உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 35

ஆட்சியைக் கலைக்க அ.தி.மு.க, காங். கூட்டணி! 

கருணாநிதி ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதற்காக ராஜீவ் காந்தியோடு பல பேரங்களை நடத்திப் பார்த்தார்.

ஜெயலலிதாவின் ஒற்றைக் கோரிக்கையை பணயமாக ஏற்ற ராஜீவ்காந்தி, 1989 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை சாதித்துக் கொண்டார்.

தமிழகத்தில் வெற்றிகரமாக அ.தி.மு.க-காங்கிரஸ்-சி.பி.ஐ(தா.பாண்டியன்) அமைந்தது. இதற்குப் பின்னணியில் காங்கிரஸ் பக்கம் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி வேலை செய்தார்.

வழக்கம்போல், அ.தி.மு.க பக்கம் இருந்தது சாட்சாத் நடராசன்தான்.

அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி

ஜெயலலிதா, ராஜீவ் காந்தி

1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது, அ.தி.மு.க-காங்கிரஸ்- இந்திய கம்யூனிஸ்ட்(தா.பாண்டியன்) கூட்டணி அசுரத்தனமான வெற்றியை ஈட்டி இருந்தது.

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் நாகப்பட்டினத்தைத் தவிர மற்ற அ.தி.மு.க 11, காங்கிரஸ் 27, சி.பி.ஐ (தா.பாண்டியனும் கைசின்னத்தில் போட்டியிட்டார்) – 1 தொகுதி என 39 தொகுதிகளை இந்தக் கூட்டணியே கைப்பற்றி இருந்தது.

தி.மு.க-வுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. தி.மு.க கோட்டையான சென்னையே ஓட்டையாகிப் போய் இருந்தது. காங்கிரஸுக்கு தமிழகத்தில் கிடைத்திருந்த இந்த வெற்றி மற்ற மாநிலங்களில் கிடைக்கவில்லை.

அதனால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை. மாறாக, தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. வி.பி.சிங் பிரதமரானார்.

அதனால், தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கை கானல் நீராகக் கட்சியளித்தது.

‘எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல்’ தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத தி.மு.க-வுக்கு வி.பி.சிங் அமைச்சரவையில் இடம் கொடுக்க முன்வந்தார். பதறிப்போனார் ஜெயலலிதா, டெல்லி பறந்தார் நடராசன்.

தேர்தல் நேர பேரங்கள் வெளியாகும்! – டெல்லி எச்சரிக்கை

ராஜீவ் காந்தி, ஜெயலலிதா

டெல்லி சென்ற நடராசன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைச் சந்திக்கவில்லை. தேசிய முன்னணித் தலைவர்கள் சிலரைச் சந்தித்தார்.

ஜெயலலிதா சொன்னவர்களையும் சந்தித்தார்… ஜெயலலிதா சொல்லாதவர்களையும் சந்தித்தார் நடராசன்.

அப்போது, ஹெக்டே மூலம் தேசிய முன்னணித் தலைவர்களில் ஒருவரான அருண் நேருவுக்கு நடராசன் தகவல் அனுப்பினார்.

“தி.மு.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டாம். ஒரு இடம் கூட ஜெயிக்காத தி.மு.க-வை நம்பி எந்தப் பயனும் இல்லை.

தேவைப்பட்டால் தமிழகத்தில் 11 எம்.பி-க்களை வைத்துள்ள அ.தி.மு.க ஆதரவு கொடுக்கும். எதிர்காலத்தில் கூட்டணிகூட வைத்துக் கொள்ளலாம்” என்பதுதான் நடராசன் கடத்திய தகவல்.

ஆனால், நடராசன்-ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கையை பிரதமர் வி.பி.சிங் புறக்கணித்துவிட்டார்.

“கருணாநிதியை வஞ்சிப்பதன் மூலம் தேசிய முன்னணி உடைவதை நான் விரும்பவில்லை” என்று கறாராக வி.பி.சிங் மறுத்துவிட்டார்.

இந்த திரைமறைவு பேரங்களுக்கு அடிப்படையாக இருந்த ரகசியம் ஒன்று அந்த நேரத்தில் வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அருண்நேருவை சந்திக்க நடராசனுக்கு ஜெயலலிதா கொடுத்தனுப்பிய அறிமுகக் கடிதத்தின் நகல்தான் அந்த ரகசியம். அது டெல்லி வழியாக கருணாநிதியின் கைகளுக்கு வந்துசேர்ந்தது.

கருணாநிதிக்கு வந்ததுபோல், ஜெயலலிதாவின் ‘டபுள் கேம்’ பற்றிய பிளான் காங்கிரஸ் கட்சியின் தலைமையையும் எட்டியது.

ஜெயலலிதாவின் இரட்டை நிலைப்பாட்டைப் பார்த்து கடுப்பான காங்கிரஸ் தலைமை, “ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு என்ன நாடகம் நடத்துகிறீர்கள்.

நீங்கள் இப்படி எல்லாம் அரசியல் செய்தால், நாங்கள் இதைவிட பலமடங்கு செய்வோம். தேர்தல் நேரத்தில் கைமாறிய பண விவகாரங்களை எல்லாம் வெளியிட வேண்டியது வரும்” என்று மிரட்டியது.

அதில் கொஞ்சம் மிரண்டுபோனார் ஜெயலலிதா!

