உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 24

சண்டைக்களமான சட்டமன்றம்

ஜா.- ஜெ. அணிகள் அரங்கேற்றிய நாடகம்!

ஜா. அணியின் தளபதிகளாக ஆர்.எம்.வீரப்பன், ராஜராம், முத்துச்சாமி போன்றவர்கள் இருந்தனர். அவர்களோடு ஜானகி அணியின் கிச்சன் கேபினட்டில் இருந்த நாராயணன், சுலோச்சனா சம்பத் இருந்தனர்.

ஜெ.அணியின் தளபதிகளாக பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இருந்தனர். அவர்களோடு போயஸ் கேபினட்டில் இருந்த சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவுக்காக வேலை பார்த்தனர்.  

இரண்டு அணிகளும் ஆளுக்கொரு வியூகத்தை வகுத்துக் கொண்டு, சட்டசபை கூடும் நாளை கழுகுபோல் எதிர்பார்த்துக் காத்திருந்தன. அவர்கள் எதிர்பார்த்த அந்த நாள் 1988 ஜனவரி 25-ம் தேதியில் வந்தது.

அன்று ஜானகியின் நாற்காலியைக் காப்பாற்றும் நோக்கத்துடன் கூடப்போகும் அந்த சட்டமன்றத்தை அமளிதுமளியாக்கிவிட ஜெ.அணி திட்டம் போட்டு வைத்திருந்தது.

ஜெயலலிதா அணியின் திட்டத்தை அடித்து நொறுக்கி எப்படியாவது நாற்காலியைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதற்கு ஜா.அணி திட்டம் போட்டு வைத்திருந்தது.

இரண்டு அணிகளும் கச்சிதமாக அதற்கு ஒத்திகை பார்த்து இருந்தன. அதனால், சட்டமன்றத்தில்  அவர்களின் நாடகம் வெற்றிகரமாக அரங்கேறியது.

ஜானகி நினைத்தபடி, நம்பிக்கைத் தீர்மானம் வென்றது. அது ஜா.அணிக்கு கிடைத்த வெற்றி; நம்பிக்கைத் தீர்மானத்தை வெற்றிபெற வைக்க, சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட களேபரங்களைக் காரணம்காட்டி, ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு. அது ஜெ.அணிக்கு கிடைத்த வெற்றி! 

சண்டைக்களமான சட்டமன்றம்!

ஜானகி

1988 ஜனவரி 28-ம் தேதி வியாழக்கிழமை தமிழக சட்டசபை கூடியது. காலையில் 10 மணிக்கு ஜானகி அம்மாள் சபைக்கு வந்தார்.

திருக்குறளுடன் சபையைத் தொடங்கிய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், “இந்திரா காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக  என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தனர்.

அதனால், சபையை தொடர்ந்து நடத்த முடியாது. இப்போது சபையை ஒத்திவைக்கிறேன். மீண்டும் மதியம் 12 மணிக்கு சபை கூடும்” என்று அறிவித்தார்.

அதற்குக் காரணம், ஜானகியை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்திருந்த இ.காங் எம்.எல்.ஏ-க்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற படபடப்பில் பி.ஹெச்.பாண்டியன் இருந்ததுதான்.

சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், இ.காங்கிரஸில் உள்ள சிவாஜி கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் சபைக்குள் நுழைந்தனர். அவர்கள் ஜானகியை ஆதரிக்கும் எண்ணத்தில் இருந்தனர்.

அதனால், அவர்களை மற்ற இ.காங்கிரஸ் கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.  அந்த வளையத்தில் இருந்து சிவாஜி கோஷ்டி எம்.எல்.ஏ-க்களை விடுவிக்குமாறு சபைக் காவலர்களுக்கும் போலீஸூக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார் சபாநாயகர்.

சட்டசபைக்குள் போலீஸ் வருவது ‘உரிமை மீறல்’ என்று எதிர்ப்புத் தெரிவித்தனர் இ.காங்கிரஸில் உள்ள ஜானகி எதிர்ப்புக் கோஷ்டி எம்.எல்.ஏக்கள். இந்தச்  சலசலப்புகளுடன் சபை ஒத்திவைக்கப்பட்டது. 

ஜெ.அணி எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிப்பு!

பி.ஹெச்.பாண்டியன்

12  மணிக்கு மீண்டும் சபை கூடியதும், “ஜெ.அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான நெடுஞ்செழியன், பண்ரூட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர், சௌந்தராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் கட்சி மாறி உள்ளனர்.

