உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 40

தமிழக அரசு டிஸ்மிஸ்!

“தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்தால் டெல்லியில் ஆட்சி கவிழும்; தமிழகத்தில் ஆட்சி கலைந்தால் டெல்லியில் ஆட்சி பிழைக்கும்” என்று டெல்லியை மிரட்டினார் ஜெயலலிதா. 

தி.மு.க ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று அப்படித் துடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.

அதைப் பயன்படுத்தி ஜெயலலிதாவை வைத்தே, பிரதமர் சந்திரசேகருக்கு பிரஷர் கொடுத்துக் கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி.

ஜெயலலிதா கேட்கிறபடி தி.மு.க ஆட்சியைக் கலைக்க காரணங்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.

காரணங்கள் இருக்கிறது என்று சொல்லி பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுக்களை பட்டியல் போட்டுக் கொண்டிருந்தார் ப.சிதம்பரம்.

ஆட்சி 5 ஆண்டுகளுக்கும் நிலைக்குமா… இடையில் கலையுமா… என்று தெரியாமல் கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார் கருணாநிதி.

கடைசியில் ஜெயலலிதா நினைத்ததே நடந்தது.

வாழப்பாடி வைத்த வெடி!

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஜெயலலிதா

தி.மு.க ஆட்சியைக் கலைக்கும் வேலைகள், 1990 அக்டோபர், நவம்பர் மாதங்களில் வேகம் பிடிக்கவில்லை.

மந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

‘அது நடக்கும்போது நடக்கட்டும்…’ என்ற எண்ணத்தில்தான் ஜெயலலிதாவும் இருந்தார்.

அதனால்தான் அவர் அந்த நேரத்தில் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் போய் ஓய்வெடுக்கப் போனார்.

அதோடு அந்தத் தோட்டத்தின் மையத்தில், பளிங்கு மாளிகை ஒன்றைக் கட்டும் வேலைகளையும் தொடங்கினார்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் உதவியோடு அந்த மாளிகை வேகமாக எழும்பியது. 

அந்தத் திருப்தியில், அங்கிருந்து கிளம்பி பெங்களூரு ஜிண்டால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கக் கிளம்பிவிட்டார்.

இப்படி ஓரளவுக்கு பெரிய குழப்பம் இல்லாமலேயே தமிழகத்தின் அரசியல் சூழல் நகர்ந்து கொண்டிருந்தது.

ஜெயலலிதா தமிழகத்தில் இல்லாத அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்களின் நிறமும் குணமும் லேசாக மாறத் தொடங்கின.

தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டார்.

அவர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றால், தமிழகத்தில் கூட்டணி அரசாங்கம் தான் அமையும்; அதற்கு யார் முதல்வர் என்பதை ராஜீவ்காந்தியும் ஜெயலலிதாவும் கலந்துபேசி பிறகு முடிவு செய்வார்கள்” என்று தெவித்தார்.

இந்தப் பேட்டி ஜெயலலிதாவின் நிம்மதியைக் கெடுத்தது.

ஜிண்டால் மருத்துவமனையில் சிகிச்சையை முடித்துவிட்டு, பெங்களூரு ஜெய மஹால் எக்ஸ்டென்சன் வீட்டில் ஓய்வில் இருந்த ஜெயலலிதாவின் நிம்மதி குலைந்தது.

ஜெயலலிதா கொதித்துப் போனார். நடராசன் துடித்துப் போனார். காங்கிரஸ் கட்சி ஜெயலலிதாவின் கனவை மட்டும் கலைக்கவில்லை… நம் இலட்சியத்தையும் தகர்க்கப் பார்க்கிறது என்று நடராசன் நினைத்தார்.

அதன்பிறகுதான் தி.மு.க-வைக் கலைப்பதற்கான வேலைகளில் தீவிரமாகக் களம் இறங்கினார் ஜெயலலிதா. 

பெண் என்று நினைத்து ஏமாற்றப் பார்க்கிறீர்களா?

பெங்களூரு ஜெய மஹால் வீட்டில் இருந்து, டெல்லியில் இருந்த சுப்பிரமணிய சுவாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயலலிதா,

“என்னிடம் ராஜீவ் காந்தி ஒன்றைச் சொல்கிறார்… தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு நேர் எதிராகப் பேசுகிறார்கள்.

ஒரு சாதரண பெண் என்று நினைத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா… மத்தியில் சந்திரசேகர் அரசாங்கத்துக்கு ராஜீவ் காந்தி என்னிடம் ஆதரவு கேட்டபோது என்ன சொன்னார்?

தமிழகத்தில் நீங்கள்தான் முதல்வர் என்று சொல்லித்தானே என் ஆதரவைப் பெற்றார்.

ஆனால், வாழப்பாடி ராமமூர்த்தி இப்போது அதற்கு நேர்மாறாகப் பேசுகிறார்.

அப்படியானால், நானும் என் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டியது வரும்”

என்று பொறிந்து தள்ளினார்.

ஜெயலலிதாவின் இந்த கோபத்தில் டெல்லி கொஞ்சம் நடுங்கிப் போனது. ஜெயலலிதாவிடம் டெல்லி சரண்டர் ஆனது.

