ஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 33

சரணடைவும் சிறைச்சாலையும்

கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது

சரணடைவும் சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது”.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)

 

சிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர்.

கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள், வெளிநாடுகளிலிருந்து போதை மருந்து கடத்தியவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கிருந்தனர்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களப் பெண்களாக இருந்தபோதும், முஸ்லிம் மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களும் இருந்தனர்.

போதை மருந்தைத்  தமிழில் ‘தூள்’ எனவும் சிங்களத்தில் ‘குடு’ எனவும் குறிப்பிட்டு அழைப்பார்கள். சிறைச்சாலையில் நான் நேரடியாகக் கண்ட அனுபவத்தின்படி இந்தத் தூள் வியாபாரம் செய்யும் முதலாளிகள் தூள் குடிப்பதில்லை.

அவர்களுக்குத் தினசரி கொண்டுவரப்படும் வீட்டுச் சாப்பாடு மிகச் சிறப்பானதாக இருக்கும்.

ஒருவரைப் பார்த்த உடனேயே இவர் தூள் முதலாளி என்று குறிப்பிடக்கூடிய விதத்தில் கொழுத்த தோற்றத்துடன், நேரத்திற்கொரு உடையை அணிந்துகொண்டு எந்த நேரமும் மினுமினுப்பமாக ஒருவிதமான தலைக்கனத்துடன் நடந்துகொள்வார்கள்.

இவர்களுக்குத்தான் சிறைச்சாலையில் அதிக செல்வாக்கு காணப்படும்.

சிறைக்காவலர்கள்கூட இப்படியான பெண் முதலாளிகளுடன் இணக்கமாகவே நடந்துகொள்வார்கள். ஒவ்வொருவரும் ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளுடன் இருப்பார்கள்.

ஒரு வழக்கிற்காகப் பிணையில் சென்ற சில மாதங்களில் அடுத்த வழக்கிற்காக உள்ளே வந்துவிடுவார்கள். சிறைச்சாலைக்குள்ளேயும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பெண்கள் பலர் இருந்தனர்.

மிகவும் நுட்பமான முறைகளைப் பின்பற்றித் தமக்குத் தேவையான போதைப் பொருள், தொலைபேசி, அதற்குரிய பாகங்கள் என்பனவற்றைச் சிறைச்சாலைக்குள்ளே கொண்டுவந்து விடுவார்கள்.

ஒரு நாள் மாலை நாலு மணியளவில் நான் உடலைக் கழுவிக்கொள்வதற்காகக் குளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். எனது தலைக்கு மேலாக என்னவோ பறந்து வந்து எனதருகில் தொப்பென விழுந்தது.

சட்டெனச் சுதாகரித்துக்கொண்டு சீக்கிரமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டேன்.

யுத்தகளத்தில்தான் இப்படியான திடீர் தாக்குதல்கள் நடப்பது வழக்கம். இதென்னவாக இருக்கும் என்ற உணர்வுடன் சற்று தொலைவில் நின்று பார்த்தேன்.

ஒரு பொலித்தீன் பையினுள் பொதி செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண் எனக்கு முன்பாக விழுந்து கிடந்தது; கண்மூடித் திறப்பதற்குள் அதனை ஒரு பெண் தூக்கிக்கொண்டோடிவிட்டாள்.

அவள் ஒரு முக்கியத் தூள் வியாபாரப் புள்ளியின் உதவியாள்.

அந்தப் பாணுக்குள்ளே பல பெறுமதியான பொருட்கள் வந்து சேர்ந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஏற்கனவே திட்டமிட்ட முறையில் அங்குப் பார்வையாளர்கள் வெளியிலிருந்து கொண்டுவரும் பொருட்களை உணவுப் பொருட்களுடன் சேர்த்து எடுத்து மிகவும் சாமர்த்தியமாகத் தமது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் மறைத்துக்கொள்வார்கள்.

வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் சென்று வருபவர்களில் இப்படியான பொருட்கள் கொண்டுவருவதற்கான திறமைசாலிகள் பலர் இருந்தனர்.

