றைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனை கைக்குள் வைத்திருந்த ஜா. அணி, “தங்களை ஆதரிக்கவில்லை என்றால் ‘கட்சி மாறி’ என்று பட்டம் சூட்டி எம்.எல்.ஏ பதவியை பறித்துவிடுவோம்” என்று ஜெ. அணி எம்.எல்.ஏ-க்களை மிரட்டிப் பார்த்தது; அதற்கு மசியாதவர்களை வழிக்குக் கொண்டுவர, போலீஸ் பட்டாளம் ஏவிவிடப்பட்டது.

அதற்கும் பணியாத எம்.எல்.ஏ-க்களின் மனைவிமார்களுக்கு பணக்கட்டுக்களைக் காட்டி மனமாற்றம் செய்யப்பட்டது. இவை அனைத்தையும் தாண்டிய சக்தி வாய்ந்த அஸ்திரமாக மீண்டும் ஒரு சமரசத் திட்டம் உருவாக்கப்பட்டது.

அதில், “நாவலர் நெடுஞ்செழியனுக்கு துணை முதலமைச்சர் பதவி; மற்றவர்களுக்கு அமைச்சரவையில் இடம் உறுதி” என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அதேநேரத்தில், “ஜெயலலிதாவைவிட்டு நிரந்தரமாக ஒதுங்க வேண்டும்; ஜெயலலிதாவை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும்” என்று ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இந்த சமரசத் திட்டத்தை எடுத்துக் கொண்டு வீடு வீடாகப் போனவர் ஜானகியின் சகோதரர் நாராயணன் என்ற மணி.  நாவலரிடமும் பண்ரூட்டி ராமச்சந்திரனிடம் போய் இதைச் சொன்னபோது, அவர்கள் மரியாதையாகவே நாரயணனைத் துரத்தி அடித்தனர். 

ஜானகி தூது! கருணாநிதி மறுப்பு!  

அன்பழகன், கருணாநிதி

கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலர் ஆரம்பத்தில் எந்தப் பக்கமும் சாயாமல், நடுநிலை மாயையில் சிக்கி இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் முன்னாள் சபாநாயகர் க.ராஜராம்.

இந்தியாவில் அப்போது இருந்த சமாஸ்தானத்து மன்னர்கள், திவான்கள், பகதூர்கள், டெல்லி அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்று பெரிய இடங்களில் செல்வாக்குப் பெற்றவர்.

அவரும் ஜா. அணியா? ஜெ.அணியா? என்ற குழம்பிய நிலையில்தான் இருந்தார். அந்த நேரத்தில், ஹைதராபாத் சென்றிருந்த ராஜராமை, அங்கு முகாமிட்டு இருந்த ஜனாதிபதி வெங்கட்ராமன் சந்திக்க வரச் சொன்னார்.

சந்திக்கப்போன ராஜாராமிடம், “நான் ஜானகி ஆட்சியைத்தான் தமிழகத்தில் நிலை நிறுத்தப்போகிறேன்… அதனால் அவரைப் போய் ஆதரியுங்கள்” என்று அன்புக் கட்டளையிட்டார்.

ராஜாராமால் அதைத் தட்டமுடியவில்லை. எம்.ஜி.ஆர் இருந்தபோது அவரிடம் பேசி அமைச்சரவையில் ராஜாராமை சேர்க்க வைத்தவர் ஜனாதிபதி வெங்கட்ராமன்தான். அந்த நன்றிக்கடன் ராஜாராமை ஜா. அணியை ஆதரிக்க வைத்தது. ராஜாராம் லேசுப்பட்ட ஆள் இல்லை.

அவர் இன்னொரு வீரப்பனுக்குச் சமம். விறுவிறுவென வேலைகளை முடுக்கிவிட்டார். உச்சபட்சமாக, அ.தி.மு.க ஆட்சி நீடிக்க, கருணாநிதியிடமே ஆதரவு கேட்டார் ராஜாராம்.

“கருணாநிதியையும் பேராசிரியர் அன்பழகனையும் சந்தித்து ஜானகியின் ஆட்சி நீடிக்க ஆதரவு தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். ராஜராம் சொல்வதைக் கேட்ட கருணாநிதி ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.

