உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 25

மன்னார்குடிக்குள் வந்த போயஸ் கார்டன் !

 

1982 : சசிகலா நடராஜன் வீழ்த்திய வேலிகாத்தான்கள்!

சசிகலா

போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவுக்குத் தொந்தரவுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க என்ற கட்சியில் தொந்தரவுகள் இருந்தன. கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் வேறு மாதிரி. வீட்டு வேலைக்காரர்களை ‘டீல்’ செய்து வெளியில் அனுப்பியதுபோல், கட்சிக்காரர்களை அனுப்ப முடியாது. அவர்கள் ஜெயலலிதாவின் கனிவுப் பார்வையில் இருந்தனர்.

நாவலர் நெடுஞ்செழியன் மீது ஜெயலலிதா மதிப்பு வைத்திருந்தார்; பண்ரூட்டி ராமச்சந்திரன் மீது ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்தார்; திருநாவுக்கரசு ஜெயலலிதாவின் அணுக்கமான ஆலோசகராக இருந்தார்; கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஜெயலலிதாவால் தவிர்க்க முடியாத நபராக வலம் வந்தார்.

இவர்கள் ஜெயலலிதாவைச் சுற்றி அமைத்து வைத்திருக்கும் இந்த நம்பிக்கை வளையம்… நட்பு வளையம்… சசிகலாவுக்கு எரிச்சலைக் கொடுத்தது. “இந்த வளையங்களை உடைத்தால் ஓழிய தன் மனைவி சசிகலாவுக்கு ஜெயலலிதாவிடம் எதிர்காலம் இல்லை என்று நினைத்தார் நடராஜன்.

ஜெயலலிதாவின் வளர்ச்சி சிறியதாக இருக்கும்போதே, அவரைச் சுற்றி இருக்கும் இந்த வேலி காத்தான்களை வெட்டி எரியாவிட்டால், பிறகு இது வேர் பிடித்துவிடும். அது ஆபத்து” என்று யோசித்துக் காய்களை நகர்த்தினார் நடராஜன். அந்தக் காய்கள் நகர்த்தப்பட்ட காலம் 1988. 

எம்.ஜி.ஆர் அப்போது இல்லை; எம்.ஜி.ஆரின் நாற்காலியில் அமர்ந்திருந்த ஜானகியை கவிழ்த்தாகிவிட்டது; ஜெயலலிதாவை அந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன; அந்த வேலையோடு, ஜெயலலிதாவைச் சுற்றி இருக்கும் வேலி காத்தான்களையும் வெட்டிவிட்டால்தான், ஜெயலலிதா முதலமைச்சராக வரும்போது, அவரோடு தன் மனைவி சசிகலா மட்டும் நெருக்கமாக இருப்பார் என்று கணக்குப்போட்ட நடராஜன், திவாகரனை உள்ளே இழுத்து வந்தார். 

திவாரகனின் படை வந்தது! திருநாவுக்கரசு படையை வென்றது!

திவாகரன்

எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜெயலலிதாவைச் சுற்றி ஒரு பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டது. அது திருநாவுக்கரசு செய்த ஏற்பாடு. அந்தப் படை, ஜெயலலிதாவை யாரும் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதைத் தடுத்தது. சுற்றுப் பயணத்தில், பொதுக்கூட்டங்களில், ஹோட்டல்களில் அந்தப் படை ஜெயலலிதாவைச் சுற்றியே இருந்தது. அது சசிகலாவுக்கு நெருடலை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவிடம் ரகசியம் எதையும் சசிகலாவால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜெயலலிதாவைச் சுற்றி நிறுத்தப்பட்டு இருப்பது திருநாவுக்கரசின் படை. அவர்கள்மூலம் சசிகலா எதைப்பேசினாலும் அது திருநாவுக்கரசின் காதுகளுக்குப் போய்விடுகிறது.

எனவே, இப்போது திருநாவுக்கரசின் பாதுகாப்புப் படையை ஜெயலலிதாவிடம் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்த சசிகலா-நடராஜன் திவாகரன் மூலம் ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கினார்கள்.