உடற் தோலையே உரித்தெடுப்பதுபோல மேற்கொள்ளப்படும் உடற் பரிசோதனைகளுக்கும் அகப்படாமல் மிகவும் சாதுரியமாகக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள்.

எதிர்பாராத விதமாகப் பிடிபடும்

“சுனாமி வரப்போகுது” இருந்தாற்போல இப்படியான செய்தி காட்டுத் தீ போலச் சிறைக்குள்ளே பரவிவிடும்.

அந்த நேரத்தில் ஒவ்வொரு பெண்களின் கண்விழிகளும் வெளியே விழுந்துவிடுமளவுக்குப் பிதுங்கிக் கிடக்கும்.

சிறைச்சாலைக்குள் அடிக்கடி பாரிய சோதனைகள் நடத்தப்பட்டுச் சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்படும். சிறையில் அனுமதி மறுக்கப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைப்பதற்குப் பெண்கள் மிகவேகமாக ஓடித் திரிவார்கள்.

அந்தநேரத்தில் அனைவருமே ஒற்றுமையின் சிகரங்களாகிவிடுவார்கள். கைத்தொலைபேசி, தூள் என அனைத்துப் பொருட்களும் பதுக்கப்பட்டுவிடும்.

இருக்கிறவனுக்கு ஒரு பாடு இல்லாதவனுக்குப் பல பாடு என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல எங்களைப் போன்றவர்களுக்கும் பிரச்சனைதான்.

இரண்டு மாதத்துக்கு ஒரு தடவையோ அதற்கும் கூடுதலான இடைவெளிகளிலோ சிலபேருக்கு ஊரிலிருந்து தம்மைப் பார்வையிடவரும் உறவினர்கள் கொண்டுவந்து தரும் பொருட்களை அடுத்தமுறை அவர்கள் வரும்வரை கட்டிக் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

தவறான பொருட்கள் இருக்கிறதோ  இல்லையோ அனைவரது இடங்களும் ஒரே மாதிரிதான் சோதனையிடப்படும். மா, சீனி எல்லாம் கிண்டிக் கிளறப்பட்டு, தண்ணி வாளியின் அடிப்பகுதி தொடக்கம் தண்ணிப் போத்தில் மூடி வரை சுரண்டிப் பார்க்கப்படும்.

உடுப்புகளின் தையல் மடிப்புகளெல்லாம் தடவப்படும். சுருண்டு படுக்கவும் போதாத ஒன்றரை அடி இடத்தில், ஒரு தலையணி உறைக்குள்ளேயும், பொலித்தின் பையிலும் பொத்திப் பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களைக் கவிழ்த்துக் கொட்டிவிடுவார்கள்.

ஒருநாள் இரவு ஏழு மணி கடந்துவிட்டிருந்தது. வழக்கம் போல நாம் எமது துணிமணிகளை விரித்துப் படுத்துவிட்டோம்.

இரவு நேரத்தில் இரகசியமாகப் போனுக்குச் ‘சார்ச்’ ஏற்றுபவர்களும் விடியவிடிய போன் கதைக்கும் பெண்களும் தவிர அனைவரும் உறக்கத்திற்கு ஆயத்தமாகிவிட்டனர்.

நானும் படுத்துக்கொண்டு தான் இருந்தேன். திடீரென எனது கால் சப்பாத்துக் கால்களால் மிதிக்கப்பட்டது. உடனடியாகத் துள்ளியெழுந்தேன்.

“பந்த பொலீஸ்” என அழைக்கப்படும் சிறைச்சாலை பொலிஸார் ஆண்களும் பெண்களுமாகக் கைதிகளின் தங்குமிடத்தைச் சுற்றிவளைத்து நின்றனர்.

பொருட்களைப் பதுக்குவதற்கு அவகாசம் கிடைக்காத காரணத்தால் அடுத்த மூன்று நான்கு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கணக்கான தொலைபேசிகளும் போதைப்பொருள் பக்கற்றுகளும் பணமும் கைப்பற்றப்பட்டது.

