உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 50

சசிகலா உறவுகளுக்குள் சதுரங்கம்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, விவேக்

சசிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார்.

இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர்.

அதற்காகக் காய்களை முன்னிறுத்துவதும், பலிகொடுப்பதுமான கதைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஜெயலலிதா-சசிகலாவின் 30 ஆண்டு கால உறவில் நிகழ்த்திக் காட்டப்பட்ட அந்த ஆட்டத்தில், நடராசன், திவாகரன், பாஸ்கரன், தினகரன், சுதாகரன், ராவணன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் ஆட்ட நாயகனாக இருந்தனர்.

அவர்கள் அப்படி உருவெடுக்கும்போது, கார்டனுக்குள், கட்சிக்குள், அரசு எந்திரத்தில் எல்லையற்ற அதிகாரம் பெறுவார்கள்.

திடீரென ஒரு நாளின் ஒரு நொடியில் அவை அத்தனையும் பறிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

இரண்டுவிதமான சூழல்களிலும் சசிகலா சலனம் காட்டாமல் ஜெயலலிதாவோடு இருப்பார். இருவரின் உறவுகளுக்குள் நிகழும் எழுச்சியும் வீழ்ச்சியும் ஜெ-சசி உறவில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது. 

நடராசனின் மாயமான் வேலைகள்!

ஜெயலலிதா நடத்திய இந்த ஆட்டத்தில் வீழ்த்தப்பட்டவர்களில், மற்றவர்களுக்கும் நடராசனுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு; மற்றவர்களை மதிப்பிட முடியும்.

அவர்களின் நடவடிக்கைகளை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அவர்கள் அடுத்து செய்யப்போவதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஜெயலலிதா சொன்னால், அவர்கள் ஒடுங்கிவிடுவார்கள். ஆனால், இந்த வரையறைகள் நடராசனுக்குப் பொருந்தாது. அவரைப் புரிந்து கொள்ள முடியாது.

அவரின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியாது.

“நடராசன் தனக்கு ஆதரவாக இருக்கிறாரா, எதிராகச் செயல்படுகிறாரா?” என்பதை ஜெயலலிதாவால் கடைசி வரை கணிக்கவே முடியவில்லை.

நடராசனும் அதை ஒருநாளும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டதும் இல்லை.

“நான் நினைத்தால் ஜெயலலிதாவின் ஆட்சியை ஒரு நொடியில் கவிழ்த்துவிடுவேன்” என்று ஓர் இடத்தில் பேட்டி கொடுப்பார்.

அதற்கு அடுத்த வாரமே, “இந்த ஆட்சிக்கு எங்கிருந்தும் எந்த ஆபத்தும் வரவிடமாட்டேன்” என்று சங்கல்பம் எடுப்பார்.

ஜெயலலிதாவால் துரத்தப்பட்டாலும், சசிகலா மூலம் தன் காரியங்களைச் சாதிப்பார்; அதன் மூலம் ‘ஜெயலலிதா தன் சட்டைப் பாக்கெட்டில்தான் இருக்கிறார்’ என்ற தோற்றத்தை உருவாக்குவார்.

நடராசனின் நடவடிக்கைகளால் ஜெயலலிதா உச்சக்கட்ட வெறுப்படைந்தால், அவரைக் கைது செய்ய உத்தரவிடுவார்.

ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் நடராசன் ஜாமீனில் வெளிவருவார். அதன்பிறகும், அவருடைய மாயமான் வேலைகள் வழக்கம்போல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நடராசன் தேடப்படும் குற்றவாளி!

போலீஸ் வேனில் ஏற்றப்படும் நடராசன்

1995 ஆகஸ்ட் 20-ம் தேதி நடராசன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அன்று மாலை நடராசனை உளவு பார்க்கச் சென்ற, யதுகுலதிலகன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் நடராசன் வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.

தாக்குதலுக்கு உள்ளான போலீஸ்காரர் கொடுத்த புகாரின் பேரில், ரவி, எலியாஸ், மாறன், சுப்பிரமணி, செல்வராஜ் மற்றும் இன்னொரு ரவி கடைசியாக நடராசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

நடராசனைக் கைது செய்ய போலீஸ் தேடுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.

ஆனால், திடீரென நடராசனே சென்னை போலீஸ் கமிஷ்னரை அவரது அலுவலகத்தில் வைத்துச் சந்தித்தார்.

அங்கு வைத்து, “என்னைக் கைது செய்ய போலீஸ் தேடுவதாக செய்தி போடுகிறீர்களே… இப்போது நானே கமிஷ்னர் அலுவலகம் வந்துள்ளேன்.

என்னைக் கைது செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்று பத்திரிகையாளர்களிடம் சவால் விட்டார்.

ஆனால், அப்போது அவரை யாரும் கைது செய்யவில்லை.

ஆனால், அதற்கும் தேதி குறிக்கப்பட்டது. 1995 ஜூலை 25-ம் தேதி புயல் வீசத் தொடங்கியது.

நடராசன் கைதாகப் போகிறார் என்ற செய்தி வேகமாகப் பரவியது.

போலீஸ்காரர்களோடு, கட்சிக்காரர்களும் பத்திரிகையாளர்களும் நடராசனின் பெசன்ட் நகர் வீட்டை முற்றுகையிட்டனர்.

‘நடராசன் இங்கு இல்லை’ என அவருடைய தம்பி ராமச்சந்திரன் வாதாடினார்.

போலீஸ் அதை நம்பவில்லை. நடராசன் வீட்டுக்குள் இருந்து வெளியில் சென்றாலும் சரி… வெளியில் இருந்து வீட்டுக்குள் வர முயன்றாலும் சரி… அவரைக் கைது செய்துவிட்டுத்தான் அடுத்த வேலை என்று பிடிவாதமாக போலீஸும் இருந்தது.

ஆனால், அன்று இரவு முழுவதும் ஒன்றும் நடக்கவில்லை. 

ஜூலை 26ல் வந்த தந்தி…

ஜூலை 26-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு ஒரு தந்தி வந்தது.

திருப்பதியில் இருந்து நடராசன் பெயரில் கொடுக்கப்பட்டு இருந்த அந்தத் தந்தியில்,

“இன்று காலை நாளிதழ்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நான் தலைமறைவாக இருப்பதாகவும் என்னைக் கைது செய்ய போலீஸ் என் வீட்டை முற்றுகையிட்டு இருப்பதாகவும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.இன்னும் 3 மணி நேரத்தில் நான் உங்கள் முன்னால் சரண் அடைவேன். அப்போது என்னைக் கைது செய்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நடராசன் தந்தியைக் கொடுத்து நம்மைக் குழப்பிவிட்டு, நீதிமன்றத்தில் சரண் அடையப்போகிறார் என்று போலீஸ் உஷாரானது.

நடராசன் நீதிமன்றத்துக்குள் போவதற்கு முன் அவரைக் கைது செய்து விட வேண்டும் என்று போலீஸ் குறியாக இருந்தது.

உடனடியாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தைச் சுற்றி 500 போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டனர்.

மணி பகல் 11.15 இருக்கும்போது, டிரக்ஸ் ஜீப் ஒன்று வேகமாக நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றது.

ஒட்டுமொத்த போலீஸ் படையும் ஜீப்பை உள்ளே நுழையவிடாமல் தடுக்க முயன்றது.

அதையும் மீறி நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்ற ஜீப்பின் முன் ஒரு போலீஸ்காரர் படுத்துவிட்டார்.

அதன்பிறகு வேறு வழியின்றி அதிலிருந்து இறங்கிய நடராசனும், அவருடைய வழக்கறிஞர் ராமகிருஷ்ணபாபுவும் விறுவிறுவென நீதிமன்றத்தை நோக்கி ஓடினர்.

ஏறத்தாழ நடராசன் நீதிமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

ஆனால், அங்கு அவரை மறைத்த போலீஸ் குண்டுகட்டாக வெளியே தூக்கி வந்தனர்.

நடராசனின் முகம் பதட்டத்தில் வெளிறிப் போனது. கண்கள் சிவந்து காணப்பட்டன.

“நீதிமன்றத்தில் சரணடைய வந்த என்னை இப்படிக் கைது செய்வது தப்பு” என்று கூச்சல் போட்டார்.

அதன்பிறகு போலீஸிடம் ஆத்திரத்தைக் காண்பித்த நடராசன் “என்னைக் கைது செய்வதற்கு, வாரண்டை காமிங்க” என்றார்.

“அதெல்லாம் எங்களிடம் இல்லை. நீங்கள் வேனில் ஏறுங்கள்” என்றார் டெபுடி கமிஷ்னர் ராஜேந்திரன்.

நீதிமன்றத்துக்கு வரும் நடராசன்

அந்த நேரத்தில் உதவி கமிஷ்னர் பன்னீர்செல்வம், நடராசனின் சட்டையைப் பிடித்து இழுத்து வேனில் ஏற்ற முயன்றார்.

உடனே கொதித்துப் போன நடராசன், “பன்னீர்செல்வம் நீ அத்துமீறி நடந்துக்கிற… பயங்கர விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என்று அரட்டினார்.

அதில் கொஞ்சம் ஜெர்க்கான பன்னீர்செல்வம், ஒதுங்கிக் கொண்டார்.

அதன்பிறகு அங்கிருந்த போலீஸ்காரர்கள் சிலர், “அண்ணே.. நாங்கள் இருக்கிறோம்.. நீங்கள் கவலைப்பட வேண்டாம். தைரியமாகக் கைதாகுங்கள்” என்று கெஞ்சியது புதுக்கதையாக இருந்தது.

ஆனால், இதுபோன்ற பல அதிர்ச்சிகளை அடுத்து நீதிமன்றம் சந்திக்க இருந்தது.

அதன்பிறகு வேனில் ஏறிய நடராசன் அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதன்பிறகு மதியம் மூன்று மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார்.

போலீஸ் ஜீப்பின் முன் சீட்டில் உட்காந்து கை காட்டிக் கொண்டு வந்த நடராசன், ‘நல்லா படம் எடுங்க’ என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லிக் கொண்டே நீதிமன்றத்துக்குள் போனார்.

மாஜிஸ்திரேட் டி.ஆர்.சீனிவாசன், மாலை 3.50 மணிக்கு வந்து நடராசன் வழக்கை முதல் வழக்காக எடுத்துக் கொண்டார்.

ஊர், பெயர், தந்தை பெயர் உள்ளிட்ட விபரங்களைப் பதிவு செய்த நீதிமன்ற ஊழியர், அதன்பிறகு நடராசனின் மனைவியின் பெயரை அவரைக் கேட்காமலே சசிகலா என்று எழுதிக் கொண்டார்.

அதைப் ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்த நடராசன், தன் வாக்குமூலத்தை ஒரு மேடைப் பேச்சாளரின் பிரசங்கத்தைப் போல பொழிய ஆரம்பித்தார். 

நான் குற்றவாளி அல்ல!

“நான் குற்றவாளி அல்ல; என் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீஸ்காரர் யதுகுலதிலகன்தான் குற்றவாளி.

என் மீது பொய் வழக்குப் போட்டு என்னைப் போலீஸ் கைது செய்துள்ளது.

அதுவும் நீதிமன்றத்தில் சரணடைய வந்த என்னை, நீதிமன்றத்தின் கேட்டை இழுத்துப் பூட்டி கைது செய்துள்ளனர்.

எனவே இந்த மாமன்றம் விரும்பி என்னை 30 ஆண்டுகள் சிறையில் இருக்கச் சொன்னாலும் நான் இருக்கிறேன்-நெல்சன் மண்டேலாவைப்போல” என்று உரையாற்றியதைப் பார்த்த, மாஜிஸ்திரேட் டி.ஆர்.சீனிவாசனே கொஞ்சம் ஆடித்தான் போனார். 

நீதிமன்றத்தில் அரங்கேறிய சோக நாடகம்

நீதிமன்றத்தில் நடராசன்

நடராசனின் வாக்குமூலத்துக்குப் பிறகு, மாஜிஸ்திரேட்டுக்குச் சோதனைகள் ஆரம்பித்தன.

நடராசனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த மாஜிஸ்திரேட், அவரை 15 நாள்களுக்கு ரிமாண்ட் செய்தார்.

அதை எதிர்பார்க்காத நடராசன், கொஞ்சம் ஆடிப் போனார்.

அதையடுத்து ஏற்கெனவே தயாராக வரவழைக்கப்பட்டு இருந்த நடராசனின் ஆள்கள் கூச்சல் போட ஆரம்பித்தனர்.

வழக்கறிஞர்கள் சிலரும் கூச்சல் போட்டனர். அதையடுத்து மாஜிஸ்திரேட்டின் அறைக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், நடராசனை ஜாமீனில் வெளியிட வேண்டும்.

இல்லையென்றால், இங்கிருக்கும் பேனில் தூக்கு மாட்டிக் கொள்வோம் என்று மிரட்டினர்.

இன்னும் சில வழக்கறிஞர்கள், மாஜிஸ்திரேட்டின் காலில் விழுந்தனர்.

மாஜிஸ்திரேட்டின் காலைப் பிடித்துக் கொண்ட சில வழக்கறிஞர்கள், ‘அவரை விட்டுவிடுங்கள் சார்’ என்று கெஞ்சியது நீதிமன்றம் அதுவரை காணாத காட்சி.

அதற்குப்பிறகு நடந்ததுதான் உச்சகட்ட அதிர்ச்சி. பதிலுக்கு வழக்கறிஞர்கள் காலைப் பிடிக்காத குறையாக, மாஜிஸ்திரேட் டி.ஆர் சீனிவாசன் கெஞ்ச ஆரம்பித்தார்.

“இந்த விவகாரத்தில் என்னை விட்டுவிடுங்கள். நான் இன்னும் இரண்டு மாதத்தில் ரிட்டயர்டு ஆகப்போகிறேன். அரசாங்கத்தில் இருந்து எனக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது” என்றார்.

அதுதான் அதிர்ச்சிகரமான உச்சக்கட்ட கிளைமாக்ஸ். அதன்பிறகு 7 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அதன்பிறகு வழக்கின் விசாரணை அதிகாரி வந்து சொன்னால் ஜாமீனில் விடுகிறேன் என்றார்.

ஆனால், போலீஸ்காரர்கள் விசாரணை அதிகாரி அசிஸ்டென்ட்  கமிஷ்னர் முருகவேலுவைத் தேடுவது போல் தேடிக் கொண்டே இருந்தனர்.

ஆனால், கடைசிவரை முருகவேலுவை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரவில்லை.

அதன்பிறகு இணை ஆணையர் சவானியுடன் மாஜிஸ்திரேட் பேசினார்.

ஆனால், சவானி இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது என்ற நழுவிக் கொண்டார். 

மருத்துவமனை நாடகம்!

நடராசன்சைதாப்பேட்டை நீதிமன்றமும் சப்-ஜெயிலும் ஒரே இடத்தில்தான் இருக்கின்றன.

சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்குக் கொண்டுவரப்பட்ட நடராசன், 10 நிமிடங்கள் கூட இருந்திருக்கமாட்டார்.

வலது கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. “நெஞ்சுவலி” எனக் கத்த ஆரம்பித்தார்.

எல்லா வேலைகளையும் முடித்து அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஜெயில் சூப்பிரண்டுக்கும் மற்ற போலீஸ்காரர்களுக்கும், நடராசனின் கூச்சலைக்கேட்டதும் அவர்களுக்கே நெஞ்சு வலி வந்துவிட்டதைப் போல உணரத் தொடங்கினர்.

நடராசன் புதுக் குழப்பத்தை உருவாக்குகிறார் என்று புரிந்து கொண்டனர்.

ஆனால், அவர்களுக்கு டாக்டரை வரவழைத்து செக்கப் செய்யும் அதிகாரம் சப்-ஜெயிலருக்குக் கிடையாது.

அதனால், நடராசனை வேனில் ஏற்றி சென்ட்ரல் சிறைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கிருந்த டாக்டர் நடராசனைப் பரிசோதித்துவிட்டு, “எல்லாம் நார்மலாக்கத்தான் இருக்கிறது” எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்.

அதைக்கேட்டு கோபமடைந்த நடராசன், “நீங்கள் என்ன படிச்சருக்கீங்க… என் இதயத்துடிப்பு அப்-நார்மலாக இருக்கிறது உங்களுக்குத் தெரியவில்லையா? நல்ல இதயத் துடிப்பு நிபுணரை வரவழைத்து செக்கப் செய்யுங்கள்” என்றார்.

அதன்பிறகு நடராசனை ஜி.ஹெச்சில் அட்மிட் செய்ய முடிவெடுத்தனர்.

அப்போது நேரம் இரவு 1 மணி. ஜி.ஹெச்சில் இருந்த நடராசன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு நீதிபதி சிவப்பா, நடராசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை நடராசன் வெளியில் என்ன செய்துகொண்டாலும், எவ்வளவு சம்பாதித்துக் கொண்டாலும் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், அரசியலுக்குள் அவர் வரக்கூடாது. அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அதில் மட்டும் ஜெயலலிதா கவனமாக இருந்தார்.

ஏனென்றால், பாம்பறியும் பாம்பின் கால். அதனால், “நான் தான் அடுத்த வாரிசு.. நான் தான் ஆட்சியை நடத்துகிறேன்” என நடராசன் பேசுவதை எல்லாம் ஜெயலலிதா எப்போதும் விரும்பியதில்லை.

ஆனால், ஜெயலலிதா விரும்பாததை நடராசன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் அதில் உச்சகட்ட சலிப்பும் வெறுப்பும் அடைந்த ஜெயலலிதா சசிகலாவிடம் இதுபற்றி பேசினார்.

சசிகலாவின் சம்மதத்தைப் பெற்ற பிறகே, நடராசனைக் கைது செய்யும்  திடமான முடிவெடுத்தார். “உன் கணவரைக் கொஞ்சம் அடக்கி வைக்கவே இந்த நடவடிக்கை.

அதைத்தாண்டி வேறு எதுவும் இல்லை” என்று ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிக்கு சசிகலா சம்மதித்தார்.

தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டார் ஜெயலலிதா என சசிகலா நம்பினார்.

சசிகலாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஜெயலலிதாவும் காப்பாற்றினார். 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 49

ஆட்டிப்படைத்த கரன்களின் ராஜ்ஜியம்!

கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த ஜெயலலிதா

ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் நிழலாய்த் தொடர்ந்த சசிகலாவின் ராஜாங்கத்தில், அவருடைய உறவுகளின் ஆதிக்கமும் கொடிகட்டிப் பறந்தது.

ஆனால், ஜெயலலிதா அதற்கு ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார்.

1991-க்குப் பிறகு நடராசனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தவர், தேவைப்பட்டபோது திவாகரனுக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்தார்; தேவையில்லை என்று நினைத்தபோது, திவாகரனிடம் இருந்து அவற்றைப் பறித்தார்.

ஜெ.ஜெ டிவியின் பொறுப்புக்களை பாஸ்கரனுக்குக் கொடுத்தார். சுதாகரனை வளர்ப்பு மகனாக்கினார்.

தினகரனை வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைப் பார்த்துக் கொள்ள அமர்த்தினார்.

ஆனால், சசிகலாவைப் போல யாரையும் நிரந்தரமாக உடன் வைத்துக் கொள்ளவில்லை. 

அதிகாரிகளுக்கு உத்தரவிடும் திவாகரன்

திவாகரனின் ராஜ்ஜியத்தில்…. 

திவாகரனின் ராஜ்ஜியத்தில் அவருடைய செல்வாக்கை நிரூபிக்கும் விழாவாக நடந்தது, தஞ்சை மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம்.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அது. சோழர்களுக்குப் பிறகு, நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் பராமரித்து வந்தனர்.

ஆனால், அந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக வரலாறு இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளாக நடக்காத கும்பாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டார் திவாகரன்.

சசிகலாவிடம் பேசி, ஜெயலலிதாவை சம்மதிக்க வைத்து கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது.

1995 ஜூன் 8-ம் தேதி ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கும்பாபிஷேகம் என ஒரு வருடத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டது.

திட்டம் தயாரானதும், திவாகரன் பரபரப்பானார். கோயிலுக்குள்ளேயே ஓர் அலுவலகத்தைப் போட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.

இயல்பிலேயே சசிகலாவின் உறவினர்களில் திவாகரனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம்.

அதனால், தன்னுடைய வாழ்க்கை முறைகளையே அந்த நேரத்தில் மாற்றிக் கொண்டார் திவாகரன்.

அலுவலகத்தில் இருந்து தொலைபேசியைச் சுழற்றி உத்தரவுகளைப் போட்டுக் கொண்டே இருப்பார்.

உத்தரவுகளுக்கு ஏற்பட, தமிழகத்தைச் சேர்ந்த பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள், திவாகரனைப் பயபக்தியுடன் பார்க்க வந்தனர்.

விழா முடிவு செய்யப்பட்ட பிறகு வந்த 6 மாதங்களில் நாகை மாவட்டத்தில் வேறு எந்த வேலையும் நடைபெறவில்லை.

நாகை கலெக்டர் பாஸ்கரன் மன்னார்குடியிலேயே கேம்ப் அடிக்க… ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட எல்லாத்துறை அதிகாரிகளும் நாகை மாவட்டத்துக்கே கார்களோடு குவிந்துவிட்டனர்.

வைகுந்த டி.ஜி.பி வந்துபோனதும், போலீஸ் பட்டாளம் அங்கு குவிந்துவிட்டது.

கும்பாபிஷேகத்தின் போது திவாகரன்

சத்தம் இல்லாமல் சென்னைக்குப் பறந்த திவாகரன் நகர அபிவிருத்திக்கான பைலில் நிதித்துறைச் செயலாளர் நாராயணனிடம் கையெழுத்து வாங்கினார்.

பைல் கையெழுத்தானதுமே, மன்னார்குடிக்கு மூன்றரைக் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வேலைகள் ஒருபக்கம் விறுவிறுவென நடந்தன. கடைசி நேரத்தில் ஜெயலலிதா வருவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் மட்டும் கடைசி வரை நீடித்தது.

பொதுமக்களும் கட்சிக்காரர்களும் நம்பிக்கை இழந்தனர். பத்திரிகை விளம்பரங்களில் கூட முதல்வர் நல்லாசியுடன் என்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டன.

காஞ்சி சங்கராச்சாரியாரும், ஆர்.வெங்கட்ராமனுக்கும் மட்டும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. அத்தனை ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்திருந்தார் திவாகரன்.

6-ம் தேதி கோயிலுக்குப் போன் செய்த சசிகலா முதல்வர் ஜெயலலிதாவோடு வருவேன் என்ற தகவலைச் சொல்லி, ஜெயலலிதாவின் வருகையை உறுதிப்படுத்தினார்.

உடனே, நிலைமைகள் மாறின. திவாகர் எங்கு சென்றாலும், அவரது காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் ‘பைலட்’ கார்கள் அணிவகுத்தன.

8-ம் தேதி காலை 5 மணிக்கு இரண்டாயிரம் போலீஸ்காரர்கள் கோயிலைச் சுற்றி குவிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா எழுந்தளினார்…

காலையில் ஜெயலலிதா வர நேரம் ஆனதால், ராஜகோபால சுவாமி கோயிலின் 16 கோபுரங்களுக்கும், பதினெட்டு விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்வதாகத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒன்றிப் போய் இருந்தார் திவாகர்.

சசிகலாவின் தம்பி என்றில்லாமல், ஒரு சாதரண பக்தரைப்போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.

9 மணிக்கு ராஜ கோபுரத்தின் மேல் இருந்து மஞ்சள் கொடியை திவாகர் அசைத்ததும், கோயில் கும்பாபிஷேகம் தொடங்கியது.