அவர்கள் அவை விதிப்படி நடவடிக்கைக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் பதவி பறிக்கப்படுகிறது” என்று பி.ஹெச்.பாண்டியன் அறிவித்தார். அவ்வளவுதான்… அவையில் கலவரம் தொற்றிக் கொண்டது. மேஜைகளில்  இருந்த மைக்குகள் பிடுங்கப்பட்டன. உடைத்து எறியப்பட்டன.

ஜெ.அணி எம்.எல்.ஏ-க்களில் ஒரு கோஷ்டி சபாநாயகரை நோக்கி முன்னேறியது. அவர்கள் கையில் சிக்கி என்ன ஆவாரோ என்று பயந்து போன ஜா.அணி எம்.எல்.ஏ-க்கள் அவர்களை மறித்து சபாநாயகருக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.

அந்த வளையத்தை ஜெ.அணியின் ஆகிருதியாய் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆவேசத்துடன் பாய்ந்து உடைக்க முயன்றார். முதல்வர் இருக்கைக்கு எதிரே உள்ள மைக்கை எடுத்துக் கொண்டு சபாநாயகரை அடிக்கப் பாய்ந்தார்.

அன்றைய சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன்

அதில் மிரண்டுபோன பி.ஹெச்.பாண்டியன் பின்னங்கால் பிடரியில் அடிக்க தன் அறைக்குள் ஓடிப்போய் பதுங்கிக் கொண்டார். இடையில் புகுந்த கே.பி.ராமலிங்கம் கே.கே.எஸ்.எஸ்.ஆரைத் தடுக்க முயன்றார். அதில் இருவரும் கைகலப்பானது.

கே.கே.எஸ்.எஸ்.ஆரின் அடி தாங்காமல் கே.பி.ராமலிங்கம் மயங்கிச் சரிந்தார். ஜானகி அணி எம்.எல்.ஏ-க்கள் பின்வாங்கினர். இதையடுத்து ஒன்றாக அமர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் இ.காங்கிரஸைச் சேர்ந்த சிவராமனை புது சபாநாயகராகத் தேர்ந்தெடுத்தனர்.

அவர் ஜனாகி மீதான நம்பிக்கைத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது என்றுஅறிவித்தார். சபாநாயகர் பதவியில் இருந்து பி.எச்.பாண்டியனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

இந்த அட்டாகாசத்தை நிறுத்த சட்டசபைச் செயலாளர் ராமசாமி முயன்றார். உடனே, சபையின் மின்சாரத்தைத் துண்டிக்கவும், எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார்.

சபை இருளில் மூழ்கியது. இதையடுத்து வெளியேற்றப்பட்டவர்களில் இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைப் போய்ச் சந்தித்து முறையிட்டனர். அவர்களும் ஜெயலலிதா அணியினரும் சட்டசபைக்குப் போவதில்லை என்றும் அறிவித்தனர். 

டெல்லியின் நிறம் மாறியது!

ஜானகி அணியை ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் ஜெயலலிதாவுக்காக சிலர் பேசினார்கள். அத்துடன், தமிழக கவர்னர் குரானா, “உங்களுக்கும் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தவறான தகவல்களைக் கொடுத்து ஜானகி அணியை ஆதரிக்க வைத்துள்ளார்” என்றனர்.

ஜானகி அணிக்குப் பெரும்பான்மை இல்லை என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட ஜனாதிபதியின் மனம் மாறியது. பிரதமர் ராஜீவ் காந்தியைப் பொறுத்தவரை அவர் ஆரம்பத்தில் இருந்தே ஜானகியின் ஆட்சியை விரும்பவில்லை.

தமிழகத்தில் அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதுதான் காங்கிரஸூக்கு நல்லது என்று நினைத்தார். ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அதிக இடங்களைக் கைப்பற்றலாம். ஒருவேளை காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கவும் இது ஒரு வாய்ப்பாகக்கூட இருக்கலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார்.

இப்போது பிரதமர் ராஜீவ் காந்தியின் எண்ணத்துக்கு இசைந்து ஜனாதிபதியும் வந்துவிட்டதால், ஜானகி ஆட்சியை கலைக்கும் முடிவுக்கு டெல்லி வந்துவிட்டது.

இதையடுத்து, ஜானகிக்கு எதிர்த்து வாக்களிக்கக் கோரி, இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு மதியத்துக்கு மேல்  டெல்லியில் இருந்து உத்தரவு வந்தது. அதனால், சபையை புறக்கணித்து வெளியில் வந்த இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் சபைக்குள் சென்றனர். 

ஒரு சட்டமன்றம்… இரண்டு சபாநாயகர்கள்! 

சட்டமன்றம்

எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்த புது சபாநாயகர் சிவராமன், சபாநாயகர் இருக்கையில் அமர்வதற்காகப் போனார். அதற்குள் ஆளும்கட்சியின் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் அதில் போய் அமர்ந்துவிட்டார்.