இரவு நேரத்தில் ஆண்கள் சோதனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, பெண்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

அடுத்த நாள் இரவு மீண்டும் அதே நேரத்தில் பரிசோதனை செய்வதற்காக வந்த பொலிஸாரை எதிர்த்துப் பெண் கைதிகள் கலகம் செய்யத் தொடங்கினார்கள்.

உள்ளே வந்தவர்களை வெளியே செல்லவிடாமல் கதவைச் சாத்திவிட்டு, கையில் கிடைத்த தும்புத் தடி, போத்தில் என்பனவற்றால் சரமாரியாகத் தாக்கினார்கள்.

சோதனை செய்வதற்காக வந்தவர்களான  சிறை போலிஸார் வெளியே ஓடிப்போக முடியாத நிலையில் மலசல கூடங்களுக்குள் புகுந்து ஒளிந்துக்கொண்டார்கள்.

சற்று நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அடுத்த இரண்டு நாட்களும் பெரும் பதற்றமாகவேயிருந்தது. ஆனால் அதன்பின் இரவு நேரத்தில் சோதனை செய்வதற்கு ஆண் பொலிஸார் வருவது இல்லை.

ALeqM5ioY3JQJtc28c041ioRTOYqrfPA  சரணடைவும் சிறைச்சாலையும்: "கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது''.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33) ALeqM5ioY3JQJtc28c041ioRTOYqrfPAசிறைச்சாலையின் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாகத் தொடங்கின. எனது மன அழுத்தங்களும் சிறைவாழ்வின் கொடுமையும் அடுத்தக் கட்டம் என்னவென்பது தெரியாத நிலைமையும் ஒரு நடைப்பிணம் போல என்னை மாற்றியது.

எல்லாவற்றையும் விட எனக்கு மனஅமைதியைப் பெறுவது பெரிய விஷயமாகப் பட்டது. ஏதாவது ஒரு விஷயத்திற்குள் மனதைச் செலுத்துவதுதான் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி என்பதைப் புரிந்துகொண்டேன்.

சிறையுள்ளேயிருந்த கோயிலுக்குச் செல்லத் தொடங்கினேன். விரதம் பிடிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் ஒரு உண்மையை ஆழமாகப் புரிந்துகொண்டேன்.

சாதாரணமாகவே பசியிருப்பது எனக்கு மிகவும் கடினமான காரியம். போராட்டக் காலங்களில் உணவு கிடைக்காத சந்தர்ப்பங்களிலும், உணவிருந்தும் உண்பதற்கு நேரம் கிடைக்காத காரணத்தாலும் பசி கிடந்திருக்கிறேனே தவிர, சாதாரணமாகச் சிறுவயதிலிருந்தே எனக்குப் பசியிருப்பது முடியாத காரியமாகும்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் எனச் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். வெலிக்கடைச் சிறையில் நாள் முழுவதும் உண்ணாமல் இருப்பதிலே சுகம் காணத் தொடங்கினேன்.

வயிறு எரிய எரிய பசியிருக்கும்போது மனதின் இறுக்கங்கள் சுகப்படுவது போல ஒரு உணர்வேற்படத் தொடங்கியது. எவருடனும் பேசாமல், சாப்பிடாமல், வெறித்த மனத்தோடு ஒரு மூலையில் சுருண்டுகொள்ளும்போது மனம் அளவற்ற நிம்மதியடைவது போலிருந்தது.

எத்தனையோ நாட்கள், என்னுடன் அன்பாகப் பழகும் தாய்மார், சகோதரிகள் எனக்குரிய இடத்தில் என்னைக் காணக் கிடைக்காமல் சிறையின் வளாகம் முழுவதும் தேடியலைந்த பின்னர் கோவிலின் பின்புறத்தில் அல்லது தனிமையானவொரு இடத்தில் என்னைக் கண்டுபிடித்துள்ளனர்.