சரியாக 9.25 மணிக்கு ஜெயலலிதா உள்ளே நுழைந்தார். அப்போது, “முதல்வர் எழுந்தருளிவிட்டார்” என்று வர்ணனை செய்யப்பட்டது.

ஜெயலலிதா நடக்கும் பாதை முழுவதும் ரத்தினக் கம்பளத்தால் போர்த்தப்பட்டு இருந்தது.

ஆனால், செருப்பில்லாமல் நடக்க சிரமப்படுவார் என்பதால், ரத்தினக் கம்பளத்தின் மேல் வெள்ளைத்தாள்கள் விரிக்கப்பட்டன.

மேடையில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சேர்கள் போடப்பட்டு இருந்தன.

ஆர்.வெங்கட்ராமனுக்கு ஜெயலலிதா அமர்ந்திருந்த பகுதியில் சேர் போடப்படவில்லை.

அதில் அதிருப்தி அடைந்த ஆர்.வீ நேராக எழுந்துபோய் சங்கராச்சாரியாரின் காலடியில் உட்கார்ந்துவிட்டார்.

முக்கால் மணி நேரத்தில் ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பினார்.

திவாகரனின் ராஜ்ஜியத்துக்குள்… அவருடைய முழுமையான  மேற்பார்வையில்… அவருடைய திட்டப்படி நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா, திவாகரனைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனாலும், திவாகரனின் ராஜ்ஜியத்தில் இயங்கிய அ.தி.மு.கவிற்குள், திவாகரனின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதற்கு முன்பு இருந்ததைவிட பல மடங்கு உயர்ந்தது. 

தினகரன் ராஜ்ஜியம்….

தினகரன் திருமணத்தின் போது

சசிகலாவின் அக்கா வனிதாமணி. அவருடைய கணவர் விவேகானந்தன். அவர்களுக்கு மூன்று மகன்கள். டி.டி.வி.தினகரன், டி.டி.வி.பாஸ்கரன், டி.டி.வி.சுதாகரன்.

இவர்களில் அந்தக் காலகட்டத்தில் சுதாகரன், பாஸ்கரன் மட்டும் அடிக்கடி செய்திகளில் அடிபடுவார்கள்.

 

சசிகலாவின் தம்பி திவாகரன் கூட சர்ச்சைகளில் சிக்குவார். அதர்மம் என்ற பெயரில் முரளி நடித்த திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று நடிக்கவும் செய்தார் திவாகரன்.

ராஜகோபாலசுவாமி கும்பாபிஷேகத்தின் மூலம் நாடறிந்த ஆளாக மாறினார் திவாகரன்.

இவர்கள் ஒருவகை. ஆனால், தினகரன் வேறு வகை. தினகரனை எங்கும் பார்க்க முடியாது. அவரைப் பற்றி எந்தச் செய்தியும் வராது.

பெரும்பாலும் திருச்சி, மன்னார்குடி பகுதிகளில் மட்டும் தினகரனின் நடமாட்டம் இருக்கும். அவர் சென்னைக்கு வந்தால்கூட வெளியில் தென்படமாட்டார்.

ஆனால், கடல் கடந்த நாடுகளில் தினகரனுக்கு வேலைகள் இருந்தன. லண்டன், சிங்கப்பூர், மலேசியா தொடர்புகளை வைத்துக் கொண்டு தினகரன் தனி ராஜாங்கம் நடத்தி வந்தார்.

1990-களின் பிற்பாடு, தாராளமயக் கொள்கைகள் இந்தியாவில் தாராளமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

அப்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துகள் வாங்குவதற்கும், வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அதில் இருந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி தினகரன் பல சொத்துகளை இந்தியாவில் வாங்கிக் குவித்தார்.

அப்போது மன்மோகன்சிங் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் அந்தத் துறைக்கு வந்ததும், அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, அந்நியச் செலாவணி மோசடிகள்.

அதைக் கட்டுப்படுத்த நினைத்த மத்திய அரசு, ஹாவாலா புரோக்கர்களைத் துரத்தி துரத்திப் பிடித்தது.

டெல்லியைச் சேர்ந்த ஜெயின் சகோதரர்கள் மற்றும் அமீர் என்பவர் சிக்கினார்கள்.

அவர்கள்தான் இந்தியப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தி அங்கு அவற்றை சிங்கப்பூர் டாலர்களாக மாற்றி, அதை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவரும் தொழிலைக் கில்லியாகச் செய்தவர்கள்.

இந்த வித்தையைப் பயன்படுத்தி, பல கோடிப் பரிவர்த்தனைகளைப் பராமரித்தவர் தினகரன்.

மத்திய அரசிடம் சிக்கிய ஹவாலா புரோக்கர்கள், தமிழகத்தில் தினகரனின் பக்கம் கை காட்டினார்கள்.

இதையடுத்து 1995 ஜூலை மாதம், தமிழகத்தில் தினகரன் சுற்றுவாட்டாரங்களில் மத்திய அமலாக்கத்துறை சூறாவளி ரெய்டுகளை நடத்தியது.

அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட முறை, லண்டன் ஹோட்டல் விவகாரம், ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக வந்த அமெரிக்க டாலர்கள் எனப் பல வில்லங்கங்கள் வெளியாயின.

சென்னையில் ரெய்டு நடந்தபோது, மன்னார்குடிக்கு ஒரு டீம் சென்றது.

அங்கு லெக்சஸ் என்ற வெளிநாட்டுக் கார் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அந்தக் காரை வைத்திருந்த மற்றொருவர், ஷேர் மார்கெட் ஊழல் நாயகன் ஹர்ஷத் மேத்தா மட்டுமே.

இப்படி ஜெயலலிதா-சசிகலாவின் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளின் நாயகனாக தினகரன் வலம் வந்தார். 

பாஸ்கரன், சுதாகரன் ராஜ்ஜியம்…

பாஸ்கரன்,சுதாகரன், சசிகலா, இந்திரகுமாரி, வளர்மதி

இன்றைய ஜெயா டி.வி. அன்றைக்கு ஜெ.ஜெ டிவியாக இருந்தது. அதைக் கட்டுப்படுத்தியவர்கள் பாஸ்கரனும் சுதாகரனும்தான்.

அதையொட்டி சென்னையில் கேபிள் டி.வி உரிமையாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் நோக்கம் ஜெ.ஜெ.டிவியின் வளர்ச்சியும், அதில் பங்கெடுத்திருந்தது பாஸ்கரன்.

பாஸ்கரனுக்காகவே நடத்தப்பட்ட மாநாடு அது. அதுபோல, ஜெயலலிதா தன் வாழ்வின் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார்.

அதில்தான் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாகக் குறிப்பிட்டார்.

அதன் மூலம் சுதாகரனின் ராஜ்ஜியம் ஒன்று உருவானது.

எப்படிப்பார்த்தாலும் இந்தக் கரன்களின் ராஜ்ஜியங்கள் எல்லாம் அன்றைய தேதியில் தமிழக மக்களுக்கு வேதனைகளைக் கொடுக்கும் சோதனை ராஜ்ஜியங்களாகவே திகழ்ந்தன. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 48

சசிகலாவுக்குச் சம அதிகாரம் 

சசிகலா

சசிகலாவின் சதுரங்கம்!

அ.தி.மு.க என்ற கட்சியின் எல்லைக்குள், அதன் ஆட்சி அதிகாரத்துக்குள், போயஸ் கார்டன் வீட்டுக்குள், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளுக்கு மத்தியில் சசிகலா சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார்.

அந்த ஆட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வெட்டப்பட்டனர்; அதிகாரிகள் அகற்றப்பட்டனர்; அமைச்சர்களின் பதவி பலி வாங்கப்பட்டன;

ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் துண்டிக்கப்பட்டன; தேவைப்படும்போது சசிகலாவின் சொந்தங்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

ஆனால், ஜெயலலிதாவின் ராஜ்ஜியத்தில், சசிகலா மட்டும் இறுதிவரை ராணியாகவே வலம் வந்தார்.

சசிகலா-ஜெயலலிதா உறவை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு, “சசிகலா தனக்குச் சமமான அதிகாரம் படைத்தவர்” என்பதை ஜெயலலிதா சொல்லாமல் சொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில்கூட அந்தளவுக்கு சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

அந்த மாநாட்டில் பிரதானமாக வலம் வந்தது ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம்தான்.

ஆனால், தஞ்சை மாநாடு மன்னார்குடி குடும்ப மாநாடாகவே நடந்து முடிந்தது.

அந்தக் கதை அரங்கேறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, போயஸ் தோட்டத்துக்குள் புகுந்த ஒரு புதிய சக்தி சசிகலாவுக்குச் சிறிது நாள்கள் லேசாக குடைச்சல் கொடுத்தது. 

ஜெயலெட்சுமி Vs சசிகலா!

ஜெயலலிதாவின் சொந்த சித்தி ஜெயலெட்சுமி. 17 வருடங்களுக்கு முன்னால், ஜெயலலிதாவுடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது.

அதையடுத்து, ஜெயலலிதாவோடு இருந்த பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டார்.

அதன்பிறகு ஜெயலலிதாவும் சித்தியைத் தேடிப் போகவில்லை. ஆனால், மீண்டும் ஜெயலலிதா-ஜெயலெட்சுமி உறவு துளிர்த்தது.

1994-ம் ஆண்டு ஜெயலெட்சுமி திடீரென சீனுக்கு வந்தார்.

ஜெயக்குமாரின் குடும்பம் வெளியே போன சில நாள்களில் ஜெயலெட்சுமி போயஸ் கார்டனுக்குள் புகுந்தார்.

“தன் கணவருக்கு அப்போலோவில் சிகிச்சை நடக்கிறது. அதற்கு ஜெயலலிதா உதவ வேண்டும்” என்ற கோரிக்கையோடுதான் அவர் போயஸ் கார்டன் வந்தார்.

அதற்கு முன்பே ஜெயலலிதாவின் வளர்ச்சி பற்றி ஜெயலெட்சுமி அறிந்து வைத்திருந்தாலும், அதை நேரில் அவர் கண்டதில்லை.

ஆனால், போயஸ் கார்டன் வீட்டுக்குள் வந்தபிறகே ஜெயலெட்சுமிக்கு எதார்த்தம் புரிந்தது.

அரசியலில் ஜெயலலிதா அடைந்திருந்த அபார வளர்ச்சி, ஜெயலலிதாவிடம் குவிந்து கிடந்த அதிகாரம், ஜெயலலிதா வீட்டுக்குள் இருந்த செல்வச் செழிப்பின் மகத்துவத்தை உண்மையாக அவரால் உணர முடிந்தது.

போயஸ் கார்டன் வீட்டைச் சுற்றிப் பார்த்துப் பிரமித்தார்.

ஜெயலலிதாவின் காருக்கு முன்னும் பின்னும் அணிவகுக்கும் பாதுகாப்புப் படைகள், ஜெயலலிதா முன் குனிந்து வணங்கும் அமைச்சர்கள், ஜெயலலிதாவின் தரிசனத்துக்காக காத்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலெட்சுமியை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, ஒரு விஷயம் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.  

அது சசிகலாவின் இருப்பு. போயஸ் கார்டன் மாளிகையில் எல்லாம் இருந்தாலும், அவற்றோடு ஏதோ ஒரு மர்மம் சூழ்ந்திருக்கும் ஆபத்தான மாளிகையைப் போலவே அது இருப்பதாக ஜெயலெட்சுமி உணர்ந்தார்.

எப்போதும் ஜெயலலிதாவை நிழலைப்போலவே ஒட்டிக்கொண்டிருக்கும் சசிகலாவுக்கும் அதற்கும் தொடர்பிருப்பதாகவும் ஜெயலெட்சுமி கருதினார்.

ஜெயலலிதா, சசிகலா

சசிகலாவைத் தாண்டி ஜெயலலிதாவால் எதையும் செய்ய முடியவில்லை; ஜெயலலிதாவை அப்படி எதையும் செய்ய சசிகலாவும் அனுமதிப்பதில்லை” என்பதும் ஜெயலெட்சுமிக்கு அப்போது புலப்பட்டது.

