உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 47

ஜெயக்குமார் Vs சசிகலா! 

ஜெயலலிதா, அவரது அண்ணன் ஜெயக்குமார், அண்ணி விஜயலெட்சுமி

ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமார். ஜெயலலிதாவுக்கு உடன்பிறவாச் சகோதரி சசிகலா.

இந்த இரண்டு உறவுகளையும் தன்  தராசுத் தட்டில் சமமாக நிறுத்தி வைக்க அரும்பாடுபட்டார் ஜெயலலிதா.

அந்தப் பாசப் போராட்டத்தில் ஜெயலலிதா தோற்றார்; சசிகலா வென்றார்.

வேறு வழியில்லாமல் தன் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா.

அவருக்கு ஏற்பட்ட அந்த நிலைக்குக் காரணம், சசிகலாவின் பழிக்குப் பழி வாங்கும் திட்டமாக இருக்கலாம்; அல்லது எதிர்காலத்தில் ‘தனக்கு எதிரியாக ஜெயக்குமாரின் மகள் தீபா வரக்கூடும்’ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம்; அல்லது ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட, ஈவு இரக்கமற்ற ஒரு கறார் ஒப்பந்தமாகவும் இருக்கலாம்.

‘உன்னுடன் இருப்பதற்காக நான், என் கணவரைப் (நடராசன்) பிரிந்துள்ளேன்; உறவுகளை ஒதுக்கி வைத்துள்ளேன்; தம்பியைத் தள்ளி வைத்துள்ளேன்.

அதுபோல, என்னுடன் நீ இருக்க வேண்டுமானால் உன் அண்ணனையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வை’ என்பதைப் போன்றதொரு ஒப்பந்தமாகவும் அது இருந்திருக்கலாம்.

ஜெயலலிதாவுடன் தனக்கு ஏற்பட்ட இணைப்பை தக்க வைத்துக் கொள்ள சசிகலா எதையும் செய்யவும் தயங்காதவராக இருந்தார்.

ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை என்றதும், தன் ரத்த உறவுகள் அத்தனையையும் கொஞ்சமும் தயங்காமல் சசிகலா ஒதுக்கித் தள்ளினார்.

அதேபோல ஜெயலலிதாவோடு தனக்கு உருவான பிணைப்புக்கு இடையில், ஜெயலலிதாவின் உறவுகள் குறுக்கிட முயன்றபோது அவைகளைக் கொஞ்சமும் இரக்கமின்றி ஓரம் கட்டினார்.

அப்படி ஓரம் கட்டப்பட்டதுதான் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம்

ஜெயக்குமார் Vs சசிகலா!

ஜெயக்குமார், தீபக், விஜயலெட்சுமி, தீபா, சசிகலா

1993 வரை ஜெயலலிதா அவரது அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தோடு நெருக்கமாகத்தான் இருந்தார். அப்போது ஜெயக்குமாரின் குடும்பம் தி.நகரில் வசித்தது.

ஜெயக்குமாரின் மனைவி விஜய லெட்சுமி. மகள் தீபா. மகன் தீபக். தங்கை தமிழக முதல்வராக இருந்தாலும், ஜெயக்குமார் தனியாக-எளிமையாகவே தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

எப்போதாவது அவர் போயஸ் கார்டனுக்கு குடும்பத்தோடு வந்து போவதும், சில தேவைகளைக் கேட்டுப் பெறுவதும், போயஸ் கார்டனில் நடக்கும் விழாக்கள், விருந்துகளில் கலந்து கொள்வதுமாக இருந்தார்.

அது சசிகலாவுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. குறிப்பாக அந்தப் பெண் தீபா… சசிகலாவுக்கு உறுத்தலோடு எரிச்சலையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தால், ஜெயலலிதாவின் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்வது, ஜெயலலிதாவைப் போலவே கைக்குட்டையால் முகம் துடைப்பது என தீபா ஒரு மினி ஜெயலலிதாவாகவே இருந்தார்.

