உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 32

“ஜெயலலிதா, நடராசனை கைது செய்!” சசிகலா

1989 தேர்தல் : வாழ்வா… சாவா? 

1989-ம் ஆண்டுத் தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளுக்கு வாழ்வா… சாவா? போராட்டம். “எம்.ஜி.ஆரிடம் தோற்று,10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் தி.மு.க-வை,எம்.ஜி.ஆர் இறந்துவிட்ட பிறகும் அரியணைக்கு கொண்டு செலுத்தவில்லை என்றால்…

இனி ஒருபோதும் கொண்டு செல்ல முடியாது. இதை உணர்ந்த கருணாநிதி வெறிபிடித்தவர் போல் அந்தத் தேர்தலில் வேலை பார்த்தார். ஒவ்வொரு தி.மு.க தொண்டனையும் வேலை பார்க்க வைத்தார்.

‘‘தன் கதாநாயகனும் கணவருமான எம்.ஜி.ஆர் உருவாக்கி,கட்டிக்காத்து வளர்தெடுத்த கட்சியையும், ஆட்சியையும் இடையில் வந்தவர்களிடம் பறிகொடுத்துவிடக்கூடாது” என்ற பதற்றம் ஜானகிக்கு. அதனால் அவரும் சுற்றிச் சுழன்று வந்தார்.

1967-ல் தி.மு.கவிடம் பறிகொடுத்த தமிழகத்தை மீட்டெடுக்க நல்ல சந்தர்ப்பம். மத்தியில் அதிகாரம் உள்ளது. ராஜீவ் காந்தி என்ற கவர்ச்சி இருக்கிறது.

மாநிலத்தில் பெரிய கட்சியான அ.தி.மு.க ஜா.அணி-ஜெ.அணி-நால்வர் அணி என்று சில்லுச் சில்லாய் சிதறிக் கிடக்கிறது.

கருணாநிதியை மட்டும் சமாளித்துவிட்டால் போதும். மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் ஆட்சியில் நாம்தான் முதலமைச்சர் என்று மூப்பனார் மனக்கோட்டை கட்டிக் கொண்டு வேலை பார்த்தார். 

ஜெயலலிதா

‘‘இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டால், தனக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது; தன்னுடைய முதலமைச்சர் கனவு என்றென்றும் பலிக்காது; தன் அடையாளம் அழிக்கப்பட்டுவிடும்.

எந்தநிலையிலும் அந்தநிலை வந்துவிடக்கூடாது என்று ஜெயலலிதா பிரயத்தனப்பட்டார்.

ஜெயலலிதா கௌரவமான வெற்றி பெற்றால்தான் சசிகலாவுக்கு எதிர்காலம்; சசிகலாவின் எதிர்காலம்தான் தனது எதிர்காலம்.

அதனால், ஜெயலலிதாவை எப்பாடுபட்டாவது கரையேற்றிவிட வேண்டும்” என்று நடராஜன் வியூகங்களை வகுத்து முன்னேறிப்போய்க் கொண்டே இருந்தார். 

நடராசன் உருவாக்கிய ‘வைட்டமின்’ பார்முலா!

ஜெயலலிதாவை வெற்றிபெற வைக்க அந்தத் தேர்தலில் நடராசன் பல ‘வைட்டமின்’ பார்முலாக்களை உருவாக்கினார்.  

தேர்தல் நேரங்களில் இன்றுவரை பல கட்சிகளுக்கு அந்தப் பார்முலாக்கள்தான் தேர்தலைச் சந்திக்கும் பலத்தைக் கொடுக்கின்றன.

1989-ல் தொடங்கிய  ஜெயலலிதாவின் பயணம் 2016-வரை அந்தப் பாதையிலேயே தொடர்ந்தது.

சில ஏற்ற இறக்கங்கள் அதில் மாற்றப்பட்டு இருக்கலாம்; ஆனால், கடைசிவரை ஜெயலலிதாவின் தேர்தல் பாதையும் பார்முலாவும் அதுவாகவே இருந்தது. 

பம்பாயில் இருந்து அழைத்துவரப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று ஜெ.அணியின் பிரசார போஸ்டர்களை டிசைன் செய்தது. உள்ளூர் டிடெக்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்துப் பட்டியல்போட்டுக் கொடுத்தனர்.

மற்றொருபக்கம் போயஸ் கார்டன் குடிசையில் குடியேற்றி வைக்கப்பட்ட பூசாரி, சேவல் கொடிக்கு காலையும் மாலையும் பூஜை செய்து கொண்டிருந்தார்.

ஜெயலலிதாவின் பிரசாரத்துக்காக வாடகை ஹெலிகாப்டரை பயன்படுத்தும் திட்டம் ஒன்றும் நடராசனிடம் அப்போதே இருந்தது.