வீட்டில் தனக்கு வேண்டிய தகவல்களை யார் கொடுப்பார்கள் என்று ஜெயலெட்சுமி ஆழம் பார்த்தார்.

அதற்கும் சிலர் இருந்தனர். சசிகலாவை நினைத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த சிலர் ஜெயலெட்சுமியிடம் மனம் திறந்து விஷயங்களைக் கொட்டினர்.

அதன்பிறகு, ஜெயலெட்சுமியும் ஜெயலலிதாவை நிழல் போல் தொடர ஆரம்பித்தார்.

அந்தப் புள்ளியில்,  சசிகலா-ஜெயலெட்சுமிக்கு இடையில் பனிப்போர் மூளத் தொடங்கியது.

அந்த நேரத்தில், சென்னை தரமணியில் திரைப்பட நகரம் திறக்கப்பட்டது.

அந்த விழாவில் ஜெயலெட்சுமியும் பிரதான வி.ஐ.பி-யாக பங்கேற்றார்.

அது சசிகலாவை உச்சக்கட்டமாக எரிச்சல் அடைய வைத்தது.

“கணவரின் சிகிச்சைக்கு உதவி கேட்டு வந்தவர், நிழலாகத் தொடர ஆரம்பித்து, இன்று அரசு விழாவுக்கும் வந்துவிட்டாரே…” என அச்சமடையத் தொடங்கினார்.

“உண்மையில், ஜெயலெட்சுமி கணவரின் சிகிச்சைக்காக வரவில்லை… வேறு நோக்கத்தோடு வந்துள்ளார்” என சசிகலா சந்தேகப்படத் தொடங்கினார்.

போயஸ் தோட்டத்துக்குள் கனன்று கொண்டிருந்த சசிகலா-ஜெயலெட்சுமியின் அதிகாரச் சண்டையின் அனல் மெல்ல வெளியிலும் அடிக்கத் தொடங்கியது.

இருவரும் ஒருவரைமாற்றி ஒருவர் உளவு பார்க்கத் தொடங்கினர்.

உளவு ரிப்போர்ட்டுகள், சசிகலாவின் சந்தேகம் சரியானதே என்பதை உறுதி செய்தன.

“ஜெயலெட்சுமியின் வருகை, கணவரின் சிகிச்சைக்காக அல்ல; ஜெயக்குமார் கேட்டுக் கொண்டதன்படி, ஜெயக்குமார்-ஜெயலலிதா குடும்பங்களை இணைப்பதற்காகவும், சசிகலாவை கொஞ்சம் தலையில் தட்டி வைப்பதற்காகவும்தான்” என்று உளவுத்துறை அறிக்கை சொன்னது. 

சசிகலா உள்ளே… ஜெயலெட்சுமி வெளியே! 

ஜெயலலிதாவின் சித்தி ஜெயலெட்சுமிதரமணியில் ‘ஜெ.ஜெ பிலிம் சிட்டி’ திறப்பு விழா நடந்த அன்று மாலை, தீபக்கிற்கு பூணூல் அணிவிக்கும் விழாவும் நடந்தது. அங்கு சென்ற ஜெயலலிதாவின் சித்தி ஜெயலெட்சுமி, பல விஷயங்களை ஜெயக்குமாரிடம் பேசினார்.

அங்கிருந்து மீண்டும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தவர், ஜெயலலிதாவிடம் பேசினார்.

‘நீ ஏன் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு வரவில்லை’ என்று ஜெயலெட்சுமி கேட்டபோது, ‘எனக்கு அழைப்பே அனுப்பவில்லையே’ என்றார் ஜெயலலிதா.

உடனே, ஜெயலெட்சுமி பல விஷயங்களைப் போட்டு உடைத்தார்.

“அண்ணன் உனக்கு அழைப்பிதழ் அனுப்பினான். 10-க்கும் மேற்பட்ட தடவை ‘பேக்ஸ்’ தகவல் கொடுத்துள்ளான்.

ஆனால், அவை எதுவும் உன்னை வந்து சேரவில்லை. அவற்றை உன்னிடம் சேர்க்காமல், இங்குள்ள சிலர் குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிட்டனர்” என்றார்.

ஜெயலலிதா அதிர்ந்து போனார். அதன்பிறகு ஜெயலெட்சுமி சொன்ன பல விஷயங்கள் ஜெயலலிதாவை மிரள வைத்தன.

ஆனால், என்ன செய்ய? இதற்காகவெல்லாம், சசிகலாவைப் பிரிந்துவிட முடியாது.

இந்த விஷயங்களை நான் சசியிடம் பேசி சரி செய்துவிடுவேன்.

ஆனால், சசி இங்கிருந்து சென்றுவிட்டால், அந்த இழப்பை வேறு எதுவாலும் நிகர் செய்ய முடியாது” என ஜெயலெட்சுமியிடம் கறாராகச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா.

அதன்பிறகும் ஜெயலெட்சுமி எவ்வளவோ பேசிப் பார்த்தார். ஆனால், ஜெயலலிதாவின் மனதைக் கரைக்க முடியவில்லை.

அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஜெயலெட்சுமியும் போயஸ் கார்டனை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

சித்தி சொல்வதில் உண்மை இருப்பது ஜெயலலிதாவுக்குப் புரிந்தாலும், அதைவிட அதிகமாக சசிகலாவின் இருப்பு ஜெயலலிதாவுக்குத் தேவைப்பட்டது.

அதனால், சசிகலாவை போயஸ் கார்டனுக்குள் உள்ளேயே வைத்துக்கொண்டு, சித்தியை வெளியேற்றினார் ஜெயலலிதா. 

சசிகலாவுக்கு சம அதிகாரம் 

தஞ்சையில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை தன் வழக்கமான ஆடம்பரங்களுடன் நடத்தினார் ஜெயலலிதா.  

உலகத் தமிழ் மாநாடு, தமிழின் புகழைப் பாடியதைவிட, ஜெயலலிதாவின் புகழையே அதிகமாகப் பாடியது.

அந்த மாநாட்டில் உறுதியாக… இறுதியாக ஒன்றைத் தெளிவுபடுத்தினார் ஜெயலலிதா.

“தானும் சசிகலாவும் சமம்… இருவரின் அதிகாரமும் சம அதிகாரம்” என்பதை அந்த மாநாட்டில் ஜெயலலிதா நிருபித்தார்.  

தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.எஸ், ஜெயலலிதா, சசிகலா

முதல்நாள் ஊர்வலத்தைப் பார்வையிட சசிகலா குடும்பத்துக்குத் தனி மேடை அமைக்கச் சொல்லி ஜெயலலிதா உத்தரவிட்டார்.

முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் எல்லாம் சாலையில் அமர்ந்து மாநாட்டைப் பார்வையிட, சசிகலா குடும்பம் தனி மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்தது.

அதைவிட முக்கியம் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த வெளிநாட்டு அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட விஐபி-கள் அனைவருக்கும் சசிகலாவைத் தானாகப் போய் அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா.

‘வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு, தானும் சசிகலாவும் சேர்ந்திருக்கும் படத்தைத்தான் கொடுக்க வேண்டும்’ என்று கறார் உத்தரவும் போட்டார் ஜெயலலிதா.

தஞ்சையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்கிய அந்த 5 நாள்களும் தஞ்சை பஞ்சர் ஆனது.

மூன்றாம் நாளில் இருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில், தஞ்சையில் உள்ள அனைத்து ரோடுகளும் முடக்கப்பட்டன.

பீரங்கி வண்டிகளோடு வந்திருந்த Anti Air Craft ராணுவத்தினர், வானில் ஏதாவது சந்தேகப்படும்படியான விமானங்கள் பறக்ககிறதா? எனக் கண்காணிக்க ஆரம்பித்தபோது தஞ்சை மக்கள் கதிகலங்கினர்.

அலங்காரங்கள், ஆடம்பரங்கள், கலைப் பயிற்சிகள் என்று மக்கள் பணம் வாரி இறைக்கப்பட்டன.

மாநாட்டுக்குப் பல நாள்களுக்கு முன்பு இருந்தே, சாலைகள் முழுவதும் 50 கி.மீ. தூரத்துக்கு ட்யூப் லைட்டுகளைப்போட்டு இரவைப் பகலாக்கி இருந்தனர்.

இதுதவிர சோடியம் விளக்குகள், கட்-அவுட்கள் என்று தஞ்சை குலுங்கியது.

விளக்குகளை அமைப்பதற்கான மொத்தக் குத்தகையை எடுத்திருந்தவர், சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் பிள்ளைகள்தான்.  

நீதியால் சரித்திரம்… நிதியால் தரித்திரம்!

மாநாட்டின் முதல் நாளான்று எம்.ஜி.ஆர் சிலை திறக்கப்பட்டது.

மூன்றரை மணி நேரம் நடந்த மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்வையிட மூன்று மேடைகள் அமைக்கப்பட்டன.

முதல் மேடையில் ஜெயலலிதா, சசிகலா, வெளிநாட்டு அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். இரண்டாவது மேடை தமிழக அமைச்சர்களுக்காக.

மூன்றாவது மேடை சசிகலாவின் குடும்பத்துக்காக. தஞ்சை காவலர் அணிவகுப்புத் திடலில் 1-ம் தேதியில் இருந்து 5-ம் தேதி வரை கவியரங்கள் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட கவிஞர்கள் எல்லாம் சொல்லிவைத்தாற்போல, மறைமுகமாக, நேரடியாக கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தியை கவிதைகளால் இகழ்ந்தனர்.

அமைச்சர் இந்திரகுமாரி, ஜெயலலிதா, சசிகலா

ஜெயலலிதாவைப் புகழ்ந்தனர். அப்படிப் படிக்கப்பட்ட கவிதை ஒன்றில், 

“திருவாரூருக்கு நீதியினால் (மனுநீதிச் சோழன்)
வந்தது சரித்திரம்…
நிதியினால் (கருணாநிதி வந்தது தரித்திரம்…” 

என்ற வரிகள் வந்தபோது, சசிகலாவும், ஜெயலலிதாவும் ரசித்துச் சிரித்தனர்.

பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் இந்திராகுமாரியும் ரசித்துச் சிரித்தார்.(மேலே உள்ள படம்).

விழாவில் பிரதமர் நரசிம்மராவ் ஒப்புக்கு கலந்துகொண்டு ராஜராஜ சோழனின் ஸ்டாம்பை வெளியிட்டார். 

நடராஜனுக்குத் தடா!

ஜெயலலிதா அந்தக் காலகட்டத்தில், சசிகலாவை தனது சதுரங்க ஆட்டத்தில் ராணியாக வைத்துக்கொண்டார்; சசிகலாவின் உறவுகளை தன் தேவைக்கேற்ப அமைச்சர்கள், தளபதிகள், சிப்பாய்களாகப் பயன்படுத்திக்கொண்டார்.

ஆனால், நடராஜனை மட்டும் நடராசன்ஆட்டத்துக்குள்ளேயே சேர்த்துக்கொள்ளவில்லை.

அந்தக் காலகட்டம் முழுவதும் நடராசனை ஜெயலலிதா துரத்தி துரத்தி அடித்தார்.

நடராசனும் விடாமல் ஜெயலலிதாவை மிரட்டிக்கொண்டே இருந்தார்.

தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு துவங்கிய முதல் நாள், இரவு தஞ்சை அருகே உள்ள தனது சொந்த ஊரான விளாருக்கு வந்துவிட்டார் நடராசன்.

தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை எல்லாம் அங்கு வரவழைத்துச் சந்தித்தார். செய்தித்துறை இணை இயக்குநர் சம்சுதின், விளார் கிராமத்துக்கு இரவில் சென்று நடராசனைச் சந்தித்தார்.

மாநாட்டின் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றன. அந்த மாநாட்டில் நடைபெற்ற ஒரே ஒரு உருப்படியான நிகழ்ச்சி அதுதான்.

