உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 50

சசிகலா உறவுகளுக்குள் சதுரங்கம்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, விவேக்

சசிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார்.

இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர்.

அதற்காகக் காய்களை முன்னிறுத்துவதும், பலிகொடுப்பதுமான கதைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஜெயலலிதா-சசிகலாவின் 30 ஆண்டு கால உறவில் நிகழ்த்திக் காட்டப்பட்ட அந்த ஆட்டத்தில், நடராசன், திவாகரன், பாஸ்கரன், தினகரன், சுதாகரன், ராவணன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் ஆட்ட நாயகனாக இருந்தனர்.

அவர்கள் அப்படி உருவெடுக்கும்போது, கார்டனுக்குள், கட்சிக்குள், அரசு எந்திரத்தில் எல்லையற்ற அதிகாரம் பெறுவார்கள்.

திடீரென ஒரு நாளின் ஒரு நொடியில் அவை அத்தனையும் பறிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

இரண்டுவிதமான சூழல்களிலும் சசிகலா சலனம் காட்டாமல் ஜெயலலிதாவோடு இருப்பார். இருவரின் உறவுகளுக்குள் நிகழும் எழுச்சியும் வீழ்ச்சியும் ஜெ-சசி உறவில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது. 

நடராசனின் மாயமான் வேலைகள்!

ஜெயலலிதா நடத்திய இந்த ஆட்டத்தில் வீழ்த்தப்பட்டவர்களில், மற்றவர்களுக்கும் நடராசனுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு; மற்றவர்களை மதிப்பிட முடியும்.

அவர்களின் நடவடிக்கைகளை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அவர்கள் அடுத்து செய்யப்போவதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஜெயலலிதா சொன்னால், அவர்கள் ஒடுங்கிவிடுவார்கள். ஆனால், இந்த வரையறைகள் நடராசனுக்குப் பொருந்தாது. அவரைப் புரிந்து கொள்ள முடியாது.

அவரின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியாது.

“நடராசன் தனக்கு ஆதரவாக இருக்கிறாரா, எதிராகச் செயல்படுகிறாரா?” என்பதை ஜெயலலிதாவால் கடைசி வரை கணிக்கவே முடியவில்லை.

நடராசனும் அதை ஒருநாளும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டதும் இல்லை.

“நான் நினைத்தால் ஜெயலலிதாவின் ஆட்சியை ஒரு நொடியில் கவிழ்த்துவிடுவேன்” என்று ஓர் இடத்தில் பேட்டி கொடுப்பார்.

அதற்கு அடுத்த வாரமே, “இந்த ஆட்சிக்கு எங்கிருந்தும் எந்த ஆபத்தும் வரவிடமாட்டேன்” என்று சங்கல்பம் எடுப்பார்.

ஜெயலலிதாவால் துரத்தப்பட்டாலும், சசிகலா மூலம் தன் காரியங்களைச் சாதிப்பார்; அதன் மூலம் ‘ஜெயலலிதா தன் சட்டைப் பாக்கெட்டில்தான் இருக்கிறார்’ என்ற தோற்றத்தை உருவாக்குவார்.

நடராசனின் நடவடிக்கைகளால் ஜெயலலிதா உச்சக்கட்ட வெறுப்படைந்தால், அவரைக் கைது செய்ய உத்தரவிடுவார்.

ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் நடராசன் ஜாமீனில் வெளிவருவார். அதன்பிறகும், அவருடைய மாயமான் வேலைகள் வழக்கம்போல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நடராசன் தேடப்படும் குற்றவாளி!

போலீஸ் வேனில் ஏற்றப்படும் நடராசன்

1995 ஆகஸ்ட் 20-ம் தேதி நடராசன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அன்று மாலை நடராசனை உளவு பார்க்கச் சென்ற, யதுகுலதிலகன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் நடராசன் வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.

தாக்குதலுக்கு உள்ளான போலீஸ்காரர் கொடுத்த புகாரின் பேரில், ரவி, எலியாஸ், மாறன், சுப்பிரமணி, செல்வராஜ் மற்றும் இன்னொரு ரவி கடைசியாக நடராசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

நடராசனைக் கைது செய்ய போலீஸ் தேடுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.

ஆனால், திடீரென நடராசனே சென்னை போலீஸ் கமிஷ்னரை அவரது அலுவலகத்தில் வைத்துச் சந்தித்தார்.

அங்கு வைத்து, “என்னைக் கைது செய்ய போலீஸ் தேடுவதாக செய்தி போடுகிறீர்களே… இப்போது நானே கமிஷ்னர் அலுவலகம் வந்துள்ளேன்.

என்னைக் கைது செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்று பத்திரிகையாளர்களிடம் சவால் விட்டார்.