ஆனால், அந்தத் தேர்தலில் அதை அவர் நடைமுறைப்படுத்தவில்லை. பிறகு அதுவும் வந்து ஜெயலலிதாவோடு ஒட்டிக்கொண்டது தனிக்கதை.

சேவல் சின்னம் பதிக்கப்பட்ட வேட்டிகள்-சேலைகள்-துண்டுகள் லட்சக்கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு குடோன் குடோனாகப் பதுக்கப்பட்டது. 

நடராசன்

அசராத பிரசாரம்…. அசத்தலான பிரசாரம்…

ஜெயலலிதா பிரசாரத்துக்காக தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். அந்தப் பயணம் முழுவதும் சசிகலா ஜெயலலிதாவைச்  சுற்றிவந்தார்.

ஜெயலலிதாவை எதிர்த்துப்போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா, போடியில் மட்டும் பிரசாரம் செய்தால் போதுமானது.

ஆனால், ஜெயலலிதா போடியில் தனக்கும் பிரசாரம் செய்ய வேண்டும்; மற்ற தொகுதிகளில் தன் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய வேண்டும்.

ஆனால், அதை அவர் அசராமல் செய்தார். சென்னையில் 14 தொகுதிகளை 7 மணி நேரத்தில் சுற்றி வந்து பிரசாரம் செய்தார்.

இதன் காரணமாக அவர் போட்டியிட்ட போடியில் நிரந்தரமாகத் தங்கவில்லை. ஆனால் போடியில் ஜெயலலிதா அடித்த ஸ்டன்ட்களால் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், எதிரணி வேட்பாளர்கள் அலறினார்கள். பிரசார வேனில் மேலே ஏறி நின்று கொண்டு பிரசாரம் செய்தார்.

ஒத்தையடி மலையடிவாரங்களில் நடந்து சென்று ஓட்டுக் கேட்டார்; அழுக்காக நின்ற(நிறுத்தப்பட்ட) குழந்தைகளை அள்ளி எடுத்துக் கொஞ்சினார்; அவர்களுக்கு புதிய உடைகள் வழங்கினார்.  

தொகுதிக்குள் காரில் சென்ற நேரங்களில், கார் கண்ணாடியை கீழே இறக்கி வழியில் நின்ற வயதான பெண்களை வலியப்போய் நலம் விசாரித்தார். 

சுலோக்சனா சம்பத், வெண்ணிற ஆடை நிர்மலா, வளர்மதி

ஜெயலலிதாவை எதிர்த்துப்போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா, போடி ரெங்கராஜன் மாளிகையில் தங்கி தேர்தல் வேலைகளைப் பார்த்தார்.

அவருக்குத் துணையாக சுலோசனா சம்பத்தும், பா.வளர்மதியும் உடன் இருந்தனர் (அப்போது வளர்மதி ஜா.அணியில் இருந்து ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்).

ஜெயலலிதா செய்த எல்லா வேலைகளையும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா அளவுக்கு அவரால் பணத்தை வாரி இறைக்க முடியவில்லை.

ஜெயலலிதா சார்பில் நடராஜன் பணத்தை தண்ணியாக செலவழித்தார். ஜெ.அணியில் சீட்டு கேட்டவர்களிடம் வாங்கிய 50 ஆயிரம், ஒரு லட்சம் மதிப்புள்ள நோட்டுக் கட்டுக்கள் போடி தொகுதியில் காகிதங்களாகப் பறந்தன. 

என்னை ஆதரிப்பீர்களா… என்னை ஆதரீப்பீர்களா?

கருணாநிதியையும், ஜானகியைத்தான் ஜெயலலிதா தனது பிரசாரத்தில் வறுத்தெடுத்தார்.

“கருணாநிதி தீயசக்தி; அவரை அழிக்க என்னால்தான் முடியும்; அதனால்தான் அரசியல் பணியை புரட்சித் தலைவர் என்னிடம் ஒப்படைத்தார். கருணாநிதி அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கப் பார்க்கிறார். அதற்கு நீங்கள் துணைபோய்விடக்கூடாது” என்றார். இந்தப் பிரசாரம் பொதுமக்களிடம் மட்டும் அல்ல. தி.மு.க கூடாரத்துக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. 