மனித முகங்களைப் பார்ப்பதும் மனிதர்களோடு பேசுவதும் கொஞ்சமேனும் பிடிப்பில்லாத விடயமாகச் சிறிது காலம் இருந்தது.

இந்த நேரத்தில்தான் தமிழ்க் கைதிகள் அதிகமாயிருந்த 29ஆவது கொட்டுவைக்கு மாற்றப்பட்டேன். அங்கேயிருந்த இரண்டு கைதிகள் கரும்புலி  அணியிலிருந்து  தாக்குதலுக்காக அனுப்பப்பட்டிருந்தபோது, 2007இல் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவரான பவளம் என்கிற பெண் போராளி யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் சயனைட் அருந்திய நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவ சிகிச்சையளித்த பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் மூலமாக அவர் வெலிக்கடைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இன்னொரு கடற்கரும்புலிப் போராளியான அன்புவதனி திருகோணமலையில் தாக்குதல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.

இதன்பின் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, புசா தடுப்பு முகாமில் நடைபெற்ற தீவிர விசாரணைகளின்பின் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பிள்ளைகளுடன் நானும் கிறிஸ்தவ வழிபாடுகளுக்கும் பைபிள் வார்த்தைகளைப் படிப்பதற்கும் சென்றேன். உண்மையில் எனது மனக் காயத்திற்கு அந்த இடம் மருந்து போடுவதாக இருந்தது.

தொலைபேசி வைத்திருந்த ஒரு தமிழ்ப் பிள்ளையின் உதவியுடன் எனது சகோதரியிடம் பேசி அவர்மூலம் அம்மாவின் தொடர்பை எடுத்தேன்.

ஓமந்தையில் வைத்து அம்மாவைப் பிரிந்துசென்ற எனக்கு என்ன நடந்தது, எங்கே வைக்கப்பட்டிருந்தேன் என எனது குடும்பத்தவர்கள் எவருக்கும் தெரியாத நிலைமையில் ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களினால் அவர்கள் மிகவும் மனம் தளர்ந்துபோயிருந்தார்கள்.

2009, 10ஆம் மாத அளவில் எனது தாயார் என்னைப் பார்ப்பதற்காக வெலிக்கடைச் சிறைக்கு வந்திருந்தார். சிறைச்சாலையில் உறவினர்களைச் சந்திப்பது மிகக் கடினமான காரியம்.

மிகவும் தூரத்திலிருந்து ஒரு முழுநாள் பயணம் செய்து, கொழும்பில் வந்திறங்கி எமக்குத் தேவையான பொருட்களையும் சுமந்துகொண்டு மத்தியான நேரத்தின் கடுமையான வெயிலில் காய்ந்தபடி வெலிக்கடை உள் தார்வீதியில் நடந்துவந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும், (சாப்பாட்டுப் பார்சல் உட்பட) அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் பிடுங்கிப் பரிசோதனை செய்தபின், உள்ளே அழைக்கப்படுவார்கள்.

Prison Camp  சரணடைவும் சிறைச்சாலையும்: "கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது''.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33) Prison Campஅந்தச் சிறிய அறையில் அரைச்சுவருக்கும் மேலாக ஒரு சிறிய விரல்கூட நுழையமுடியாதபடி இறுக்கமாக அடிக்கப்பட்டிருக்கும் கம்பிவலைக்கூடாகத்தான் பார்க்க முடியும். வெளிச்சமேயில்லாத அந்த இருண்ட அறையில் எந்த நேரமும் சனக் கூட்டமாகவே இருக்கும்.

ஐந்து நிமிடங்கள்தான் அதிகமான நேரம். பார்வையாளர்களின் தொகையைப் பொறுத்து இந்த நேரம் இன்னும் குறைக்கப்படும்.