ஆனால், 5 நாள்களில் ஒரு நாள்கூட அந்தப் பக்கமே போகவில்லை ஜெயலலிதா.

அதைத் தெரிந்துகொண்ட நடராசன் 5-வது நாள் காலையில் பந்தாவாக அங்கு போனார்.

தஞ்சைப் பல்கலைக் துணைவேந்தர் அவ்வை நடராசனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அதன்பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண வி.ஐ.பி கேலரி வழியாக நுழைய முயன்ற நடராசனை போலீஸார் தடுத்தி நிறுத்தினர்.

அதற்கு அசைந்து கொடுக்காத நடராசன், “நான் பத்திரிகைக்காரனாக வந்துள்ளேன்” என்றார்.

நடராசனுக்குச் சளைக்காத போலீஸ், “பி.ஆர்.ஓ அலுவலகத்தில் இருந்து கொடுத்த பாஸ் இருக்கிறதா?” எனக் கேட்டு, அவரைத் திருப்பி அனுப்பினார்கள்.

அதன்பிறகு பொதுமக்கள் செல்லும் வழியில் சென்று மாநாட்டைப் பார்வையிட்டார் நடராசன்.

இப்படித் தொடர்ந்து, தான் அவமானப்படுத்தப்படுவதை உணர்ந்து நொந்துகொண்ட நடராசன், தனக்கு நெருக்கமான ஒருவரிடம், “இந்தம்மா என்னைப் போய் ஏன் போட்டியா நினைக்குது? உண்மையில் நான் அந்த அம்மாவுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன்.

சுப்பிரமணியன் சுவாமி, வாழப்பாடி ராமமூர்த்தி என இருவரையும் என் கைக்குள் வைத்திருந்தேன்.

அதைப் புரிந்துகொள்ளாமல், ‘நான் அவர்களோடு சேர்ந்து இந்த அம்மாவுக்கு எதிராக சதி செய்கிறேன்’ என்று நினைக்கிறது.

என் பெயர் வேண்டுமானால் நடராசனாக இருக்கலாம்… ஆனால், நான் உண்மையில் யாரையும் அழிக்கும் சிவன் இல்லை.

படைக்கும் பிரம்மா. காக்கும் விஷ்ணு. அதை இந்த அம்மா மிகத் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளும்போல…” என்று பொங்கித் தள்ளினார். 

சசிகலாவுக்கு சம அதிகாரம் கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவின் குடும்பம்தான், தன் குடும்பம் என்று அறிவிக்கும் காரியம் ஒன்றையும் செய்தார்.

தமிழகம் என்றென்றைக்கும் மறக்காது அந்தக் காரியத்தை!

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 47

ஜெயக்குமார் Vs சசிகலா! 

ஜெயலலிதா, அவரது அண்ணன் ஜெயக்குமார், அண்ணி விஜயலெட்சுமி

ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமார். ஜெயலலிதாவுக்கு உடன்பிறவாச் சகோதரி சசிகலா.

இந்த இரண்டு உறவுகளையும் தன்  தராசுத் தட்டில் சமமாக நிறுத்தி வைக்க அரும்பாடுபட்டார் ஜெயலலிதா.

அந்தப் பாசப் போராட்டத்தில் ஜெயலலிதா தோற்றார்; சசிகலா வென்றார்.

வேறு வழியில்லாமல் தன் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா.

அவருக்கு ஏற்பட்ட அந்த நிலைக்குக் காரணம், சசிகலாவின் பழிக்குப் பழி வாங்கும் திட்டமாக இருக்கலாம்; அல்லது எதிர்காலத்தில் ‘தனக்கு எதிரியாக ஜெயக்குமாரின் மகள் தீபா வரக்கூடும்’ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம்; அல்லது ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட, ஈவு இரக்கமற்ற ஒரு கறார் ஒப்பந்தமாகவும் இருக்கலாம்.

‘உன்னுடன் இருப்பதற்காக நான், என் கணவரைப் (நடராசன்) பிரிந்துள்ளேன்; உறவுகளை ஒதுக்கி வைத்துள்ளேன்; தம்பியைத் தள்ளி வைத்துள்ளேன்.

அதுபோல, என்னுடன் நீ இருக்க வேண்டுமானால் உன் அண்ணனையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வை’ என்பதைப் போன்றதொரு ஒப்பந்தமாகவும் அது இருந்திருக்கலாம்.

ஜெயலலிதாவுடன் தனக்கு ஏற்பட்ட இணைப்பை தக்க வைத்துக் கொள்ள சசிகலா எதையும் செய்யவும் தயங்காதவராக இருந்தார்.

ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை என்றதும், தன் ரத்த உறவுகள் அத்தனையையும் கொஞ்சமும் தயங்காமல் சசிகலா ஒதுக்கித் தள்ளினார்.

அதேபோல ஜெயலலிதாவோடு தனக்கு உருவான பிணைப்புக்கு இடையில், ஜெயலலிதாவின் உறவுகள் குறுக்கிட முயன்றபோது அவைகளைக் கொஞ்சமும் இரக்கமின்றி ஓரம் கட்டினார்.

அப்படி ஓரம் கட்டப்பட்டதுதான் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம்

ஜெயக்குமார் Vs சசிகலா!

ஜெயக்குமார், தீபக், விஜயலெட்சுமி, தீபா, சசிகலா

1993 வரை ஜெயலலிதா அவரது அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தோடு நெருக்கமாகத்தான் இருந்தார். அப்போது ஜெயக்குமாரின் குடும்பம் தி.நகரில் வசித்தது.

ஜெயக்குமாரின் மனைவி விஜய லெட்சுமி. மகள் தீபா. மகன் தீபக். தங்கை தமிழக முதல்வராக இருந்தாலும், ஜெயக்குமார் தனியாக-எளிமையாகவே தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

எப்போதாவது அவர் போயஸ் கார்டனுக்கு குடும்பத்தோடு வந்து போவதும், சில தேவைகளைக் கேட்டுப் பெறுவதும், போயஸ் கார்டனில் நடக்கும் விழாக்கள், விருந்துகளில் கலந்து கொள்வதுமாக இருந்தார்.

அது சசிகலாவுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. குறிப்பாக அந்தப் பெண் தீபா… சசிகலாவுக்கு உறுத்தலோடு எரிச்சலையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தால், ஜெயலலிதாவின் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்வது, ஜெயலலிதாவைப் போலவே கைக்குட்டையால் முகம் துடைப்பது என தீபா ஒரு மினி ஜெயலலிதாவாகவே இருந்தார்.

12-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த தீபாவின் பார்வையும், பேச்சும், பாவனைகளும் நொடிக்கு நொடி ஜெயலலிதாவையே நினைவுபடுத்தியது.

அதோடு அத்தையின் உடைகளை அடுக்கி வைப்பது, அத்தைக்கு உடைகளைத் தேர்வு செய்வதிலும் தீபா தலையிட்டார். ஜெயலலிதாவும் தீபாவை, ‘டார்லிங்… டார்லிங்’ என அன்பொழுக அழைத்துக் கொஞ்சினார்.

இது எல்லாம் சசிகலாவுக்கு எரிச்சலையும், எதிர்காலம் பற்றிய கலக்கத்தையும் உண்டாக்கியது. 

தீபா vs சசிகலா!

தீபா, சசிகலா

நேரு ஸ்டேடியம் திறப்பு விழா நிகழ்ச்சி வந்தது. அதில் பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்டார்.

சசிகலாவின் அக்காள் வனிதாமணி உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

ஜெயலலிதா தன் அண்ணன் குடும்பத்தை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். இரண்டு குடும்பங்களும் போயஸ் கார்டனில் சங்கமித்தன.

அங்கிருந்து அனைவரும் ஒரே வேனில் கிளம்பி நேரு ஸ்டேடியத்துக்குப் போனார்கள்.

பிரதமர், முதலமைச்சர் அமர்ந்திருந்த மேடைக்குப் பக்கவாட்டில் வி.ஐ.பி-க்களுக்கு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

சசிகலாவுக்காக தனி சோஃபா போடப்பட்டு இருந்தது. மூன்று பேர் அமரக்கூடிய அந்தச் சோபாவில் சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணி விஜயலெட்சுமியும் உட்கார்ந்திருந்தனர்.

மூன்றாவது இடம் சசிகலாவின் அக்காவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் தீபா வந்து அமர்ந்து கொண்டார். சசிகலாவின் அக்காள் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த நிகழ்வு, ஏற்கெனவே தீபா மீது ஆத்திரத்தில் இருந்த சசிகலாவின் மனதில் மேலும் கொந்தளிப்பை உருவாக்கியது.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியதும் ஜெயலலிதாவிடம் சசிகலா புகார் வாசித்தார்.

அதைக் கேட்டு ஆத்திரப்பட்ட ஜெயலலிதா, தன் அண்ணனைக் குடும்பத்துடன் மீண்டும் ஒரு நாள் போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்தார்.

4 மணிநேரம் தன் அண்ணனோடு பேசினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார்.

அந்த பேச்சுவார்த்தை முற்றியபோது ஜெயலலிதாவிடம் கோபம் கொப்பளித்தது. அதைப் பார்த்தே மிரண்டுபோன தீபா, மயக்கம் போட்டுக் கீழே சரிந்தார்.

தீபா மயங்கிச் சரிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா கோபம் தணிந்து நிதானத்துக்கு வந்தார்.

தனது அண்ணன் குடும்பத்தைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.

ஆனால், அதன்பிறகு ஜெயக்குமாரின் குடும்பம் போயஸ் கார்டன் பக்கமே வரவில்லை.

அந்த நேரத்தில் ஜெயக்குமாரின் குடும்பம் போயஸ் கார்டனுக்குள் மீண்டும் வருவதற்குப் மேகநாதன் என்பவர் பாலம் போட்டார். 

கஞ்சா வழக்கில் மேகநாதன் கைது. 

ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் காலத்தில் இருந்து, மேகநாதன் ஜெயக்குமாரோடு இருந்தவர்.

உதவியாளர், கார் டிரைவர், அட்வைசர் என ஜெயக்குமாருக்கு மேகநாதன்தான் ஆல்-இன்-ஆல்.

மேகநாதன் இல்லாமல் கழியும் ஒரு நாள், ஜெயக்குமாருக்கு மிகக் கடினமானதாக இருக்கும்.

அப்படிப்பட்ட மேகநாதன், ஜெயக்குமார் குடும்பத்தை மீண்டும் போயஸ் கார்டனுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமெனத் துடித்தார்.

ஜெயக்குமார் குடும்பம் போயஸ் கார்டனுக்கு வராத அந்த நேரத்தில், மேகநாதன் ஜெயலலிதாவைச் சந்தித்தார். 

ஜெயக்குமார் குடும்பத்தைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி ஜெயலலிதாவிடம் பேசினார்.

இதையடுத்து மேகநாதனுக்கு ஜெயலலிதாவைப் பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஆனால், அதற்கும் சளைக்காத மேகநாதன், போயஸ் கார்டன் ஊழியர்கள் சிலரை வெளியில் சந்தித்து, ஜெயலலிதாவுக்குச் சில தகவல்களைக் கொண்டு போக முயன்றார்.

அதில்தான் அவருக்கு சனி பிடித்தது. மேகநாதனை ஒடுக்க முடிவு செய்து, விறுவிறுவென சசிகலா காய்களை நகர்த்தினார்.

1993 மார்ச் 5-ம் தேதி இரவு. மேகநாதனைச் சந்திக்க பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர் பாபு வந்து அவரிடம் அன்பாகப் பேசினார்.

பிறகு, “ஒரு முக்கியமான விஷயம்… உங்களிடம் பேச வேண்டும். ஹோட்டல் கண்பத்தில் போய் பேசுவோம்” என்று சொல்லி மேகநாதனை இன்ஸ்பெக்டர் பாபு அழைத்துச் சென்றார்.

ஹோட்டலுக்குள் நுழைந்தபோது, அங்கு இரண்டு கான்ஸ்டபிள்களும், ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் இருந்தனர்.