ஆனால், அப்போது அவரை யாரும் கைது செய்யவில்லை.

ஆனால், அதற்கும் தேதி குறிக்கப்பட்டது. 1995 ஜூலை 25-ம் தேதி புயல் வீசத் தொடங்கியது.

நடராசன் கைதாகப் போகிறார் என்ற செய்தி வேகமாகப் பரவியது.

போலீஸ்காரர்களோடு, கட்சிக்காரர்களும் பத்திரிகையாளர்களும் நடராசனின் பெசன்ட் நகர் வீட்டை முற்றுகையிட்டனர்.

‘நடராசன் இங்கு இல்லை’ என அவருடைய தம்பி ராமச்சந்திரன் வாதாடினார்.

போலீஸ் அதை நம்பவில்லை. நடராசன் வீட்டுக்குள் இருந்து வெளியில் சென்றாலும் சரி… வெளியில் இருந்து வீட்டுக்குள் வர முயன்றாலும் சரி… அவரைக் கைது செய்துவிட்டுத்தான் அடுத்த வேலை என்று பிடிவாதமாக போலீஸும் இருந்தது.

ஆனால், அன்று இரவு முழுவதும் ஒன்றும் நடக்கவில்லை. 

ஜூலை 26ல் வந்த தந்தி…

ஜூலை 26-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு ஒரு தந்தி வந்தது.

திருப்பதியில் இருந்து நடராசன் பெயரில் கொடுக்கப்பட்டு இருந்த அந்தத் தந்தியில்,

“இன்று காலை நாளிதழ்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நான் தலைமறைவாக இருப்பதாகவும் என்னைக் கைது செய்ய போலீஸ் என் வீட்டை முற்றுகையிட்டு இருப்பதாகவும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.இன்னும் 3 மணி நேரத்தில் நான் உங்கள் முன்னால் சரண் அடைவேன். அப்போது என்னைக் கைது செய்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நடராசன் தந்தியைக் கொடுத்து நம்மைக் குழப்பிவிட்டு, நீதிமன்றத்தில் சரண் அடையப்போகிறார் என்று போலீஸ் உஷாரானது.

நடராசன் நீதிமன்றத்துக்குள் போவதற்கு முன் அவரைக் கைது செய்து விட வேண்டும் என்று போலீஸ் குறியாக இருந்தது.

உடனடியாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தைச் சுற்றி 500 போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டனர்.

மணி பகல் 11.15 இருக்கும்போது, டிரக்ஸ் ஜீப் ஒன்று வேகமாக நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றது.

ஒட்டுமொத்த போலீஸ் படையும் ஜீப்பை உள்ளே நுழையவிடாமல் தடுக்க முயன்றது.

அதையும் மீறி நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்ற ஜீப்பின் முன் ஒரு போலீஸ்காரர் படுத்துவிட்டார்.

அதன்பிறகு வேறு வழியின்றி அதிலிருந்து இறங்கிய நடராசனும், அவருடைய வழக்கறிஞர் ராமகிருஷ்ணபாபுவும் விறுவிறுவென நீதிமன்றத்தை நோக்கி ஓடினர்.

ஏறத்தாழ நடராசன் நீதிமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

ஆனால், அங்கு அவரை மறைத்த போலீஸ் குண்டுகட்டாக வெளியே தூக்கி வந்தனர்.

நடராசனின் முகம் பதட்டத்தில் வெளிறிப் போனது. கண்கள் சிவந்து காணப்பட்டன.

“நீதிமன்றத்தில் சரணடைய வந்த என்னை இப்படிக் கைது செய்வது தப்பு” என்று கூச்சல் போட்டார்.

அதன்பிறகு போலீஸிடம் ஆத்திரத்தைக் காண்பித்த நடராசன் “என்னைக் கைது செய்வதற்கு, வாரண்டை காமிங்க” என்றார்.

“அதெல்லாம் எங்களிடம் இல்லை. நீங்கள் வேனில் ஏறுங்கள்” என்றார் டெபுடி கமிஷ்னர் ராஜேந்திரன்.

நீதிமன்றத்துக்கு வரும் நடராசன்

அந்த நேரத்தில் உதவி கமிஷ்னர் பன்னீர்செல்வம், நடராசனின் சட்டையைப் பிடித்து இழுத்து வேனில் ஏற்ற முயன்றார்.

உடனே கொதித்துப் போன நடராசன், “பன்னீர்செல்வம் நீ அத்துமீறி நடந்துக்கிற… பயங்கர விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என்று அரட்டினார்.

அதில் கொஞ்சம் ஜெர்க்கான பன்னீர்செல்வம், ஒதுங்கிக் கொண்டார்.