இப்படிக் கிடைக்கிற அவகாசத்திற்குள் எமக்குத் தரப்படும் பொருட்களை மீண்டும் கிண்டிக் கிளறிப் பரிசோதித்த பின்பே தருவார்கள். சில சந்தர்ப்பங்களில் நீண்ட தூரத்திலிருந்து செய்து கொண்டுவரப்படும் பலகாரங்களைக்கூட உள்ளே கொடுக்க முடியாதெனத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

ஒருவர் கதைப்பது இன்னொருவருக்குக் கேட்காத அளவு மிகவும் இரைச்சலாக இருக்கும். அதையும் மீறி உரத்துக் கத்திக் கதைக்க வேண்டும். கம்பி வலைக்கூடாக இருண்ட அறைக்குள் உற்று உற்றுப் பார்த்தால்தான் கொஞ்சமென்றாலும் முகங்களைக் காண முடியும்.

தினசரி வீட்டுச் சாப்பாடு எடுக்கும் கைதிகளுக்கும் இதே நடைமுறைதான்.  மாதத்தில், வருடத்தில் ஒருதடவை உறவுகளைச் சந்திக்கும் கைதிகளுக்கும் இதே நிலைமைதான்.

எந்த உறவுகளும் சந்திக்கவே வராத நிலையில், ஒரு பிடி வீட்டு உணவுக்காக ஏங்கும் மனித மனங்கள் சிறைச்சாலையில் ஏராளமாக உண்டு.

தன்னைப் பார்ப்பதற்காக எவருமே வரப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும், காலை முதல் மாலை பார்வையாளர் நேரம் முடியும் வரைக்கும், தினமும் பார்வையாளர்   சந்திப்பு இடத்தையே ஏக்கத்துடன் பார்த்தபடியிருக்கும் மனிதர்களின் எதிர்பார்ப்புக்களை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனப்பெண்களுடன் நெருக்கமாக வாழும் அனுபவம் எனக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது. என் சிறிய வயதில் வேறு இன மக்களுடன் சேர்ந்து பழகும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கவில்லை.

சமாதான காலத்தில் ஒருதடவை காணாமல்போன இராணுவத்தினரின் பெற்றோர்களும் உறவினர்களும் கிளிநொச்சிக்கு வந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தனர்.

அவர்களுடன் வந்திருந்த வயதான சிங்களத் தாய்மார் வடித்த கண்ணீர் எனது மனதை உருக்கியது. எனது கண்ணிலிருந்தும் கண்ணீர் கொட்டியது. அதற்காக நான் வெட்கப்படவில்லை.

தமது பிள்ளைகளைப் போரில் இழந்த தமிழ்த் தாய்மார்களின் கண்ணீரும் கதறல்களும் எனது நினைவுக்கு வந்தன.

மனிதர்கள் இனம், மொழி, மதம், அரசியல் என வேறுபட்டு நிற்கலாம், ஆனால் உலகெங்கணும் தாய்மையின் பொதுமையான இயல்புகள் வேறுபடுவதில்லையே.

என்னோடு பழகிய பல சிங்களத் தாய்மார்களின் அன்பை என் வாழ்நாள் உள்ளவரை மறந்துபோக முடியாது. இப்படியான உறவுகளின் நெருக்கத்தினால்தான் சிங்கள மொழியை நான் பேசப் பழகினேன்.

தமது துக்கங்களையும் சந்தோசங்களையும் உணர்வோடு பகிர்ந்துகொள்வார்கள். தமிழ் மக்களைப் பற்றி அவர்களிடம் மிக நல்ல அபிப்பிராயங்கள் இருந்தன.

ஆனால் புலிகள் சிங்கள மக்களைக் கொலை செய்பவர்கள் என்ற கருத்து சாதாரண பெண்களிடையே பரவலாக இருந்தது.அவர்கள் அன்புடன் பழகத் தொடங்கிவிட்டால் எந்த நெருக்கடியிலும் தமது நலன்களையும் பாராது உதவி செய்வதற்கு முன் நிற்பார்கள்.

மனதிற்குள் வஞ்சனைகளைச் சேர்த்து வைக்கும் பண்பு அந்த மக்களிடம் மிகவும் குறைவாகவே இருந்தது. தமக்காகச் சேர்த்துவைப்பதைவிட இன்னொருவரின் பசி தீர்ப்பதே அதிக புண்ணியம் எனக் கருதும் அவர்களின் பல நல்ல குணங்களை அருகிலிருந்து அனுபவத்தில் உணர்ந்துகொள்ள முடிந்தது.