பிரதமர் சந்திரசேகரே ஜெயலலிதாவைச் சந்திக்க சென்னை வந்தார்.

‘ஜெயலலிதாவைச் சந்திப்பதற்காகவே பிரதமர் தமிழகம் வருகிறார்’ என்று அறிவிப்பது நன்றாக இருக்காது என்பதால், ‘காஞ்சி சங்கராச்சாரியாரை சந்திக்கப் பிரதமர் வருகிறார்’ என்று அறிவித்தனர். 

ஜெயலலிதாவை சமாதானம் செய்த சந்திரசேகர்!

பிரதமர் சந்திரசேகர், ஜெயலலிதா

சங்கராச்சாரியாரைச் சந்தித்துவிட்டு, ஜெயலலிதாவைச் சந்தித்த பிரதமர் சந்திரசேகர், “அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தின் முதல்வர் நீங்கள்தான்;

இந்த உறுதியை ராஜீவ் காந்தி என் மூலமாக உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்; அதனால், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று சமாதானம் செய்தார்.

அதில் சமாதானம் ஆனாலும்கூட ஜெயலலிதா அதோடு ஓய்ந்துவிடவில்லை.

“தி.மு.க ஆட்சியை எப்போது கலைக்கப் போகிறீர்கள்” என்று கறாராகக் கேட்டார்.

அதற்குப் பொறுமையாகப் பதில் சொன்ன பிரதமர் சந்திரசேகர்,

தி.மு.க ஆட்சியைக் கலைக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், எந்த அடிப்படையில் கலைக்கச் சொல்கிறீர்கள்.

தமிழகத்தில் சட்டம்-ஓழுங்கு அவ்வளவு மோசமாக இல்லை.

பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஒரு அரசாங்கத்தை அவ்வளவு எளிதாக கலைக்க முடியாது. நான் அட்டர்னி ஜெனரல் ஜி.ராமசாமியை கூடவே அழைத்து வந்துள்ளேன்.

அவரிடம் நீங்கள் ஆலோசனை நடத்துங்கள். அதோடு தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நிறைய நடத்துங்கள்”

என்று சொல்லிவிட்டு மீண்டும் டெல்லிக்கு கிளம்பிச் சென்றார்.

இதையடுத்து டெல்லி கிளம்பிப்போன ஜெயலலிதா, ஜனாதிபதி வெங்கட்ராமனைச் சந்தித்தார்.

அவரிடம் தி.மு.க ஆட்சி மீதான குற்றச்சாட்டுக்களை பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டு வந்தார். 

இரண்டாவது விருந்து… இறுதி எச்சரிக்கை…

ஜெயலலிதா டெல்லியில் இருந்து திரும்பிய சில நாட்களிலேயே, ராஜீவ் காந்தி சென்னை வந்தார். 1991 ஜனவரி 16-ம் தேதி அந்தச் சந்திப்பு நடந்தது.

ராஜீவ் காந்தியும் சங்கராச்சாரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்லிவிட்டுத்தான் வந்தார்.

சென்னையில் விமானத்தைவிட்டு இறங்கிய ராஜீவ் காந்தியை வரவேற்க ஜெயலலிதா மதியம் 2.30 மணிக்கே விமான நிலையம் வந்துவிட்டார்.

வி.ஐ.டி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் விஸ்வநாதனின் ‘கண்டஸா‘ காரில் ஜெயலலிதா வந்திருந்தார்.

விமான நிலையத்தில் இறங்கிய ராஜீவ் காந்தி அங்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், “கருணாநிதி ஆட்சியைக் கலைப்பதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.

அவற்றை எல்லாம் பிரதமரே சொல்லி இருக்கிறார். அதனால், இந்த ஆட்சி கலைக்கப்படுவது உறுதி.

அது எப்போது என்பதை பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

அதுவே ஜெயலலிதாவுக்கு பரம திருப்தியாக இருந்தது. அன்று இரவு ராஜீவ் காந்திக்கு போயஸ் கார்டன் வீட்டில் விருந்து நடந்தது.

அந்த விருந்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, எச்.கே.எல்.பகத், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விருந்தின்போது,

“பிப்ரவரி மாதத்தில் தி.மு.க ஆட்சி தமிழகத்தில் இருக்கக்கூடாது. அதன்பிறகும் தி.மு.க ஆட்சி இருந்தால், மத்தியில் சந்திரசேகர் ஆட்சிக்கு அ.தி.மு.க கொடுக்கும் ஆதரவை மறு பரீசிலனை செய்ய வேண்டியது வரும்”

என்று எச்சரிக்கை தொனியில் ஜெயலலிதா தன் முடிவை தெளிவாக எடுத்துச் சொன்னார். 

கவர்னருக்கு கருணாநிதி கொடுத்த பட்டம் – ‘மாவீரன்’ பர்னாலா!

சுர்ஜித்சிங் பர்னாலா

‘ஆட்சி கலைக்கப்படப் போகிறது’ 1991 ஜனவரி 30-ம் தேதி மதியமே தி.மு.க-வுக்கு தெரிந்துவிட்டது.