ஆனால் கருணாநிதிக்குப் பக்கத்தில் இருந்த க.அன்பழகன், “எங்களால் இதற்கெல்லாம் ஆதரவு தர முடியாது” என்று பட்டென்று சொன்னார். ஆனாலும், ராஜாராம், ஆர்.எம்.வீரப்பனின் முயற்சியால், இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் நடிகர் சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும், தங்கபாலு ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் விலைபேசி வளைக்க முடிந்தது.

இவற்றை எல்லாம் தாண்டி ஜானகி அணிக்கு, ஜனாதிபதி வெங்கட்ராமன், கவர்னர் குரானா, சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் ஆகியோர் வலுவான நன்னம்பிக்கை முனைகளாக இருந்து ஆதரவு கொடுத்தனர். 

சிறைவைக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்!

ஜா.அணியின் ஆட்டங்களைப் பார்த்து ஜெயலலிதா ஆடி கொஞ்சம் ஆடிப்போனது உண்மைதான். ஆனால், அசந்துவிடவில்லை. வாழ்வா? சாவா? போராட்டத்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடு இறங்கி வேலை பார்த்தனர்.

அந்த அணியில் பலர் இருந்தாலும், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, நடராஜன் ஆகியோர் மூன்று மூளைகளாக இருந்து யோசித்துக் காய் நகர்த்தினார்கள்.

ஜானகி அணியின் அதிரடியில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விலைபோவதைத்தடுக்க அவர்களை வட இந்தியச் சுற்றுலாவுக்கு அனுப்பினார்கள்.

சட்டசபை தொடங்கும் நாள் நெருங்க ஆரம்பித்ததும், வட இந்தியாவில் இருந்த எம்.எல்.ஏ-க்களை மீண்டும் தமிழகத்துக்கே அழைத்து வந்தனர். கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் அவர்களை ஒப்படைத்து பத்திரமாக வைக்கும் பொறுப்பைக் கொடுத்தனர்.

ஜெயலலிதா

அவர், விருதுநகரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பஞ்சுமில் ஒன்றில் ஜெ.அணி எம்.எல்.ஏ-க்களை பதுக்கி வைத்தார். பஞ்சுமில்லில் தற்காலிக அறைகள் தயார் செய்யப்பட்டு அங்கு சகல வசதிகளும் செய்யப்பட்டன.

எம்.எல்.ஏ.-க்கள் ஆனந்தன். பஞ்சவர்ணம், பாலகிருஷ்ணன், லட்சுமி,சேடப்பட்டி முத்தையா, தாராபுரம் பெரியசாமி, உப்பிலியாபுரம் சரோஜா, வெள்ளைக்கோயில் துரை ராமசாமி. பொள்ளாச்சி ரத்தினம், குத்தாலம் பாப்பா சுப்ரமணியன், உத்திரமேரூர் நரசிம்மபல்லவன், சேலம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் துரை அன்பரசன், திண்டுக்கல் பிரேம்குமார், சீர்காழி பாலகிருஷ்ணன், பள்ளிப்பட்டு நரசிம்மன், பெரியகுளம் சலீம், சங்ககிரி தனபால், குறிஞ்சிப்பாடி தங்கராஜ், குளத்தூர், நாச்சிமுத்து, கடையநல்லூர் பெருமாள், கோபிசெட்டிப்பாளையம் செங்கோடன், பவானிசாகர் சின்னச்சாமி, கண்டமங்கலம் சுப்பிரமணியம் ஆகியோர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் பாதுகாப்பில் பத்திரமாக இருந்தனர்.

ஆட்களை அடைத்து வைத்து காவல் காக்கும் வேலை மட்டும்தான் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு. ஆனால், அவருடைய செயல்பாடுகளுக்கான உத்தரவுகள் எல்லாம், போயஸ் கார்டனில் இருந்து வந்தன. பெரும்பாலும் அந்த உத்தரவுகளைப் பிறப்பித்தவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரனும், நடராஜனும்தான். 

இவ்வளவு தகிடுதத்தங்களுக்குப் பிறகு தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த சட்டசபை கூடியது. அங்கு நடத்தப்பட வேண்டிய நாடகத்துக்கான ஒத்திகைகள் ஏற்கனவே பலமுறை பார்க்கப்பட்டதால், வெற்றிகரமாக அது சட்டமன்றத்தில் அரங்கேற்றப்பட்டது. ஜானகியின் நாற்காலி ஆட்டம் காணத் தொடங்கியது. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s