தமிழினி

தொடரும்…

நன்றி : இணையதளம்

1 thoughts on “ஒரு கூர்வாளின் நிழலில் : பாகம் 33

  1. “எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான்” – தமிழினி

    “ஒரு கூர்வாளின் நிழலில்’ சுயசரிதையின் சுருக்கம்:

    “ஒரு கூர்வாளின் நிழலில்” நூலின் ஆரம்பத்தில் அனுபவநகர்வுகளும், இறுதியில் கருத்துநிலை நகர்வுகளும் தூக்கலாகத் தெரிகின்றன. அரச படைகள் மீதான தாக்குதல்கள், அரச படைகளின் புலிகள் மீதான தாக்குதல்கள், அரசியல், தமிழ் சமூகக் கட்டமைப்பு குறித்து, “ஒரு கூர்வாளின் நிழலில்” எழுதப்பட்டுள்ள பெண்ணிலைப்பட்ட அனுபவங்கள் மிகவும் கவனிப்புக்குரியவை. போராட்டத்தில் பிரபாகரனின் பங்களிப்பு எத்தகைய பலமானது எனவும் , பிரபாகரனைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த விம்பம் எவ்வளவு தூரம் உண்மையானது எனவும் மிக விளக்கமாக எழுதியிருக்கின்றார். .

    “போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள்ளே வாழ்ந்திருக்கிறேன். போராளிகளான நாங்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறி விட்டோம். கையிலெடுத்த ஆயுதங்களைக் பாதுகாத்துக் கொள்வதற்காக எமது அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்.” (பக்கம் 7)

    ‘புலிகளின் போரியல் வெற்றிகளில் மக்களுக்கிருந்த பிரமிப்பான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தூர நோக்குடனான புலிகளின் அரசியல் செயற்பாடுகளில் எப்போதுமே இருந்ததில்லை. (பக்கம் 15)

    “ஆண், பெண் வேறுபாடில்லாமல் தினசரி நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தமதுயிரைக் கொடுத்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் வெறும் பார்வையாளராக இருப்பது எனது மனதில் பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்தும் படிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென நான் நினைக்க வில்லை. ஒரு குடும்பத்தில் ஒருவராவது போராடச் சென்றால்தான் அடுத்த சகோதரர்களாவது நிம்மதியாக வாழ முடியும் என நம்பத் தொடங்கினேன்.” (பக்கம் 31)

    ‘இயக்கத்தின் நடவடிக்கைகளிலும், தீர்மானங்களிலும் இருந்த சரி பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்துக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்துக்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது. ‘மேலும் கள முனையில் நாளாந்தம் எந்தக் கேள்விகளும் கேட்காது எமது சக போராளிகள் தமதுயிரை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத்தியாகங்களுக்கு முன்னால் வேறு எதுவுமே எழுந்து நிற்க முடியாதிருந்தது. வீரமரணம் அடையும் வரை விடுதலை இயக்கத்தின் விசுவாசமிக்க போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்ப்தைத்தவிர எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை’ (பக்கம் 53 & 54)

    “பல போராளிகள் தமது குடும்பத்தவர்களுக்கு தமது இறுதி மடல்களையும் எழுதிக்கொண்டிருந்தனர். எனது நெருங்கிய பல நண்பிகளும் இத்தாக்குதலில் பங்கு பங்கெடுத்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், உயிர் மீதான உத்தரவாதமின்மை, வெளிப்படுத்தமுடியாத விரக்தி என நிச்சயிக்கப்பட்ட யுத்தமொன்றில் பங்குபற்றும் போராளிகளின் இறுதிக்கணங்களில் அவர்களுடைய கண்களில் தேங்கியிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்த எவராலும் மீண்டுமொரு யுத்தத்தைப்பற்றி பேசவோ அல்லது நினைத்துப்பார்க்கவோ முடியாது.” (பக்கம் 57)

