உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 31

சசிகலா-சோதிடர்-சேவல் சின்னம்! 

ஜெ.அணி-ஜா.அணி இணைப்பு நடக்கவில்லை; இ.காங்கிரஸோடு ஜெ.அணி கூட்டணி அமைக்க முடியவில்லை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டது.

இப்போது ஜெ.அணியோடு கூட்டணி அமைக்க தா.பாண்டியன் பிரிந்துவந்து புதிதாகத் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் இருந்தது.

அந்தக் கட்சியோடு ஒரு வழியாக ஜெ.அணி கூட்டணி அமைத்துக் கொண்டது. தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்தன. சசிகலா எப்போதும் ஜெயலலிதாவுடனே இருந்தார்.

நடராஜன் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தார். 

நாவலர், நவநீதன், சேலம் கண்ணனை காலி செய்தேன்: நடராசன்

நடராசன்

1989 தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஜெ. அணியில் சீட் கிடைக்காதவர்கள் நாள்தோறும் போயஸ் கார்டன் வந்து புலம்பிக் கொண்டிருந்தனர். சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு நாள் திடீரென அவர்களிடம் நடராஜன் மிகப்பெரிய உரையாற்றினார்.

போயஸ் கார்டன் வீட்டின் முன் குவிந்த தொண்டர்கள் சேலம் ஓமலூரில் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டனர்.

அவர்களைச் சமாதானப்படுத்திய நடராஜன்,

“ஆனானப்பட்ட நாவலரையே நார்நாராகப் பிய்த்துவிட்டேன்; இந்தக் கண்ணன் யார்? சேலம் மாவட்டத்தில் பெரிய கொம்பனா? அவன் இறக்கையை வெட்டி எரிந்துவிட்டேன்;

திருச்செங்கோட்டுக்கு சீட் கேட்டான்… ஏன் கொடுக்க வேண்டும்? அவனுடைய நண்பன் ராஜாவுக்குக் கொடுத்தேன்; இப்போது அவனுங்களுக்குள்ள மோதல்;

திருச்சியில் ஸ்ரீரங்கத்துக்காரனை காலி செய்தாகிவிட்டது; மதுரையில் யாரோ நவநீதன் என்று ஒரு பொடியன்… அவனை ஓடஓட விரட்டிவிட்டேன்; தேர்தல் முடியட்டும்…

இன்னும் எவனெவன் இறக்கையை வெட்டுகிறேன்” என்று பாருங்கள் கர்ஜித்தார்.

அதில் சமாதானம் அடைந்த தொண்டர்கள் கலைந்துசென்றனர். இப்படி தினம்தோறும் பல பஞ்சாயத்துக்களை அன்றைக்கு ஜெயலலிதாவுக்காக நடத்தினார்  நடராசன். 

ஸ்ரீரங்கமா… போடிநாயக்கனூரா… 

ஜெயலலிதா, சசிகலா

ஜெயலலிதா எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்; எந்தத் தொகுதியில் பிரசாரம் செய்வது எளிது; எந்தத் தொகுதியில் பலவீனமான எதிரி போட்டியிடுகிறார் என்பதை எல்லாம் கணக்குப்போட்டு அவருக்கு தொகுதிகளை தேர்வு செய்தவர் நடராஜன்தான்.

தமிழகம் முழுவதும் சுற்றி ஜெயலலிதாவுக்காக இரண்டு தொகுதிகளைத் தேர்வு செய்தார்.

ஒன்று ஸ்ரீரங்கம்… மற்றொன்று போடி நாயக்கனுர். இரண்டு தொகுதிகளும் ஜெயலலிதாவுக்குச் சாதகமான தொகுதிகள். ஸ்ரீரங்கம் ஜெயலலிதாவுக்கு சமூகரீதியாக பாதுகாப்பான தொகுதி.

அதுபோல, போடி நாயக்கனூர் அ.தி.மு.க.வுக்கு எப்போதும் சாதகமான தொகுதி. அவற்றைவிட முக்கியம் இந்த இரண்டு தொகுதிகளையும் இரண்டே நாட்களில் சுற்றி வந்து பிரசாரத்தை முடித்துவிடலாம்.

அது ஜெயலலிதாவுக்கு மிக வசதி. அதனால், இந்த இரண்டு தொகுதிகளையும் நடராஜன் ஜெயலலிதாவுக்காக தேர்வு செய்தார்.