அதன்பிறகு அங்கிருந்த போலீஸ்காரர்கள் சிலர், “அண்ணே.. நாங்கள் இருக்கிறோம்.. நீங்கள் கவலைப்பட வேண்டாம். தைரியமாகக் கைதாகுங்கள்” என்று கெஞ்சியது புதுக்கதையாக இருந்தது.

ஆனால், இதுபோன்ற பல அதிர்ச்சிகளை அடுத்து நீதிமன்றம் சந்திக்க இருந்தது.

அதன்பிறகு வேனில் ஏறிய நடராசன் அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதன்பிறகு மதியம் மூன்று மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார்.

போலீஸ் ஜீப்பின் முன் சீட்டில் உட்காந்து கை காட்டிக் கொண்டு வந்த நடராசன், ‘நல்லா படம் எடுங்க’ என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லிக் கொண்டே நீதிமன்றத்துக்குள் போனார்.

மாஜிஸ்திரேட் டி.ஆர்.சீனிவாசன், மாலை 3.50 மணிக்கு வந்து நடராசன் வழக்கை முதல் வழக்காக எடுத்துக் கொண்டார்.

ஊர், பெயர், தந்தை பெயர் உள்ளிட்ட விபரங்களைப் பதிவு செய்த நீதிமன்ற ஊழியர், அதன்பிறகு நடராசனின் மனைவியின் பெயரை அவரைக் கேட்காமலே சசிகலா என்று எழுதிக் கொண்டார்.

அதைப் ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்த நடராசன், தன் வாக்குமூலத்தை ஒரு மேடைப் பேச்சாளரின் பிரசங்கத்தைப் போல பொழிய ஆரம்பித்தார். 

நான் குற்றவாளி அல்ல!

“நான் குற்றவாளி அல்ல; என் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீஸ்காரர் யதுகுலதிலகன்தான் குற்றவாளி.

என் மீது பொய் வழக்குப் போட்டு என்னைப் போலீஸ் கைது செய்துள்ளது.

அதுவும் நீதிமன்றத்தில் சரணடைய வந்த என்னை, நீதிமன்றத்தின் கேட்டை இழுத்துப் பூட்டி கைது செய்துள்ளனர்.

எனவே இந்த மாமன்றம் விரும்பி என்னை 30 ஆண்டுகள் சிறையில் இருக்கச் சொன்னாலும் நான் இருக்கிறேன்-நெல்சன் மண்டேலாவைப்போல” என்று உரையாற்றியதைப் பார்த்த, மாஜிஸ்திரேட் டி.ஆர்.சீனிவாசனே கொஞ்சம் ஆடித்தான் போனார். 

நீதிமன்றத்தில் அரங்கேறிய சோக நாடகம்

நீதிமன்றத்தில் நடராசன்

நடராசனின் வாக்குமூலத்துக்குப் பிறகு, மாஜிஸ்திரேட்டுக்குச் சோதனைகள் ஆரம்பித்தன.

நடராசனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த மாஜிஸ்திரேட், அவரை 15 நாள்களுக்கு ரிமாண்ட் செய்தார்.

அதை எதிர்பார்க்காத நடராசன், கொஞ்சம் ஆடிப் போனார்.

அதையடுத்து ஏற்கெனவே தயாராக வரவழைக்கப்பட்டு இருந்த நடராசனின் ஆள்கள் கூச்சல் போட ஆரம்பித்தனர்.

வழக்கறிஞர்கள் சிலரும் கூச்சல் போட்டனர். அதையடுத்து மாஜிஸ்திரேட்டின் அறைக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், நடராசனை ஜாமீனில் வெளியிட வேண்டும்.

இல்லையென்றால், இங்கிருக்கும் பேனில் தூக்கு மாட்டிக் கொள்வோம் என்று மிரட்டினர்.

இன்னும் சில வழக்கறிஞர்கள், மாஜிஸ்திரேட்டின் காலில் விழுந்தனர்.

மாஜிஸ்திரேட்டின் காலைப் பிடித்துக் கொண்ட சில வழக்கறிஞர்கள், ‘அவரை விட்டுவிடுங்கள் சார்’ என்று கெஞ்சியது நீதிமன்றம் அதுவரை காணாத காட்சி.

அதற்குப்பிறகு நடந்ததுதான் உச்சகட்ட அதிர்ச்சி. பதிலுக்கு வழக்கறிஞர்கள் காலைப் பிடிக்காத குறையாக, மாஜிஸ்திரேட் டி.ஆர் சீனிவாசன் கெஞ்ச ஆரம்பித்தார்.