12-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த தீபாவின் பார்வையும், பேச்சும், பாவனைகளும் நொடிக்கு நொடி ஜெயலலிதாவையே நினைவுபடுத்தியது.

அதோடு அத்தையின் உடைகளை அடுக்கி வைப்பது, அத்தைக்கு உடைகளைத் தேர்வு செய்வதிலும் தீபா தலையிட்டார். ஜெயலலிதாவும் தீபாவை, ‘டார்லிங்… டார்லிங்’ என அன்பொழுக அழைத்துக் கொஞ்சினார்.

இது எல்லாம் சசிகலாவுக்கு எரிச்சலையும், எதிர்காலம் பற்றிய கலக்கத்தையும் உண்டாக்கியது. 

தீபா vs சசிகலா!

தீபா, சசிகலா

நேரு ஸ்டேடியம் திறப்பு விழா நிகழ்ச்சி வந்தது. அதில் பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்டார்.

சசிகலாவின் அக்காள் வனிதாமணி உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

ஜெயலலிதா தன் அண்ணன் குடும்பத்தை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். இரண்டு குடும்பங்களும் போயஸ் கார்டனில் சங்கமித்தன.

அங்கிருந்து அனைவரும் ஒரே வேனில் கிளம்பி நேரு ஸ்டேடியத்துக்குப் போனார்கள்.

பிரதமர், முதலமைச்சர் அமர்ந்திருந்த மேடைக்குப் பக்கவாட்டில் வி.ஐ.பி-க்களுக்கு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

சசிகலாவுக்காக தனி சோஃபா போடப்பட்டு இருந்தது. மூன்று பேர் அமரக்கூடிய அந்தச் சோபாவில் சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணி விஜயலெட்சுமியும் உட்கார்ந்திருந்தனர்.

மூன்றாவது இடம் சசிகலாவின் அக்காவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் தீபா வந்து அமர்ந்து கொண்டார். சசிகலாவின் அக்காள் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த நிகழ்வு, ஏற்கெனவே தீபா மீது ஆத்திரத்தில் இருந்த சசிகலாவின் மனதில் மேலும் கொந்தளிப்பை உருவாக்கியது.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியதும் ஜெயலலிதாவிடம் சசிகலா புகார் வாசித்தார்.

அதைக் கேட்டு ஆத்திரப்பட்ட ஜெயலலிதா, தன் அண்ணனைக் குடும்பத்துடன் மீண்டும் ஒரு நாள் போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்தார்.

4 மணிநேரம் தன் அண்ணனோடு பேசினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார்.

அந்த பேச்சுவார்த்தை முற்றியபோது ஜெயலலிதாவிடம் கோபம் கொப்பளித்தது. அதைப் பார்த்தே மிரண்டுபோன தீபா, மயக்கம் போட்டுக் கீழே சரிந்தார்.

தீபா மயங்கிச் சரிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா கோபம் தணிந்து நிதானத்துக்கு வந்தார்.

தனது அண்ணன் குடும்பத்தைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.

ஆனால், அதன்பிறகு ஜெயக்குமாரின் குடும்பம் போயஸ் கார்டன் பக்கமே வரவில்லை.

அந்த நேரத்தில் ஜெயக்குமாரின் குடும்பம் போயஸ் கார்டனுக்குள் மீண்டும் வருவதற்குப் மேகநாதன் என்பவர் பாலம் போட்டார். 

கஞ்சா வழக்கில் மேகநாதன் கைது. 

ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் காலத்தில் இருந்து, மேகநாதன் ஜெயக்குமாரோடு இருந்தவர்.

உதவியாளர், கார் டிரைவர், அட்வைசர் என ஜெயக்குமாருக்கு மேகநாதன்தான் ஆல்-இன்-ஆல்.

மேகநாதன் இல்லாமல் கழியும் ஒரு நாள், ஜெயக்குமாருக்கு மிகக் கடினமானதாக இருக்கும்.