ஆனால், ஜெயலலிதா போட்டியிடும் தொகுதிகளை முன்கூட்டியே அறிவிக்கவில்லை. அதை ரகசியமாக வைத்திருந்தார்.

முன்பே அறிவித்துவிட்டால் தி.மு.க-வும் சரி… ஜா.அணியும் அந்தத் தொகுதியில் வலுவான வேட்பாளர்களை நிறுத்திவிடும் என்பதால் அப்படி ஒரு திட்டம்.

பிறகு ஒருநாள் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் போய், அங்கிருந்து காரில் போடி நாயக்கனூருக்கு சசிகலாவுடன் சென்று ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அங்கு வந்த கம்பம் கோபால், “அம்மா வேட்புமனுத் தாக்கலின்போது வரவேற்பு ஏற்பாடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்ல, சசிகலா அவரிடம் ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

ஆனால், அதோடு போன கோபால் திரும்பிவரவே இல்லை. ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்றபோது எந்த வரவேற்பும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருந்தது.

சத்தமில்லாமல் போன ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு சசிகலாவுடன் வெறுமையாகத் திரும்பினார்.

சசிகலாவும் ஜெயலலிதாவும் கம்பம் கோபால் செய்த வேலையால் வெறுப்புடன் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், நிலக்கோட்டை அன்பழகன் என்பவர் பக்கத்தில் இருந்த அம்பாசிடர் காரில் நின்று ஜெயலலிதாவை வரவேற்று தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அங்கு காரை நிறுத்திய ஜெயலலிதா, “மற்றவர்கள் எங்கே.. ஏன் நீங்கள் தனியாக நின்று பேசுகிறீர்கள்” என்று கேட்க, நிலக்கோட்டை அன்பழகன், “நீங்கள் வரும் தகவலை இங்கு யாரும் சொல்லவில்லை.

அதனால் எந்த ஏற்பாடுகளும்  செய்யமுடியவில்லை. கடைசியில் தாலுகா அலுவலகத்தில் சொன்னார்கள்.

அதுதான் அவரச அவரசமாக மைக் செட்டை போட்டு இந்தக் காரையே மேடையாக்கிப் பேசுகிறேன்” என்றார்.

அதைக் கேட்ட ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் மகிழ்ச்சி. அடுத்தத் தேர்தலில் நிலக்கோட்டை அன்பழகனுக்கு சீட் கிடைத்தது. அவரும் எம்.எல்.ஏ ஆனார்.  

ஜெ.வை வீழ்த்த வெண்ணிற ஆடை நிர்மலா!

ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா

ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிறுத்தி ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஜானகி விரும்பினார்.

அதனால், ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி தெரிந்தபின்னரே தன் அணியின் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று ஜானகியும் திட்டவட்டமாக இருந்தார்.

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரையும் தேர்வு செய்து வைத்திருந்தார்.

அதையும் ரகசியமாக வைத்திருந்தார். கடைசியில் ஜெயலலிதா போடி நாயக்கனூரில் போய் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

திருச்சி வரை விமானத்தில் போய், அங்கிருந்து காரில் போய் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். சசிகலா கூடவே சென்றார்.

இந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஜானகி அணி, ஜெயலலிதாவுடன் சேர்ந்து அறிமுகமான ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை போடியில் வேட்பாளராக நிறுத்தியது.

வெண்ணிற ஆடை நிர்மலா வேட்பு மனுத்தாக்கல் செய்ததும்,அந்தத் தகவலை கம்பம் ஆர்.டி.கோபால் ஓடிவந்து ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். ஜெயலலிதாவின் முகம் கறுத்துவிட்டது.

“உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? இல்லை எதாவது வதந்தியா? ” என்று கேட்டு உறுதி மீண்டும் அந்தத் தகவலை உறுதி செய்துகொண்டவர் மிகவும் குழப்பமடைந்து காணப்பட்டார்.

ஜெயலலிதாவைச் சமாதானப்படுத்திய நடராஜன், தேர்தலில் ஜெயிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஜெயித்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

சசிகலா-சோதிடர்-சேவல் சின்னம்!

ஜெயலலிதா, சசிகலா

ஜெ.-ஜா. அணி பிரிவால் அ.தி.மு.க-வின் இரட்டை இலைச்சின்னம் பறிபோனது.