இடத்தின் சூழல் வேறு மாதிரியாக இருந்தது. ஹோட்டலுக்கு வரும்வரை அன்பாகப் பேசிக்கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் பாபு, இப்போது வேறு தொனியில் பேச ஆரம்பித்தார்.

அதன்பிறகுதான், “ஏதோ ஒரு வில்லங்கம் நம்மை மெல்லச் சுற்றிக் கொண்டிருக்கிறது” என்பது மேகநாதனுக்குப் புரிந்தது.

உடனே சுதாரித்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்ப முயன்ற மேகநாதனை அவர்கள் வெளியில் விடவில்லை.

“உன் மீது கஞ்சா வழக்குப் போடப்பட்டுள்ளது. காலையில் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். அதனால், நீ எங்கேயும் போகக்கூடாது” என்றனர்.

அவ்வளவுதான்… அதன்பிறகு மேகநாதன் கதறி அழுது கெஞ்சினார்.

ஒன்றும் பலனளிக்கவில்லை. மாறாக, “உன் மேல் பிரவுண் சுகர் வைத்திருந்ததாக வழக்குப் போடச் சொல்லித்தான் எங்களிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், நீ எனக்கு அறிமுகமான ஆள் என்பதால் கஞ்சா வழக்கோடு நிறுத்திக் கொண்டோம்.

அதனால், நீதிமன்றத்தில் எந்தப் பிரச்னையும் செய்யாமல், குற்றத்தை ஒத்துக் கொண்டு சிறைக்குப் போய்விடு” என்று மிரட்டல்தான் வந்தது.

மறுநாள் காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மேகநாதன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் அருணா ஜெகதீசன் உத்தரவிட்டார். 

ஜெயா-ஜெயக்குமார் உறவில் முறிவு!

இதற்கிடையில் மேகநாதனின் மனைவி ரேணுகா தேவியும், ஜெயக்குமாரும்  மேகநாதனை சென்னை முழுவதும் தேடினார்கள்.

போலீஸ் உயரதிகாரிகளிடம் ஜெயக்குமார் முறையிட்டார்.

“எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என அவர்கள் கையை விரித்தனர்.

ஜெயக்குமார் போயஸ் தோட்டத்துக்கு நேரில் கிளம்பிப் போனார்.

ஆனால், அவரை தெருமுனையிலேயே சிலர் மடக்கிவிட்டனர். அதன்பிறகு தொலைபேசியில் தன் தங்கையும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவைத் தொடர்பு கொள்ள முயன்றார்.

ஒரு நாள் அல்ல… இருநாள் அல்ல… தொடர்ந்து மூன்று வாரங்கள்… ஒரு நாளைக்கு 50  போன் கால்கள்… என்று முயற்சித்துக் கொண்டே இருந்தார்.

ஆனால், கடைசிவரை அவரால் ஜெயலலிதாவிடம் பேசவே முடியவில்லை.

ஒவ்வொருமுறையும் “சி.எம். ரெஸ்டில் இருக்கிறார்… கோட்டைக்குப் போய் இருக்கிறார்… தூங்குகிறார்” என்ற பதில்கள் மட்டுமே வந்தன.

ஒரு கட்டத்துக்குப் பிறகு,  ஜெயக்குமாரின் வீட்டுத் தொலைபேசியும் வேலை செய்யாமல் போனது.

அதைச் சரிசெய்ய வந்த டெலிபோன் துறை ஊழியர்கள், “சார் எங்களால் முடிந்த அளவுக்கு சரி செய்துவிட்டோம். டெலிபோன் எக்ஸ்சேன்ஜில் ஏதோ பிரச்னைபோல.

இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கையை விரித்தனர்.

ஜெயக்குமார் விரக்தியான புன்னகையுடன் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஜெயக்குமார் போயஸ் கார்டன் பக்கமே போகவில்லை.

மேகநாதனின் மனைவி ரேணுகாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் “என் கணவர் மேகநாதன், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவருடைய அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கும் நெருக்கம் உண்டாக்க முயற்சித்தார்.

அது முதல்வரின் தோழி சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் உத்தரவின்பேரில் தான், போலீஸ்காரர்கள் என் கணவர் மீது கஞ்சா வழக்குப் போட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

ப்ரியமுள்ள அம்மு! 

பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஜெயலலிதாவோடு பேச முடியவில்லை என்பதில் விரக்தி அடைந்த ஜெயக்குமார், ஒரு கடிதத்தை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார். அதில், 

பிரியமுள்ள அம்மு,

நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறேன். ஆனால், நானும் என் குடும்பமும் பெரும் சிக்கலில் இருக்கிறோம்.

நான் கடந்த மூன்று வாரங்களாக உன்னுடன் தொலைபேசியில் பேச முயற்சிக்கிறேன்.

ஆனால், முடியவில்லை. மேகநாதன் ஒரு அப்பாவி. அவன் குற்றவாளி அல்ல.

ஆனால், அவன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே நாங்கள் இங்கு இருக்கிறோம்.

அதனால் எனது கோரிக்கையை ஏற்று மேகநாதனை விடுதலை செய்ய நீ உதவ வேண்டும்.

என்னுடைய எல்லா வேலைகளுக்கும் நான் அவனையே சார்ந்துள்ளேன்.

என் மேனேஜர், உதவியாளர், டிரைவர் என எனக்கு எல்லாம் அவன்தான்.

அவன் கைது செய்யப்பட்டதில் இருந்து நான் உதவிக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறேன்.

நான் நேரில் உன்னைச் சந்தித்து விளக்கம் கொடுக்க முயற்சித்தேன்.

ஆனால், உன்னைச் சந்திக்கும் எல்லா வழிகளும் எங்களுக்கு அடைக்கப்பட்டுவிட்டன.

கடைசி முயற்சியாகத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னுடைய வேண்டுகோளைப் புரிந்துகொண்டு நீ உதவுவாய் என நம்புகிறேன். 

உன் அன்புள்ள 
பாப்பு (ஜெயக்குமார்).

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

 

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 46

ஜெயலலிதா சந்திரலேகா மோதல்

ஜெயலலிதாஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் பொதுமக்களை அநாசயமாக அலட்சியப்படுத்தியது.

அதற்கு உதாரணம் கும்பகோணம் மகாமகம்.

ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் அராஜகமாகத் தொடர்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, தராசு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, அதன் இரண்டு ஊழியர்களின் உயிர் பறிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம், தமிழகத்தில் ஆடம்பர அரசியலுக்கு அச்சாரம் போட்டது.

அதற்கு  விளக்கம் மதுரையில் நடந்த  வெற்றி விழா மாநாடு. ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் கொடூரங்களின் கோட்டையாக நின்றது.

அதன் நிகழ்கால அடையாளம், ஆசிட் வீச்சில் சிதைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திரலேகாவின் முகம். 

ஆசிட் வீச்சு : கொடூரத்தின் அடையாளம்!

சந்திரலேகா ஆசிட் வீச்சு1992 மே 19-ம் தேதி ஒரு செவ்வாய் கிழமை. அன்று காலையே வெயில் கொளுத்தத் தொடங்கியது.

ஊர் முழுவதும் புழுக்கம் நிரம்பி இருந்தது.

தன் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா தனது காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டார்.

கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, வெளிக்காற்றை வாங்கிக் கொண்டும், சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணத்தில் மூழ்கி இருந்தார்.

அவருடைய கார் எழும்பூர் அருகே வந்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசலில் அந்தச் சாலை சிக்கித் கொண்டிருந்தது.

ஊர்ந்து… ஊர்ந்து… மெல்ல நகர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒரு கட்டத்தில், திணறத் தொடங்கின.

அந்த நேரத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு இளைஞன் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.

அவன் எதேச்சையாக சந்திரலேகாவின் கண்களில் தென்பட்டான். ஏனோ… அவனை கவனிக்க வேண்டும் போல் சந்திரலேகாவுக்குத் தோன்றியது.

அதே நேரத்தில் அந்த இளைஞனும் சந்திரலேகாவின் காரை நோக்கியே ஓடி வந்தான்.

காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் எதையாவது விநியோகிப்பான் என சந்திரலேகா நினைத்துக் கொண்டார்.

இப்போது அந்த இளைஞன் சந்திரலேகாவின் காரை வெகு அருகில் நெருங்கி இருந்தான்.

அந்த நேரத்தில் சட்டென சந்திரலேகாவுக்கு மனதில் ஒரு உறுத்தல்… “இவன் வரும் பரபரப்பில் நோட்டீஸை விசிறியடித்தான் என்றால், அது கண்களில் படுமே!” என நினைத்து, வலதுபக்கம் திரும்பி கண்களையும் லேசாக மூடிக் கொண்டார்.

அடுத்த சில நொடிகளில், எரிகிற தீயில் உருக்கப்பட்ட இரும்பு நெருப்புக் குழம்பை முகத்தில் ஊற்றியது போன்ற ஒரு கொடூர வேதனையை சந்திரலேகாவின் மூளை உணர்கிறது.

எந்த வார்த்தையாலும் உணர்த்திவிட முடியாத ரணவேதனை அது.

சந்திரலேகாவால் குரல் எழுப்பி அலறக்கூட முடியவில்லை.

அனைத்தையும் மீறி லேசாகக் கண்களைத் திறந்து அவர் பார்த்தபோது அவருடைய புடவை, ஜாக்கெட்டும் எரிந்து கரும்புகைக் கிளம்பிக் கொண்டிருந்தது.

சட்டென செயல்பட்ட சந்திரலேகாவின் டிரைவர் பிரேம்குமார், காரை விட்டு இறங்கி அந்த இளைஞனை துரத்திப் பிடித்தார்.

சந்திரலேகா ரோட்டில் இறங்கி வேதனையில் துடித்தார். அப்போது, அவரைத் தாண்டிச் சென்ற எந்தக் காரும் அவருக்காக நிற்கவில்லை.

ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்குப் போனார். வேதனையும் இயலாமையும் சூழ்ந்திருந்த அந்தச் சூழலிலும் சந்திரலேகாவின் மனமும் புத்தியும், இது சதித்திட்டம் என்று அவரை எச்சரித்தது.

இதைச் செய்தவர்கள் கொன்று கூவத்தில் வீசவும் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த சந்திரலேகா, நினைவை மட்டும் இறுக்கிப்பிடித்துக் கொண்டார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது, நெருங்கிப் பழகிய அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் வட்ட நண்பர்கள் என யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. 

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நலனுக்குப் பொறுப்பு மாநில முதலமைச்சர்தான். அவர்களுக்கு விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரம் படைத்தவர் மாநில முதல்வர்தான்.

அப்படி இருந்தும், தனது அரசாங்கம் நடக்கும் மாநிலத்தில், தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி மருத்துவமனையில் இருந்தபோதும், ஜெயலலிதா அவரைப் போய்ப் பார்க்கவில்லை.

ஆறுதலாக ஒரு அறிக்கையைக்கூட வெளியிடவில்லை.

ஆனால், அதன்பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், யாராவது ஒரு அதிகாரி கையெழுத்துப் போட மறுத்தால், “பாத்துப்பா… உன் முகத்துல ஆசிட் அடிச்சிரப்போறாங்க” என்று பேச ஆரம்பித்தனர்.. 

யார் அழகு : ஜெ.-சந்திரலேகா நடத்திய நீயா? நானா?

சந்திரலேகா

1992 காலகட்டத்தில் சந்திரலேகா டிட்கோ சேர்மனாக இருந்தார்.

அந்த நேரத்தில் ஸ்பிக் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை அரசாங்கம் வைத்திருந்தது.

அவற்றையும் தாங்களே வாங்கிவிட வேண்டும் என ஸ்பிக் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஏ.சி முத்தையாவும் எம்.ஏ.சிதம்பரமும் துடித்தனர்.

அந்த நேரத்தில் அரசாங்கமும் பங்குகளை விற்க முடிவு செய்தது. ஆனால், என்ன விலைக்கு விற்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அந்தச் சிக்கலுக்குள்தான் கண்ணுக்குத் தெரியாத ஊழல் ஒன்று ஊடுருவி இருந்தது.