ஜெயலலிதா

“ஜானகி ஒன்றும் தெரியாத பாப்பா போல் இன்று நடிக்கிறார். புரட்சித் தலைவரின் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு கொடுக்கச் சொன்னார். ஆனால், ஜானகி அதைச் செய்யாமல் அதை தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துகிறார். இவரா ஏழைகளுக்கு நல்லாட்சியை வழங்கப்போகிறார்” எனப் பிரசாரம் செய்து ஜானகியை வறுத்தெடுத்தார் ஜெயலலிதா. “நான் உங்களுக்கு ஊழலற்ற ஆட்சியை அமைத்துத் தரப்போகிறேன். என்னை ஆதரிப்பீர்களா… என்னை ஆதரிப்பீர்களா…” என்று தனக்கு ஆதரவைத் திரட்டினார் ஜெயலலிதா. இதன் பரிணாமவளர்ச்சிதான், 2011 தேர்தலில் செய்வீர்களா… நீங்கள் செய்வீர்களா… என்று ஜெயலலிதா மக்களிடம் கேட்டது. 

வேட்டி-சேலை-துண்டும்… பொங்கல் வாழ்த்தும்!

ஜெயலலிதாவின் வெளிப்படையான பிரசாரங்கள் இப்படி நடந்துகொண்டிருந்தன. ஜெயலலிதாவுக்கான மறைமுகப் பிரசாரங்களை நடராஜன் நடத்திக் கொண்டிருந்தார்.

தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் உள்ள ஜின்னிங் பேக்டரி குடோனில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று போலீஸுக்குத் தகவல் வந்தது.

தி.மு.க, காங்கிரஸ், ஜா.அணியைச் சேர்ந்தவர்களும் போலீஸ் பட்டாளத்தோடு அந்தக் குடோனில் நுழைந்தனர்.

அவர்கள் போனபோது, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் தலைவர் ஐசரி கணேசன் (இன்றைய வேல் டெக் கல்லூரி தாளாளர்) அங்கே நின்றிருந்தார்.

அந்த இடத்தில் இருந்த ஜீப்பில், சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட வேட்டி சேலைகளை அவசர அவரசமாக அவருடைய ஆட்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லி தொகுதி மக்களுக்கு கொடுப்பதற்கான அவை ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

இதை அறிந்து எதிர்க்கட்சிக்காரர்கள் பிரச்னை செய்ய, “எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று ஐசரி கணேசன் விளக்கம் கொடுக்க, அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது.

அதில் ஆடிப்போன ஐசரி கணேசன் ஒதுங்கிக் கொண்டார். அதன்பிறகு குடோனுக்குள் புகுந்த எதிர்கட்சிக் கும்பல் அங்கிருந்த வேட்டி சேலைகளை அள்ளிக் கொண்டுவந்து ரோட்டில் பரப்பிப் போட்டன.

அதனால் தேனி-போடி மெயின் ரோட்டில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால், ஒரு குடோனைப் பிடித்தவர்களால் மற்ற குடோன்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

சென்னை வானவில் உட்பட பல்வேறு இடங்களில் தனித்தனியாக கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி,சேலை,துண்டுகள் சென்னையில் இருந்து லாரிகளில் தேனிக்கு வந்தன.

பழனிசெட்டியபட்டி மில்லில் அவை குவித்து வைக்கப்பட்டன. ஒரு சேலை, ஒரு வேட்டி, ஒரு துண்டு என்று அவை தனித்தனி பார்சல்களாகக் கட்டப்பட்டன.

சில்லுமரத்துப்பட்டி என்ற கிராமத்தில்தான் முதன் முதலில் வேட்டி-சேலை-துண்டு அடங்கிய பார்சலும், அதோடு சேர்த்து சேவல் சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள் என்ற வாசகம் இடம்பெற்ற நோட்டீஸும் விநியோகம் செய்யப்பட்டன.

அதுபோல பல இடங்களிலும் வேட்டி சேலை துண்டு விநியோகம் செய்யப்பட்டது. சினிமா நோட்டீஸ்களை வீசி எறிந்துவிட்டுச் செல்வதுபோல், திடீரென தெருக்களுக்குள் நுழையும் டெம்போ வேன்கள், சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட நோட்டீஸ்களையும், ரூபாய் நோட்டுக்களையும் சேர்த்து வீசிவிட்டு மறைந்தன.

போடி முழுவதும் ஜெயலலிதா-சேவல் சின்னம்-வேட்டி சேலை பணம் என்பதே பேச்சாக மாறியது.

போடியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் அன்றைக்கு இருந்தனர். அவர்களுக்கு தனித்தனியாக ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து அனுப்பினார்.

அன்றைய தேதியில் தபால் செலவே பல லட்சத்தைத் தாண்டியது. ஆனால், அதை கச்சிதமாக செய்து முடித்தது நடராஜனின் நெட்வொர்க். 

ஜெயலலிதா-நடராசனைக் கைது செய்!