ஜானகிக்கு இரட்டைப்புறா சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.

ஜெயலலிதாவுக்கு யானை, இரட்டை மெழுகுவர்த்தி, சேவல் சின்னங்களில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள தேர்தல் ஆணையம் வாய்ப்புக் கொடுத்தது. அதில் சசிகலாவின் தேர்வு சேவல் சின்னமாக இருந்தது.

அதற்குக் காரணம் சசிகலாவின் ஆஸ்தான சோதிடர் தர்மராஜ். அவர்தான் சேவல் சின்னத்தைத் தேர்வு செய்யச் சொன்னார்.

திட்டை பிச்சை என்ற மற்றொரு சோதிடர் மூலம் சசிகலா-நடராஜனுக்கு அறிமுகமான தர்மராஜூக்கு போயஸ் கார்டனில் தனிக்குடிசை போட்டுக் கொடுக்கப்பட்டது.

அந்தக் குடிசையில் சேவல் கொடியை ஏற்றி தினமும் பூஜைகள் நடந்தன.

தர்மராஜ் சொன்னபடி சேவல் சின்னத்தைத் தேர்வு செய்த சசிகலா, திருப்பதிக்குப்போய் சேவல் சின்னத்தை வைத்து பூஜை செய்துவிட்டு, 27 பவுன் தங்கத்தையும் காணிக்கையாக செலுத்திவிட்டு வந்தார்.

தர்மராஜ் சொன்னபடி முதல் வேட்பாளர் பட்டியல் 99 பெயர்கள் வரும்படி வெளியிடப்பட்டது. சசிகலா காலையிலும் மாலையிலும் ஜெயலலிதா வெற்றி பெற நடந்த பூஜைகளில் கலந்து கொண்டார். 

சீட்டுக்கு அடிபிடி! தொகுதிகளில் குளறுபடி!

நடராசன்

அ.தி.மு.க ஆய்வுக்குழு பரிந்துரை செய்ததில் 30 சதவிகிதம் பேருக்குத்தான்  சீட். 70 சதவிகிதம் பேருக்கு சீட் டெண்டர்கள் மூலம்தான் சீட் ஒதுக்கப்பட்டன.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் பரிந்துரை செய்த மூன்று பேருக்கு மட்டும்தான் சீட். அந்த மூன்று சீட்களை வாங்குவதற்குள் அவருக்கு உயிர் போய் உயிர் வந்தது.

சேடப்பட்டி முத்தையா பரிந்துரைக்கும் மூன்று சீட். செங்கோட்டையனுக்கும் அதே கதி. சேலம் கண்ணன் பரிந்துரை செய்ததில் இரண்டு ரிசர்வ் தொகுதிகளுக்கு மட்டும்தான் சீட்.

சேலம் மாவட்டத்தில் எஸ்.டி.எஸ் கையே ஓங்கி இருந்தது. நெல்லைத் தொகுதி வேட்பாளராக ஆதம் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சென்னையில் இருந்து நெல்லை போய் சேர்வதற்குள் ஆதம் மாற்றப்பட்டார்.

சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவருக்கு சீட் மாற்றிவிடப்பட்டது.

மீண்டும் கருப்பசாமி பாண்டியன் சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்குள் நாங்குநேரி வேட்பாளர் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

இதில் கருப்பசாமிப் பாண்டியன் கொந்தளித்த பிறகு அந்த முடிவு மாற்றி அமைக்கப்பட்டது. இப்படிக் குளறுபடிகளுடன் ஜெ.அணியின் தேர்தல் வியூகங்களை நடராஜன் வகுத்தார்.

ஆனால், ஜெயலலிதாவை அவர் சொன்னபடியே வெற்றி பெற வைத்தார். அதற்காக நடராஜன் அன்று நடத்திய தேர்தல் தில்லாலங்கடிகள்தான் இன்று எல்லாக்கட்சிகளிலும் தொடர்கிறது.

பம்பாயில் இருந்து தனி விளம்பர ஏஜென்சிகள், இலவச வேட்டி சேலைகள், கத்தை கத்தையாக பறக்கவிடப்பட்ட பணம், சர்வே முடிவுகள் என்று ஜமாய்த்துக்காட்டினார் நடராசன்

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s