1992 ஜனவரி 24-ம் நாள் அரசின் வசம் உள்ள ஸ்பிக் பங்குகளை, அந்த நிறுவனத்துக்கே விற்பனை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அந்த முடிவை அரசாங்கம் எடுத்தபோது, ஒரு பங்கின் விலை 80 ரூபாய்.

அதன்பிறகு இரண்டு மாதங்கள் கழித்துத்தான் பங்குகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது (1992 மார்ச் 23-ம் தேதி) ஒரு பங்கின் விலை 210 ரூபாய்.

ஏறத்தாழ 3 மடங்கு அளவுக்கு பங்கின் விலை உயர்ந்திருந்தது. ஆனால், அரசாங்கம் 80 ரூபாய்க்கே ஸ்பிக் நிறுவனத்துக்கு பங்குகளை விற்பனை செய்ய ஆர்வம் காட்டியது.

அதற்கு டிட்கோ சேர்மன் சந்திரலேகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, “சந்திரலேகாவிடம் நானே பேசுகிறேன்” என்று சொல்லி தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டார்.

அந்தத் தொலைபேசி உரையாடலில், “ஜெயலலிதா சொன்னதை சந்திரலேகா மறுக்க… சந்திரலேகா சொன்னதை ஜெயலலிதா எதிர்க்க…” என இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது.

கடைசியில் அந்த வாக்குவாதம், ‘யார் அழகு : நீயா? நானா?” என்ற இடத்தில் வந்து நின்றது.

ஒருகட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா, “முகத் தோற்றம்தான் முதலமைச்சராவதற்கு அடிப்படைத் தகுதி என்றால், நானும் முதல்வராகியிருப்பேன்” என்று கூறியதாக அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

அதில் காயம்பட்ட ஜெயலலிதா சந்திரலேகாவுக்குத் தக்க பாடம் புகட்டக் காத்திருந்தார். அந்த நேரத்தில்தான் அவர் மீது ஆசிட் அடிக்கப்பட்டது.

அதில் டிரைவரிடம் பிடிபட்ட இளைஞன் பெயர் சுடலை என்கிற சுர்லா என்று சொல்லப்பட்டது. 5 ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வழக்கு கடுமையாகப் போடப்பட்டு இருந்தது.

ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சுர்லா மீதும் குற்றம் நிருபிக்கப்படவில்லை. கடைசிவரை சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது வெளி உலகத்துக்கு தெரியாமலே போனது.

பெண்களை பழிவாங்க ஆசிட்டை கையில் எடுக்கும் புதிய-கொடூர கலாச்சாரம் ஒன்று தமிழகத்துக்கும் தமிழக அரசியலுக்கும் அறிமுகம் ஆனது. 

ஜெயலலிதாவின் கொடுங்கனவு நடராசன்! 

சசிகலா,அனுராதா, தினகரன்,ந்டராசன்இத்தனை அட்டூழியங்களையும் ஒரு சேர சேர்த்து நடத்திய ஜெயலலிதாவை, நடராசனின் நடவடிக்கைகள் மட்டும் கொடுங் கனவாய்த் துரத்திக் கொண்டே இருந்தன.

நடராசன் தன் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார் என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார்.

அதனால், ‘நடராசனோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது’ என தன் கட்சிக்காரர்களை, தன் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை, எம்.பி-க்களை, மந்திரிகளை எச்சரித்துக் கொண்டே இருந்தார்.

அவர்களை நடராசன் பக்கமே அண்டவிடவில்லை ஜெயலலிதா. நடராசனின் மனைவி சசிகலாவுக்கும் அதே கட்டளையைப் பிறப்பித்திருந்தார் ஜெயலலிதா.  

தன் தோழியின் விருப்பப்படியே சசிகலாவும் நடராசனை முற்றிலுமாக வெட்டி விட்டிருந்தார்.

ஜெயலலிதாவின் சொல்லை சசிகலா எந்த அளவுக்கு கறாராகப் பின்பற்றினார் என்றால், நெருங்கிய உறவுகளுக்குள் நடந்த டி.டி.வி.தினகரனின் திருமண விழாவில் கூட நடராசனோடு சசிகலா ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரனின் திருமணம், 1992 அக்டோபர் 30-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்றது.

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாதான் மணமகள்.

நெருங்கிய சொந்தங்களுக்குள் நடைபெற்ற திருமணத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வரவில்லை.

திருமணம் நடைபெற்ற ‘குருதயாள் சர்மா’ கல்யாண மண்டபத்துக்கு கட்சிக் கரை வேட்டிகள் யாரும் வரவில்லை. எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களும் வரவில்லை.

ஆனால், அதிகாரிகள் வந்திருந்தனர். டாமின் தியானேசுவரன், முதலமைச்சர் பாதுகாப்பு அதிகாரி பழனிவேல் என ஆரம்பித்து போலீஸ் அதிகாரிகள் எக்கச்சக்கமாக குவிந்திருந்தனர்.

அந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட சசிகலாவும் நடராசனும் பேசிக் கொள்ளவே இல்லை.

ஆனால், நடராசன் உறவினர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு, ஏதோ ஒரு ஜோக்கை சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

அவற்றை ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த சசிகலா, நடராசனின் ஒரு ஜோக்கைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்.

அதிகபட்சமாக தினகரனின் திருமண விழாவில் சசிகலா, நடராசனின் சந்திப்பு அந்தச் சிரிப்போடு முடிந்தது. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை :பாகம் 45

“போஸ்டர்… கட்-அவுட்… நான்கு லாரிப் பூக்கள்” 

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார்.

காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை.

அண்ணா காலத்தில் அதை யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாது.

கருணாநிதி காலத்திலும் அவ்வளவு ஆடம்பரம் அரசியலில் எட்டிப்பார்க்கவில்லை.

சொகுசான நடிகராக இருந்து, முதல்வரான எம்.ஜி.ஆர் காலத்தில்கூட நிலைமை அவ்வளவு மோசமாகவில்லை.

அதுவரையிலும் ஆர்ப்பாட்டமான அரசியல் இருந்தது. ஆனால், ஆடம்பர அரசியல் என்ற ‘கான்செப்ட்’ தமிழகத்துக்கு அறிமுகம் ஆகவில்லை.  

ஜெயலலிதா காலத்தில் அது தமிழகத்துக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கி… பிறகு, அரசியலின் அங்கமாக மாறிப்போனது.

அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா தன்னை, தமிழகத்தை ரட்சிக்க வந்த ஆதிபராசக்தியின் வடிவமாக கற்பனை செய்து கொண்டார்.

தன்னைவிட்டால் தமிழகத்துக்கு வேறு நாதி இல்லை என்ற நினைப்பில் இருந்தார்.

இனி நிரந்தரமாக தமிழகத்தில் அ.தி.மு.க-வின் ஆட்சிதான் என்று தப்புக் கணக்கைப் போட்டுக் கொண்டார். அந்த எண்ணம் அவர் கண்ணில் இருந்து எதார்த்தத்தை மறைத்தது.

எதார்த்தம் தெரியாததால், அவருக்கும் தமிழக மக்களும் இருந்த இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. 

ஜெயலலிதா எங்கு போனாலும் அவருடைய காருக்கு முன்னாலும் பின்னாலும் தலா 50 கார்கள் அணிவகுத்தன;

மேரி மாதா, ஆதி பாராசக்தி வடிவத்தில் சித்தரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் போஸ்டர்கள் தமிழகத்தை கேலிக்குரிய மாநிலமாக பார்க்க வைத்தன;

ஜெயலலிதாவின் 150 அடி உயர கட்-அவுட்கள் பொதுமக்களை வாய்பிளக்க வைத்தன; ஜெயலலிதா கடந்து செல்லும்வரை மணிக்கணக்கில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர்.

ஜெயலலிதா கலந்து கொள்ளும் சில மணி நேர கூட்ட மேடைகளுக்கு அருகில் அவருக்காக  லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டி கழிப்பறைகள் உருவாக்கப்படுவதும், கூட்டம் முடிந்ததும் அவை இடித்துத் தகர்க்கப்படுவதும் தமிழக மக்களை ஆத்திரமுறச் செய்தன.

ஆனால் ஜெயலலிதா இவற்றை எல்லாம் விரும்பினார். அவற்றை ரசித்தார். அது ஒவ்வொன்றுக்கும் சசிகலா சாட்சியாக இருந்தார்.

ஜெயலலிதாவுக்கு இப்படிப்பட்ட ஆடம்பரங்களை பழக்கிவிடுவதும், அவற்றைச் செய்யத் தூண்டுவதும் சசிகலாதான் என்று பலர் குற்றம் சாட்டினர்.

அந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் சசிகலா கண்டுகொள்ளவில்லை. அந்த விமர்சனங்கள் எதற்கும் ஜெயலலிதா பதில் சொல்லவில்லை.

இவற்றை எல்லாம் உணர்ந்து கொள்ள ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சியில் பல சம்பவங்கள் இருக்கின்றன.

அதில் கும்பகோணம் மகாமகத்துக்கு அடுத்து நடந்த மதுரை மாநாடு உலகப்பிரச்சித்தம். 

மதுரை மாநாடு : ஆடம்பர அரசியலின் உச்சம்! 

1992 ஜுன் 27,28,29 மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

அதையடுத்து மதுரை சசிகலா, ஜெயலலிதாஅல்லோலகல்லோலப்படத் தொடங்கியது.  

மதுரையில் சர்க்கியூட் ஹவுஸில் ஜெயலலிதா, சசிகலா தங்குவதற்காக தனி அறைகள் உருவாக்கப்பட்டன. அந்த அறைகளின் கட்டமைப்பு, ஒருமுறை அல்ல… இருமுறை அல்ல… 27 முறை மாற்றி அமைக்கப்பட்டது.

மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்த சீஃப் இன்ஜினீயர்கள் எல்லாம் மதுரையில் மாநாடு நடைபெறும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குவிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ‘ஸ்பார்டெக்ஸ்’ டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன.

தமுக்கத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையின் முகப்பில் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வடிந்துவிடாமல் இருக்க, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ‘பைபர் ஸ்பான்ஞ்’ கூரைகள் வேயப்பட்டன.

மேடையிலும்  டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. மேடையில் இருந்து ஜெயலலிதாவின் ரெஸ்ட் ரூம் செல்லும் பாதையில், பாலீஸ் செய்யப்பட்ட கடப்பா கற்கள் பதிக்கப்பட்டன.

ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ரத்தினக் கம்பளங்கள் கொண்டு வரப்பட்டு விரிக்கப்பட்டன அதற்குள்ளேயே மேக்கப்-ரூம், டிரெஸ்ஸிங் ரூம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த டிஸ்கஷன் ரூம் அமைக்கப்பட்டது.

மன்னார்குடியில் இருந்து சமையலுக்கு தனி சமையல்காரர்கள் இறக்கப்பட்டனர். 

போஸ்டர்… கட்-அவுட்… நான்கு லாரிப் பூக்கள்!

மதுரை மாநாட்டில் மாநாடு

தலைநகரின் ஜான்சி ராணி… என்று கலர் போஸ்டர்கள் பளபளத்தன.

செங்கோட்டையன், கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசுதான் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.

70 எம்.எம். கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டது. அதன் முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த பிரம்மாண்ட யானை சிலைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

150 அடி உயரத்துக்கு ஜெயலலிதாவின் கட்-அவுட்கள் தமிழகத்தில் மதுரை மாநாட்டில் அறிமுகமானது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைவிட அந்த கட்-அவுட்கள் உயரமாக இருந்தன. அதைப் பார்த்து மதுரை அஞ்சியது.

27 ஆம் தேதி தொடங்கிய மாநாட்டுக்கு தனி ஹெலிபேடில் சசிகலாவும் ஜெயலலிதாவும் வந்திறங்கினர்.