    “குறுகிய மனப்பாங்கும் , வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும், அதிகாரமும் போய்ச்சேரும்போது எத்தகைய அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்துக்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிற்சி பெறுவோர் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும் , தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத்தவறான முன்னுதாரணங்களாக இருந்தன” (பக்கம் 58 & 59)

    “வயல் வெளிகளுக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருந்ததால் வெள்ளம் தேங்கிக் கிடந்தது. தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச்சுடுபவனின் இலக்குத் தவறாத ரவைகள் அந்த வயல் வெளியில் பல போராளிகளின உயிர்களைக் குடித்துக் கொண்டிருந்தன. சிறிதாகக் கூடத்தலையை நிமிர்த்திப்பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாம் தவழ்ந்து கொண்டிருந்தோம். எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து திடீரென ‘ஹக்’ என வினோதமான சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அவளது முகம் சேற்றுக்குள் புதைந்து போய்க் கிடந்தது. நான் அவளது தலையை நிமிர்த்திப்பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.” (பக்கம் 59).

    “போர்க்களத்தில் கண்ட இன்னொரு மறக்க முடியாத காட்சியும் எனது ஆழ்மனதில் பதிந்துபோன சித்திரமாகி விட்டிருந்தது. இராணுவத்தினரினதும், விடுதலைப்புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத்தண்ணீரில் ஊறிப்போய், ஆங்காங்கே விறைத்துக்கிடந்தன. அவர்கள் உடல்களிலிருந்து வடிந்திருந்த சிவப்புக் குருதி மழை நீரில் கரைந்து தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்புவரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது. எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை” (பக்கம் 60).

    ‘மிகவும் சராசரியான வாழ்க்கைத்தரத்தைக்கொண்டிருந்த எம்மால் துரத்தப்பட்ட முஸ்லீம் மக்களைச்சந்தித்தபொழுது என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட எமது இயக்கம் இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்குமுறைக்குள்ளாக்கியதன் நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக்கொள்ல முடியாமலிருந்தது.’ (பக்கம் 66)

    “எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், பெண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை.” (பக்கம் 73)

    “பெண்கள் ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது. குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப் பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப்போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். ”
    “பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை. பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது.” (பக்கம் 75 & 76)

    “பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று கருத்துகளை நான் கூறியிருக்கிறேன். ஆனாலும், ஆயுதப்போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை.”
    “அரசியல்துறை மகளிர் பிரிவினுடைய பணிகளாக சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பதும், இன்னும் பரந்துபட்ட ரீதியில் சமூக மாற்றத்துக்காக உழைப்பதும், என்பனவாகவே இருந்தன. இதன் அடிப்படையில்தான் அரசியல் மகளிர் பிரிவின் வேலைத்திட்ட அலகுகளும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் நடைமுறையில் சாத்தியமானது என்னவோ இயக்கத்திற்கு புதிய போராளிகளை இணைப்பதும், பெண்களுக்கென குறிப்பிட்ட சில வேலைகளை மாத்திரம் செய்ய முடிந்ததுமேயாகும். ஏனெனில் இயக்கத்தின் முழுக்கவனமும், மொத்த வளங்களும் யுத்தத்தில் ஈட்டப்பட வேண்டிய வெற்றியை நோக்கியே திருப்பப்பட்டிருந்தன” (‘பக்கம் 77)

    ‘கிழக்கு மாகாணப்போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் என்ற பெயரில் இயக்கத்திற்குள் அனைவரும் வெறுக்கத்தக்க ஒரு கொடூரமான சகோதர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. பல வருட காலமாக என்னுடன் பழகிய பல போராளிகள் இரு தரப்பிலும் உயிரிழந்து போயிருந்தனர்.’ (பக்கம் 162)