கருப்பு நிற ஆடை, கைத்துப்பாக்கி, கையில் வாக்கிடாக்கி என்று பந்தாவாக வலம் வந்தது அந்தக் கருப்புப் பூனைப் படை. ஜெயலலிதாவுக்கு அது ஒரு போதையைக் கொடுத்தது.

முதலமைச்சர் கனவில் இருந்த அவர், இந்த டூப்ளிகேட் கருப்புப் பூனைப்படையின் அணிவகுப்பில், முதலமைச்சராகவே ஆகிவிட்டதாக உணர்ந்தார். 

திருநாவுக்கரசின் பாதுகாப்புப் படைக்கும் திவாகரனின் பாதுகாப்புப் படைக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. எப்போதும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர். சமயங்களில் மோதிக் கொண்டனர். ஒரு முறை மோதல் முற்றியதில், திவாகரனின் கருப்புப் பூனைப் படை வீரர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அதையே பூதாகரமாக்கி சசிகலா வைத்த ஒப்பாரியில், ஜெயலலிதா திருநாவுக்கரசின் பாதுகாப்புப் படையை துரத்திவிட்டார். திருநாவுக்கரசும் நமக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று அமைதியாக இருந்துவிட்டார்.

அப்போது முதலே திருநாவுக்கரசு ஜெயலலிதாவை நெருங்குவதைக் குறைத்துக் கொண்டார். இப்போது, திவாகரனின் பாதுகாப்புப் படை மட்டுமே ஜெயலலிதாவை நிழல் போலச் சுற்றி வந்தது. அதை வைத்து, உள்கட்சி எதிரிகளுக்கு ஆட்டம் காட்டினார் நடராஜன்.

அடிமட்டத் தொண்டன் முதல் நாவலர் நெடுஞ்செழியன்வரை  நடராஜனின் ஆட்டத்தைக் கண்டு அரண்டு போனார்கள்; அதிருப்தி அடைந்தார்கள். ஆனால், வாய் திறக்க முடியவில்லை. 

தொண்டர்களை அடித்து நொறுக்கிய தலைவியின் படை!

ஜெயலலிதா

திவாகரன் அமைத்த கருப்புப் பூனைப்படை ஜெயலலிதாவிடம் தங்கள் முரட்டு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டே இருந்தது. எந்த அளவுக்கு என்றால், ஜெயலலிதா மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் முகத்தின் முன்னால் பறக்கும் வண்டோடு மல்லுக்கட்டி அதை வீழ்த்தும் அளவுக்கு விசுவாசத்தைக் காட்டியது திவாகரனின் கருப்புப் பூனைப்படை.

அதுபோல், ஜெயலலிதாவை நெருங்கும் தொண்டர்களை விலக்கிவிடுவதுபோல், அவர்களை உதைத்துத தள்ளுவது; போயஸ் கார்டன் வீட்டில் சிவப்புக் கம்பளத்தில் தவறிக் கால் வைக்கும் தொண்டர்களையும் புரட்டி எடுப்பது; ஜூனியர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களை வாசலில் நிறுத்தி மணிக்கணக்கில் விசாரித்து அவமானப்படுத்துவது என்று இந்தப்படையின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போனது.

நாளடைவில் இது தொண்டர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால், போயஸ் கார்டனுக்குள் வரும் அதிகாரம் படைத்தவர்கள்கூட உள்ளே ஒதுங்கி நிற்கப் பழகிக் கொண்டனர். அதை… அதைத்தானே எதிர்பார்த்தனர் நடராஜனும்… சசிகலாவும்… 

நாவலருக்கு இடி… பண்ரூட்டிக்கு அடி…

தொண்டர்களை கட்டுப்படுத்திய கருப்புப் பூனைப் படை, கட்சியின் முன்னணித் தலைவர்களை குறிவைத்தது. நாவலர் நெடுஞ்செழியனை குறிவைத்து எரிச்சல் படுத்தச் சொன்னார் நடராஜன். அதற்கான வியூகத்தையும்ச ரியாக வகுத்த பாதுகாப்புப் படை, கூட்ட நெரிசல் ஒன்றில் குறிவைத்து நாவலர் வயிற்றில் இடித்தது. அதில் வலி பொறுக்க முடியாத நாவலர் துடித்துப்போனார்.