ஜெயலலிதா நேராக நடக்க, சசிகலா தனியாக வேறு ரூட்டில் நடந்து போனார்.  சசிகலாவோடு டி.எஸ்.பி சிவனாண்டி சகஜமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு, அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

ஹெலிபேட் மைதானத்தில் நின்று கொண்டிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் ஜெயலலிதா வந்தவுடன் தபதபவென வரிசையாய் அவர் காலில் விழுந்தனர்.

தொலைவில் இருந்து அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கு ஒரு மனிதக் கோபுரம் ஸ்லோமோஷனில் சாய்வது போலத் தெரிந்தது.

அதன்பிறகுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.

ஜெயலலிதாவுக்காக பல லட்சங்களைக் கொட்டி, பார்த்து பார்த்து இழைக்கப்பட்ட அந்த அறையில்… 27 முறை மாற்றி அமைக்கப்பட்ட அந்த அறையில் ஜெயலலிதா தங்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

அசோக் ஹோட்டலில் தங்கினார். 28 ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜெயலலிதா கொடியேற்றி வைத்தார்.

அங்கிருந்து மாநாட்டுப் பந்தலுக்கு ஜெயலலிதா வரும் வழியில் 4 லாரிகளில் கொண்டு வந்து பூக்களைக் கொட்டி இருந்தனர்.

அது ஜெயலலிதா நடந்துவருவதற்காக கொட்டப்பட்ட பூக்கள் அல்ல… ஜெயலலிதாவின் கார் மிதந்து வருவதற்காக கொட்டப்பட்டவை.

முதல்நாள் நிகழ்ச்சியில், முசிறித் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேலுவின் திருமணம் உட்பட நான்கு திருமணங்களை மாநாட்டில் ஜெயலலிதா நடத்தி வைத்தார். 

ஜெ.வுக்கு இணையாக சசிகலாவுக்கு மரியாதை!

சசிகலா குடும்பம்

முதல்நாள் மாநாட்டில் மடிப்பாக்கம் வேலாயுதம் வெள்ளி சிம்மாசனத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கினார்.

அதில் யாழி வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனால், அதற்குத் தனியாக சாந்தி பூஜை செய்த பிறகே ஜெயலலிதா  அதில் அமர்ந்தார்.

ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் முதல்நாள் யானைப்படை, குதிரைப்படை, தரைப்படை அணிவகுப்பு நடைபெற்றது.

அதன்பிறகு, வேல் காவடி, மயில் காவடி, சிலம்பாட்டங்கள் நடைபெற்றன. கவிஞர் இளந்தேவனும், சுதா சேஷய்யனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலா ஒவ்வொரு முறை எழுந்து வெளியில் சென்றபோதும், திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்தபோதும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர்.

சசிகலாவின் குடும்பம் அந்த மாநாட்டில் பிரதானமாக வலம் வந்தது. இவற்றை எல்லாம் மேடையில் இருந்து ஜெயலலிதா அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கும் மரியாதையை சசிகலாவுக்கும் கொடுத்தனர்.  மதியம் 2.25 மணிக்கு ஜெயலலிதா மாநாட்டுக்கு வந்தார்.

அங்கு உண்மையிலேயே கூட்டம் லட்சக்கணக்கில் திரண்டிருந்தது.  ஜெயலலிதா சாதனைகள் பற்றி அமைச்சர்கள் அடுக்கடுக்காக பேசினார்கள்.  

பேச வருவதற்கு முன் அமைச்சர் விஸ்வநாதன், வெல்வெட் சூட்கேஸ் ஒன்றை ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அதை மடியில் வைத்து திறந்து பார்த்த ஜெயலலிதா,

அதை உடனே மூடி தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கொடுத்தார். அது அங்கிருந்து நேராக சசிகலாவின் கைகளுக்குப் போனது.

சசிகலாவும் அதைப் பார்த்துவிட்டு ஒரு சீட்டை எழுதி ஜெயலலிதாவுக்கு அனுப்பினார்.

அதைப் படித்த ஜெயலலிதா சசிகலாவை ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

இரண்டறை மணிநேரம் பேசிய ஜெயலலிதா, “ராஜிவ் காந்தியின் ரத்தத்தில் நான் வெற்றி பெறவில்லை என்று பேசினார்.

29 ஆம் தேதி அதிகாலையில் 4 மணிக்கு ஜெயலலிதா மாநாட்டை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

அந்த மாநாடுதான் அடுத்தடுத்த தமிழகத்தில் ஜெயலலிதா-சசிகலா கூட்டணி தமிழகத்தில் நடத்தப்போகும் ஆடம்பரங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 44

அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க நடராசன் சதி? 

 தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்து, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா.

ஆனால், “தனது ஆட்சிக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுமோ… தன்னிடம் இருக்கும் முதல்வர் நாற்காலியையும் டெல்லி பறித்துவிடுமோ…” என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாள்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.

நடராசன் அப்படியானதொரு இனம் புரியாத பயத்தை ஜெயலலிதாவிடம் ஒவ்வொரு நாளும் உருவாக்கிக் கொண்டே இருந்தார்.

ஜெயலலிதாவால் நடராசனை கணிக்கவும் முடியவில்லை; கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

ஜெயலலிதாவின் எண்ணத்திற்கேற்ப நடராசனின் நடவடிக்கைகளும் புரியாத புதிராகவே இருந்தன. 

ஜெயலலிதாவை எச்சரித்த நரசிம்மராவ்!

1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சில மாதங்கள் கழித்து, பிரதமர் நரசிம்மராவை டெல்லியில்  போய்ச் சந்தித்தார்.

நரசிம்ம ராவ், ஜெயலலிதா

பல விஷயங்கள் குறித்து ஜெயலலிதாவிடம் பேசிய நரசிம்மராவ் இறுதியில், “நடராசன் என்பவர் யார்? உங்கள் கட்சியில் அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்.

அவர் அடிக்கடி அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்து வந்து மத்திய அமைச்சர்களை சந்திக்கிறாரே. யார் அவர்… கட்சியில் அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்…?” என்று கேட்டு பொடி வைத்தார்.

பிரதமர் வாயில் இருந்து நடராசனின் பெயரைக் கேட்ட ஜெயலலிதா அந்த இடத்திலேயே கொஞ்சம் உறைந்து போனார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த ஜெயலலிதா, அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்து திட்டித் தீர்த்தார்.

“நடராசனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நான் பலமுறை உங்களை எச்சரித்துள்ளேன்; ஆனால், நீங்கள் அதைப் பொருட்படுத்தவே மாட்டேன் என்கிறீர்கள்;

இனிமேல் நடராசனோடு தொடர்பு வைத்துக் கொண்டு நீங்கள் ‘லாபி’ செய்வது எனக்குத் தெரியவந்தால், என் நடவடிக்கை கடுமையானதாக இருக்கும்” என எச்சரித்துவிட்டு தமிழகம் திரும்பினார்.

தமிழகம் வந்ததுமே, அப்போது உளவுத்துறை டி.ஐ.ஜியாக இருந்த பஞ்சாபகேஷனிடம் நடராசன் விவகாரங்கள் குறித்து ரிப்போர்ட் கேட்டார்.

அவர் அளித்த ரிப்போர்ட் ஏற்கெனவே அதிர்ச்சியில் இருந்த ஜெயலலிதாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

“அந்த அளவுக்கு அரசாங்கத்தின் எல்லா இடத்திலும் நடராசனின் ஆதிக்கம் இருந்தது” என அந்த ரிப்போர்ட் தெளிவுபடுத்தியது.

‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பதற்கேற்ப, “நம்மைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியில் அமர நடராசன் திட்டமிடுகிறார்” என்றே ஜெயலலிதா கருதினார். 

அடுத்த முதல்வர் நடராசனா?

ஜெயலலிதாவின் இரும்புக்கரம் நடராசனுக்கு எதிராக நீண்டது.

1992 ஆகஸ்ட் 2ஆம் தேதி தஞ்சையில் நடராசன், ‘தமிழ் அரசி’ பத்திரிகையின் வாசகர் வட்ட சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர் எல்லாம் நடராசன்தான்.

நிகழ்ச்சிக்கு முதல் நாள் போலீஸ் நடராசனைச் சந்தித்து, ‘உங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை’ என்றது.

அதோடு, நடராசனை ஏறத்தாழ வீட்டுச் சிறையில் வைத்ததுபோல் அவரை நகரவிடாமல் வைத்தது. நடராசன் கொந்தளித்தார்.

ஆனாலும் அவரால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.

அதன் பிறகு  சுப்பிரமணிய சாமி சென்னையில் ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் நடராசனும் கலந்துகொண்டார்.

பூச்செண்டு, தஞ்சாவூர் தட்டு எல்லாம் கொடுத்து சுவாமியை நடராசன் குஷிப்படுத்தினார்.

அப்போது நடராசனோடு வந்த சிலர், “50 எம்.எல்.ஏ-க்கள் அண்ணன் பின்னால்தான் இருக்கின்றனர்” என்றனர்.

அதைக் கேட்டு சிரித்த சுவாமி, “ஓகோ… அப்போ தமிழ்நாட்டுக்கு அடுத்த சி.எம். நடராஜன்தானா” என்றார். இந்தத் தகவலும் ஜெயலலிதாவை எட்டியது.

சுப்பிரமணிய சாமி, நடராசன்

A to Z…. Z to A….

ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வெறுத்துப்போய் இருந்த நடராசனும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை.

அவர் வழக்கம்போல் அவர் பாதையில் மாயமானைப் போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தார்.

இந்தியன் வங்கி சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட நடராசன், “A இருக்க வேண்டிய இடத்தில் Z-ஐப் போட்டு, Z இருக்க வேண்டிய இடத்தில் வேறொன்றைப் போட்டு, இன்றைக்கு அரசியலில் Z-யை A-ஆக்கியிருக்கிறேன்.

நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் Z-யை காலி செய்து அந்த இடத்துக்கு A-வைக் கொண்டு வருவேன்” என்றார்.

சசிகலா - நடராசன்

இவை எல்லாவற்றையும் கேட்ட ஜெயலலிதா பத்திரிகைகளுக்கு காட்டமாக ஒரு அறிக்கையைக் கொடுத்தார்.  

அதில், “கழகத்தின் ஆட்சியைக் கவிழ்க்க நடராசன் சதித் திட்டம் தீட்டுகிறார். அதனால், அவரோடு கழகத்தினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு நடராசனோடு நெருங்கிய தொடர்பில் இருந்த தேனி பன்னீர் செல்வம், சிவகங்கை முருகானந்தம், நெல்லை வேலய்யா, பால்ராஜ், ஆர்.பி.ஆதித்தன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், அப்போதும் சசிகலா ஜெயலலிதாவுடனேயே இருந்தார்.

தன் சொந்தத் தம்பி திவாகரனை துரத்திவிட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடனே இருந்தார்.

தனது அண்ணன் விநோதகனை ஜெயலலிதா துரத்தி விட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடனே இருந்தார்.

தனது அக்காள் மகன் தினகரனை ஜெயலலிதா துரத்திவிட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடன்தான் இருந்தார்.

தன் கணவர் நடராசனை ஜெயலலிதா துரத்தி துரத்தி அடித்தபோதும் சசிகலா, ஜெயலலிதாவுடனே இருந்தார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத நடராசன் நேராக போயஸ் கார்டனுக்கு கிளம்பிப்போய், “உங்களை ஆட்சியில் அமர்த்தப் பாடுபட்டவன் நான்… என்னை சந்தேகிக்கிறீர்கள்.. என்னை வெளியில் அனுப்பிவிட்டு, என் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டீர்கள்.

அதுபோல, சசியையும் அனுப்பிவிடுங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு மட்டும் சசி வேண்டுமா? என்று சத்தம் போட்டார்.

ஆனால், அந்தச் சத்தம் வெறுமனே காற்றில் கரைந்து காணாமல் போனது.

ஜெயலலிதாவும் சசிகலாவை அனுப்பிவிடவில்லை; சசிகலாவும் ஜெயலலிதாவை விட்டு விலகிவிடவில்லை. 

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்