அப்படிப்பட்ட மேகநாதன், ஜெயக்குமார் குடும்பத்தை மீண்டும் போயஸ் கார்டனுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமெனத் துடித்தார்.

ஜெயக்குமார் குடும்பம் போயஸ் கார்டனுக்கு வராத அந்த நேரத்தில், மேகநாதன் ஜெயலலிதாவைச் சந்தித்தார். 

ஜெயக்குமார் குடும்பத்தைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி ஜெயலலிதாவிடம் பேசினார்.

இதையடுத்து மேகநாதனுக்கு ஜெயலலிதாவைப் பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஆனால், அதற்கும் சளைக்காத மேகநாதன், போயஸ் கார்டன் ஊழியர்கள் சிலரை வெளியில் சந்தித்து, ஜெயலலிதாவுக்குச் சில தகவல்களைக் கொண்டு போக முயன்றார்.

அதில்தான் அவருக்கு சனி பிடித்தது. மேகநாதனை ஒடுக்க முடிவு செய்து, விறுவிறுவென சசிகலா காய்களை நகர்த்தினார்.

1993 மார்ச் 5-ம் தேதி இரவு. மேகநாதனைச் சந்திக்க பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர் பாபு வந்து அவரிடம் அன்பாகப் பேசினார்.

பிறகு, “ஒரு முக்கியமான விஷயம்… உங்களிடம் பேச வேண்டும். ஹோட்டல் கண்பத்தில் போய் பேசுவோம்” என்று சொல்லி மேகநாதனை இன்ஸ்பெக்டர் பாபு அழைத்துச் சென்றார்.

ஹோட்டலுக்குள் நுழைந்தபோது, அங்கு இரண்டு கான்ஸ்டபிள்களும், ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் இருந்தனர்.

இடத்தின் சூழல் வேறு மாதிரியாக இருந்தது. ஹோட்டலுக்கு வரும்வரை அன்பாகப் பேசிக்கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் பாபு, இப்போது வேறு தொனியில் பேச ஆரம்பித்தார்.

அதன்பிறகுதான், “ஏதோ ஒரு வில்லங்கம் நம்மை மெல்லச் சுற்றிக் கொண்டிருக்கிறது” என்பது மேகநாதனுக்குப் புரிந்தது.

உடனே சுதாரித்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்ப முயன்ற மேகநாதனை அவர்கள் வெளியில் விடவில்லை.

“உன் மீது கஞ்சா வழக்குப் போடப்பட்டுள்ளது. காலையில் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். அதனால், நீ எங்கேயும் போகக்கூடாது” என்றனர்.

அவ்வளவுதான்… அதன்பிறகு மேகநாதன் கதறி அழுது கெஞ்சினார்.

ஒன்றும் பலனளிக்கவில்லை. மாறாக, “உன் மேல் பிரவுண் சுகர் வைத்திருந்ததாக வழக்குப் போடச் சொல்லித்தான் எங்களிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், நீ எனக்கு அறிமுகமான ஆள் என்பதால் கஞ்சா வழக்கோடு நிறுத்திக் கொண்டோம்.

அதனால், நீதிமன்றத்தில் எந்தப் பிரச்னையும் செய்யாமல், குற்றத்தை ஒத்துக் கொண்டு சிறைக்குப் போய்விடு” என்று மிரட்டல்தான் வந்தது.

மறுநாள் காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மேகநாதன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் அருணா ஜெகதீசன் உத்தரவிட்டார். 

ஜெயா-ஜெயக்குமார் உறவில் முறிவு!

இதற்கிடையில் மேகநாதனின் மனைவி ரேணுகா தேவியும், ஜெயக்குமாரும்  மேகநாதனை சென்னை முழுவதும் தேடினார்கள்.

போலீஸ் உயரதிகாரிகளிடம் ஜெயக்குமார் முறையிட்டார்.

“எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என அவர்கள் கையை விரித்தனர்.