ஆத்திரத்தோடு கருப்புப் பூனை படை வீரர் ஒருவரின் முதுகில் சாத்து சாத்தென்று சாத்தினார். அப்போதைக்கு அவரின் ஆத்திரம் தீர்ந்தாலும், அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை அவர் உணர்ந்து கொண்டார். அதேபோல், தஞ்சைக் கூட்டத்தில் பண்ரூட்டி ராமச்சந்திரனின் மூக்கை உடைத்தனர்; திருநாவுக்கரசின் உதவியாளர்களைத் தாக்கினர்; கே.கே.எஸ்.எஸ்.ஆரை வெறுப்பேற்றினர்.

இப்படி இவர்களின் அழிச்சாட்டியத்தை பொறுக்க முடியாத தலைவர்கள், “தங்களுக்கென்று ஒரு பொது இடம் வேண்டும்… போயஸ் கார்டனை பொது இடமாக வைத்து நாம் அங்கு போய் கூடுவது சரியில்லை…” என்று பேச ஆரம்பித்தனர். ஆனால், அப்படி ஒரு முடிவை எடுக்க நடராஜன் நேரமே கொடுக்கவில்லை. 

நடராஜன் கொடுத்த புரட்சித் தலைவி பட்டம்!

நாவலர், ஜெயலலிதா

போயஸ் கார்டனை ஆக்கிரமித்திருந்த நடராஜன் அடுத்தகட்டமாக மற்றொரு அதிர்ச்சியை கட்சிக்காரர்களுக்கு கொடுத்தார். இனிமேல் ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவி’ என்றுதான் எல்லோரும் அழைக்க வேண்டும் என்றார். அதைக் கேட்டு மூத்த தலைவர்கள் நெளிந்தனர்.

ஆரம்பத்தில் யோசித்தவர்கள் பிறகு சம்மதித்தனர். ஆனால், நாவலர் மட்டும் சிரமப்பட்டார். அதை ஜெயலலிதாவிடம் வத்தி வைத்தார் நடராஜன். ஜெயலலிதா நாவலரை போனில் அழைத்து, “நான் உங்கள் மகள் மாதிரி… உங்களை எல்லாம் நம்பித்தான் மலை போன்ற பொறுப்புகளை சுமக்கத் துணிந்துள்ளேன்.

உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நீங்கள் என்னை புரட்சிச் செல்வி என்றே அழைக்கலாம்” என்றார். ஆனாலும், நாவலர் மீது அப்போதே ஜெயலலிதாவுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நாவலர் தகுதிக்கு, தன்னை புரட்சிச் செல்வி என்று அழைப்பதே பெரிது என்பதை ஜெயலலிதா உணரவில்லை.

ஆனால், தன் தகுதிக்கு ஜெயலலிதாவை ‘புரட்சிச் செல்வி’ என்று அழைப்பதே தனக்கு அசிங்கம் என்று நாவலர் உணர்ந்திருந்தார். ஆனாலும், அவருக்கு வேறு வழியில்லை. 

அதே நேரத்தில், ஜெயலலிதா கூட்டத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் ‘வருங்கால முதல்வர்’, ‘தமிழகத்தின் எதிர்கால முதல்வர்’ என்று போஸ்டர் அடித்து ஒட்டச் சொல்லி இருந்தார் நடராஜன்.

அதை எல்லாம் பார்க்கும்போது, நாவலருக்கு கலக்கம் ஏற்பட்டது; ஜெயலலிதாவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. நாவலர் நெடுஞ்செழியனுக்கும், பண்ரூட்டி ராமச்சந்திரனுக்கும், திருநாவுக்கரசுக்கும் நடராஜனின் வளர்ச்சி புரிய ஆரம்பித்தது.

இப்போது ஜெயலலிதாவுக்கு நாவலர் மீதான மதிப்பு குறைந்தது; பண்ரூட்டி ராமச்சந்திரன் மீதான நம்பிக்கை குறைந்தது; திருநாவுக்கரசை தள்ளிவைத்தார்; இவர்களுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. 

 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s