காரணம், முதல்நாள் இரவு திடீரென தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவரசமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

அந்தத் தகவல் கருணாநிதிக்கு கிடைத்ததுமே, ‘ஆட்சி கலைக்கப்படும்’ என்பதை அவர் யூகித்துவிட்டார்.

ஜனவரி 30-ம் தேதி ஆலிவர் வீட்டில் அமைச்சரவை சகாக்களுடன் முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார் கருணாநிதி.

அந்த நேரத்தில் திடீரென நியாபகம் வந்தவராய், பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கூட்டத்துக்கு கிளம்பினார்.

அவருடைய சகாக்கள், இந்த நேரத்தில் போய்த்தான் ஆக வேண்டுமா? என்று கேட்டபோது, “நிச்சயம் போய்த்தான் ஆகவேண்டும்… அங்கு நான் பேசுவதன் மூலம் நான் தெரிவிக்கும் கருத்துக்கள் முக்கியமானவை… நான் என்ன பேசப்போகிறேன் என்பதை அங்கு வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் எந்தவித சலனத்தையும் காட்டாமல் நிதானமாகப் பேசத் தொடங்கிய கருணாநிதி, “நான் இப்போது முதல் அமைச்சரா? இல்லையா? என்று எனக்கே தெரியாது.

நான் அந்த நாற்காலியில் இருந்தாலும்… இல்லை என்றாலும்… நான் உங்களோடுதான் இருப்பேன். தமிழகத்தின் ஆளுநர் பர்னாலா டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் எதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. டெல்லியில் அவர் இந்த நிமிடம் வரை ஆட்சிக் கலைப்பு கடிதத்தில் கையெழுத்துப் போடவில்லை.

எனவே, அவரை நான் இனிமேல் ‘மாவீரன்’ பர்னாலா என்றுதான் அழைப்பேன் என்றார். 

தமிழக அரசு டிஸ்மிஸ்!

ஜனாதிபதி வெங்கட்ராமனுடன் ஜெயலலிதா

டெல்லியில் தமிழ்நாடு ஹவுஸில் தங்கி இருந்தார் தமிழக ஆளுநர் பர்னாலா. அவரை உள்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் வரிசையாக வந்து சந்தித்தனர்.

“தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான குற்றச்சாட்டுப் பட்டியல் தயாராகிவிட்டது. நீங்கள் அதில் கையெழுத்திட வேண்டும்” என்றனர்.

பர்னாலா அதற்கு மறுத்தார். கடைசிவரை அவர் கையெழுத்துப்போடவில்லை.

“ஆட்சியைக் கலைக்கும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமாக இல்லை” என்று வாதாடிப் பார்த்தார்.

ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் அவர் அந்த அறிக்கையில் கையெழுத்துப் போடாமலே திரும்பிவிட்டார்.

தமிழ்நாடு ஹவுஸில் பணிபுரிந்த தமிழக இணை இயக்குனர் சம்பத் மூலம், ‘ஆட்சி கலைப்பு உறுதி’ என்ற தகவலை கருணாநிதிக்கு தெரியப்படுத்தினார்.

அதன்பிறகு சென்னை கிளம்ப ஆளுநர் பர்னாலா முடிவெடுத்தபோது அவருடைய விமானம் தாமதம் செய்யப்பட்டது.

அவருக்கு பல வழிகளில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஆனால், பர்னாலா எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை.  

கிண்டி கவர்னர் மாளிகைக்கு வந்ததும் கருணாநிதியைத் தொலைபேசியில் அழைத்தார்.

“ நான் என் மனசாட்சிப்படி நடந்துகொண்டேன். என் சம்மதமின்றியே அனைத்தும் நடக்கின்றன” என்று சொன்னார்.

அதே நேரத்தில் டெல்லியில் கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். 

அமர்க்களப்பட்ட போயஸ் கார்டன்… 

தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், நடராசன் வீட்டில் அ.தி.மு.க-வினர் குழுமத் தொடங்கினார்கள்.

டிஸ்மிஸ்க்கு மறுநாள் வெகு அமர்க்களமாக விழித்தெழுந்தது நடராசனின் வீடு.

“அரசியல் பேசுபவர்கள் இங்கு வரவேண்டாம்” என்று அவர் வீட்டுக் கதவில் மாட்டப்பட்டு இருந்த போர்டு மாயமாய் மறைந்தது.

காலையிலேயே தொண்டர்கள், வட்டம், மாவட்டச் செயலாளர்கள் பெரிய பெயரி ரோசப்பூ மாலைகளோடு நடராசனைப் பார்க்க வந்துவிட்டனர்.

நேரம் ஆக ஆக ஆட்டோக்களும் கார்களும் நடராசன் வீட்டைச் சூழ ஆரம்பித்தன.

கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்தே தீருவேன் என்ற நடராசனின் சபதம் நிறைவேறியது.

மாலையில் ஒரு காரில் நான்கு பேருடன் அங்கிருந்து கிளம்பினார் நடராசன்.

அந்தக் கார் போயஸ் கார்டனுக்குப் போனது. அங்கு ஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்ட சந்தோஷத்தில் இருந்தார். 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s