ஜெயக்குமார் போயஸ் தோட்டத்துக்கு நேரில் கிளம்பிப் போனார்.

ஆனால், அவரை தெருமுனையிலேயே சிலர் மடக்கிவிட்டனர். அதன்பிறகு தொலைபேசியில் தன் தங்கையும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவைத் தொடர்பு கொள்ள முயன்றார்.

ஒரு நாள் அல்ல… இருநாள் அல்ல… தொடர்ந்து மூன்று வாரங்கள்… ஒரு நாளைக்கு 50  போன் கால்கள்… என்று முயற்சித்துக் கொண்டே இருந்தார்.

ஆனால், கடைசிவரை அவரால் ஜெயலலிதாவிடம் பேசவே முடியவில்லை.

ஒவ்வொருமுறையும் “சி.எம். ரெஸ்டில் இருக்கிறார்… கோட்டைக்குப் போய் இருக்கிறார்… தூங்குகிறார்” என்ற பதில்கள் மட்டுமே வந்தன.

ஒரு கட்டத்துக்குப் பிறகு,  ஜெயக்குமாரின் வீட்டுத் தொலைபேசியும் வேலை செய்யாமல் போனது.

அதைச் சரிசெய்ய வந்த டெலிபோன் துறை ஊழியர்கள், “சார் எங்களால் முடிந்த அளவுக்கு சரி செய்துவிட்டோம். டெலிபோன் எக்ஸ்சேன்ஜில் ஏதோ பிரச்னைபோல.

இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கையை விரித்தனர்.

ஜெயக்குமார் விரக்தியான புன்னகையுடன் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஜெயக்குமார் போயஸ் கார்டன் பக்கமே போகவில்லை.

மேகநாதனின் மனைவி ரேணுகாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் “என் கணவர் மேகநாதன், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவருடைய அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கும் நெருக்கம் உண்டாக்க முயற்சித்தார்.

அது முதல்வரின் தோழி சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் உத்தரவின்பேரில் தான், போலீஸ்காரர்கள் என் கணவர் மீது கஞ்சா வழக்குப் போட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

ப்ரியமுள்ள அம்மு! 

பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஜெயலலிதாவோடு பேச முடியவில்லை என்பதில் விரக்தி அடைந்த ஜெயக்குமார், ஒரு கடிதத்தை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார். அதில், 

பிரியமுள்ள அம்மு,

நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறேன். ஆனால், நானும் என் குடும்பமும் பெரும் சிக்கலில் இருக்கிறோம்.

நான் கடந்த மூன்று வாரங்களாக உன்னுடன் தொலைபேசியில் பேச முயற்சிக்கிறேன்.

ஆனால், முடியவில்லை. மேகநாதன் ஒரு அப்பாவி. அவன் குற்றவாளி அல்ல.

ஆனால், அவன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே நாங்கள் இங்கு இருக்கிறோம்.

அதனால் எனது கோரிக்கையை ஏற்று மேகநாதனை விடுதலை செய்ய நீ உதவ வேண்டும்.

என்னுடைய எல்லா வேலைகளுக்கும் நான் அவனையே சார்ந்துள்ளேன்.

என் மேனேஜர், உதவியாளர், டிரைவர் என எனக்கு எல்லாம் அவன்தான்.

அவன் கைது செய்யப்பட்டதில் இருந்து நான் உதவிக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறேன்.

நான் நேரில் உன்னைச் சந்தித்து விளக்கம் கொடுக்க முயற்சித்தேன்.

ஆனால், உன்னைச் சந்திக்கும் எல்லா வழிகளும் எங்களுக்கு அடைக்கப்பட்டுவிட்டன.

கடைசி முயற்சியாகத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னுடைய வேண்டுகோளைப் புரிந்துகொண்டு நீ உதவுவாய் என நம்புகிறேன். 

உன் அன்புள்ள 
பாப்பு (ஜெயக்குமார்).

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s