ஜெயலலிதாவின் பிரசாரமும், ஜெயலலிதாவுக்காக நடராசன் செய்யும் அமளிதுமளிகளும் ஜா.அணி சார்பில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா, தி.மு.க சார்பில் போட்டியிட்ட முத்து மனோகரன், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.எம்.ராமச்சந்திரனை திணற அடித்தது.

ஜனவரி 19-ம் தேதி இறுதிநாள் பிரசாரம். பிரசாரத்தை முடிப்பதற்கு முன்பு, தொகுதிக்குள் பேரணி நடத்த அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் போட்டா போட்டி போட்டனர்.

நடராசன் ஜெயலலிதாவுக்காக போடியைத் தேர்ந்தெடுத்தபோதே,பேரணிக்கும் அனுமதி கேட்டு போலீஸுக்கு விண்ணப்பம் கொடுத்திருந்தார்.

அதனால் ஜெ.அணிக்குத்தான் பேரணி நடத்த போலீஸ் அனுமதி கொடுத்தது. இதில் கடுப்பாகிப்போன காங்கிரஸ்காரர்கள், ஓட்டுக்கு வேட்டி சேலை கொடுக்கும் ஜெயலலிதா-நடராஜனைக் காவல்துறையே கைது செய்! என்று தட்டிபோர்டு வைத்தனர்.

அந்த நாட்களில் ஜெயலலிதாவோடு நெருக்கமாக இருப்பவர்கள், போயஸ் கார்டன் வீட்டுக்கு அடிக்கடிப்போய் வருகிறவர்களுக்கு மட்டும்தான் நடராசனைத் தெரியும்.

ஆனால், போடியில் நடராசனையும் கைது செய் என்று தட்டிபோர்டு வைக்கும் அளவுக்கு அந்தத் தொகுதியில் நடராசனின் தேர்தல் வேலைகள் இருந்தன. எதிரணி அதில் அவ்வளவு எரிச்சல் அடைந்திருந்தது. 

ஜீப்பில் ஆட்கள்… வேனில் கல்… 

சசிகலா, ஜெயலலிதா

இறுதி நாள் பேரணிக்காக கேரளாவில் இருந்து 75 ஜீப்களை கொண்டு வந்தது ஜெ.அணி.

அதில் வெளியூர்களில் இருந்து ஆட்களை ஏற்றி வந்து பேரணியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

அதற்கு முன்பாக, வேனில் நின்றபடி போடி நகருக்குள் ஓட்டுக் கேட்டுவந்தார் ஜெயலலிதா.

அப்போது ஒரு சிறிய கல் ஜெயலலிதாவின் வேனில் பாந்தமாகப் போய் விழுந்தது. அதற்காகவே காத்திருந்ததுபோல அந்தக் கல்லைக் கையில் எடுத்த  ஜெயலலிதா, “பொதுமக்களே! நான் வெற்றி பெறப்போவதை அறிந்து கொண்ட என் எதிரிகள், இப்போது என்னைக் கல்லால் அடிக்கிறார்கள். இதற்கு நீதி வழங்குங்கள்!” என்றார்.

எரியப்பட்ட கல்லும் செட்டப்… எரிந்த ஆளும் செட்டப்… அதை வைத்து ஜெயலலிதா செய்த பிரசாரமும் செட்டப். எல்லாம் நடராஜனின் சித்து வேலைகள். 

ஜெ.அணியில் சீட் கேட்டவர்களிடம் 50 ஆயிரம், ஒரு லட்சம் என்று நடராஜன் வசூல் செய்திருந்தார். சீட் கிடைக்காதவர்கள் பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.

ஆனால், யானை வாயில் போன கரும்பு திரும்ப வருமா? ஏமாந்த சோணகிரிகளிடம் இருந்து டெபாசிட்டாக வாங்கிய தொகை மட்டும் மூன்று கோடியே எழுபத்து நான்கு லட்ச ரூபாய்.

அதைத் திருப்பிக் கேட்டவர்களிடம், “நம் ஆட்சி வந்தால்… உங்கள் பணம் திரும்பி வந்துவிடும்” என்றார் நடராஜன்.

“நாம் ஆட்சிக்கு வரவில்லை என்றால்” என பணம் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது, “அது கட்சிக்கு நன்கொடையாகிவிடும்” என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டார் நடராசன்.

இவ்வளவு களேபரங்களை நடத்தி தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானபோது, ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

ஆனால், அவர் அணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை; ஆனாலும், சட்டமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு ஒரு அழுத்தமான அடையாளம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர்-கருணாநிதி என்று சுழன்ற தமிழக அரசியல், கருணாநிதி-ஜெயலலிதா என்று சுழலத் தொடங்கியது அந்தப் புள்ளியில்தான்.  

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s