ஜெ. நடத்திய ‘இரண்டாவது ராஜினாமா’ நாடகம்!

நடராசனிடம் ரகசியமாகக் கொடுத்தனுப்பிய அறிமுகக் கடிதம் கருணாநிதியின் கைகளுக்கு எப்படி வந்தது என்பதில் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தை வைத்து ஜெயலலிதா, சசிகலாவோடு சண்டை போட்டார். இருவருக்கும் மனஸ்தாபம் முற்றியது.

வருத்தத்தில், சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேறினார். நடராசனையும் கூட அழைத்துக் கொண்டு, கூத்தாநல்லூரில் உள்ள தனது அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார் சசிகலா.

ஒருநாள் ஆனது… இரண்டு நாள் ஆனது… அதற்கு மேல் ஜெயலலிதாவால் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அந்தளவுக்கு சசிகலா அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் மனதில் இடம்பிடித்திருந்தார்.

ஜெயலலிதாவின் தேவைகளை சசிகலாவால் மட்டும்தான் சரியாக நிறைவேற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருந்தது.

அதனால் சசிகலா பிரிந்து சென்றதும் தவித்துப்போன ஜெயலலிதா, கூத்தாநல்லூருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார்.

ஆனால், சசிகலாவைத் தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. என்ன செய்வதென்று யோசித்தவர், சசிகலாவை திரும்ப வரவழைக்க ராஜினாமா நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

1989 டிசம்பர் 18-ம் தேதி மாலை போயஸ் கார்டனுக்கு சில குறிப்பிட்ட பத்திரிகை நிருபர்களை ஜெயலலிதா அழைத்தார்.

அவர்களுக்குப் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, “நான் என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்; அரசியலில் இருந்தும் முற்றிலுமாக ஒதுங்குகிறேன்; முன்புபோல இல்லை. இம்முறை என் முடிவு மாறாது” என்று அறிவித்தார்.

நிருபர்களும் இதென்ன மீண்டும் ஒரு நாடகம் என்று அதிர்ச்சி அடைந்தனர். பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த நிருபர்கள் கொஞ்ச நாளில் சரியாகிவிடுவார் என்று பேசிக்கொண்டே கலைந்தனர்.

“தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தால் சசிகலா-நடராசன் தன்னிடம் திரும்பிவிடுவார்கள்” என்பது ஜெயலலிதாவின் கணிப்பு.

தங்கள் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேறினால், ஜெயலலிதாவின் கோபம் மறைந்து மீண்டும் தங்களை அழைத்துக் கொள்வார் என்பது சசிகலா-நடராசனின் கணிப்பு. இரண்டு கணிப்புகளும் அன்று சரியாகப் பலித்தது.

மீண்டும் சசிகலா… மீண்டும் ஜெயலலிதா…

ஜெயலலிதாவின் ராஜினாமா விவகாரம், கூத்தாநல்லூரில் இருந்த சசிகலா, நடராசனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.கவில் பலர் நடராசனைத் தொடர்பு கொண்டு பேசினர். “நீங்கள் வந்தால்தான் அந்த அம்மாவைச் சமாதானப்படுத்த முடியும்.

இல்லையென்றால், இந்தக் கட்சி அழிந்துவிடும். எங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்” என்று புலம்பினர்.

சசிகலா-நடராசன் சென்னை திரும்பினார்கள். டிசம்பர் 19-ம் தேதி காலை போயஸ் கார்டனுக்கு சசிகலா மட்டும் சென்றார். அப்போது நடந்த ஜெ-சசி சந்திப்பு உணர்ச்சிகரமாக இருந்தது.

“இனி உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன்” என்று சசிகலா சத்தியம் செய்தார். ஜெயலலிதா நார்மலானார்.

அந்த நேரத்தில், ஜெயலலிதாவைச் சந்திக்க ஏராளமனவர்கள் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருந்தனர்.

அவர்களில் மூன்று பேரை மட்டும் உள்ளே அனுமதிக்கும்படி சசிகலா உத்தரவு பிறப்பித்தார்.

ஜெயலலிதா

முத்துச்சாமி, மாதவன், எஸ்.டி.எஸ். என்று மூன்றுபேர்தான் அந்த அதிர்ஷ்டசாலிகள்.

மூவரும் ஜெயலலிதாவைச் சமாதானம் செய்தார்கள். மற்றவர்களைவிட சசிகலாதான் ஜெயலலிதாவை அதிகமாகச் சமாதானம் செய்தார்.

அதன்பிறகு, அன்று மாலையும் பத்திரிகை நிருபர்கள் போயஸ் தோட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் ராஜினாமாவை வாபஸ் வாங்குவதாக ஜெயலலிதா பேட்டி கொடுத்தார்.

இப்படி அந்தக் காலகட்டத்தில் நடராசன்-ஜெயலலிதா மோதல் பலமுறை எழுந்தது.

அந்த மோதல்களில் ஜெயலலிதாவை ஜெயிக்கவிடாமல் செய்தவை, அவர் சசிகலா மீது வைத்திருந்த பாசமும் தேவையும்தான்.

இரண்டாவது முறையாக ஜெயலலிதாவின் ராஜினாமா நாடகம் அரங்கேற்றப்பட்டதற்கும் அதுதான் காரணம். அது ஒரே நாளில் முடிவுக்கு வந்ததற்கும் அதுதான் காரணம்.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s