“இந்த விவகாரத்தில் என்னை விட்டுவிடுங்கள். நான் இன்னும் இரண்டு மாதத்தில் ரிட்டயர்டு ஆகப்போகிறேன். அரசாங்கத்தில் இருந்து எனக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது” என்றார்.

அதுதான் அதிர்ச்சிகரமான உச்சக்கட்ட கிளைமாக்ஸ். அதன்பிறகு 7 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அதன்பிறகு வழக்கின் விசாரணை அதிகாரி வந்து சொன்னால் ஜாமீனில் விடுகிறேன் என்றார்.

ஆனால், போலீஸ்காரர்கள் விசாரணை அதிகாரி அசிஸ்டென்ட்  கமிஷ்னர் முருகவேலுவைத் தேடுவது போல் தேடிக் கொண்டே இருந்தனர்.

ஆனால், கடைசிவரை முருகவேலுவை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரவில்லை.

அதன்பிறகு இணை ஆணையர் சவானியுடன் மாஜிஸ்திரேட் பேசினார்.

ஆனால், சவானி இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது என்ற நழுவிக் கொண்டார். 

மருத்துவமனை நாடகம்!

நடராசன்சைதாப்பேட்டை நீதிமன்றமும் சப்-ஜெயிலும் ஒரே இடத்தில்தான் இருக்கின்றன.

சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்குக் கொண்டுவரப்பட்ட நடராசன், 10 நிமிடங்கள் கூட இருந்திருக்கமாட்டார்.

வலது கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. “நெஞ்சுவலி” எனக் கத்த ஆரம்பித்தார்.

எல்லா வேலைகளையும் முடித்து அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஜெயில் சூப்பிரண்டுக்கும் மற்ற போலீஸ்காரர்களுக்கும், நடராசனின் கூச்சலைக்கேட்டதும் அவர்களுக்கே நெஞ்சு வலி வந்துவிட்டதைப் போல உணரத் தொடங்கினர்.

நடராசன் புதுக் குழப்பத்தை உருவாக்குகிறார் என்று புரிந்து கொண்டனர்.

ஆனால், அவர்களுக்கு டாக்டரை வரவழைத்து செக்கப் செய்யும் அதிகாரம் சப்-ஜெயிலருக்குக் கிடையாது.

அதனால், நடராசனை வேனில் ஏற்றி சென்ட்ரல் சிறைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கிருந்த டாக்டர் நடராசனைப் பரிசோதித்துவிட்டு, “எல்லாம் நார்மலாக்கத்தான் இருக்கிறது” எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்.

அதைக்கேட்டு கோபமடைந்த நடராசன், “நீங்கள் என்ன படிச்சருக்கீங்க… என் இதயத்துடிப்பு அப்-நார்மலாக இருக்கிறது உங்களுக்குத் தெரியவில்லையா? நல்ல இதயத் துடிப்பு நிபுணரை வரவழைத்து செக்கப் செய்யுங்கள்” என்றார்.

அதன்பிறகு நடராசனை ஜி.ஹெச்சில் அட்மிட் செய்ய முடிவெடுத்தனர்.

அப்போது நேரம் இரவு 1 மணி. ஜி.ஹெச்சில் இருந்த நடராசன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு நீதிபதி சிவப்பா, நடராசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை நடராசன் வெளியில் என்ன செய்துகொண்டாலும், எவ்வளவு சம்பாதித்துக் கொண்டாலும் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், அரசியலுக்குள் அவர் வரக்கூடாது. அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அதில் மட்டும் ஜெயலலிதா கவனமாக இருந்தார்.

ஏனென்றால், பாம்பறியும் பாம்பின் கால். அதனால், “நான் தான் அடுத்த வாரிசு.. நான் தான் ஆட்சியை நடத்துகிறேன்” என நடராசன் பேசுவதை எல்லாம் ஜெயலலிதா எப்போதும் விரும்பியதில்லை.

ஆனால், ஜெயலலிதா விரும்பாததை நடராசன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் அதில் உச்சகட்ட சலிப்பும் வெறுப்பும் அடைந்த ஜெயலலிதா சசிகலாவிடம் இதுபற்றி பேசினார்.

சசிகலாவின் சம்மதத்தைப் பெற்ற பிறகே, நடராசனைக் கைது செய்யும்  திடமான முடிவெடுத்தார். “உன் கணவரைக் கொஞ்சம் அடக்கி வைக்கவே இந்த நடவடிக்கை.

அதைத்தாண்டி வேறு எதுவும் இல்லை” என்று ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிக்கு சசிகலா சம்மதித்தார்.

தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டார் ஜெயலலிதா என சசிகலா நம்பினார்.

சசிகலாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஜெயலலிதாவும் காப்பாற்றினார். 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s