இதில் கடுப்பான சிவராமன்,  “இறங்குங்கள்… இப்போது நான்தான் சபாநாயகர்” என்று சத்தம்போட்டார். ஆனால், பி.ஹெச்.பாண்டியன் நகரவில்லை. அவரை கீழே இழுக்க சிவராமன் முயற்சித்தார்; அவரால் முடியவில்லை. அதனால், பி.ஹெச். பாண்டியன் மடியிலேயே ஏறி அமர்ந்துவிட்டார்.

பி.ஹெச்.பாண்டியன் மடியில் அமர்ந்திருந்த சிவராமனை, ஜானகி அணி எம்.எல்.ஏ-க்கள் இழுத்துக் கீழே தள்ளினர். இதில், மீண்டும் ரகளை ஆரம்பித்தது. 2.30 மணிக்கு லாபியில் சீருடை அணிந்து நின்றிருந்த வெளியாட்கள் சிலர் ரகளைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள்.

எல்லாம் நடராஜன் கைங்கர்யம். ஜானகி அணியைச் சேர்ந்த பி.என்.ராமச்சந்திரன் இடுப்பு பெல்டைக் கழற்றி எதிரணி எம்.எல்.ஏ-க்களை விரட்டி விரட்டி அடித்தார்.

அதில் இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ யசோதாவின் கை முறிந்தது; அமைச்சர் வி.வி.சாமிநாதன் முகத்தில் குத்து ஒன்று விழுந்தது; ஆர்.எம்.வீ மீது ‘டேபிள் வெயிட்’ பாய்ந்தது; மற்றொரு டேபிள் வெயிட்டை எடுத்து பொன்னையன் யாருக்கோ குறிவைத்துக் கொண்டிருந்தார்.  

99 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு!

யசோதா எம்.எல்.ஏ

ஜா.-ஜெ. அணிகளின் இந்த மோதல் சட்டமன்றத்துக்குள் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதையடுத்து, ஜெ.அணி, இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூண்டோடு தூக்கி வெளியில் எறியப்பட்டனர்.

அதன்பிறகு, சட்டமன்றத்தின் கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டன. அதன்பிறகு உள்ளே இருந்த எம்.எல்.ஏ-க்களை வைத்து, ஜானகி மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

99 பேர் ஆதரவளித்தனர். அந்த அறைக்குள் சத்தமில்லாமல் ஒளிந்திருந்த 8 தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்தனர். ஆனால், அவர்களின் சொல் அம்பலம் ஏறவில்லை.  “எதிர்ப்பவர்களைவிட… ஏற்போரே அதிகம் என்பதால்…  தீர்மானம் நிறைவேறியது” என்று சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் அறிவித்தார்.

அத்துடன் இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்காத ஜெ.அணி எம்.எல்.ஏ-க்களின் பதவிகளை சட்டமன்ற விதிப்படி பறிப்பதாகவும் அறிவித்தார். இத்தகைய களேபரங்கள் முடிந்து ஓய்ந்த பிறகு மீண்டும் சபைக்கு வந்தார் ஜானகி.

அவர் முகத்தில் வெற்றிப் பெருமிதம் இருந்தாலும்… கொஞ்சம் கலவரமும் இருந்தது. அவர் கலவரமடைந்தபடி, அதற்கடுத்து வந்த மூன்றாவது நாள் அவர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது மத்திய அரசு. அதற்கு மத்திய அரசு கூறிய காரணம், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது.

அதற்கு அவர்கள் காட்டிய உதாரணம், சட்டசபையில் நடந்த ரகளைதான். 11 வருடங்கள் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் ஆட்சி 24 நாட்களில் கவிழ்ந்தது. தமிழக முதலமைச்சர்கள் பட்டியலில் மட்டும் ஜானகி ராமச்சந்திரன் பெயர் சேர்ந்தது.

அவ்வளவுதான். அதன்பிறகு தேர்தல் களத்துக்குத் தயாரானார்கள் ஜானகியும் ஜெயலலிதாவும். அந்தக் களத்திலும் ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக சசிகலாவும் நடராஜனும் இருந்தனர்.

இப்போது, சசிகலா நடராஜனுக்கு அதைவிட முக்கியமான வேலை ஒன்று பாக்கி இருந்தது. போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர்களைத் துரத்தியதுபோல், அரசியலில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருப்பவர்களைத் துரத்தியடிக்க வேண்டும்.

அதற்கான பட்டியல் தயாரானது. அதில் திருநாவுக்கரசு, நாவலர் நெடுஞ்செழியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர், சேலம் கண்ணன் பெயர்கள் இருந்தன. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s