    ‘எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாக பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும், மக்களும் தலைவரைப் பார்த்தோம். தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்குள்ளாகும் போதும், அவர் மக்களின் நலனுக்காகவும் , நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுக்கிறார் எனவும், தலைவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம்.. தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வக்குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது. இந்தப்போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது. எல்லாம் அவர்தான் எனக்கொண்டாடியது மட்டுமில்லாமல் இறுதித்தோல்விக்கும் அவரே காரணம் என்ற குற்றத்தையும் வரலாறு அவர் மீது சுமத்தி நிற்க வேண்டியதாயிற்று..’ (பக்கம் 164)

    ‘இயக்கத்திற்கும் மக்களுக்குமிடையே அதிக முரண்பாடுகளை ஏற்படுத்திய இன்னொரு விடயம் இயக்கத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு’ . (‘யுத்தகளத்தில் பல வெற்றிகளைக் குவித்த தலைவர் சமாதானச் சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திர நுணுக்கங்களைத் துணிச்சலுடன் பயன்படுத்தித் தமிழர்களுக்கு உறுதியான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் நிலையை நோக்கி முன்னேற முடியாமல் திணறினார்’ (பக்கம் 168).

    ‘தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத்தவறான முடிவுகளில் முக்கியமானது கட்டாய ஆட்சேர்ப்பு என்பது என் நிலைப்பாடு. இந்தக் காரியத்தில் சூழ்நிலைக் கைதிகளாகப் பல போராளிகளும் , பொறுப்பாளர்களும் மன விருப்பின்றியே செயற்பட்டுக் கொண்டிருந்தனர்’ (பக்கம் 181)

    ‘எத்தனையோ இலட்சம் பேருடைய இரத்தமும் கண்ணீரும் இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சியிருக்கிறது. அப்படியிருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கமும், தமிழ் மக்களுக்கான ஆயுதப்போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கேற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இன அழிவை ஏற்படுத்தியிருந்தது’ (பக்கம் 206)

    ‘ஆயிரமாயிரம் உயிர்களின் அர்ப்பணிப்பு வீண்போகாதபடி கனிந்து வந்த அரசியல் சூழ்நிலைகளைத் தலைவர் பயன்படுத்தி மக்களுக்கு ஒரு நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவார் என அனைத்துப்போராளிகளையும் போல் நானும் உறுதியாக நம்பினேன். இறுதிப் போருக்கான முடிவைத் தலைமை எடுத்தபோது, எனது சிறிதான அறிவுக்கெட்டிய வகையில் அது ஒரு சரியான முடிவாகப்படவேயில்லை.’ (பக்கம் 218)

    இறுதிப்போர்க் காலத்தில் பிரபாகரனின் நிலை பற்றி நூலில் எழுதப்பட்டுள்ள ஒரு குறிப்பு வருமாறு:

    “அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடைய மெய்ப்பாதுகாவலாக இருந்து, அவருடைய மரணத்தின் பின்னர், ஒரு திறமை மிக்க தாக்குதல் போராளியாக உருவாகியிருந்த ஈழப்பிரியன் கிளிநொச்சியில் என்னை இறுதியாக சந்தித்தபோது, தலைவர் தன்னிடம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை எனக்குச் சொன்னார்:

    “எல்லாரும் என்னுடைய கையில்தான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒண்டுமில்லை. என்ர கை வெறுங்கை’ என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். ‘அண்ணையே இப்படிச் சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?’

    “ஆயுதம் தமிழீழத்தைப் பெருத்த தரும் என்கிறதான கனவு உண்மையாகவே உடைந்து நொறுங்கிய சம்பவங்கள், ஒன்றன் பின் ஒன்றாக நிகழாத தொடங்கின.”

    “மக்களைப் பணயமாக வைத்துத்தான் மக்களுக்காகப் போராடுவதா?அப்படியானால் இது யாரைப் பாதுகாப்பதற்கான போர்? என்ற கேள்விகளுக்கான பதில் பகிரங்கமாக கண் முன்னால் எழுந்து நின்றது.”

    – நல்லையா தயாபரன்

    Like

பின்னூட்டமொன்றை இடுக